வருகிற ஏப்ரல் 8ம் நாள் இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு எதிராக இந்தப் பொதுத் தேர்தலில் அதிபர் தேர்தலின் முடிவைப் போல, மகிந்தா கூட்டணி மகத்தான வெற்றியை பெறவும் முடியாது; பெற்றதாக தவறான கணக்கை காட்டவும் முடியாது. ஏனென்றால் இது நாடு தழுவிய அளவில், அந்ததந்த பகுதி பிரதிநிதிகளை உள்ளூர் மக்கள் தேர்வு செய்கின்ற தேர்தல். அதிலும் ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகள் வரை வழங்கலாம். முதலில் தாங்கள் வாக்களிக்க விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு முத்திரையிட வேண்டும். அடுத்து அதிக பட்சம் தங்கள் விருப்புவாக்குகள் (Preferential Votes) மூன்றை பதிவு செய்யலாம். ஒரு வாக்காளர் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று விருப்பு வாக்குகளையும் பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால், அவரது வாக்கு மொத்தமாகச் செல்லாததாக ஆகிவிடும். இதை விகிதாச்சார தேர்தல் முறை (Proportionate Electoral) என்று அழைக்கிறார்கள். இத்தகைய விகிதாச்சார தேர்தல் முறை என்பது, இந்தியாவில் இருப்பது போன்ற தேர்தல் முறையல்ல. இங்கே ஒவ்வொரு தொகுதிக்கும் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்களில் எந்த வேட்பாளருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும். அதையொட்டி தங்களது வாக்கை அந்த நபருக்கு மட்டும் அளிக்க வேண்டும். இதுதான் இந்தியாவில் நடைமுறையிலுள்ள வாக்குப்பதிவு முறை. ஆனால் இலங்கைத் தீவில் அப்படிப்பட்ட முறை இல்லை. ஆனால் இந்திய தேர்தலை அரசியல் கட்சிகள் ஆக்கிரமித்துள்ளன. வேட்பாளர்கள் அனைவரும் அல்லது அதிகப் பெரும்பான்மையானோர் ஏதாவது ஒரு கட்சியின் சார்பாக தேர்தலுக்கு நிறுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட சின்னம் ஒன்றைக் கொடுத்துவிடுகிறது. அங்கீகரிக்கப்படாத, அதே சமயம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சிகளும் இந்தியாவில் தேர்தலில் நிற்கின்றன. அவர்களுக்கு சுயேட்சைகளுக்கு கொடுக்கின்ற சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கொடுத்து விடுகின்றனர். அது தவிரவும் சுயேட்சை வேட்பாளர்களும் நிற்கிறார்கள். அவர்களுக்கும் ஏதாவது ஒரு சின்னம் வழங்கப்படுகிறது. எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமோ, அந்த வேட்பாளரின் சின்னத்திற்கு வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இதில் பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களில் நிற்கும் வேட்பாளர்களுக்கே வாக்குகள் விழுகின்றன. அதன் மூலம் கட்சிகள்தான் முக்கியமானவை என்பதாக நடைமுறையில் வந்து விடுகிறது. வேட்பாளர்தான் முக்கியமானவர் என்பது போல, ஒரு தோற்றத்தை இங்குள்ள தேர்தல் முறை காட்டுகிறது. ஆனால் தேர்தல் ஆணைய விதிகட்கு உட்பட்டுப் பார்க்கும் போது, கட்சிகள்தான் முக்கியமானவை என்பதாக நடைமுறையில் வந்து விடுகிறது. ஒரு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர், சுயேட்சையாகவோ அல்லது தனது மனசாட்சிப்படியோ நாடாளு மன்றத்திலும், சட்டமன்றங்களிலும் இயங்க முடியாது. கட்சியின் கொறடா கூறுகின்ற உத்தரவின்படிதான் நடந்து கொள்ள முடியும்.
ஆனால் இலங்கைத் தீவில் இருக்கின்ற விகிதாச்சார முறை என்ற தேர்தல் முறையில், கட்சிகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. அங்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னங்கள் உண்டு. கூட்டமைப்பு என்ற பெயரிலும் தேர்தல் சின்னங்களைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள். சுயேட்சைகள் சிலர் இருந்தாலும், தங்களுக்குள் ஒரு கூட்டணியை கட்டிக் கொண்டு அதற்கான தேர்தல் சின்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும், எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ, அதைவிட கூடுதலான வேட்பாளர்களை தங்கள் பட்டியலில் நிறுத்தும் போதுதான் அவர்களுக்கான தேர்தல் சின்னம் வழங்கப்படும். உதாரணமாக யாழ்பாணம் மாவட்டத்திலிருந்து 9 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால், 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை போட்டியிடும் கட்சி அல்லது கூட்டணி நிறுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான சின்னம் வழங்கப்படும். இது தன் விருப்பத்திற்கு ஒரு தனிமனிதர் வேட்பாளராக நிற்பதை தவிர்த்து விடும். வாக்காளர்கள் தங்கள் வாக்கை கட்சிகளுக்கே அதாவது கட்சிகளின் சின்னங்களுக்கே அளிக்கிறார்கள். தங்கள் வாக்கை பதிவு செய்த பிற்பாடு, அங்குள்ள வாக்காளர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு வாக்காளர் 3 விருப்பு வாக்குகள் வரை கூடுதலாக அளிக்கலாம். அந்த வகையில் தாங்கள் விரும்பும் வேட்பாளர் நிற்கின்ற சின்னத்தில் தங்களது விருப்பு வாக்குகளை அளிக்கிறார்கள்.
முதல் சுற்றில் நேரிடையாக வாக்காளர்கள் பதிவு செய்த கட்சிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும். 2வது, 3வது, 4வது சுற்றுகளில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அவையும் கூட கட்சியின் கணக்கில், ஒவ்வொரு கட்சி சின்னத்திலும் நிற்கின்ற வேட்பாளர்களின் வரிசைப்படி எண்ணப்படும். பதிவாகும் மொத்த வாக்குகளில் ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ எத்தனை விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளன என்பதை வைத்து, அந்த கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு எத்தனை உறுப்பினர்கள் என்பது முடிவு செய்யப்படும். பிறகு அந்த கட்சியின் அல்லது கூட்டணியின் சின்னத்தில் வென்ற வேட்பாளர்களில், அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் வரிசைப் படுத்தப்பட்டு, அதையொட்டி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். இந்த முறையில் சிறிய கட்சிகள் அல்லது கூட்டணிகள், குறிப்பிட்ட செல்வாக்கை தங்கள் பகுதியில் மட்டும் அல்லது தங்கள் பிரிவில் மட்டும் பெற்றுள்ள பிரதிநிதிகள்கூட வெற்றி பெற்று, நாடாளுமன்றம் செல்ல வாய்ப்புண்டு.
இந்திய தேர்தல்களில் நடப்பது போல, பதிவான வாக்குகளில் 20% அல்லது 30% வாங்கிய வேட்பாளர்கள் வெற்றி பெற்று, அவரை விட ஒரு வாக்கு குறைவாக வாங்கியவர் கூட, தோல்வியடையும் வாய்ப்பு அங்கே இல்லை. விகிதாச்சார தேர்தல் முறையில், நாடெங்கிலும் உள்ள பல தொகுதிகளிலும் சிதறலாக ஆனால் குறைவாக வாக்குகள் பெற்ற சின்னம் கொண்ட கட்சி அல்லது கூட்டணி கூட, ஒரு சில பிரதிநிதிகளை நாடாளு மன்றத்திற்கு அனுப்ப முடியும். அது ஒப்பீட்டளவில் சற்று விரிவான பிரதிநிதித்து வத்தை தேர்ந் தெடுப்பதற்கு இருக்கின்ற தேர்தல்முறை. அதனால்தான் இந்தியாவில் இருக்கும் விளிம்பின மக்கள் இயக்கங்க ளிலிருந்து வருகின்ற ஓரங்கட்டப் பட்ட பிரதிநிதிகள் கூட, தங்களது பிரதிநதித்து வத்தை உறுதி செய்ய, நிகழும் தேர்தல் முறையை மாற்றி, விகிதாச்சார தேர்தல் முறையை கொண்டு வரவேண்டும் என்ற கருத்தை ஆழமாக முன்வைக்கிறார்கள்.
அந்தளவிற்கு விகிதாச்சார தேர்தல் முறை என்பது நிலவும் இந்திய தேர்தல் முறையைக் காட்டிலும், சற்று முன்னேறிய அளவிலான பிரதிநிதித்துவத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்முறையாக இருக்கிறது. விகிதாச்சார தேர்தல் முறையில், ஒரு உறுப்பினர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, கட்சி மாறினாலோ, அதே கட்சியைச் சேர்ந்த அவருக்கு அடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை அவரிடத்தில் நியமனம் செய்ய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது. இதனால் இடைத் தேர்தல் என்பது இலங்கைத் தீவில் தவிர்க்கப்படுகிறது.
இலங்கைத் தீவில் தற்போது நடக்க இருக்கும் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் சிறுபான்மை மக்களான ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக தமிழர்கள் ஆகியோர் தங்களது பகுதி களிலிருந்து, பிரதிநிதிகளை அனுப்ப வாய்ப்பு கிட்டியுள்ளது. சிறுபான்மை தமிழர்கள் மத்தியில் செல்வாக்குடன் அதிபர் தேர்தலை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது தோன்றியுள்ளதும், அதனால் தமிழர் வாக்குகள் உடைபடும் அபாயம் இருப்பதும் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. இது தவிர இடது சாரிகள் கூட்டணி ஒன்றும் தமிழர் பகுதியில் நிற்பதனால், தமிழர் வாக்குகள் மேலும் உடைக்கப்படலாம் என்று ஆளும் கூட்டணி எண்ணுகிறது. அதன் மூலம் ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கின்ற, டக்ளஸ் தேவானந்தன் தலைமையிலுள்ள ஈ.பி.டி.பி.யும், சித்தார்த்தன் தலைமையிலான பிளாட் அமைப்பும், பிள்ளையான் தலைமையிலான அமைப்பும் சில நாடாளுமன்ற உறுப்பினர் களையாவது அனுப்பி வைக்கும் சூழ்நிலை ஏற்படாதா என்று ஆட்சியாளர்கள் நப்பாசைகொண்டு அலைகிறார்கள். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற முஸ்லிம் கட்சியுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிக்கப்படாத ஒரு தோழமையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதனால் ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம் வாக்குகள் ஒரே அணியில் விழுவதற்கும் வாய்ப்புள்ளது.
ஆனால் அதிபருக்கான பொதுத் தேர்தல் முடிந்து சில மாதங்களே உள்ள நிலையில், தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் அனைவரும் அல்லது அதிகப் பெரும் பான்மையான தமிழர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து அதிபர் தேர்தலுக்கு வாக்களித்த நிலைமை எண்ணிப் பார்க்கப்பட வேண்டி யிருக்கிறது. அதனால் அந்த நம்பிக்கையை உடைப்ப தற்கோ, சிதறடிப்பதற்கோ, தேவையான நேரமோ, வாய்ப்புக்களோ குறைவாக இருக்கிறது. அதனால் நல்லதோ, கெட்டதோ தமிழர் வாக்குகள் பெரிதும் சிதறாமல் ஒரு கூட்டணியை நோக்கித்தான் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் விருப்பு வாக்குகள் படி, மக்கள் விரும்பும் வேறு சில வேட்பாளர்களும் வெற்றி பெறலாம். அதே போல கொழும்பிலும், மலையகப் பகுதியிலும் ஆளும் கட்சிக்கு எதிரான வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதே போல தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியிலும் எதிர்க் கட்சி அணிக்கு உள்ள செல்வாக்கு, பல பிரதிநிதிகளை வெற்றி பெற வைக்கும் எனத் தெரிகிறது. ஆகவே மகிந்தா குழுவினருக்கு இந்தப் பொதுத் தேர்தல், ஒரு சவாலாகத்தான் அமைந்துள்ளது.
Tuesday, April 6, 2010
Subscribe to:
Posts (Atom)