அறுபது ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த ஒரு தீர்ப்பு அலகாபாத் நீதிமன்றத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. 8189 பக்கங்களுக்கு அந்த தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் தீர்ப்பு எழுதிய மூன்று நீதியரசர்களும் கண்டபடி பக்கம், பக்கமாக எழுதி கிழித்து விட்டார்களா என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மூன்று நீதியரசர்களான சர்மா, அகர்வால், கான் ஆகியோரில், அகர்வால் 5238 பக்கங்களில் தனது தீர்ப்பை எழுத, சர்மா 2666 பக்கங்களில் தனது தீர்ப்பை தர, கான் மட்டும் 285 பக்கங்களில் தனது தீர்ப்பை எழுதியுள்ளார். கான் தான் கண்டதை அல்லது கண்டுபிடித்ததை சுருக்கமாக எழுதியிருக்கும் போது, ஏன் இந்த இந்து மதம் சார்ந்த இரு நீதியரசர்களும் அதிகமான பக்கங்களை விரயம் செய்திருக்கிறார்கள் என்பது சிதம்பர ரகசியம். அதாவது அவர்கள் தங்கள் கற்பனைகளை, அல்லது தாங்கள் கண்டுபிடித்ததை அல்லது தங்களுக்கு பிடித்ததை எழுதி இருக்கிறார்கள் போல தெரிகிறது.
இது " கண்ணாடி. எச்சரிக்கையாக கையாளுங்கள்" என்று சொல்லக்கூடிய மதம் சம்பத்தப்பட்ட விஷயம் இல்லயா? அந்த கவனம் அவர்களுக்கு இல்லையே? ஆனாலும் தமிழ் நாட்டில் உள்ள, அறிவுஜீவிகள் மத்தியில் உலாவும் ஏடு என்று பெயர் பெற்ற ஒரு தமிழ் ஏடு இதை, "அரசியல்தனமான தீர்ப்பு" என்று தலைப்பிட்டு தலையங்கம் எழுதிள்ளது. அந்த ஏடு அப்படி எழுதியது உள்ளபடியே ஆச்சர்யமான ஒன்றுதான். ஏன் என்றால் அவர்களிடம் இந்துத்துவா வாடை வரும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும். கட்டபஞ்சாயத்து தீர்ப்பு போல உள்ளது என்று அந்த இதழ் எழுதியுள்ளது. இதையா உயர்நீதிமன்றத்திடம் எதிர்பார்த்தோம் என்று கேட்டுள்ளனர்.
தொல்லியல் ஆய்வு துறை கூறிய அறிக்கையில், ஒரு புராதன கோவில் இருந்தது என்பதையும் அது ராமர் கோவிலா என்று தெரியாது என்பதையும் விளக்கியுள்ள நீதிமன்றம், எப்படி அங்கு ராமர் பிறந்தார் என்று கூற முடியும்?
அதுமட்டுமின்றி, கோவிலை இடித்து விட்டுத்தான் மசூதியை கட்டினார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்களே? ஆனால் 1992 ஆம் ஆண்டில் ஒரு மசூதியின் கட்டிடம் அதாவது ஒரு வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டதை அனைவரும் காட்சி ஊடகங்களில் கண்டோமே? அப்படியானால் அந்த மசூதி என்பது யாருக்கோ பல நூறு ஆண்டுகளாக சொந்தமாக இருந்தது என்றுதானே அர்த்தம்? அதை இடித்ததனால் மட்டுமே அந்த சொந்தக்காரர்கள் இல்லாமல் போய்விடுவார்களா? அது பற்றி ஏன் இந்த நீதிமன்றம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில்தான் "இது ஒரு அரசியல்தனமான தீர்ப்பு" என்ற கருத்து. அதுவும் ஒரு இந்து மத நம்பிக்கை உள்ள பிரபல தமிழ்நாட்டு ஆசிரியர் ஒருவரிடமிருந்து வந்திருக்கும் கருத்து. எப்படிப்பட்ட அரசியல்தனம் அது என்பதை நாம் ஆராயலாம்.
முதலில் சாதாரணமாக அரசியலை அலசுபவர்கள் இதை காங்கிரசு கட்சி தன்மீது இப்போது சாட்டப்படும் குற்றமான, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் ஊழலிலிருந்து தப்பித்துக்கொண்டு இன்னொரு நிகழ்ச்சி நிரலை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள். அதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனாலும் அதைவிடப்பெரிய பல அரசியல்கள் இதில் இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாமல் ஆக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. அதை பாபர் மசூதி இடிப்பு ஏற்படுத்தியது. அந்த இடிப்பை செய்த இந்துத்துவா அமைப்பினர் ஒரு அரசியல் லாபத்திற்காக செய்தார்கள் என்பது நாடறிந்த ரகசியம்.
அப்போது ஆட்சியில் இருந்தது நரசிம்மராவ்வின் தலைமையிலான காங்கிரசு ஆட்சி. இந்த 1949 ஆம் ஆண்டு சிலைகள் மசூதிக்குள்,வைக்கப்பட்டன என்ற நிகழ்வும், காங்கிரசு கட்சி ஆளும்போது ஏற்பட்டதுதான். 1985 இல் பூட்டை உடைத்து உள்ளே போய் ராமரை வழிபட ஏற்பாடானதும் காங்கிரசு கட்சி ஆளும் காலத்தில்தான். இப்போது 2010 இல் தீர்ப்பு வரும்போதும் மத்தியில் காங்கிரசு ஆட்சிதான். அப்படியானால் காங்கிரசு கட்சியும் பெரும்பான்மை மத உணர்வுகளை அறுவடை செய்யத்தான் முயர்ச்சிக்கிறதா? என்ற கேள்வி எழும். அதற்கு காங்கிரசு கட்சியே தனது முரண்பாடான நிலைப்பாடுகள் மூலம் இந்த நேரத்திலேயே தனது வர்ணத்தை நிரூபித்துள்ளது. உச்சநீதிமன்றம் இந்த அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை தடை செய்தபோது, சென்ற வாரத்தில் காங்கிரசு கட்சி அந்த தடையை ஆதரித்தது. அதே காங்கிரசு கட்சி உச்சநீதிமன்றம் தடையை நீக்கியபோது உடனே அதையும் ஆதரித்தது. இப்போது வெளிவந்திருக்கும் தீர்ப்பையும் காங்கிரசு கட்சி ஆதரித்து வரவேற்றிருக்கிறது. இதுதான் இந்திய தேசிய காங்கிரசு கட்சி.
அடுத்து நாம் வரவேண்டியது இந்த அரசியல் சதியால், லாபம் பெறப்போகும் சக்திகள் யார்? யார்? என்று வரிசைப்படுத்தி பார்க்கவேண்டும். இந்தியாவில் மக்கள் மத்தியில் அமைதி கெடுமானால், இந்திய மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுமானால், அது யாருக்கு லாபமாக அமையும்? நிச்சயமாக இந்த நாட்டையோ, இந்த நாட்டு மக்களையோ நேசிக்கின்ற யாருக்கும் அது லாபம் பயக்காது. மாறாக இந்தியாவில் ஒற்றுமை மக்கள் மத்தியில் இருக்க கூடாது என்று என்னும் சக்திகளுக்குதான் அதனால் மகிழ்ச்சி ஏற்படும். அப்படிப்பட்ட சக்திகள் இந்திய மக்களின் ஒற்றுமை இன்மையால் பலன்பெறும் சக்திகளாக இருப்பார்கள். அவர்கள் கண்டிப்பாக இந்திய நாட்டை சுரண்டி கொழுக்க வேண்டும் என்ற சக்திகளாகத்தானே இருப்பார்கள்? அவர்கள் இந்தியாவை காலனி சுரண்டல் செய்ய விரும்பும் ஏகாதிபத்திய சக்திகளாகத்தானே இருக்க முடியும்? அதற்கு பெயர்தானே " பிளவு படுத்தி, ஆள்வது" என்று பெயர்.
இந்த பெயர் இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு பொருத்தமாக இருந்த காலம் உண்டல்லவா? இப்போது அப்படி பிளவு படுத்தி, இந்தியாவை ஆளவேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? அது அமெரிக்காகாரனுக்குதானே இருக்கிறது?
இந்தியாவில் அதிகமான மூலதனமிட்டு, சுரண்டிவரும் அமெரிக்க கம்பனிகளும், பன்னாட்டு மூலதன நிறுவனங்களும் இந்திய மக்களுக்குள் பிளவு இருக்கவேண்டும் என்றும், ஒற்றுமை இருக்க கூடாது என்றும் எண்ணுவார்களா? மாட்டார்களா? அதுமட்டுமின்றி இன்று அமெரிக்க அரசு இந்திய அரசுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டு வருகிறது. அதற்காக ஒரு அணு சக்தி விபத்து இழப்பீடு சட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. இவையெல்லாம் அமெரிக்க அரசுக்கு தேவையான மற்றும் லாபகரமான செயல்கள். அதற்காக அமெரிக்க அரசு எத்தனை கடினப்பட்டு இந்த சட்டங்களை கொண்டுவர வேண்டியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டத்திற்காக, காங்கிரசு கட்சியை ஒருபுறமும், பா.ஜ.க.வை இன்னொரு புறமும் அமெரிக்க அரசு தயார் செய்து பிறகுதான் அந்த சட்டத்தை ஒரு பெரிய நாடகத்தை நாடாளுமன்றத்தில் நடத்தி நிறைவேற்ற வைத்திருக்கிறது. அப்போதே அமெரிக்காவை பொறுத்தவரை அவர்களுக்கு காங்கிரசு என்ற ஆளும் கட்சியும் வேண்டும், பா.ஜ.க.என்ற எதிர்க்கட்சியும் வேண்டும் என்பது நமக்கு புரிய வேண்டும்.
அதே நிலைதான் இந்த தீர்ப்பிலும் ஏற்பட்டுள்ளது. இதுவும் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. என்ற இரண்டு கட்சிகளும் சேர்ந்து மகிழக்கூடிய ஒரு நிலைதான். அதாவது இந்திய மக்கள் மத்தியில் ஒரு நீண்ட கால பிளவை ஏற்படுத்திவிடலாம் என்ற ஏற்பாட்டில் செய்யப்பட்டதுதான்.
இவ்வாறு ஒரு தீர்ப்பை அறிவிப்பது பெர்ய காரியமல்ல. ஆனால் அதை அவர்களது எதிர்பார்ப்புப்படி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றுவதுதான் கடினமான செயல். அதை செய்வதில் வளர்ந்து இருக்கும் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதிப்பதுதான் ஏகாதிபத்தியத்தின் சதி. இதை அரசியல் சதி என்றும் அழைக்கலாம்.
அத்தைகைய ஒரு செயலை இந்த விசயத்தில் அவர்கள் செய்திருக்கிறார்கள் எனபது தான் நாம் கவனிக்க வேண்டிய செய்தி. அதாவது அரசியலை, மத உணர்வுடன் இணைத்து, அதிகாரத்தை கைப்பற்ற இந்துத்துவா சக்திகள் எண்ணியபோதுதான் அவர்கள் பாபர் மசூதி- ராம ஜன்ம பூமி விஷயத்தை கையில் எடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறியது என்னவென்றால், பெரும்பான்மை மக்களுடைய மத உணர்வு என்றார்கள். அதுதான் உண்மை என்றால் அவர்கள் ஊருக்கே தெரியாமல் இருந்த பாபர் மசூதியை, ஒரே நாளில் போய் இடித்துவிட்டு ராமர் கோவிலை அங்கேயே கட்டி இருக்க முடியும். அது அவர்களது நோக்கம் அல்ல. அரசியல் செய்து இந்து மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை வாங்கி, அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான் அவர்களது அன்றைய நோக்கம். அதனால்தான்.அவர்கள் அன்று இந்தியா முழுவதும் ரத யாத்திரை நடத்தி, அதன்மூலம் மூலை,முடுக்குகளிலும் கூட அவர்களுக்கு தெரியாத பாபர் மசூதி பற்றியும், ராமர் கோவில் பற்றியும், அயோத்தி பற்றியும் தெரியப்படுத்தினார்கள்.அதற்கு அவர்கள் பல ஆண்டுகாலம் இந்திய மக்களை பரப்புரை மூலம் தயார் செய்தார்கள். ஏமாந்தது என்னமோ இந்து உணர்வு உள்ள மக்கள்தான்.
இப்போது அதேபோல காங்கிரசும், பா.ஜ.க.வும் இப்போது சேர்ந்து, இந்த தீர்ப்பை எழுத வைத்திருக்கிறார்கள் என்றால், இரண்டு கட்சிகளும் அமெரிக்க மேலாண்மைக்கு ஆதரவான நிலை எடுப்பதை அதில் காண முடியும். அதற்காக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வழிபாட்டுத்தள இடிப்பு, மீண்டும் அதே உணர்வை ஏற்படுத்தாதே என்ற எண்ணத்தில் அதை மீண்டும் தூண்டி விடுவதற்கு இந்திய அரசு எவ்வளவு பாடுபட்டது என்பது நமக்கு தெரியும். அதாவது ஊடகங்களை பயன்படுத்தி, தீர்ப்பு வரப்போகிறது, அமைதி காத்திடுங்கள், கலவரம் வேண்டாம், ஆயுதம் தாங்கிய படையை நிறுத்திவிட்டோம், என்பதாக தினசரி சேதிகளை கொடுத்துக்கொண்டே இருந்த இந்திய அரசின் முதலாளி விசுவாசம் நிச்சயமாக அமெரிக்க அரசால் பாராட்டப்படும்.
அதுமட்டுமின்றி இந்த தீர்ப்பை யாரும் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாதே என்று, அதற்கு எதிராக அதை தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தின் படிக்கட்டுகளில் ஒருவரை ஏற்றி, இறக்கி, பிறகு தடை விதித்து, அதையும் ஒரு பரப்புரையாக ஆக்கி மகிழசசி அடைந்தார்கள் என்பது எண்ணிப்பார்கப்படவேண்டும். அதற்கும் மக்கள் செவி மடுக்காமல் இருப்பார்களோ என்று மீண்டும் தீர்ப்பை வெளியிடும் நாள் அன்று கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு என்று விளம்பரங்கள் செய்து அதற்கு தலைமை அமைச்சர் பெயரில் வேண்டுகோள் என்று அரசு செலவில் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து அதன் மூலம் முழுமையான மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டோம் என்ற செய்தியை அமெரிக்க முதலாளிகளிடம் கொண்டு போய் சேர்த்தால்தான், இந்த இந்திய அடிவருடிகளுக்கு உற்சாகம் வரும். அதை செய்து விட்டார்கள்.
இந்திய அரசு அரசியல் சட்டத்தின் முகப்புரையில் கூறியிருக்கும் மதச்சார்பற்ற அரசு அல்ல என்பதையும், பெரும்பான்மை மதத்திற்கு சாதகமான ஒரு மதச்சார்பு அரசு என்றும் இதன்மூலமாவது புரிந்து கொள்ளப்படவேண்டும். அதுமட்டுமின்றி இந்த உண்மை பகிரங்கமாக தெரியும் பட்சத்தில் இந்த அரசு இயந்திரத்திற்கு எதிரான ஒரு அரசாங்கம் படைக்கிறோம் என்று கூறி செயல்படும் மாவோவாதிகள்தான் பயன்பெறுவார்கள் என்பதும் உணரப்படவேண்டும். இந்த நேரத்தில் இந்திய மக்களின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று அறியப்பட்ட அந்த சக்திகளின் அரசியல் சதியை முறியடிக்க விரும்புகிறவர்கள், பெரும்பான்மை மக்கள் மத்தியில் இந்த சிறுபான்மை உரிமைகளை எடுத்து சொல்லி, அதன் மூலம் ஏமாற்றப்படும் அந்த இந்து மத உணர்வுள்ள மக்களை விழிப்படையச்செய்ய வேண்டும். போராட்டங்களை விட, மோதல்களை விட, அவற்றை எதிர்பார்த்து மக்களின் ஒற்றுமையை உடைக்க விரும்பும் சக்திகளின் முயற்ச்சியை முறியடிக்க பெரும்பான்மை மக்கள் மத்தியில் உண்மை செய்திகளை கொண்டு செல்வோம். மக்கள் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்
Friday, October 1, 2010
Subscribe to:
Posts (Atom)