Tuesday, April 20, 2010

கோகோகோலா தண்டிக்கப்படுமா?

அமெரிக்க பன்னாட்டு மூலதனக் கம் பெனியான, கோகோகோலா அதனது நடவடிக்கைகளால் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. குளிர்பானங்கள் விற் பனை என்ற பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்து பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக இந்தியா நாடாளுமன்றத்தில் அதைப்பற்றிய குற்றச்சாட்டுகள் ஏராளமாக எழுப்பப் பட்டுள்ளன. அப்படிப்பட்ட கோக் நிறுவனம் நாளை(ஏப்ரல்21) அட்லாண்டாவில் தனது ஆண்டு பங்குதாரர் கூட்டத்தை கூட்டுகிறது. அப்போது அனைத்து பங்குதாரர்களுக்கும், சில பங்கு தாரர்கள் கோக் நிறுவனத்தின் தலைமை பற்றி சில எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறார்கள். அதாவது இந்த நிறுவனம் தன்னுடைய சிக்கலான நிதி ஆதாரம் பற்றியும், தன் மீது குற்றங்கள் சாட்டப்பட்டது பற்றியும், இந்தியாவில் அதனது பாட்டிலிங் முறை களில் தொடர்ந்து எழக்கூடிய விமர்சனங்கள் பற்றியும், நேரடியாக மற்றும் வெளிப்படையாக தனது பங்குதாரர்கள் மத்தியில் கூறுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த பங்கு தாரர் கூட்டத்தில் அமித் ஸ்ரீவத்சவா என்ற பங்குதாரர் பேசயிருக்கிறார். கேரளாவில் பிளாச்சிமடாவில் கோக் நிறுவனம் ஏற்படுத்திய பாதிப்புகளுக்காக ரூ.480 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு உயர்மட்ட குழு மார்ச் 22ம் நாள் இந்த அபராதத்தை விதித்தது. நிலத்தடி நீரை கெடுத்தற்கான இழப்பீடு தொகையை இணைத்துக் கொள்ளாமலேயே, பாதிப்புகளுக்கு இந்த அளவிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பிளாட்சிமடாவிலிருக்கும் கோக் பாட்டில் தொழிற்சாலை, கேரள அர சாங்கத்தின் உத்தரவுப்படியும், வட்டார மக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மூடப்பட்டது. அதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் கலாதேரா என்ற இடத்தில் கோக் நிறுவனம் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வட்டாரத்தில் கோக் நிறுவனம் தனது இயங்குதலை தொடங்கிய காலத்திலிருந்து, தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாகி, வறட்சி நிலைமை உருவாகி விட்டது. 1998ம் ஆண்டில் அந்த வட்டாரத்தை, அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டார்கள் என்று காரணம் காட்டி ராஜஸ்தான் அர சாங்கம் அறிவித்தது. ஆனாலும் கூட 2000வது ஆண்டில் அங்கே கோக் நிறுவனம் புதியதொரு ஆலையை தொடங்கியது. கட்டிடங்களைக் கட்டுவதற்கு முன்னால் நடத்தப்பட வேண்டியசுற்றுசூழல் தாக்கம் பற்றிய மதிப்பீடு மீதான அறிக்கையை, கோக் நிறுவனம் மற்றவர்களுடன் பகிரங்கமாக பரிமாறிக் கொள்ள மறுத்து வந்தது. இந்த முறையில் அதன் காலா தேரா ஆலை இயங்கி வருகிறது. 2008ம் ஆண்டில் கோக் நிறுவனத்தால் ஆய்வுக்காக ஆணையிடப் பட்ட டெரி என்ற அமைப்பால் செய்யப் பட்ட ஆய்வின் அடிப்படையில், அந்த பாட்டில் ஆலை மூடப்படவோ அல்லது இடமாற்றப்படவோ அல்லது உற்பத்திக் காக வெளியிடத்திலிருந்து தண்ணீரை இறக்குமதி செய்யவோ செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தன்னு டைய சொந்த ஆய்வினால் வந்திருக் கக்கூடிய ஆலோசனைக்கூட, அந்த நிறுவனம் அலட்சியப்படுத்தியது. அதே சமயம் 2009ம் ஆண்டில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மிக மோசமான அளவில் வறட்சியில் பாதிக்கப்பட்ட காலாதேரா என்ற தொடர்ந்து இயங்க முடிவு செய்தது. ஆனால்ஆர்வலர்கள் அந்த ஆலையை அங்கே மூடி விட தொடர்ந்து போராடினார்கள். இந்திய கிராமங்களில் வாழும் மக்களி டமிருந்து கோக் நிறுவனத்தின் மீது பல புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தின் காலாதேரா நகரில், சிறு விவசாயிகள் தாங்கள் பாதிக்கப்பட்ட விவரங்களையெல்லாம் பட்டியலிடுகிறார் கள். 10 ஆண்டுகளுக்கு முன்னால் கோக் பாட்டில் ஆலை வருவதற்கு முந்திய காலத்தில் அந்த வட்டாரத்தில் விவசாய நிலங்களுக்கான தண்ணீர் முறையாக கிடைத்துக் கொண்டுள்ளது. அந்த ஆலை இயங்கத் தொடங்கியப் பிறகு, நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. அதனால் அருகாமை பகுதிகளில் விவசாயம் செய்வதே இயலாமல் போய் விட்டது. அதன் விளை வாக சிறு விவ சாயிகள் எல்லாம் 8 ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருக்கின்ற மாவு மில்லுக்கு தங்கள் நிலங்களையெல்லாம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதன் பிறகு தொடர்ந்து கோக் ஆலை இயங்கத் தொடங்கிய பிறகு, சுற்றியிருக்கும் விவ சாய நிலங்கள் எல்லாம் முக்கியமான அளவு நீர் வரத்து குறைந்து போனதால், விவசாயம் செய்யமுடியாமல் தங்கள் விளை நிலங்களை புழுதியில் போட்டு விட்டார்கள். மேற்கண்ட நிலைமை பற்றி இந்தியாவின் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தனது ஆய்விலும் கண்டுபிடித்தது. காலாதேரா பகுதியில், கோக் ஆலை வந்தபிறகு 22.36 மீட்டர் தண்ணீர் குறைந்துள்ளது என்று அந்த ஆய்வு கூறியது. அதிலும் குறிப்பாக 2007ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுக்குள் மட்டும் 6 மீட்டர் அளவு தண்ணீர் மட்டம் கீழ் இறங்கியுள்ளது என்று கணிக்கப்பட்டது. அதுமட்டுமின்றிசுற்றுப்புற சூழலையும் அந்த ஆலை மாசு படுத்தியுள்ளது. இந்தியாவின் வறட்சி பாதித்த பகுதிகளில், கோகோகோலா தனது பாட்டிலிங் ஆலைகளை தொடங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட செயலை ஒரு நிறுவனம் செய்யக் கூடாது என்ற பிரச்சினையும் இப்போது அந்த நிறுவனத்தின் பங்குதாரர் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. எங்கெங்லாம் வட்டார மக்கள் தண்ணீருக்கான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்களோ, அங்கெல்லாம் இந்த ஆலை வந்திறங்கிய பிற்பாடு, மக்கள் தங்களது வாய்ப்புகளை இழந்தி ருக்கிறார்கள். இது அடிப்படையான ஒரு மனித உரிமைப் பிரச்சினை. காலாதேரா பகுதியில் மட்டும் இந்த ஆலையை சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாழ்ந்து வரும் 10,000 குடும்பங்கள் இப்போது இந்த ஆலையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு சொந்தமான நிலத்தடி நீரை, அதாவது அவர்களது பாரம்பரிய இயற்கை செல்வத்தை கோகோகோலா நிறுவனம் கொள்ளையடித்து வருகிறது. அதை எதிர்த்து மக்கள் போராட்டக் குழுவை அமைத்து அங்கே போராடி வருகிறார்கள். இந்துஸ்தான் கோகோ கோலா பெவேரேஜஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இந்திய கோகோகோலா நிறுவனத்தின் துணை ஆலை இத்தகைய குற்றச் சாட்டுக் களை மறுத்து, தங்கள் ஆலை இயங்குதலுக்கு அங்கு கிடைக்கும் தண் ணீ ரில் ஒரு விழுக்காடுதான் பயன்படுத்து கிறோம் என்றும் கூறிவருகிறது. தங்களது பாட்டில் ஆலைகளுக்கு தண்ணீரை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம் என்றும் விளக்கம் கூறுகிறது. இதே போல கேரளா மாநிலத்தில், பாலக்காடு மாவட்டத்தில் இருக்கின்ற பிளாட்சிமடா கிராமத்தில், இதே போல வந்திறங்கிய கோகோகோலா பாட்டிலிங் ஆலை, அந்த வட்டாரத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை கீழ் இறக்கியது, நீரையும் கெடுத்தது. அதன் விளைவாக தமிழ் பேசும் ஆதிவாசி மக்கள் வாழ்கின்ற அந்த பகுதியில், அவர்கள் நீண்டகாலமாக குளிப்பதற்கும், சமையலுக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வந்த பெரிய குளத்து நீர் வற்றிப் போனது. குளத்தில் பூமியிலேயே கீறல்கள் விழுந்தன. வட்டார மக்கள் திரண்டு போராடியதன் விளைவாக, ஊராட்சி மன்றம் தீர்மானம் போட்டு, மாநில அரசாங்கமும் அந்த ஆலையை முடியது. அதன் பிறகுதான் கேரள அரசு நியமித்தக் குழு அந்த ஆலை யின் மீது அபராதம் விதித்துள்ளது. இதே நிலைமைதான் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருக்கின்ற கங்கைகொண் டான் பகுதியின், கோக் ஆலையாலும் விளைகிறது. வட்டார அளவில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைகிறது. தாமிரபரணி தண்ணீரை குடிநீர் வடிகால் வாரியம் கோக் ஆலைக்கு வாரி இரைக்கிறது. மக்கள் போராடியும் கூட நல்ல விளைவுகள் கிடைக்கவில்லை. இந்தியாவில் இருக்கும் அரசாங்கங்களை எதிர்த்து போராடுவதன் மூலம், தனியார் பன்னாட்டு நிறுவனங் களுக்கு கொடுக்கும் சலுகைகளை நிறுத்த முடிவதில்லை. அதனால்தான் இப்போது கோக் பங்குதாரர் கூட்டத்திலேயே, ஆர்வலர்கள் இறங்கி விட்டார்கள். பூசாரியை வேண்டுவதைவிட, சாமியையே சந்திக்கச் சென்று விட்டார்கள். இதுதான் இன்றைய காலத்தின் சுற்றுசூழல் ஆர்வலர்கள் எடுத்திருக்கின்ற புதிய தந்திரம். எப்படியோ மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் இதுபோன்ற ஆலைகளை ஏதாவது ஒரு வகையில் தண்டித்தால், அதுவே அவர்களின் அராஜகங்களுக்கு முடிவாக இருக்கும்.