இந்தியா ஒரே தேசம். நம்புங்கள் என்றனர். தமிழன் ஏதாவது பிரச்னையை பேசினால் இப்படி சொல்வார்கள். இந்தியாவில் பல தேசிய இனங்களிருக்கின்றன என்று மத்திய அரசு சொல்லத்தயாராயில்லை. அதேசமயம் நாடாளுமன்றத்திலேயே இந்தியா பல மொழிகளையும், பல பணபாடுகளையும், பல பழக்கவழக்கங்களையும், கொண்டது என்று பெருமையாக ஆள்வோர் கூறுகிறார்கள். இதை அதிகமாக ஏக இந்தியா பேசிவரும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும்போது, வாஜ்பாய் ஆட்சிக்கு ஆபத்து வந்தபோது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடந்தபோது, ஆட்சிக்கு ஆதரவாக பேசவந்த அமைச்சரும், தி.மு.க. முக்கிய தலைவருமான முரசொலி மாறனே, நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அப்போது அதை நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக தொலைக்காட்சியிலே ஒளிபரப்பு செய்தனர். அதில் தெளிவாக இந்தியா பல பண்பாடுகளை, கொண்ட நாடு என்பதால் அதன் ஒருமைப்பாடு பல பண்பாடுகளைக்கொண்ட இனங்களையும் இணைத்தே செல்ல வேண்டும் என்றார். அதுதான் இந்தியாவில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதற்கும் அர்த்தம். ஆனால் என்ன காரணத்தாலோ பல தேசிய இனங்களிருப்பதை போட்டு உடைக்க இந்திய ஆளும் கூட்டம் தயாராக இருப்பதில்லை. அதேசமயம் பல மொழிகளும், பல இனங்களும், இருப்பதை மறுக்கவும் அவர்களால் முடியவில்லை. மராத்தி மொழி பேசும் மகாராஷ்டிராகாரர்களுக்கு, சமீபத்தில் பீகார்காரர்களுடன் மோதல் வந்தது. அது ரயில்வே பணிகளில், மகாராஷ்ட்ராவில் பீகார்காரர்களை கொண்டுவந்து இறக்குவதை எதிர்த்து தங்கள் வாழ்வியலுக்காக மகாராஷ்டிராகாரர்கள் போராடிய ஒரு வாழ்வாதார பிரச்சனை. ஆனால் அப்போதே இந்தியாவின் ஊடகங்கள், பீகார்காரர்களை எப்படி இந்தியாவிற்குள்ளேயே மகாராஷ்டிராகாரர்கள் தாக்கலாம் என்று இந்திய ஒற்றுமை பேசி, யதார்த்தத்தில் எழுந்துள்ள ஒரு பிரச்சனையில் இருக்கும் நியாயங்களை புரியவிடாமலே செய்து விட்டனர். ஒரு தேசிய இனத்தின் பிரச்சனைகளை சரியாக வெளிப்படுத்தாமல், வெறும் வார்த்தை அளவில் இந்திய ஒற்றுமையை பேசினால் ஒற்றுமை வந்துவிடுமா என்ற விசயம்தான் அவர்களால் புரியப்படவில்லை. எல்லா தேசிய இனங்களுக்கும் ஒரு நாட்டில் அவரவர் பிரச்சனை உணரப்பட்டு அது தீர்க்கப்படவேண்டும் என்ற பார்வை இல்லாமல் இருப்பதால்தான் மீண்டும், மீண்டும் இதுபோன்ற தேசிய இனங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒற்றுமை என்பது சொல்வதன் மூலம் வருவதல்ல. மாறாக அந்தந்த தேசிய இனங்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவுவதன்மூலமே ஒன்றுபட்ட ஒரு நாடு உருவாக முடியும்.
சமீபத்தில் காட்சி ஊடகங்களில் பரபரப்பாக காட்டப்பட்டது ஒரு அடிதடி நிகழ்ச்சி. அதாவது மும்பையில் இருக்கின்ற பிரபல காட்சி ஊடகமான ஜி தொலைக்காட்சியில் ஒரு நேரலை நிகழ்ச்சி நடந்தது. அதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பின் தலைவர் மன்சூர், மும்பை ஊடக நிலையத்தில் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, பெல்காம் பிரச்சினையின் மீது அவரது சூடான விவாதத்தின் இடையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேயை விமர்சிக்கிறார். உடனடியாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், குண்டர்கள் ஊடக நிலையத்திற்குள் நுழைந்து மன்சூரை தாக்குகிறார்கள். அவரது சட்டையை கிழித்து முடித்து விட்டு, பனியனைக் கூட விடாமல் கிழிக்கும் காட்சி உலகம் முழுமைக்கும் காட்டப்படுகிறது. இவ்வாறு இரண்டு எல்லை மாநிலங்களுக்குள் ஒரு பிரச்சினை சுதந்திரம் அடைந்த பின் 62 ஆண்டுகள் கழித்து உருவாகிறது என்று சொன்னால் இதற்கு என்ன காரணம்?
இப்போது கிளம்பியிருக்கும் பிரச்சினை பெல்காம் பகுதியைப் பற்றியது. இந்த வட்டாரம் கர்நாடக மாநிலத்திற்குள் உள்ளது. அதன் எல்லையில் மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. மராத்தி மொழி பேசக்கூடிய மராத்தியர்கள் அதிகமாக எல்லை பகுதியோரத்தில் கர்நாடக மாநிலத்திற்குள் வாழ்கிறார்கள். இது இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய ஒரு செய்திதான். ஒவ்வொரு மாநிலத்தின் எல்லையோர கிராமங்களிலும், அடுத்த மாநிலத்தின் மக்கள் வாழ்வது என்பது வழமைதான். மொழிவாரி மாநிலங்களை பிரிக்கும் போது இத்தகைய சிக்கல்கள் வராமல் பிரிக்காதது தவறா? அல்லது அதில் அக்கறை இல்லாமல் எல்லாமே இந்தியாதானே என்ற புரிதலில் மேலோட்டமாக மாநிலப் பிரிவுகள் செய்யப்பட்டனவா? அல்லது இந்தியா முழுமையும் ஒன்றுதான் என்ற புரிதல் மேலே அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளுக்கும், அவர்களைச் சார்ந்திருக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டும் தான் இருக்கிறதா? அதாவது அடித்தளத்தில் இருக்கும் வெவ்வேறு மொழி பேசும் மக்களுக்கில்லையா? அல்லது ஒன்றுபட்ட இந்தியா என்று இருந்த புரிதல் காலப்போக்கில் கரைந்துபோய், ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் மாற்று மொழி பேசும் மக்களுடன் நல்லிணக்க வாழ்வை இழந்துவிட்டார்களா? அல்லது திணிக்கப்பட்ட பொருளாதார, அதிகார சுமைகளால் பாதிக்கப்படும் மக்கள் தங்கள் மொழி மற்றும் இனம் பேசும் மக்களை மட்டுமே நம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்களா? இப்படிப்பட்ட கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
பெல்காம் என்ற வட்டாரத்திற்குள் மராத்தி மொழி பேசும் மக்களும், கன்னட மொழி பேசும் மக்களும் வாழ்கிறார்கள். அதன் வடக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் வாழும் மக்கள் மராத்தி மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள். தெற்குப் பகுதியில் கன்னடம் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். மேற்குப் பகுதியிலும் கூட கன்னடம் பேசும் மக்கள் இருக்கிறார்கள். 100% ஒரே மொழி பேசும் மக்கள் பெல்காம் வட்டாரத்தில் இல்லை. பெல்காம் நகரில் 1955ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து எம்.ஈ.எஸ் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிரா எக்கிகரன் சமிதி தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது. அவர்கள் தேர்தல்களில் நிற்கும் போதெல்லாம் மராத்தி மொழி பேசக்கூடிய 865 கிராமங்களை மகாராஷ்டிராவிற்கு, திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்கள்.
பெல்காம் நகரிலிருந்து 5 பெரிய மராத்தி மொழி நாளேடுகள் வெளியிடப்படுகிறது. பெல்காம் வட்டாரம் முழுக்க மகாராஷ்டிரா மாநிலத்துடன் சேர வேண்டும் என்று அவர்கள் கோரவில்லை. மாறாக, 95% மராத்தி பேசக்கூடிய எல்லூர் போன்ற கிராமங்கள் தான் தங்கள் மாநிலத்துடன் சேர வேண்டும் என்று கோருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும்போது, முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் மேற்கண்ட கிராமங்கள் கர்நாடகாவிற்கு சென்று விட்டன என்கிறார்கள். இது சம்மந்தப்பட்ட மோதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுக்காக கருப்பு நாள் கடைபிடிக்கப் பட்டுள்ளது. மராத்தி மொழி பேசும் கிராமங்களிலும் மராத்தி மொழிக்கு சமமான உரிமைகூட கொடுக்கப்படுவதில்லை. அதுவே, அந்த மக்கள் மத்தியில் மாற்றுச் சிந்தனையை உருவாக்கியுள்ளது. மாநில அரசாங்க மொழியாக உள்ள கன்னட மொழியிலும், அதிகாரிகளின் முதலாளி மொழியான ஆங்கில மொழியிலும் மட்டுமே மராத்தி கிராமங்களுக்கு அரசாங்க செய்திகள் செல்கின்றன. இதுவே, மராத்தி பேசும் மக்களை அந்நியப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் உருது மொழியில் புழக்கம் இருக்கிறது. அதுபோன்ற அணுகுமுறையைக் கூட மராத்தி மக்களுக்கு அரசு தரவில்லை. மகாஜன் அறிக்கை என்ற ஒரு அறிக்கை இந்தப் பிரச்சினையின் மீது வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையையே அரசாங்கம் தொடர்ந்து மேற்கோள் காட்டி வருகிறது. அந்த அறிக்கையின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சில கிராமங்கள், கர்நாடக மாநிலத்திற்குள் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது. அப்படியானால் இருபுறமும் இப்படிப்பட்ட நிலைமை இருப்பது தெரிகிறது. இப்போது கர்நாடக அரசாங்கத்தின் அணுகுமுறையில், மராத்தியர்களுக்கு எதிரான செயல்பாடு தொடங்கியது. அதையொட்டி பால்தாக்கரே கன்னடர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். உடுப்பி என்ற பெயரில் அங்காடிகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் இருக்கின்றன என்றும், ஆகவே கன்னடர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்றும் மிரட்டினார். இதையொட்டி எழுந்த விவாதத்தில்தான், மும்பையில் உள்ள தனியார் காட்சி ஊடக நிலையத்தில் பேச வந்த கர்நாடக ரக்ஷண வேதிகே தலைவர் மன்சூர் தாக்கப்பட்டிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரசும் இணைந்து ஒரு தந்திரமான நிலைப்பாட்டை முதலில் எடுத்தார்கள். பெல்காம் வட்டாரத்தை யுனியன் பிரதேசமாக அறிவித்துவிடலாம் என்ற பாதுகாப்பான கோரிக்கையை முதலில் வைத்திருந்தார்கள். இப்போது நிலைமை மாறி விட்டது. மக்கள் மத்தியில் மராத்திய கிராமங்களை கேட்கும் மனோநிலை மகாராஷ்டிராவில் வளர்ந்துவிட்டது. அதையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல், தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்து அந்த கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று கூறுகிறார். கடந்த புதன்கிழமை பிரதமரை சந்தித்த மகாராஷ்டிரா மாநிலத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளில் ஒருவரான சிவசேனா தலைவர் திவாகர் ரவோடே, முதலமைச்சர் அசோக் சவானை குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் சவான் மேலவையில் பெல்காம் யூனியன் பிரதேசமாக இணைக்கப்பட வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இருக்கும் நிலை தொடரட்டும் என்றும் இரண்டு நிலைப்பாடுகளை அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இத்தகைய தடுமாற்றமான முடிவுகள் புதிய ஒன்றல்ல. ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும், இப்போது அறிவிக்க வேண்டாம் என்றும் இரண்டு நிலைப்பாடுகளை மாநில மற்றும் மத்திய காங்கிஸ் தலைமை எடுத்த தடுமாற்றத்தை நாம் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். இந்தியாவில் இருக்கின்ற மக்கள் தொகைக்கு ஏற்ற முறையில் ஒரு சரியான, பொருத்தமான பொருளாதார திட்டத்தை முன்வைக்க முடியாத காங்கிரஸ் கட்சி, வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி அனைவருக்கும் வேலை கொடுக்க திட்டமிடுவதற்கு வக்கில்லாத காங்கிரஸ் கட்சி, அதன் மூலம் எழுகின்ற இதுபோன்ற பிராந்திய பிரச்சினைகளையும், மொழி சார்ந்த பிரச்சினைகளையும் கையாள்வதில் தடுமாற்றத்தை சந்திப்பது அதிசயம் அல்ல.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லைப்பகுதியில் இருக்கின்ற ஆந்திர மாநிலத் தேவைகளையொட்டி ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. மகாராஷ்டிரா எல்லையில் ஆந்திர மாநிலத்திற்குள் பாயக்கூடிய கோதாவரி ஆற்றின் குறுக்கே பாப்ளி அணை என்ற ஒன்றை மகாராஷ்டிர அரசு கட்டி வருகிறது. அந்தப் பகுதி ஆந்திராவில் உள்ள அடிலாபாத் என்ற ஆதிவாசிகள் அதிகம் உள்ள மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளது. அணைகட்டும் பணிகளை ஆந்திர மாநிலத்தார் எதிர்த்து வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவரான தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது எம்.பி, எம்.எல்.ஏ.க்களுடன் பாப்ளி அணை பகுதிக்கு சென்று பார்த்து வர புறப்பட்டார் அவரை மகாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சி காங்கிரஸ்தான். ஆந்திர மாநிலத்தின் நியாயமான கோரிக்கையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து, மகாராஷ்டிராவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கெதிராக பிரச்சினையை கிளப்பி விடுவார்கள் என்ற அச்சம் இருந்தாலும், ஆந்திர முதல்வர் ரோசய்யா பாப்ளி அணைக்கட்டை பார்வையிட நாயுடுவை அனுமதிக்குமாறு கோருகிறார். இந்த நிகழ்ச்சி கூட அண்டையில் உள்ள இரு மாநிலங்களுக்கு மத்தியில், இயற்கை ஆதாரங்களை பயன்படுத்துவது சம்மந்தமான பிரச்சினைதான். இதே போன்ற பிரச்சினையைத்தான் தமிழ்நாடு அரசு ஒகேனக்கல் அணை கட்டும் பிரச்சினையில், கர்நாடகாவின் தலையீடுகளை எதிர்கொள்கிறது. காவிரி நீரை நியாயமாக பெறுவதற்கு அனைத்து தீர்மானங்களையும் மீறி கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தரப்பட வேண்டிய தண்ணீரைக் கூட கேரள அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டிற்குள் ஓடும் பாலாறு ஆந்திர மாநிலத்தில் இருந்து வருவதால், அங்கேயே தடுப்பணைகள் கட்டி அந்த தண்ணீர் தடுக்கப்படுகிறது. இவ்வாறு இந்தியா முழுமையிலும் ஒவ்வொரு மாநிலமும், மாநில மக்களும், அண்டை மாநிலத்துடன் இயற்கை ஆதாரங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் பகிர்ந்து கொள்வதில் தொடர்ந்து பிரச்சினைகள் எழுந்து கொண்டே யிருக்கின்றன. இவையெல்லாம் இந்தியா ஒரே தேசம் என்ற சொற்றொடரை நியாயப்படுத்துகிறதா?
பல தேசிய இனங்களை தன்னகத்தே கொண்ட இந்தியா, அவற்றை அவற்றிற்கே உரிய அங்கீகாரத்துடன் ஏற்றுக் கொள்வது மட்டுமே எழுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், இந்திய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் உதவும் என்ற நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால் தவறாக இருக்குமா?
Sunday, July 18, 2010
Subscribe to:
Posts (Atom)