கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் வடமாநிலங்களில் நடக்கின்ற வன்முறைகள் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவை அனைத்துமே மாவோயிஸ்டுகளால் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுப்பப்படுகின்றன. அநேகமாக அந்த வன்முறைகளில் பலியானவர்கள் அரசப்படைகளாக இருக்கிறார்கள். சிலவற்றில் அரசுக்கு உளவு சொன்ன மக்களும் பலியாகியிருக்கிறார்கள். அவர்களை அப்பாவி மக்கள் என்றும் கூட, சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. அந்த நேரங்களில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு போன்றோர், மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களை கொலை செய்ய மாட்டார்கள் என்றும், காவல் துறைக்கு உளவு சொன்னவர்கள் தான் கொலையாகி இருப்பார்கள் என்றும் நியாயம் பேசினார்கள். இப்போது மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. மாவோயிஸ்டுகள் இதற்கு காரணமா? இல்லையா? என்று விவாதம் தொடர்கிறது. இது ஒரு அரசியல் சதி என்று ரயில்வே அமைச்சர் மம்தா கூறுகிறார். மாவோயிஸ்டுகளை மம்தா பாதுகாக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது.
இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது, மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைப் பற்றி பதில் கூறியிருக்கிறார். அதில் அவர்களது லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம் என்றும், அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம் என்றும், ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் அவர்கள் கையாளுகின்ற முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவை என்று குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த ரயில் விபத்தில் ஒரு காட்சியை முதல்வர் விளக்குகிறார். இறந்து போன ஒரு குழந்தையின் சவத்தை பயணிகள் தூக்கிச் செல்கின்ற காட்சி அது. இதில் அந்த குழந்தைக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் கருத்து வேறுபாடு என்று ஒன்று இல்லை என்பதை முதல்வர் கலைஞர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரது இறப்பைப் பற்றி கவலைப்படாமல் தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று கருதுவது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார். அந்த இயக்கங்களின் அடிப்படையான பொது உடமைக் கொள்கைகளில் தனக்கு மாறுபாடு இல்லை என்கிறார் முதல்வர். அவற்றை நிறைவேற்றிக் கொள்வதில், இந்த முறை சரிதானா என்று கேள்வி எழுப்புகிறார். அது பற்றி இரண்டு நாட்களில் விரிவாக எழுதுவேன் என்றும் அறிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் நேற்றைய ஆங்கில நாளேட்டில், ஒரு காங்கிரஸ் தலைவரின் கட்டுரை வந்துள்ளது. சந்தன் யாதவ் என்ற இந்திய இளைஞர் காங்கிரசின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். அவர் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். ஜே.என்.யு.வில் நக்சலைட்டுகளுடன் வேலை செய்ததாலும், பிறகு ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களில் இளைஞர் காங்கிரசின் பொறுப்பை ஏற்று, தேசிய பொதுச் செயலாளராக இருந்ததாலும் , பீகார் மாநிலத்தில் தனது சொந்த மாவட்டமான ககாரியாவில் நக்சலைட்டுகளுடன் பழகியதாலும், தான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், சந்தன் யாதவ் அப்படி ஒரு கட்டுரையை எழுதுகிறார்.
அண்ணாசாலை ஆங்கில ஏட்டில் வெளியான அந்தக் கட்டுரை, மாவோயிஸ்டுகளுடன் கருத்தியல் போரும் கூட நடத்தப்பட வேண்டும் என்பதன் தேவையை வலியுறுத்துகிறது. தான் பயணம் செய்த மாவோயிஸ்டு செல்வாக்கு உள்ள பகுதிகள் எல்லாவற்றிலுமே, அடிப்படை உள்கட்டுமான வசதிகள் கூட இல்லாத நிலைமையையும், தேவைகள் கூட கிடைக்காத சூழலையும், சட்ட ஒழுங்கு இல்லா நிலையையும், அந்த மக்களின் பிரச்சினைக்கு நிர்வாகம் அக்கறை செலுத்தாததையும் காணமுடிந்தது என்கிறார் அவர். அந்தப் பகுதிகள் அனைத்தையும் ஒரே மாதிரியான சூழல் நிலவுவதை, காங்கிரஸ் தலைவர் சந்தன் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
அதன் விளைவாக அந்த வட்டார இளைஞர்கள் விரக்தியிலும், வாழ்வதற்கு வேறு வழியில்லா சூழ்நிலையிலும், நக்சல்பாரி கருத்தியலுக்கு பலியாகி இருக்கிறார்கள் என்கிறார் அவர். ஆயுதபாணியாகி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிலவும் அரசியல் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் மட்டுமே, தங்களுக்கு எதிரான சூழல் மாறும் என நம்புகிறார்கள். அதுவே தங்களுக்கான கனவுகளை நிறைவு செய்யும் என்று புரிந்து இருக்கிறார்கள். தாங்கள் மனம் மாறி ஆயுதங்களை விடுத்து, முக்கிய நீரோட்டத்திற்கு வந்தாலும், தண்டிக்கப்படுகிறோம் என்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இவையெல்லாம் சந்தன் யாதவின் உணர்தல்கள்.
தமிழ் நாட்டில் கூட பண்ணையார்கள் அழித்தொழிப்பை நடத்திய கூலி விவசாயி ராயப்பன், ராஜபாளையம் பகுதியில் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த பிற்பாடு, பண்ணையார்கள் ஏற்பாட்டின் மூலம் கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி, மேற்கண்ட பீகார் சூழ்நிலையை புரிய வைக்கிறது. மேலும் எழுதுகின்ற சந்தன்யாதவ், நக்சலைட்டுகள் ஒரு வலுவான ஊழியர்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு என்கிறார். அதன் உறுப்பினர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்துள்ளனர் என்றும், தங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் பற்றி ஒவ்வொரு சாதாரண உறுப்பினரும் தெளிவாக தெரிந்திருக்கிறார்கள் என்றும், சிறப்பான பயிற்சி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சந்தன் எழுதுகிறார். ஆனால் மற்ற அரசியல் கட்சிகளில் லாப நோக்கத்துடன் மட்டுமே ஊழியர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.
நக்சலைட்டுகள் மத்தியில் தோழமை இருக்கிறது என்றும் சந்தன் எழுதியுள்ளார். முடிவுகள் எடுக்கும் நிலையில் மட்டும்தான், தலைமைக்கும், தொண்டர்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்றும் மற்றபடி அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்றும் எழுதியுள்ளார். அவர்களில் பெருவாரியானவர்கள் உயர் படிப்பு படித்தவர்கள். பிரபல கல்வி நிறுவனங்களில் கற்றவர்கள். மேட்டுக்குடி குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அவர்கள் கருத்தியல் ரீதியாக மாவோயிஸ்ட்டு சிந்தனையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படி எல்லாம் சந்தன் யாதவ் எழுதியுள்ளார்.
சமூக பொருளாதார காரணங்களையோ, சட்ட ஒழுங்கு காரணங்களையோ கூறி மட்டும், நக்சலைட்டுகளை பார்க்கக்கூடாது என்கிறார் கட்டுரையாளர். அவர்களது கருத்தியலை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்.
வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், நக்சலைட்டுகள் வளர ஒரு காரணம் என்பது உண்மைதான். ஏற்றத்தாழ்வான சூழலை மாற்றினால் வளர்ச்சிக்கான அணுகுமுறை வெற்றியடையும். ஆனால் ஏற்றத்தாழ்வும் வளர்ச்சி பெற வேண்டிய பகுதிகளும் அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக ஏழைகளும், தலித்களும் இன்று கிராமக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியலாம். ஆனால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது என்பது ஏற்றத்தாழ்வான நிலையில்தான் உள்ளது. அதனால் பல ஆண்டுகளுக்கு இந்த ஏற்றத்தாழ்வு தொடரும்.
கடந்த 62 ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறியுள்ளன. ஏழைகளுக்கான திட்டங்கள் பலவற்றால், பல ஏழைகள் பயனடைந்துள்ளனர். ஆனாலும் ஏற்றத்தாழ்வுக்கான புதிய அளவு கோல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே அந்த இயக்கத்தை, கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வது மிகவும் தேவையாக இருக்கிறது. மேற்கண்ட கருத்துகளை எழுதியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவுஜீவி சந்தன்யாதவ் முன் வைக்கும் புதிய கோணம், நமக்கு வித்தியாசமான விளக்கத்தை சொல்லிக் கொடுக்குமா?
வன்முறை என்பது இரு புறமும் கூர்மையான ஒரு வாள் என்பதை, அதை முதலில் பயன்படுத்தும் அரசு இயந்திரம் கற்றுக் கொள்ளுமா? நமது முதல்வரின் ஆக்கப்பூர்வமான எழுத்துக்களும், மேற்படி உண்மைகளை எதிரொலிக்குமா? இந்த விவாதம் ஒரு தொடர்கதையாக இருக்கிறது.
Sunday, May 30, 2010
Subscribe to:
Posts (Atom)