Tuesday, August 3, 2010

சட்டத்தின் முன்னால் அறியாமை தண்டிக்கப்பட வேண்டாமா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பந்தாரா மாவட்டத்திலிருக்கும் ஒரு கிராமம் தான் கயர்லாஞ்சி. பய்யாலால் போட்மாங்கே என்ற ஒரு தலித் விவசாயியின் குடும்பம், ஆதிக்கசாதி வெறிக்கு பலியானது. 2006ம் ஆண்டு செப்டம்பர் 29ம் நாள் மாலையில், ஒரே தலித் குடும்பத்தைச் சேர்ந்த சுரேகா, சுதிர்,ரோசன், பிரியங்கா ஆகிய 4 பேரை படுகொலை செய்துள்ளனர். அதில் 19 வயது ரோசன் பிறவியிலேயே பார்வையிழந்தவர். 17 வயது உள்ள பிரியங்கா பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமாக அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தலைவர் பய்யாலால் ஒரு சிறிய விவசாயி. தன்னுடைய சொந்த நிலத்தை உழுது பயிர் செய்பவராக இருந்தார். பண்ணை யார்களான ஆதிக்கசாதியினர், அவரது நிலத்தை அபகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் ஆண்டு பலவாக ஆதிக்கசாதி பண்ணையார்களின் செல்வாக்கில் உள்ள கிராமங்களைக் கொண்டது. அதனால் தான் தலித் பட்டியலில் உள்ள மஹர் இனத்தை சேர்ந்த அம்பேத்கர், அந்த மாநிலத்தில் உள்ள தலித் மக்கள் விடுதலைக்காக போராட வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். அதுமட்டுமின்றி லட்சக்கணக்கான தலித் மக்களை, நசுக்கி வரும் சாதி கட்டுமான பிடிப்புக் கொண்ட இந்து மதத்தை விடுத்து வெளியே கொண்டு வந்து, புத்த மதத்தில் சேர்த்தார். ஆனாலும் கூட அத்தகைய மதமாற்றம், சாதி ஆதிக்கத்தையோ, தீண்டாமை கொடுமையையோ நீக்கி விடவில்லை. கயர்லாஞ்சியில் நடந்த தலித் படுகொலைகள் இதையே இன்றும் நிரூபித்து நிற்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட பய்யாலால் குடும்பத்தினரும், அம்பேத்கர் பிறந்த அதே மஹர் இனத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களும் பலரை போல புத்த மதத்தில் சேர்ந்தவர்கள் தான். ஆனாலும் தீண்டாமையும், சாதிப் பகைமையும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கவில்லை.
ஆதிக்கசாதி பண்ணையார்கள், தலித் மக்களை நிலவுடமையாளர்களாக காண்பதற்கு விரும்பவில்லை. குறிப்பிட்ட கயர்லாஞ்சி கிராமத்தில் பெரும்பான்மையாகவுள்ள ஆதிக்கசாதியினர் மத்தியில், விரல் விட்டு எண்ணும் அளவுக்கே தலித் குடும்பங்கள் இருக்கின்றன. அதனாலேயே அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இன்னமும் வாழ்கிறார்கள்.
மேற்கண்ட கொலை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் 2008ம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் குற்றம்சாட்டப்பட்ட 8 பேர்களில், 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. சக்ரு மஹகு பிஞ்சேவர், சத்ருகன் இஸ்ஸாம் தண்டே, விஷ்வநாத் ஹக்ரு தண்டே, ராமு மங்ரு தண்டே, ஜெகதீஷ் ரத்தன் மண்ட்லேக்கர், பிராபகர் ஜஸ்வந்த் மண்ட்லேக்கர் ஆகிய 6 பேர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டனர். சிசுபால் விஷ்வநாத் தண்டே, கோபால் சக்ரு பிஞ்சேவர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2010ம் ஆண்டு ஜுலை 14ம் நாள் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரி கிளை, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 6 ஆதிக்கசாதி வெறியர்களுக்கும், தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்தது. நீதிமன்ற அமர்வில் இருந்த ஏ.பி.லவாண்டே, ஆர்.சி.சௌகன் ஆகிய நீதியரசர்கள் மேற்கண்ட தீர்ப்பை வழங்கினர். அதேசமயம் நடந்த படுகொலைகளை, 1989ம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவில் பதிவு செய்து விசாரிக்க வேண்டிய, அதனடிப்படையில் தண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாக அந்த நீதியரசர்கள் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 2006ம் ஆண்டு நடந்த அந்த படுகொலைகளை, பதிவு செய்யும் போதே முதல் தகவல் அறிக்கையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இத்தகைய காவல் துறையின் செயல் கடுமையாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஜுலை 14ம் நாள் சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் கூட்டத்தில், இந்த சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நாகபுரி கிளை இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை, குறைத்தது மட்டுமின்றி மேற்கண்ட குற்றம் சாதி அடிப்படையில் நடத்தப்பட்ட குற்றம் அல்ல என்றும் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது. அந்த கருத்து இந்திய நாடாளுமன்றத்தின் பேரவைத் தலைவரான மீரா குமார் மூலம் கடுமையாக சாடப்பட்டு, அதுவே நாடெங்கிலும் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டது.
தமிழ்நாட்டிலும் கூட அத்தகைய நீதியரசர்களின் முத்திரைக் குத்தல் கடுமையான ஆர்ப்பாட்டங்களுக்கும், கண்டனங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. மேற்கண்ட வழக்கை சாதாரண நிலப்பிரச்சனையாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் சித்தரித்த நீதியரசர்கள், அது 1989ம் ஆண்டின் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் மக்களுக்கெதிரான அனைத்து கொடூரமான குற்றங்களும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று பேரவைத் தலைவர் மீரா குமார் கூறியது, ஊடகங்களுக்கு பெரும் செய்தியாக வெளிவந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக, தாழ்த்தப்பட்டோர் அல்லாத குற்றம் இழைத்தோர் செய்த கொடும் செயல் என்பதனால், மேற்கண்ட வழக்கு தானாகவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பதிவு செய்யப்படும் போது அந்த சட்டமே அந்த வழக்கின் தீர்ப்பிற்கு சரியான முறையில் வழிவகுக்கும் என்றும் மீரா குமார் கூறியுள்ளார்.
உள்ளபடியே 1989ம் ஆண்டின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், தெளிவாகவே சில விளக்கங்களை கூறுகிறது. சாதாரணமாக நடத்தப்படும் தாக்குதல்கள், கொலைகள், வன்புணர்ச்சிகள், தீ வைத்தல், நிலத்தை பறித்தல் ஆகியவை பொதுவான குற்றயியல் பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் 1989ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்று ஒரு புதிய சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது?
அந்த சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த எவரையும், தாக்கவோ, கொலை செய்யவோ, வீட்டை தீ வைக்கவோ, நிலத்தை பறிக்கவோ, வன்புணர்ச்சி செய்யவோ, பாலியல் வன்முறை நடத்தவோ, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தை சாராத ஒருவர் செய்வாரானால், மேற்கண்ட 1989ன் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளது. அதை கூட விளங்காத நிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் காவல்துறையோ, குறிப்பிட்ட வழக்கில் சி.பி.ஐ.யோ இருக்குமானால், அது சட்டம் தெரியாத அறியாமையாகவே கருதப்பட முடியும். அதுபோலவே மேற்கண்ட சட்டத்தில் உள்ள விளக்கத்தை படிக்காத அல்லது புரிந்துக் கொள்ளாத அல்லது அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்காத ஒரு நீதியரசர் இருப்பாரானால், அவரும் சட்டம் தெரியாத அறியாமை என்ற தவறை செய்திருக்கிறார் என்றே பொருள். சட்டத்திற்கு முன்னால் அறியாமை என்பது மன்னிக்கப்பட முடியாது. அதுவும் கூட ஒரு குற்றமே என்ற உண்மை இந்த இடத்தில் பொருத்தப்பட்டு, பார்க்கப்படுமா?
மேற்கண்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அமுலாக்கத்திற்காக விதிகள் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அந்த விதிகளில் தாழ்த்தப்பட்டோர் அல்லாத ஒரு காவல் துறை அதிகாரியோ, நீதியரசரோ குறிப்பிட்ட வழக்கை வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யாவிட்டால், அவர்களும் கடமை தவறியதற்காக 3 ஆண்டுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. மேற்கண்ட தவறான விளக்கத்தை, குறிப்பிட்ட சட்டத்திற்கு எதிராக தெரிவித்த நாகபுரி உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மேலே குறிப்பிட்ட படி 3 ஆண்டு தண்டனைக்குரிய குற்றத்தை செய்திருக்கிறார்கள். அவர்களை தண்டிக்க அரசும், அரசியல்வாதிகளும் தயாராக இருப்பார்களா?