நேற்று தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பேரா சுமதியின் கவிதை தொக்குப்பான "அருகன்" நூல் வெளியிடப்பட்டது. வழக்கம்போல தமிழச்சி, சந்திரசேகர், மற்றும் நண்பர்கள் வரவேற்க, வழக்கம்போல , சிற்றுண்டி,தேநீர் ஆகியவற்றுடன் அவர்கள் குடும்ப வழமை உபசரிப்பில் சிக்கியபின், மாடி ஏறி அரங்கிற்குள் நுழைந்தோம். கலாப்ரியா என்ற சோமசுந்தரம் முதல், ஓவியர் மருது,வி.மங்கை,அரசு,தங்கம் தென்னரசு, ஜெயராம், ஆயிரம்வில்லக்கு ஹுசைன்,அமீர் அப்பாஸ்,லல்லி, சரஸ்வதி, ராஜேந்திரன், பாமரன், அமுதன்,கார்திகைசெல்வன், கோசல்ராம், எஸ்.பி.லட்சுமணன்,இளையபாரதி, எல்லோரையும் ஒருசேர கண்ட மகிழ்ச்சியை விட, ஸ்ரீஜித் தான் டில்லி நாடக பள்ளியில் செர்கப்பட்டுள்ளேன் என்று கூறிய செய்தி அதிகம் இனித்தது.
உள்ளே பேரா.ராமானுஜம் நடத்திய அரங்கேறும் கவிதைகளின் "நிகழ்த்துகலை" வழக்கம் போல உள்ளம் கவர்ந்தது. பின்னால் பேசிக் கொண்டு இருந்தவர்கள், கைபேசியில் உரக்க பேசியவர்கள் ஆகியோரை வழக்கம்போல வி.அரசு கோபப்பட்டு திட்டியதும் ஒரு சுவைதான்.ரவி தனது கர்நாடக இசை வழியில்,ஒரு கவிதையை பாட கொஞ்சம் மெய்மறந்தோம். நடிகை ரோகினி கவிதையை வாசிக்க முயன்றார்.அதுவும் ஒரு அழகுதான். அதன்பின் ராமானுஜத்தின் மாணவ, மாணவிகள் அவர் வீட்டு குழந்தைகள் ஆடி, பாடி ஒவ்வொரு கவிதையையும் உயிர் கொடுத்து அவைக்கு காட்ட, அதை மங்கை எடுத்து சொல்ல, எனக்கு பக்கத்தில் அவர்கள் ராமானுஜத்தின் பயிற்சி பெற்ற எங்க ஊர் { தஞ்சாவூர்} குழந்தைகள் என்று அரசு கூறி கொண்டே இருந்தார். நால்லாதான் இருந்தது.
புத்தகம் வாங்கிய உடனே கலாப்ரியா என்னிடம் தான் முன்னுரை எழுதியிருக்கிறேன் என்று கூறியிருந்ததால் அதை முதலில் படித்தேன்."வார்த்தைகளால் கவரப்பட்ட மவுனம்" என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.கவிதை நூலிற்குள் சென்றேன். "மியூசிகல் சேர்" என்ற கவிதை "காளியாய் இருக்கின்ற இருக்கைகள்" என்று தொடங்கி , எழுதப்பட்ட ஒவ்வொரு வரியும் ஆங்கில பேராசிரியராய் இருந்தவர் தலைவர் கூறியதை நம்பி, கழகத்தில் சேர்ந்து, முதல் தொடக்கமே இளைஞர் மாநாட்டில் எங்கள் ஊரில் {நெல்லையில்} கொடி ஏற்றி பெருமை சேர்த்தாலும், அதன்பின் வந்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இருக்கைகளை தவற விட்டதை எண்ணி பார்த்ததால் அது இதற்கு பொருந்துமா என பார்ப்பது "அதிகப் பிரசங்கித்தனம்" என்பதால் எனக்கு அந்த பொருத்தி பார்க்கும் வேலை வேண்டாம் என இருந்து விட்டேன்.
அந்த மே 18 2010 கவிதை முந்தைய ஆண்டின் நிகழ்வை நினைக்காமல் அன்றாட வாழ்க்கையை இயந்திரம் போல கழிக்கும் நடுத்தர வர்க்கத்தை "தன் சாடல்" செய்வதை அமைந்திருந்தது. "அன்றும் எழுந்தோம், பல் துலக்கி, உடை உடுத்தி," என்று துவங்கும்போது, ஜூலியஸ் பூசிக் தனது "தூக்குமேடை குறிப்புகளில்" சிறைக்கு வெளியே நடக்கும் மனிதர்கள், சந்தை, ஆகிய அன்றாட வாழ்க்கை பற்றிய விவரிப்பு நினைவுக்கு வந்தது. "முள்ளிவாய்காலை மறந்து" என்று அவர் கூறியிருந்தாலும் அரசியல் நிகழ்வுகள் உலகில் அதை மறக்க விடவில்லை. "எள்ளுபூ நாசியும், அரேபிய தேசத்தின் வாசனை திரவியமும்" என்ற கவிதையில், அந்த ஆப்கான் "ஆயிஷா" பாலின உறவுக்காக "மூக்கறுபட்டதை" நிகழ்த்து கலையில் அப்படியே காட்டி கவிதை உரையில் இரத்தம் உறைய வைத்து விட்டார்."எங்கெல்லாம் ஒரு பெண் அநீதியாக வதைக்கப்படுகிறாளோ ", "அங்கெல்லாம் அறுபட்ட உனது மூக்கின் எச்சங்கள் நீதிக்கு முன்னால் சென்று முறையிடட்டும் " என்ற வரிகள் "கவித்துவம்" இருக்கிறதா என்ற கவலையை விட்டுவிட்டு, "ஆவேசம்" இருத்தல் வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. செய்திகளில் இருந்து எடுத்து "வழித்து போடுவது" அவரது பாணி. "எங்கள் சூர்பனகையின் அறுபட்ட முலையும், மூக்கும், இத்தனை யுகங்களுக்கு பின்னரும் உன்னில் தொடரும்" என்ற வரிகள் "எல்லா காலத்திலும் , எல்லா நாட்டிலும் இப்படிதானா?" என்று எண்ணுவதற்கு பதில் "அந்த இராமாயண காலநிலம்தானே இன்றைய ஆப்கானும் " என்று என்ன தோன்றுகிறது. அதில் ஒரு ஆரிய வாடை இருக்கிறதோ? அதைத்தான் பார்பனீயம் என்று நாம் "பாலின ஒடுக்கலாக" புரிந்து கொள்கிறோமோ? இத்தனை சிந்தனைகளை அந்த வரிகள் நமக்கு எடுத்து கொடுத்தது.
" இலக்குவனின் ஆண்திமிரை ,அரேபிய தேசத்தின் அத்தனை வாசனை திரவியங்களும் மறைக்கமுடியாது தோற்றோடும்". இப்படி எழுதியவர் இன்று சவுதியில், இராக்கில், இரானில், சூடானில் என பெண்கள் வாகனம் ஒட்டவும், வாக்கு அளிக்கவும், அதிகாரத்திற்கு போட்டி போடவும எத்தனை கடினங்களை சுமந்து போராடி அந்த உரிமைகளை பெற்று இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.முள்ளிவாய்க்கால் குறித்து மேக்கப் கவிதை எழுதியதாக குறிப்பிட்ட தோழருக்கு என்று ஒரு கவிதை.அதன் பெயர் "கழு மரம்". "ஏன் கண்ணீரின் உப்பை கண் மையை கொண்டு வடிகட்டாதீர்கள்". " உள்ளக் குமுறலை உதட்டு சாயத்தை வைத்து அளவிடாதீர்கள்". "ஏன் கவிதையை மட்டும் கொஞ்சம் தணிதிருக்க விடுங்கள்".இப்படி எழுதிய சுமதியை யார் புரிந்து கொள்ளாவிடினும் அந்த ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தாலும் புரிந்து கொண்டுள்ளனர்..
பேரறிவாளன் அம்மா அற்புதமாளுக்கு என்று " அவ்வெண்ணிலவில்"என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார். அதில் "தன் இளமையை தனிமையில் தொலைக்கப்போவதர்கான அறிகுறிகள் அற்று, அவன் தனது பத்தொன்பதாவது பிறந்த நாளை கொண்டாடி இருந்தான். முன்னேச்சரிக்கையற்ற இருட்குகை ஒன்றில்,எதிர்காலம் இடறிவிழுந்தபோதும் கூட, அவனது அடுத்த பிறந்த நாளுக்கான இனிப்பை அவனது அம்மா நம்பிக்கையோடு தயாரித்த படி, இருந்தாள்". இந்த வரிகள் "அற்புதம்மாலை" அப்படியே படம்பிடித்து காட்டுகின்றது. "கருணை மனுக்கள் மீதும் நம்பிக்கை இழந்த அவள்,இறுதியாக தன் வயோதிகத்தை கொஞ்சம் தள்ளிப் போடும்படி காலத்திடம் கருணை கூறியிருக்கிறாள்". இந்த வரிகள் தமிழச்சிக்கு ஒரு குறிப்பிட்ட நிலைமையை சொல்லுமானால், நமக்கு, அதுவும் "தெருப்பாடகனுக்கு" வேறு வார்த்தைகளை "கோர்த்து " கொடுக்குமல்ல்லவா? "கருணை ஒரு ஆளின் பெயர் அல்ல. அது சட்டப்பேரவை தீர்மானம். கருணை நிதியை என்றுமே தேடவில்லை.அது நீதிமன்றத்தில் அரசின் பதில்மனுவாக வந்து விழுந்தது".இது தெருப்பாடகனின் கூற்று. அது "வந்து விழுந்த திசையை நோக்கி, இன்று அந்த தாய் கண்ணீர் மல்க நன்றி சொல்கிறார்". இதுதான் அந்த "எசப்பாட்டின்" குரல்..
"அவங்கவங்க வீட்டுக்கு, அவரைக்காய் சோத்துக்கு".இப்படிஒரு தலைப்பு. "அக்கரையில் இருக்கும் அத்தீவில் எள் அள்ளி தெளிக்காப்ல, எங்கேயும் விதவைகள் தானாம்""கருப்பைகளும், முலைகளும் அற்ற ஒரு மொண்ணை பிறப்பிருந்தா, ஒரு வேளை, கோநேஸ்வரியும், பென்னம்பேரியும்,அங்கே அச்சமின்றி மீண்டும் பிறக்கலாம். காதலை போல, போருக்கும் வயதில்லை. கைமைக்கும் கூடத்தான்".இந்த வரிகள் அங்கே உள்ள போரின் விளைவில் பெண்களை, விவதைகளை எப்படி கூட்டம், கூட்டமாக ஆக்கி கொடுத்துள்ளது என்பதை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி நிலை குலைய வைக்கிறது. இந்த அளவுக்கு இந்த தொகுப்பு அன்னை எழுத வைத்து விட்டது..
"e
Thursday, January 5, 2012
Subscribe to:
Posts (Atom)