எப்போதும் போல, இப்போதும் மனிதாபிமான நியாயங்கள், போர் விதியின் நியாயங்களுடன் உரசுகிறது. மனிதாபிமானம் ஒரு அடிப்படையான நற்குணம். மனிதர்கள் தங்கள் நலனைத் தாண்டி, மற்றவர்களின் துயரங்களையும், துன்பங்களையும் புரிந்துக் கொண்டு, மாற்றாரின் அவதிகளை எண்ணி உருகும் போது, அது மனிதாபிமானமாக வெளிப்படுகிறது. ஆனால் வரலாற்றில் மனிதாபிமானம் என்பது நியாயங்களுக்கு ஆதரவாக செயல்படுவது போலவே, அநியாயங்களுக்கு வக்காலத்து வாங்கியும் செயல்பட்டிருப்பது அல்லது செயல்பட்டுக் கொண்டிருப்பது அல்லது செயல்பட போவது துல்லியமாகத் தெரிகிறது.
இந்தியாவினுடைய விவசாயிகள், ஆள்வோரின் திட்டத்தால் புதிய வகை விதைகளையும், உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும், உழுபடக் கருவிகளையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. மரபு வழி தன்மைகளையெல்லாம் விவசாயத்தில் மறுத்து விட்டு, வருகின்ற இந்த புதிய வழி செயல்பாடுகள், விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் திவாலாத் தன்மையை ஏற்படுத்தியது. இந்திய விவசாயத்தில் முக்கியமான பங்கு வகித்த பஞ்சாபில், இத்தகைய பசுமைப்புரட்சி செயல்பாடுகள், சீக்கிய விவசாயிகளை பெரிய அளவில் பாதித்தது. அவர்கள் பாரதிய கிசான் சபா என்ற பெயரில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்தினர். அதை கொடுங்கரங்களால் அரசு அடக்கியது. போராடும் சீக்கிய விவசாயிகளின் மைந்தர்கள், பிருந்தன் வாலே தலைமையிலான சீக்கிய ஆயுதப்படையில் சேரத் தொடங்கினர். அவர்களுக்கு சீக்கிய குருத்துவாராவான தங்கக் கோயில், அடைக்கலமாக இருந்தது. அந்தத் தங்கக் கோவில் மீது, இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், ராணுவம் தாக்குதல் நடத்தியது. பிருந்தன் வாலேயையும், அவருடன் இருந்த ஆயிரக்கணக்கான சீக்கிய போராளிகளையும், அவர்களுடன் அடைக்கலம் நாடி தங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான சீக்கிய அப்பாவி மக்களையும், தங்கக் கோவிலுக்கு உள்ளேயே, இந்திய ராணுவம் கொன்று குவித்தது.
இந்த படுகொலைகளைப் பார்த்து, உலகெங்கிலும், குறிப்பாக இந்தியாவில் பலரும், உச்சு, உச்சு என்று வாயைக் கொட்டினர். இதுதான் அவர்கள் காட்டிய மனிதாபிமானம். அந்த படுகொலைகளுக்கு பதில் கொடுப்பதாக எண்ணிக் கொண்டு, பிரதமரின் பாதுகாப்புக் காவலர்களான சத்வந்த் சிங்கும், பியான்ட் சிங்கும், சேர்ந்து கொண்டு பிரதமர் இந்திரா காந்தியை அவரது வீட்டிலேயே சுட்டுக் கொன்றனர். பிருந்தன் வாலே மரணத்திற்கு உச்சு கொட்டிய, அதே மனிதாபிமானவாதிகள், இப்போது இந்திரா காந்தி மரணத்திற்கும் உச்சு கொட்டினார்கள். அப்படியானால் இந்த மனிதாபிமானம், எத்தகைய மனிதாபிமானம்? இந்த மனிதாபிமானிகள், எதை புரிந்துக்கொண்டிருக்கிறார்கள்? மேற்கண்ட கேள்விகள் தானாகவே எழுகின்றன.
மனிதாபிமானம் என்பது அடிப்படையான ஜனநாயக மாண்பு. அதை ஒவ்வொரு மனிதரும், மனத்தளவில் அடிப்படையாகக் கொண்டு தான் சிந்திக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதாபிமான அடிப்படையில் சிந்திக்கும் போது, உலகெங்கிலும் எதிரொலிக்கின்ற மனித உரிமைகள் என்ற உயர் தளத்திற்கு, ஒருவர் இட்டுச் செல்லப்படுகிறார். அப்போது உலகில் நிலவும் நீதி மற்றும் அநீதி பற்றி அறிய முடிகிறது.
அநீதி என்பது ஆதிக்கம் செலுத்துவது, அடிமைப்படுத்துவது, அடக்குமுறை செய்வது, அழிக்கும் முறை நடத்துவது போன்ற தன்மைகளைக் கொண்டது. அநீதியை எதிர்த்து போராட வேண்டும் என்பது மாற்றத்தை கொண்டுவர விரும்புகின்ற சக்திகளின் நோக்கம். அநீதியை எதிர்த்து நீதிக்காக போராடுகிறவர்கள், அநீதியான கட்டமைப்பை எதிர்ப்பதற்கு துணிகிறார்கள். அநீதியான கட்டமைப்பு என்பது பொருளாதார கட்டமைப்பாகவோ, சமூக ரீதியான கட்டமைப்பாகவோ, சாதிய ரீதியான மற்றும் மதரீதியான கட்டமைப்பாகவோ இருக்கிறது. ஆகவே அதற்கு எதிரான அல்லது அத்தகைய அநீதியான அமைப்பை நீக்குவதற்கான, நீதிக்கான போர் என்பது பல்வேறு கடினங்களை எதிர் கொண்டே ஆக வேண்டும். அப்படி எதிர்கொள்ளும் போது, நீதிக்காக போராடும் சக்திகள், ஒரு போரை புரிந்தே ஆக வேண்டும். போர் புரிகிறவர்கள் தங்களது நிலைப்பாட்டில் நழுவாமலிருக்க வேண்டும். போர் புரிகிறவர்கள் சமரசம் செய்ய இயலாது. அதனால் போர் என்பது ஈவு இரக்கமற்ற முறையில் செய்தால் தான், வெற்றி என்ற இலக்கை அடையும். அப்படி ஈவு இரக்கமற்று நீதிக்காக போர் புரியும் சக்திகளை ஏமாற்றுவதற்கு, மனிதாபிமானம் என்ற இனிய சொல், அநீதியின் ஆசான்களால் பயன்படுத்தப்படுகிறது.
அதனால் தான் மனிதாபிமானம் என்பது சூழ்நிலைக்கொப்ப, இடத்திற்கு ஏற்ப, பிரச்சனை அடிப்படையில் காணப்பட வேண்டிய ஒன்று. அப்படி அல்லாமல் பொதுவாக மனிதாபிமானம் என்ற சொல்லை மட்டுமே கையாண்டால், அது பல நேரங்களில் அநியாயக்காரர்களுக்கு சாதகமான விளைவுகளுக்கும் இட்டுச் சென்று விடும். உதாரணமாக கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் தங்களது இயக்கத்தை, வர்க்க வேறுபாடுகளை களைவதற்காக உருவாக்கினார்கள். ஆங்கிலேயனுடைய காலணி ஆதிக்கம் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு முதலில் தலைமை கொடுத்து வந்த எம்.என்.ராய் என்ற தலைவர், பின்னாளில் மனிதாபிமானியாக மாறி, நீதிக்கான கம்யூனிஸ்டுகளின் போர் முறையைக் கூட, எதிர்க்கத் தொடங்கி விட்டார். பிரபலமான மனிதாபிமானி என்ற பெயர் எம்.என்.ராய்க்கு, ஆள்வோர் மத்தியில் உருவானது. ஆனால் கம்யூனிஸ்டுகள் தங்கள் பாணியில், அவரை முதலாளித்துவ மனிதாபிமானி என்று அழைத்தார்கள். ஆங்கிலேயனுடைய ராணுவத்தை எதிர்த்து, அடக்கு முறையை எதிர்த்து, பலாத்காரத்தை எதிர்கொள்ள, கம்யூனிஸ்டுகள் போர் முறையை கூர்மைப்படுத்தும் போது, அதை மழுங்கடிக்கும் விதத்தில், முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் எம்.என்.ராய் மனிதாபிமானம் பேசத் தொடங்கினார். அத்தகைய மனிதாபிமானம், ஆள்வோருக்கு சாதகமான நிலையை எடுத்தது. ஆட்சியாளர்களுக் கெதிரான போரை நீர்த்துப் போக வைக்க பயன்பட்டது. அதனால் தான் அன்றைய கட்டத்தில் எம்.என்.ராயின் மனிதாபிமானத்தை, முதலாளித்துவ மனிதாபிமானம் என்பதாக அடையாளம் கண்டனர்.
நீதிக்கான போரில் ஈடுபடுபவர்கள், ஈவு இரக்கமின்றி போர் செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாதம், தனது ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி, ஈழத் தமிழினத்தை அழிக்க முற்பட்ட போது, ஈவு இரக்கமற்ற முறையில் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து, ஒரு போர் தேவைப்பட்டது. அந்த போரை நடத்திய தமிழீழ விடுதலைப் போராளிகளை, பயங்கரவாதிகள் என்று கூட ஆளும் கூட்டம் முத்திரைக் குத்தியது. எதிரி எந்த அளவுக்கு, உனக்கெதிராக முத்திரைக் குத்துகிறானோ, அந்த அளவுக்கு நீ சரியாக இருக்கிறாய் என்று அர்த்தம் என்பதாக மாவோவின் மேற்கோள் ஒன்றுண்டு. அதுபோல போராடியதால் தான், போராளிகளின் இலக்கு சிதறாமல், இன்றுவரை உலக அளவில் பட்டொளி வீசி பறக்கிறது.
இதேபோல தியாகி முத்துக்குமார் தன்னுயிரைத் தானே பொசுக்கிக் கொண்ட போது, தனது உடலை கருவியாக்கி, மக்கள் எழுச்சியை ஏற்படுத்த அறைகூவல் விடுத்தார். அதை ஏந்திச் சென்ற இளம் மாணவர்கள், எதிர்கொண்ட முக்கியப் பிரச்சனை, மனிதாபிமானம். உடல் பழுதாகி வருவதால், விரைந்து அடக்க முடித்து, சுமூக சூழல் காண வேண்டும் என்று மனிதாபிமானம் கேட்டுக் கொண்டது. அத்தகைய மனிதாபிமானம், அரசியல் போராட்டத்தில், மக்களை விழிப்புணர்வு கொள்ள வைக்கும் பரப்புரையில் கூட, தடையாக வந்து நின்றதை அப்போது உணர முடிந்தது.
போர் நியதிகளை நியாயப்படுத்தி பரப்புரை செய்ய சக்திகள் தேவை. போர்களத்தில் நேரடியாக ஈடுபடுவது மட்டும் போராவதில்லை. போரின் நியாயங்களை பரப்புரை செய்வோர் எங்கணும் தேவை. அது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தைக் கண்டு, கலக்கமுறுவது நீதிக்கான போரில் நிகழக் கூடாது. மனிதாபிமானத்தின் பெயரால் மறுக்கப்படும் நீதி, மன்னிக்க முடியாதது.
Tuesday, February 2, 2010
Subscribe to:
Posts (Atom)