Thursday, April 29, 2010

கொலையுண்ட தமிழ் ஊடகத்தார் சிவராமின் 6வது நினைவு ஆண்டு

இலங்கைத் தீவில் சிறுபான்மை இனமான தமிழர்களுக்கு எதிராக, ஒரு இனவாதப் போர் நடத்தப்பட்டு, இன அழிப்பு நடந்தேறியது என்பது உலக மக்களுக்கு இப்போது தெரியும். அதிலும் போர்க் குற்றங்களை நடத்தித்தான் மகிந்தாவின் அரசாங்கம், தனது போர் வெறியை, போர் வெற்றியாக சித்தரித்துக் கொண்டுள்ளது என்பதும் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர் களுக்குப் புரியும். அதே சமயம் களத்தில் போர் புரிய இறங்கிய போராளிகள், தங்கள் உயிரை துச்சமென மதித்து இறங்குவதால், அவர்களது வீரச்சாவுகள் வரலாறுகளாக பதிந்து விடுகின்றன. ஆனால் தங்கள் தொழிலை ஊடகவியலாளராக தொடங்கி யவர்கள் யாரும், அல்லது தொடர்ந் தவர்கள் யாரும் முதலில் எதிர்பார்ப்பது சரியான அங்கீகாரமும், சுதந்திரமும்தான். உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரம் என்பது பெரிதாக மதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை அன்றாடம் சுவாசிக்கப் பிறந்தவர்கள், ஊடகவியலாளர்கள். அப்படி ஒரு ஊடக வியலாள ராகத்தான் சிவராம் தர்மரத்னமும் இருந்தார். 2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் சிவராம், சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு கும்பலால் வாகனத்தில் கடத்தப்பட்டார். மறுநாள் அதிகாலையில் சிவராமின் உயிரற்ற சட லம் இலங்கை நாடாளுமன்ற கட்டிடத் திற்கு அருகேயே அடையாளம் காணப் பட்டது. இது உலகின் பல மூலைகளில் உள்ள பல்வேறு ஊடகவியலாளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. பிரபல மற்றும் முக்கிய மூத்த ஊடகவியலாளர்கள் அனைவரும் சிவராமை ஏதாவது ஒரு விதத்தில் தெரிந்து வைத்திருந்தனர். சிவராம் மிகவும் அறிமுகமான, தைரி யமான ஒரு அரசியல் ஆய்வாளர். அவரது எழுத்தின் மூலமே, தமிழ்நெட் என்ற இணைய தள ஆங்கில ஏட்டிற்கு மூத்த ஆசிரியராக பணியாற்றி வந்தார். 1959ம் ஆண்டு மட்டக்கிளப்பு மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி பிறந்த வர். அக்கரைப் பட்டு அருகே ஒரு நிலவு டமை யாளர் குடும்பத்தில் பிறந்தவர். மட்டக் கிளப்பிலும், பின்னர் கொழும்பிலும் கல்லூரி வாழ்க்கை யை பயணித்தவர். 1982ம் ஆண்டு பெரடேனியா பல்கலைக் கழகத்தில் படித்த போது, முதல்கட்ட இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக வெளியேற்றப் பட்டவர். அதையொட்டி முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் தலைமையில் இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற பிளாட் அமைப்பின் முன்னணி அமைப்பாக இருந்த காந்தீயம் என்ற வடிவில் தன்னை இணைத்துக் கொண்டார். 1983ம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டுப் போர் ஒரு இனமோதலாக உருவான பிற்பாடு, சிவராம் பிளாட் போராளியாக மாறினார். அந்த அமைப்பின் ராணுவத்திலும், அரசியல் பிரிவிலும் சிவராம் ஒரு முக்கிய பங்காற்றினார். 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவான பிற்பாடு, இந்திய அமைதிப்படை இலங்கை சென்று இறங்கிய தற்குப் பிறகு, பிளாட் தலைவர் உமாமகேஸ் வரன் ஒரு வெகுமக்கள் அரசியல் முன்னணியை உருவாக்கினார். அந்த அரசியல் முன்னணிக்கு, ஜன நாயக மக்கள் விடுதலை முன்னணி என்று பெயர். டி.பி.எல்.எப். என்று அழைக்கப்பட்ட அந்த முன்னணிக்கு, பொதுச் செயலாளராக சிவராமை, உமா மகேஸ்வரன் நியமித்தார். அதுவே ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இயங்கத் தொடங்கியது. காந்தியம் அமைப்பில் இருந்த மார்க்சி யவாதி சந்ததியார் பிளாட் அமைப்பால் கொல்லப்பட்ட பிறகு, அதை நிறுவிய டேவிட் அய்யா பிளாட் அமைப்பால் ஓரங் கட்டப்பட்ட பிறகு, பிளாட் அமைப்பின் படையணிக்கு தலைமை வகித்த கண்ணன் என்ற ஜோதிஸ்வரனும், சுபாஷ் என்ற பவானந்தனும், மட்டக்கிளப்பிலேயே விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டப் பிறகு, உமாமகேஸ்வரனுடன் தொடர்ந்து சிவராம் இயங்கி வந்தார்.இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை, புலி கள் அமைப்பின் மீது திணித்து, இந்திய அமைதிப்படையிடம் புலிகள் அமைப்பை அடையாளமாக ஆயுதங்களை ஒப் படைக்க இந்தியா வற்புறுத்திய பிறகு, பிளாட் தலைவர் உமாமகேஸ்வரன் அதை எதிர்த்து நின்றார். அப்போது உடன் இருந்தவர் சிவராம். இந்தியாவின் விரிவாக்க மனப்பான்மையை எதிர்த்து, தென்னிலங்கை யின் ஜே.வி.பி.யுடன் தொடர்பு கொண்டு செயல்பட, முகுந்தன் முயன்ற போது சிவராம் அதை எதிர்த்தார். அதே போல வீரசாகசமாக மாலத்தீவை கைப்பற்ற முனைந்து, முகுந்தன் தோற்ற போது, சிவராம் அதையும் எதிர்த்தார். 1989ம் ஆண்டு மேற்கண்ட காரணங் களால், சிவராம் பிளாட் அமைப்பை விட்டு வெளியேறினார். தன் சொந்த ஊரான மட்டக்கிளப்பிலேயே 1988ல் திருமணம் செய்த சிவராம், வைஷ்ணவி, வைதேகி என்ற பெண்களுக்கும், சேரலாதன் என்ற மகனுக்கும் தந்தையானார். டி.பி.எல்.எப்.பில் இருக்கும் போதே, சிவராமின் திறமையால், அரசியல் ஆய்வாளராக ஐ.நா.நிதியில் இயங்கும் இண்டர் பிரஸ் சர்வீஸில் எழுதத் தொடங்கினார். அதே போல ஐலண்ட் என்ற ஆங்கில இதழிலும் தராக்கி என்ற புனைப் பெயரில் எழுதத் தொடங்கினார். தாரக்கியின் கட்டுரைகள் பிரபலமடைந்தன. சரியான புள்ளி விவரங்கள், உள்விவ காரங்கள், ராணுவ, அரசியல், யுத்த தந்திர விவரங்கள், இலங்கையின் இனவாத மோதலில் இரு தரப்பிலும் இருக்கின்ற செயல் தந்திர மதிப்பீடுகள் ஆகியவை சிவராமின் எழுத்துக்கள் மூலம் உயிர் பெற்றன. ராணுவ அறிவியலில் அவரு டைய பரந்த படிப்பும், மார்க்சிஸம் என்ற அரசியல் சிந்தாந்த அறிவும், அவருக்கு சிறந்த கட்டுரைகளை எழுத உதவியது. அதன் மூலம் அவரது எழுத்துக்கள் மிக வும் பிரபலமடைந்தன. ஊடகவியலாளராகவும், நடிகராகவும் இருந்த ரிச்சர்டு டி சொய்சா என்ற நண்பர்தான் சிவராமனை ஊடகத்து றைக்கு இழுத்தவர். அந்த டி சொய்சா 1990ம் ஆண்டில் அவரது வீட்டிலி ருந்து கடத்தப்பட்டு, படுகொலை செய்யப் பட்டபோது, அந்த உடலை அடையாளம் காட்டியவர் சிவராம். தராக்கி என்ற பெய ரில் சிவராம் எழுதிய கட்டுரைகள் 1990ன் தொடக்க காலங்களில் பிரபலமாகி, கட் டாயமாக படிக்கக் கூடிய ஒரு பத்தியாக மாறிவிட்டது. அதை பிரான்சில் உள்ள தமிழ் சமூகம் தொகுப்பு புத்தகமாக வெளியிட்டது. ஐலண்ட், சன்டே டைம்ஸ், லண்டன் தமிழ் டைம்ஸ், டெய்லி மிரர், வீரகேசரி ஆகிய ஊடகங்களுக்கு, சிவராம் எழுதி வந்தார். 1997ல் தமிழ்நெட் டாட் காம் என்ற இணைய தள ஏட்டுக்கு ஒரு செய்தித் தாளாக புதிய முகவரி தந்தவர் சிவராம். அவர் கடத்தப்பட்ட நாளில், இரவு 7.30 மணிக்கு தமிழ் நெட் இணைய தளத்திற்கு தனது கட்டுரையை எழுதி அனுப்பி விட்டு வந்திருக்கிறார். இதழியலுக்கு மட்டுமின்றி, தமிழ் அரசியலுக்கும், இலக்கியத்திற்கும், அவர் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளார். இலங்கையின் சிக்கலான வரலாறு அவரது முக்கியத்துவத்தை உயர்த்தி விட்டது. அவர் வரலாற்று ஆசிரியர்களுடன், அரசியல் அறிவியலாளர்களுடன், மானூடயியலாளர் களுடன், கொள்கை நிபுணர்களுடன் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பூகோளயியலாளர்களுடன் என பல்வேறு மட்டங்களில் விவாதம் செய்து வந்தார். மட்டக்கிளப்பு பூர்வ சரித் திரத்திற்கு ஒரு உயர்தர முன்னுரையை, 2005ம் ஆண்டு ஏப்ரலிலேயே எழுதிக் கொடுத்தார். 90களின் மத்தியில் பல அரசாங்க மற்றும் மனித உரிமை அமைப்புகள் அவரிடம் ஆலோசனைகள் கேட்டதுண்டு. ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்கா ஆகிய நாடுகளில் பயணம் செய்து மனித உரிமை ஆர்வலர்களுடன் ஊடாடல் செய் துள்ளார். அவருடைய எழுத்துக்கள் மூலமாக தொடர்ந்து ராணுவ சக்திகளிடமிருந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. ஆனா லும் கொழும்பை விட்டு வெளியேற மறுத்தார். 2004ல் காவல்துறை அவரது இல்லத்தை இரண்டு முறை சோத னையிட்டது. பல ஆயுதக்குழுக்கள் அவருக்கு மிரட்டல் விடுத்தன. போராடும் விடுதலைப்புலி அமைப்பிற்கு பயன்படும் வகையில், அரசாங்கத்தின் இனவாத, இன அழிப்பு போர்த்தந்திரங்களை அம்பலப்படுத்திய ஒரு தமிழ் எழுத்தாளர் இதே நாளில் 5 ஆண்டுகளக்கு முன்னால் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்ட உடனேயே கிடைத்த செய்தியையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அவரது ஊடக நண்பர்கள் டெல்லிக்கு தொடர்பு கொண்டு, பிரதமர் மன்மோகன் மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து அவர் உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி, மறுநாள் அதிகாலை இணையதளத்தில் வெளியானதைப் பார்த்து, உறைந்து போயினர். இதுவே இலங்கையின் ஊடகச் சுதந்திரத்திற்கு எடுத்துக் காட்டு.

Wednesday, April 28, 2010

சார்க் மாநாடு பசுமையையும், மகிழ்ச்சியையும் தருமா?

இன்று பூடான் நாட்டின் தலைநகரான திம்புவில் சார்க் நாடுகளின் உச்சி மாநாடு தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு என்பது தான் சார்க் என அழைக்கப்படுகிறது. 8 நாடுகள் இந்த கூட்டமைப்பில் இருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, பூடான் ஆகிய நாடுகள் சார்க் கூட்டமைப்பு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்துழைப்பதற்காக என்ற பெயரில் பார்வையாளர் நாடுகளாக ஆறு நாடுகள் இருக்கின்றன. அவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, பர்மா ஆகியவை. இப்போது இருக்கும் 8 நாடுகளும் அநேகமாக இந்திய அரசின் செல்வாக்குக்கு உட்பட்டு இருப்பதாக ஒரு கருத்து இருக்கிறது. நாடுகள் என்று கூறும்போது, அந்தந்த நாட்டு அரசுகள் தான் சார்க் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளார்கள். அதனால் அரசுகளின் மனப்பான்மைகளும், சிந்தனைப் போக்குகளும் இந்த கூட்டமைப்பில் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த முறை திம்புவில் நடக்கும் 16வது சார்க் உச்சிமாநாட்டில் புதிய உறுப்பினர்களாக சீனாவையும், ஈராக்கையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை பாகிஸ்தான் ஏற்கனவே முன்வைத்தது. ஆனால் இந்திய அரசு அந்தப் பிரச்சினையை தந்திரமாக கையாண்டு தள்ளி வைத்து விட்டது. அதாவது கடந்த கால சார்க் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதற்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை இந்திய அரசு முன்வைத்து, அதை மற்ற நாடுகளும் ஏற்றுக் கொண்டு விட்டன. 3 ஆண்டுகளுக்கு முன்னால் சார்க் கூட்டத்தில் ஆப்கானிஸ்தானை இணைப்பதற்கு இந்தியா வைத்த முன்வைப்பு, ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2012ம் ஆண்டில் பார்வையாளர் தகுதிக்கு பர்மா, ஈராக் மற்றும் சீனாவை சார்க் ஏற்றுக் கொள்ள இருக்கிறது. பூடான் நாட்டின் 25 ஆண்டு ஓட்டத்தில் முதன் முறையக பிராந்திய கூட்டமைப்பை கூட்டும் பெருமையைப் பெறுகிறது. அதனால் திம்புவில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இந்த மகத்தான உச்சி மாநாட்டிற்கு வருகின்ற விருந்தாளிகளை வரவேற்க பரோவிலிருந்து, திம்புவிற்கு மற்றும் புயன்ட்ஷோலிங்கிலிருந்து திம்புவிற்கு வருகின்ற நெடுஞ்சாலையில், பெரிய வாயிற்கதவுகள் நிறுவப்பட்டுள்ளன. பூடான் அரசுக்கு வருக என்பதாக எழுதப்பட்டுள்ளன. பூடானில் இப்போதும் மன்னராட்சிதான் நடந்து வருகிறது. திம்பு நகரை சுத்தமாக்கும் திட்டத்தில், ஏழ்மையானவர்கள் அகற்றப்பட்டு விட்டார்கள். நடைமேடைகள் சீர் செய்யப்பட்டுள்ளன. கழிப்பிடங்கள் சுத்தமாக்கப்பட்டுள்ளன. உச்சிமாநாட்டின் முழக்கத்திற்குஒப்ப நகரை பசுமையாக மாற்ற , சில இடங்களில் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஏப்ரல் 19ம் நாள் தொடங்கிய பருவநிலை மாற்றம் பற்றிய தேசிய கலைப் போட்டி ஏப்ரல் 28ம் நாள் வரை நடைபெறுகிறது. பூடான் அரசப்படை 8 நாடுகளின் தேசிய கீதத்தையும் பாட பயிற்சி பெற்று விட்டார்கள். சார்க் விருந்தினர்கள் தங்குவதற்காக சுற்றுலாவாசிகள் அறைகளிலிருந்து காலி செய்யப்பட்டு விட்டனர். சார்க் நாடுகளின் அரசாங்கங்கள், மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்ற கருத்தை எதிரொலித்து, மாற்று கருத்தை முன்வைக்கும் மக்கள் சார்க் என்ற அரசுசாரா நிறுவனங்களின் கூட்டத்தை பூடானில் கூட்டுவதற்கு அரசு அனுமதிக்கவில்லை. அதனால் அந்த மக்கள் சார்க் சில நாட்கள் முன்பு டெல்லியில் கூடியது. அதில் மனித உரிமைகளுக்கும், ஊடக உரிமைக்கும் சார்க் அரசுகள் செய்து வரும் அடக்கு முறைகளை எதிர்த்தன. பூடான் நாட்டு அகதிகள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பிரச்சினையை எழுப்பி விடக்கூடாது என்பது மக்கள் சார்க் நடத்துவதை பூடான் அரசு எதிர்ப்பதற்கான முக்கிய காரணமாக தெரிகிறது. சார்க் கூட்டம் பல உள்நாட்டு விவகாரங்களை விவாதிக்காமல், தப்பிப்பது உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன்னால் பூடான் நாட்டில் கருத்துரிமை கேட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். பூடான் அரச வம்சம் ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனக்குழுவைச் சேர்ந்தது. வேறு இனக்குழுவை சேர்ந்த மக்கள், வெவ்வேறு பண்பாடுகளை பின்பற்றினார்கள். அரச குடும்பத்தைப் போன்ற உடைகளை அணிவதும், பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுவதும், மற்ற இனக்குழுக்கள் மீது திணிக்கப்பட்டன. அதனாலேயே அந்த நாட்டை விட்டு அவர்கள் வெளியேறி னார்கள். ஒரு லட்சத்து 8,000 பூடான் அகதிகள், கிழக்கு நேபாளத்தில் ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் கண்காணிப்பில், மூடப்பட்ட முகாம்களில் வாழ்கின்றனர். அங்கேயே 10,000 பூடான் அதிகாரிகள் வெளியே வாழ்கின்றனர். நேபாளம் தான் பூடான் அகதிகளில் அதிகமானவர்களை தாங்கிக் கொண்டிருக்கிறது. 6வது பூடான் அரசாட்சியில் இருக்கும் மக்கள் தொகையில், 6ல் ஒரு பங்கு அகதிகளாக வெளியில் இருக்கின்றனர். புத்தமதத்தை தழுவாது இருக்கும் நபர்கள் அகதிகளாகஆக்கப் பட்டுள்ளனர். அகதிகளில் இளைஞர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று விடுகின்றனர். நேபாளத்திலிருக்கும் பூடான் அகதிகளில் 30 விழுக்காடு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகளில் புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டார்கள். அகதிகளின் தலைவர்கள் நடைபெறும் சார்க் மாநாட்டில், தங்கள் மீள் குடியேற்றம் பற்றி பேசவேண்டும் என வற்புறுத்துகின்றனர். சார்க்கின் 8 நாட்டு அரசுகளுக்கும் அதுபற்றி மனு எழுதியுள்ளனர். பூடான் சிறையில் தங்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை விவரித்துள்ளனர். மரியாதையுடன் தாங்கள் நடத்தப்படவேண்டும் என்றும், 1990ம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும், மக்கள் தொகையில் வாக்களிக்க மறுக்கப்படும் 14 விழுக்காடு வாக்காளர்களுக்கு, வாக்குரிமை வேண்டும் என்றும் அவர்கள் எழுதியுள்ளனர். இந்தியாவிலும் பூடான் அகதிகள் 25,000 பேர் இருக்கிறார்கள். உலகம் எங்கும் 30,000 அகதிகள் சிதறி வாழுகிறார்கள். நேபாளமும், பூடானும் அகதிகளின் மீள் குடியேற்றம் பற்றி 15 மேசைப் பேச்சுகள் நடத்திவிட்டன. நேபாள தலைமை அமைச்சர் மாதவ்குமார் நேபாள், சார்க் மாநாட்டில் அகதிகளை திருப்பி எடுத்துக் கொள்ளுதல் சம்பந்தமாக பேச வேண்டும் என கூறியுள்ளார். இந்தியா இதில் தலையிடாமல் பூடான் அகதிகள் நாட்டிற்கு திரும்ப வழியில்லை என்றும், பூடான் அகதிகளின் தலைவர் பலராம் பௌதைல் கூறினார். இவர் பூடானில் ஜனநாயகத்திற்கான தேசிய முன்னணி என்ற எதிர்கட்சி தலைவர். இந்திய அரசே இது இரு நாடுகளுக்கும் மத்தியில் உள்ள பிரச்சினை என்பதாக தட்டிக் கழிக்கிறது. இலங்கை அரசத்தலைவர் மகிந்தா, இந்திய பிரதமர் மன்மோகனை சார்க் மாநாட்டில் சந்திக்கிறார். போருக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றி பேச இருக்கிறார். பசுமையுடன் கூடிய, மகிழ்ச்சியான தெற்காசியா என்பது மாநாட்டின் முழக்கம். வேண்டுமானால் அரசுகள் அந்தப் பெயரில் உள்ள பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, தங்களை வர்த்தகத்தை பெருக்கிக் கொள்வார்கள். அது எந்த வகையிலும் எந்த நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்காது. பேரழிவுகளுக்கு எதிரான பொது திட்டத்தை வகுப்பதிலும், பிராந்திய உள் தொடர்புகளை வளர்ப்பதற்கான ஒப்பந்தங் களும் ஏற்படலாம். சார்க் பல்கலைக்கழகம் ஒன்றை டெல்லியில் நிறுவ விதிகளும், ஒழுங்குகளும் இந்த மாநாட்டில் உருவாக்கப் படலாம். மக்களிடமிருந்து மக்களுக்கான தொடர்புகளையும் பொருளா தார மற்றும் சமூக தொடர்பு களையும் ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த மாநாடு விவாதிக்கும் என கூறுகிறார்கள்.ஆனால் அரசுகளின் பிரதிநிதித்துவமும், இந்திய அரசின் செல்வாக்கும் உச்சிமாநாட்டு திசைவழியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாதா? பூடானும், மால்தீவும் ஏற்கனவே இந்திய அரசின் செல்வாக்குப் பகுதிகளாக இல்லையா? வங்காள தேசத்துடனும், நேபாளத்துடனும் இந்தியாவிற்கு இருக்கின்ற நதிநீர் பிரச்சினைகள் பாரபட்சமின்றி தீர்க்கப்பட முடியுமா? சீனா பங்கு கொள்ளாத கூட்டத்தில் இந்திய அரசின் செல்வாக்கு இலங்கையில் அதிகமாவதற்கு இந்த மாநாடு பயன்பட்டு விடுமா? இதுபோன்ற கேள்விகள்தான் தெற்காசிய நாடுகளின் மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

Tuesday, April 27, 2010

சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு, சாதிகளை இறுக்கமாக்குமா? அல்லது தளர்த்துமா?

இந்திய துணைக் கண்டம் அதனுடைய சிறப்பு அம்சமாக, சாதிகளை அதிகமான அளவில் உள்ளடக்கி வைத்துள்ளது. சாதிகளின் பெயரில் இங்கே ஆதிக்கங்களும், ஏற்றத்தாழ்வுகளும், அதையொட்டி இழிவுபடுத்தல்களும், வெளியேற்றல்களும், அடக்கி வைத்தல்களும், தீண்டாமைகளும், காணாமைகளும் நடந்து வருகின்றன. அதன் மூலம் ஏற்கனவே சில காரணங்களால் முன்னேறிவிட்ட சாதியினர் மட்டும், 2000 ஆண்டுகளாக, அனைத்து செல்வங்களையும் இந்த நாட்டில் அனுபவிக்க முடிகிறது. நாட்டு வளங்களை கடுமையான உழைப்பால் உருவாக்கிக் கொடுக்கும் சாதி சனங்கள், இத்தகைய ஏற்றத்தாழ்வில் கீழே தள்ளப்படுகின்றன. கீழே தள்ளப்படும், ஓரங்கட்டப்படும், தீண்டாமைக் கொடுமைக் குள்ளக்கப்படும், முன்னேற வாய்ப்பு கிடைக்கப் பெறாத சாதிகளுக்கு, முன்னேறி வருவதற்காக ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. சாதிகளுடைய நிலைமை களைப்பற்றிய ஆய்வின் அடிப்படையில், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப் படலாம் என, அரசாங்கம் தீர்மானித்து, அதற்காக ஆய்வு செய்ய குழு அமைத்தது. அவ்வாறு நேரு காலத்தில் அமைக்கப்பட்ட குழுதான், காகா கலேல்கர் ஆணையம். சமூக ரீதியில், கல்வி ரீதியில் பின்தங்கிய சாதியினருக்கு, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கி, அதன் மூலம் அந்த சாதி சனங்களுக்கு, முன்னேறு வதற்குள்ள வாய்ப்புகளை நல்கவேண்டும் என்ற எண்ணத்தில் அப்படிப்பட்ட ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணை யத்தின் மதிப்பீடும், இந்தியாவில் உள்ள சாதிகளில் வெவ்வேறு தட்டுக்களிலும், தரங்களிலும் வாழ்ந்து வரும் எதார்த்தங்களை கணக்கில் எடுத்து, இடஒதுக்கீடு வழங்குவதற் கான அடிப்படைகளை அந்த ஆணையம் முன்வைத்தது. அதே நேரத்தில்தான் தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காக, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற முழக்கத்தை தந்தை பெரியார் தொடங்கி வைத்தார். காகா கலேல்கர் ஆணையத்தின் முதல் உரையிலேயே, அரசாங்கத்தில் பங்கு கொள்ளாத சாதிகள், தங்களுடைய பிரதிநிதிகளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள் என்ற உணர்வை பெறுவதற்காக, இடஒதுக்கீடு அவசியம் என்ற கருத்தைத்தான் முன்வைத்துள் ளது. அதாவது சாதிகளை ஒழிப்போம் என்றோ, கீழே தள்ளப்பட்ட சாதி சன ங்களை முழுமையாக மேலே கொண்டு வருவோம் என்றோ, சாதிகளுக்கு மத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வைப் போக்கி, சமன்படுத்துவோம் என்றோ, அந்த ஆணையம் கூறவில்லை. மாறாக அத்தகைய சாதிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக அவர்கள் உணர்வதற்காக என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதாவது சமூகத்தில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டு வருவதற்காக, இத்தகைய இடஒதுக்கீடுகளை அரசாங்கம் முன்வைக்கவில்லை. மாறாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல் பெருவாரியான சாதி சனங்கள் ஒதுக்கப்பட்டு நிற்கும் போது, அதனால் அராங்கத்திற்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில், அடிப்படை சாதியினரையும் அரசில் அங்கம் வகிப்பதாக உணர வைக்க இந்த இடஒதுக்கீடு என்பது தான் அவர்களது அன்றைய வாதமாகவே இருந்தது.அண்ணல் அம்பேத்கரின் அரிய முயற்சியால், இந்திய அரசியல் சட்டத்திலேயே, தாழ்த்தப்பட்ட மக்களாக தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டி ருக்கும் மக்கள் இருப்பதை எண்ணிப் பார்த்து, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஏற்படுத்தி தர அரசியல் சட்டத்திலேயே வழிவகை செய்யப்பட்டது. அதன் மூலம் மத்திய, மாநில அரசாங்கங்களிலும், அனைத்து கல்விக் கூடங்களிலும், தலித் மக்களுக்கான இடஒதுக்கீட என்பது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. அங்கீகரிக்கப் பட்ட அந்த உரிமையைக் கூட, அரசாங்கங்கள் வேலை வாய்ப்பில் நிரப்பவில்லை என்ற குரல் 63 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகும் நிலவுகின்ற நிலைமையாக இருக்கிறது. அதாவது பின்னடைவு காலிப்பணியிடங்கள் மத்திய, மாநில அரசாங்கங்களில், தலித் மக்கள் 10 லட்சம் பேருக்கு இருக்கிறது என்ற உண்மை இப்போது தலித் இயக்கங்களால் எழுப்பப் படுகிறது. அப்படியானால் சட்டம் கொடுத்த உரிமைகளைக்கூட, தீண்டாமைக் கொடுமையில் வாழும் மக்கள் தொகையினருக்கு, சமூகமும் அசராங்க அதிகாரிகளும் கொடுக்கத் தயாராக இல்லை என்ற உண்மை இந்த இடத்தில் அம்பலமாகிறது. இதுபோன்ற ஆதிக்கசாதி மனப்பான்மை, எங்கெணும் பரவிக் கிடப்பதால் இன்னமும் இடஒதுக்கீடு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாததை காண முடிகிறது. இதே போல அடுத்து வந்த அரசாங்கங்களால் மண்டல் குழு அமைக்கப்பட்டது. மண்டல்குழுவின் ஆய்வு என்பது புதிய சூழ்நிலையில், சாதிகளின் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பொருளாதார, சமூக, அரசியல் நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்தது. அத்தகைய ஆய்வின் மூலம் கொடுக்கப்பட்ட அறிக்கையையும், மத்திய காங்கிரஸ் அரசாங்கம் கிடப்பில் போட்டு வைத்திருந்தது. வி.பி.சிங் ஆட்சிக்கு வந்த பிற்பாடு மண்டல் குழு அறிக்கை தூசி தட்டப்பட்டு, வெளியே கொண்டு வரப்பட்டது. அது நாடெங்கிலும் சமூக ரீதியான அணி சேர்க்கையில், ஒரு ஆட்டத்தை ஏற்படுத்தியது. அதனால் வெறுப்படைந்த அனுபவித்து வரும் கூட்டம், பிரச்சினையை கிளப்பி, அதன் விளைவாக மத்திய அரசு கவிழ்ந்தது. மண்டல்குழு அறிக்கையின் அமுலாக்கம் குறிப்பாக உ.பி., பீகார், ம.பி., ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில், ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. வீழ்ந்து கிடந்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் பலரும் இதன் மூலம் விழிப்புணர்வு பெற்று, அரசியல் பிரதிநிதிகளாகவும் அறுதியிட முடிந்தது. ஆனாலும் கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு, உயர்கல்வியில் இடஒதுக்கீடு இல்லை என்ற பிரச்சினை சமீபத்தில், மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை எதிர்த்து ஒரு மக்கள் புயலை எழுப்பியதையும் நாம் காணமுடிந்தது. இந்திய நாடு முழுவதையும் ஆய்வு செய்வதற்கு பதிலாக, உதாரணமாக தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டு நாம் நமது ஆய்வை தொடங்கலாம். வானத்தில் பறக்கும் அத்தனைப் பறவைகளையும் பிடித்து, அவற்றின் உடலை பிரித்து பரிசோதிப்பதை விட, அதில் ஒரு பறவையைப் பிடித்து பரிசோதித்தால், அதைப் போலத்தான் பிற பறவைகளும் என்பதாக புரிந்து கொள்ளமுடியும் என்று கூறிய மாசேதுங்கின் மேற்கோளை பயன்படுத்தலாம். அதன்படி பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களாக பட்டியலிடப்பட்ட சாதிகளில், தமிழ்நாட்டில் உள்ள யாதவர் குலத்தை கணக்கில் எடுக்கலாம். சமீபத்தில் அவர்களது தனி இடஒதுக்கீடு கோரிக்கை, பெருமளவு கவனத்தை ஈர்த்திருப்பதனால் அதை எடுத்துக் கொண்டு விவாதிக்கலாம். தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில், முற்பட்ட சாதியினருக்கு இருந்து வந்த செல்வாக்கு மாற்றப்பட்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் செல்வாக்கு கொண்ட ஆட்சி நடைபெறுகிறது என்பதாக ஒரு மதிப்பீடு உண்டு. அது உண்மைதானா? பிற்படுத்தப்பட்ட சாதிகளில் சில சாதிகள் மட்டுமே, முன்னேறுவதற்கான இடஒதுக்கீடு வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் போது, யாதவர் சமூகம் போன்ற பல சமூகங்கள் ஏதுமற்று நிற்கின்ற நிலையையும் பார்க்கிறோம். அதுவே அவர்களை அணி திரட்டி குரல் எழுப்ப வைத்திருக்கிறது. அப்படியானால் இவர்கள் ஆளப்படும் பிற்படுத்தப்பட்ட சாதியினராக இருக்கிறார்கள். ஆளும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அனுபவிக்கும் அனைத்து வாய்ப்புகளையும், ஆளப்படும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் ஒன்றான யாதவ குலம் பெற்றுவிடவில்லை என்ற காரணம் தான், அவர்களது எழுச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. இத்தகைய சூழலில் மக்களின் உடனடி தேவைகளை கணக்கில் எடுக்காமல், அவர்கள் ஒட்டு மொத்தமாக சாதிகளை புறந்தள்ளி, தமிழினமாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதிக்கப்பட்டது. அது இன்றைய எதார்த்ததிலிருந்து, நாளைய எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்ய தடங்கலாக அமைகிறது. சாதிகளாக பிரிந்து கிடக்கும் அல்லது வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள், தங்களுடைய உடனடி தேவைகளுக்கு கிடைக்கப்பெறாத இடஒதுக்கீட்டை பெறுவதும், ஒட்டு மொத்தமாக சாதிகளை அழிக்கும் சூழலில், தமிழினமாக மலர்வதும் இணைந்த ஒரு பார்வையை பெறுவது அவசியமாகிறது.ஆகவே இன்றைய உடனடித் தேவையான இடஒதுக்கீட்டில் நின்று கொண்டே, நாளைய எதிர்கால தமிழர் ஒற்றுமையை கட்டுவதற்காக பாடுபடலாம் என்ற அறிவியல் திசைவழியை புரிந்து கொள்ள முயலலாம்.

Sunday, April 25, 2010

பாலியல் பட்டினியில் தமிழகம் மட்டும் தவிக்கவில்லையா?

இடதுசாரிகள் என்று பாராளுமன்ற இடதுசாரிகள் பெயர்வைத்துக்கொண்டு செய்த சேட்டைகள், கேரளாவில் கலாச்சாரக்காவலர்களாக அவர்களைக்காட்டியது . அதற்கு கேரளாவில் உள்ள ஆணாதிக்க பண்பாடும், அதை ஊற்றி வளர்க்கின்ற ஒரு நிலவுடமை உறவு நிலவிவருவதும் புரியப்படவேண்டும். சிறு நிலவுடமை உற்பத்தி உறவுகள் கேரளாவில் எங்கணும் நிறைந்து கிடக்கின்ற காரணமாக, அதன் பண்பாட்டு வெளிப்பாடுகள் அங்குள்ள மனிதர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன. அதன் விளைவாக ஆண்கள் பொதுவாக பொறுமையிழந்து பெண்களின் அறுதியிடலைக்கண்டு, எரிச்சலடைவதும், அதனாலேயே கேரளப்பெண்கள் மீது அதிகமாக வெறுப்பை உமிழ்வதும் செய்கின்றனர். இதுவே கமலாதாஸ் போன்ற பெண்ணியச்சிந்தனையாலர்களுக்கு கேரளா ஆண்கள் மீது வெறுப்பை கொடுத்தது. அதேபோல இப்போது அருந்ததிராய் போன்ற கேரளப்பென்களையும் கடுப்படைய வைத்துள்ளது. அதேநேரம் கேரளாவில் மட்டும்தானா இந்த பாலியல் பட்டினி ஆண்களை வாட்டுகிறது? தமிழகத்தில் இல்லையா? இப்படிஒரு கேள்வியைக்கேட்க வேண்டியிருக்கிறது. ஏன் என்றால் சமீபத்தில் சாமியார் நித்தியானந்தா செய்த சாகசங்கள் வெளிச்சத்திற்கு வந்தபோது, தமிழகத்தில் நிலவும் பாலியல் பட்டினி பகிரங்கமாக படம்பிடித்துக்காட்டப்பட்டது. நித்தியானந்தா பொய்யாகச்சொல்லிவந்த துறவறம், அவரது தனிமைச்சூழலில் உடைக்கபட்டிருந்தது. இது நித்தியானந்தாவின் தவறா அல்லது துறவறத்தின் தவறா என்று ஆராயவேண்டும். அது பகுத்தறிவு. அப்படி ஆராய்வதற்குப்பதில் மனிதனைக்குற்றமாகப்பாற்கும் பார்வை இங்கு நிறைந்திருக்கிறது. இதுதான் நித்தியானந்தா மீது குற்றவழக்குகளைப்போட காவல்துறையை ஊக்குவித்தது. இன்றுவரை நித்தியானந்தாவை செல்லமாக நித்தி என அழைக்கும் தொலைக்காட்சிகளிடம் மக்கள் தேடுவது ஏதாவது புதுசா கிடைக்குமா என்பதுதான். இது என்ன? பாலியல் பட்டினி இல்லையா?
அறைக்குள் நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் கொஞ்சுகிறார் என்பதற்கான ஆதாரப்படங்கள் அந்த தொலைக்காட்சிக்கு கிடைத்துவிட்டன. இவர்களில் யார்தான் கிடைத்த பெண்களுடன் அப்படிக்கொஞ்சவில்லை? எசுநாதர் சொன்னதுபோல உங்களில் யார் அந்த தப்பை செய்யாதவர்களோ, அவர்கள் முதல் கல்லை எடுத்து அடியுங்கள் என்று சொன்ன உடனே, அந்தக்காலத்து ஜெரூசலம்வாசிகள் கலைந்து போய்விட்டார்கள், இந்தக்காலத்து தமிழ்நாட் டுக்கரர்கள் கலையவில்லையே? அதனால் இவர்களது பாலியல் பட்டினியும் குறைந்தது அல்ல. சரி. இப்போது உச்சநீதிமன்றம் குஷ்பு வழக்கில் ஒரு தீர்ப்பை சொல்லிவிட்டது. திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது நடக்கத்தான் செய்கிறது என்ற உண்மையை குஷ்பு சொல்லிவிட்டார். இது அப்படி உறவு வைத்துக்கொல்வதையே அன்றாடம் விருப்பமாக வைத்துக்கொண்டவர்களுக்கு கோபம் வந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை. ஒரு பெரிய குழப்பமே இதன் மீது ஏற்படுத்தப்பட்டது. வழக்குகள் போடப்பட்டன.இப்போதுதான் தீர்ப்பு வந்துள்ளது. குஷ்பு மீதான ௨௨ வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.அப்போதும் அதே தொலைகாட்சி இதேபோல அந்த எதிர்ப்பை பெரியதாகி காட்டியது. இப்போது நித்தி வில்லங்கத்தை தொடர்ந்து போட்டு நல்ல வசூல் செய்து விட்டார்கள். அதுவும் மக்கள் மத்தியில் உள்ள பாலியல் பட்டினியில் நம்பிக்கைகொண்டுதானே செய்தார்கள்? அதற்குப்பிறகு ஒரு தொலைக்கட்சியில் இதுபற்றி கடுமையாகக்கண்டித்தோம். அதற்கு முதல்வரும் ஆதரவு என்று மக்கள் நினைப்பார்கள் என்றோம். அதுவேறு முதல்வரின் பேரன் தொலைகாட்சி. உடனேயே முதல்வர் கடுமையாக அந்த ஒளிபரப்பலை கண்டித்தார் பிறகுதான் நிறுத்தப்பட்டது. அறைக்குள் நடத்தப்பட்ட ஒரு காரியத்தை அம்பலத்துக்கு அதுவும் செய்திகள் வெளியிடும் பகுதியில் தொடர்ந்து வெளியிட்டார்கள். அது ஒரு நீலப்படம் போல வெளியிடப்பட்டது. வீடுகளில் சின்னப்பிள்ளைகள் இது என்ன என்று கேட்கத்தொடங்கிவிட்டன. பேராசிரியர் சரஸ்வதி, டாக்டர் கிருஷ்ணசாமி, , டைரக்டர் புகழேந்தி, அய்யநாதன், ஆகியோருடன் நானும் இந்த ஒளிபரப்பலை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள். முதல்வர் கலைஞரும் கடுமையகத்தாக்கி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் அந்த பாலியல் பட்டினியும், தாகமும் அம்பலத்திற்கு வந்துள்ளன என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது. .
குறிப்பாக தமிழகத்தில் ஒரு மனைவியுடன் வாழும் கலாச்சாரம் தான் போற்றத்தக்கது எனவும், அதற்கு தமிழ் கலாச்சாரம் எனப்பெயரிட்டு அழைப்பதும் பிரபலமான ஒரு பழக்கம்.அதனால் எல்லோருமே தன்பயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதைகூறி பெண்களை மட்டுமே அடிமைப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆண்களுக்கு என்று வரும்போது அந்த கலாச்சார விதிகள் பின்பற்றுவதில்லை. என்பதை, பாரதி சாடிஇருந்தாலும், கற்பென்று வந்தால் அக்தை இருபாலர்க்கும் பொதுவென வைப்போமேனக்கூறி யிருந்தாலும், அதைக்கண்டுகொளவது இல்லை. இது ஆண் ஆதிக்கச்சிந்தனையன்றி வேறில்லை. அரசியலில் அதிகாரத்தில் உள்ளவர்களே அந்தகாலத்து மன்னர்கள்போல அந்தப்புரங்கள் பாணியில் வாழ்வதும், ஒன்றுக்கு மேல் மனிவிமார்களைக்கொண்டிருப்பதும் அங்கிகரிக்கப்படுகிறது.ஆகவே தமிழகம் தன்னுடைய மௌனமொழியில் ஆணாதிக்க சிந்தனைகளை அழுத்தமாக வைத்திருப்பதற்கு, இங்குள்ள பெண்களும் பெரும் அளவு ஒத்தழைக்கிரார்கள். இங்குள்ள பெண்களிடம் ஆணாதிக்க சிந்தனைகள் அதிகமாக ஊறிப்போய் இருக்கின்றன. அதனால்தான் பெண்களால் விரும்பப்படும் எம்ஜியாரால்,"பொம்பளை சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சுன்னு" பாட முடிந்தது. தமிழகத்தில் இருக்கும் பெண்ணடிமை என்பது குவிந்து கிடக்கும் நிலவுடமை உறவுகளின் வெளிப்பாடாக இருக்கிறது. ஒவ்வொரு மண்ணிலும் நிலவும் நில உறவுகளை ஒட்டி, ஆணாதிக்கம் தனது முகத்தை காட்டும்போலத்தெரிகிறது. . . .

Saturday, April 24, 2010

ஈழத்தில் பெண்ணடிமை உடைய, புலிகள் காரணமா?

உலகம் எங்கும் இருப்பது போல, இலங்கைத் தீவிலும் அதிலும் ஈழத்தமிழர் தேசத்திலும், ஆண்களின் ஆதிக்கம்தான் கோலோச்சி வருகிறது என்பது பொதுவான மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்ணுரிமையாளர்களின் புரிதல். ஆணாதிக்கம் என்பதோ, பெண்ணடிமை என்பதோ பண்பாட்டு அரங்கில், அரசியல் அரங்கில், பொது வாழ்க்கையில் இருந்து வரக்கூடிய ஒரு அவலம். அதில் பண்பாட்டு அரங்கு என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. உடை உடுத்து வதற்கான உரிமை, குடும்பத்தில் வகிக்கின்ற பொறுப்பு, ஆகியவை கூட, பண்பாட்டு அரங்கில் இருக்கின்ற முக்கிய அம்சங்கள். பொதுவாக உலகம் எங்கிலும் இருக்கின்ற ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகின்ற பாலின வேறுபாடுகளையும், பாலின முன்னேற்ற த்தையும் ஐ.நா.வின் மதிப்பீட்டிலிருந்து பார்த்தோமானால் இலங்கைத் தீவும், அதிகமான தூரம் செல்லவேண்டியிருக்கிறது என்பதாக புரிந்து கொள்ளலாம். 1948ம் ஆண்டு காலனிய ஆட்சி முறையிலிருந்து சுதந்திரம் பெற்றதாக இலங்கைத் தீவு அறிவிக்கப்பட்ட பிற்பாடு அங்கு நிலவுகின்ற மானூட வளர்ச்சி விகிதம் முன்னேறியிருக் கிறது என்பது ஒரு மதிப்பீடு. எழுத்தறி விலும், குழந்தைப் பிறப்பிலும், குழந்தை வளர்ப்பிலும் தேசிய அளவில் முன்னேற்ற மான அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வரலாற்று ரீதியாக அரசாங்கத்தினுடைய மூலதனம், அடிப்படை சுகாதாரத்திலும், கல்வியிலும் இருப்பதாக எண்ணப்படுகிறது. ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டம், 1998ம் ஆண்டின் தேசிய வளர்ச்சி அறிக்கையின் படி, வறுமையின் மட்டம் குறைந்திருப்பதாக கூறுகிறது. மற்ற ஆசிய நாடுகளை விட, சராசரி பாலின வளர்ச்சி கூடியிருப்பதாகவும், அது 69% இருப்பதாகவும், அதே சமயம் பாலின அதிகார மேம்படுதல் மிகவும் குறைவாக 20%தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகத்திலேயே ஒரு பெண்ணை நாட்டின் தலைவியாக கொண்டு வருவதில் முதல் நாடாக இருக்கிறது என்றும் பெயர் பெற்றுள்ளது. பாலின வளர்ச்சிக்கும், பாலின அதிகார மேம்படுத்தலுக்கும் இருக்கின்ற வேறு பாடுகள் இங்கே கவனிக்கப்படவேண்டும். அதாவது இலங்கையில் பெண்கள் மீதான தாக்கத்தை செலுத்தும் மறைந்திருக்கும் உண்மைகள் ஆய்வு செய்யப்படவேண்டும். அவை சமூக, பண்பாட்டு, பொருளாதார தன்மைகளையொட்டி நடந்துள்ளன. நடந்து முடிந்த போர், பெண்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணங்களில் மட்டும் 18,657 போரினால் விதவையானவர்கள் இருக்கிறார்கள். தென்னிலங்கையில் போருக்குச் சென்று மரணமடைந்த சிங்கள போர் வீரர்களது மனைவிகள் பல்லாயிரக்கணக்கில் விதவைக ளாக வீட்டில் அடைந்திருக் கிறார்கள். இலங்கையில் சுமார் 22% குடும்பங்களில், பெண்கள் தலைமை எடுத்து செயல்படும் நிலைமை இருக்கிறது. வருமானம் பெறுகின்ற வழிகளைப் பற்றி குறைந்த அளவுக்கு புரிதல் மட்டுமே உள்ள பெண்கள்தான், பல குடும்பங்களுக்கு உணவு பெற்றுக் கொடுக்கும் பொறுப்பில் இருக்கின்றனர். விதவைகளாக இருக்கின்ற பெண்களின் நிலைமை பொதுவாக மோசமாக இருக்கிறது. நிலவுகின்ற பண்பாட்டு சூழல் அவர்களை பரிதாபகரமான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. இத்தகைய பெண்களுக்கு தவிர்க்க முடியாமல், சமூக தனிமைப்படுதலே வறுமையை வரவழைத்து விடுகிறது. இளம் வயதிலேயே பல பெண்கள், விதவைகளாக மாறிவிடுகிறார்கள். பெண்கள் மத்தியிலுள்ள எழுத்தறிவு என்பது பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடுகிறது. ஆனாலும் பல ஆண்டுகளாக 87% எழுத்தறிவு பெண்கள் மத்தியில் நிலவுகிறது. நகர்ப்புறங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடும் கூட, இன்னமும் நிலவி வருகிறது. அவை தேசிய வளர்ச்சி மதிப்பீட்டில் இடம் பெறவில்லை. நகர்ப்புறங்களில் பெண்களுக் கான எழுத்தறிவு 90% என்றும், கிராமப்புறங் களில் 78% என்றும் மதிப்பீடு செய்யப்படு கிறது. பெண்கள் மத்தியில் இருக்கின்ற ரத்தசோகை 65% என்பதாக கூறப்படுகிறது. இவை அச்சடித்த ஆவணங்களில் இடம் பெறுவதில்லை. கல்வி என்பது வேறு ஒரு பிரச்சினை 1989ம் ஆண்டு இலங்கையில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகங்களில் 42% படிக்கச் சென்றார்கள் என்றும், 1999ல் 52% படிக்கச் சென்றார்கள் என்றும் கூறப் படுகிறது. அதிலும் பல்கலைக்கழக படிப்பு, மொத்த மக்கள் தொகையில் 1%க்கு மட்டும்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளில் பெண்களுடைய பங்களிப்பு இல்லை. வேலை வாய்ப்பு என்ற பிரமீடில், அடித்தளத்தில்தான் பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அப்படிக் கிடைத்தாலும் கீழ்மட்டத்தில், குறைவான திறனில், குறைவான கூலியில் விவசாயத்திலும், தோட்டத் தொழிலிலும் மட்டுமே கிடைத்துள் ளது. ஆண்களை விட பெண்கள் மத்தியில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் இரு மடங்காக அதாவது 22% ஆக இருக்கிறது. கிடைக்கும் வேலைகளும் அமைப்பு சாரா தொழிலிலும், தற்காலிகத் தன்மையிலும் மட்டுமே இருக்கின்றன. இடம் பெயர்ந்த திறன் பெறாத பெண் தொழிலாளர்கள் 76% இருக்கிறார்கள். இவர்கள் எண்ணெய் வள நாடுகளிலும், தென்கிழக்கு ஆசியநாடுகளிலும் போய் வேலை செய்கிறார்கள். அத்தகைய பெண்கள் சொல்லமுடியாத அளவுக்கு கடினங்களையும், அடிகளையும், சித்ரவதை களையும் வாங்குகிறார்கள். அதில் மரணங்கள் அடிக்கடி சம்பவிக்கின்றன. இருநாடுகளுக்கு மத்தியில் ஆரோக்கியமான ஒப்பந்தங்கள் இல்லாததால், இந்த அவல நிலை தொடர்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இப்போது வெளிவந்திருக்கக் கூடிய செய்திக் கட்டுரை வித்தியாசமான ஒரு நிலவரத்தை, படம் பிடித்துக் காட்டுகிறது. பழமைவாதக் கருத்துக்கள் மற்றும் பாரம்பரியமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளில் இருந்தும், யாழ்ப்பாணப் பெண்கள் சிறிது, சிறிதாக விடுதலை பெற்று வருவதாக ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது. இலங்கையின் உள்நாட்டுப் போர் தமிழ் பெண்களின் மீது ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்து சர்வதேச செய்தி நிறுவனங்களில் வெளிவந்துள்ளது. ஒரு செய்தியாளர் மனித உரிமைகளுக்கான இல்லத்தின் பணியாளரான ஷெரீன் சேவியரைச் சந்தித்து கலந்துரையாடி யுள்ளார். ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவதற்காக நடத்தப்பட்ட போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்திருந் தாலும், பெண் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என காலாதிகாலமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளைக் கடந்து யாழ்ப்பாணப் பெண்கள் தமக்கான புதிய வாய்ப்புகளையும், வழிகளையும் தேடுவ தற்கு விடுதலைப்புலிகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும் என ஷெரீன் சேவியர் கூறியதாக அந்தக் கட்டுரை தெரிவித்துள்ளது. தமக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்டுள்ள துன்பங்கள் காரணமாகவும் யாழ்ப்பாணப் பெண்கள், சமூக ரீதியான கட்டுப்பாடுகளைக் கடந்து, தமக்கான புதிய வாய்ப்புகளைத் தேடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போரின் காரணமாக தங்களது கணவன்மாரை இழந்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களும் இதற்குள் அடங்கியுள்ளனர். இலங்கைப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற வேளையில் யாழ்குடா நாட்டிலும், ஏனைய பிரதேசங்களிலும் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டியிருந்ததாக ஷெரீன் தெரிவிக்கின்றார். தமது கணவன்மார்கள் உயிருடன் இருந்தாலும் குறித்த சில குடும்பப் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். போர் நடைபெற்ற காலப்பகுதியில் தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் காரணமாக ஆண் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்ததால், குடும்பத்திற்குத் தேவையான வெளிவேலைகளைச் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள், சூழல் காரணமாக நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். போர் இடம் பெற்ற காலங்களில் சந்தேகத்தின் பேரில் இலங்கைப் படையினரால் ஆண்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட தால், பல ஆண்கள் விடுதலை இயக்கங்க ளோடு இணைந்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இக்காலப் பகுதியில் குடும்பப் பெண்கள் எவ்வாறு நிலைமையினைக் கையாண்டார்கள் என்பதை யாழ்ப்பாணத்தின் முதியவர்கள் கீழ்வருமாறு விவரிக்கிறார்கள். இவர்களுக்கு இரட்டைச்சுமை. குடும்பத்தினை நிர்வகிப்பதோடு, குடும்பம் தொடர்பான தேவையான முடிவுகளையும் எடுக்க வேண்டும். குடும்பத்தினை நிர்வகித்தல் என்ற முதலாவது பணியையே, பெரும்பாலான பெண்கள் காலம், காலமாகச் செய்து பழக்கப்பட்டவர்கள். இந்நிலையில் யாழ்ப்பாணப் பெண்கள் புதிய வாய்ப்பு களைத் தமதாக்குவதைச் சமூகம் அனுமதிக்க ஆரம்பித்துவிட்டது. குடும்ப அங்கத்தினர் களின் நல்வாழ்வு மற்றும் கல்வி ஆகிய விசயங்கள் தொடர்பான முடிவுகளைத் தற்போது பெண்களே எடுத்து வருகின்றார் கள். யாழ்ப்பாணச் சமூகத்தைப் பொறுத்து, இத்தகைய முடிவுகளை எடுப்பது ஆண்களுக்குரிய பணியாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் பெண்கள் கூட தம்முடன் இணைந்து செயற்படலாம் என்ற நிலையினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். பெண்களுக்கே உரிய வெட்கம் போன்ற இயல்புகளைக் கொண்ட கிராமத்துப் பெண்களை இலட்சியத்துக்காக ஆயுதங்களை ஏந்த வைத்து ஜீன்சுடனும், சட்டையுடனும் இயங்கும் நிலைக்கு விடுதலைப் புலிகள் அவர்களை மாற்றிக் காட்டியிருந்தார்கள். சமூகத்தில் தமக்கிருந்த கட்டுப்பாடுகளை ஒதுக்கிவிட்டு பெண் விடுதலை என்ற இலட்சியத்துடன் இருந்த தமிழ்ப் பெண்கள் தாம் சமமாக நடத்தப்படும் நாளுக்காக காத்திருந்தார்கள். இப்பெண்கள் எதிர்பார்த்த பால் ரீதியான சமத்துவத்தினை விடுதலைப் புலிகள் வழங்கினார்கள் என ஷெரீன் சேவியர் கூறுகின்றார். கணவருடன் இருந்தாலும் பாலினச் சமத்துவம் மற்றும் பெண் விடுதலை தொடர்பில் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த அடேல் பாலசிங்கம் போன்ற பெண்கள் தங்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக அன்ரன் பாலசிங்கம் செயற்பட்ட வேளையில், அவரது மனைவியான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் நடைமுறையில் விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவியாகச் செயற்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள் ளார்.விடுதலைப் போர் அதன் இயக்கப் போக்கிலேயே, சாதி வேறுபாடு, பாலின வேறுபாடு ஆகியவற்றை இல்லாமல் செய்து விடுகிறது என்பதற்கு இதுவே நல்லதொரு உதாரணமாகத் திகழ்கிறது.

Friday, April 23, 2010

சர்வாதிகாரத்திற்குள், ஜனநாயகத்திற்கு இடமிருக்கிறதா?

இன்றைய உலகம் நேற்றைய உலகம் போல் இல்லை. நேற்றைய உலகில் முடியாட்சி இருந்தது. அதன் பிறகு முதலாளித்துவ சமுதாயங்கள் வளர்ந்தன. அவை நாகரீகமான உலகமாக கருதப்பட்டன. அதாவது நிலக்குவிதல்களை ஆண்டு வந்தவர்கள் மன்னர்களாக காட்சி அளித்த காலம் போய், 19ம் நூற்றாண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகளால், முகிழ்ந்து வந்ததுதான் முதலாளித்துவ சமுதாயமாக காணப்பட்டது. அதனால் அது பண்டைய முறையிலேயே ஆட்சியை நடத்தமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. முடியாட்சிகளை எதிர்த்து கலகங்களை உருவாக்கியது முதலாளித்துவம். அப்படிப்பட்ட புதிய சக்திகள், மன்னராட்சி காலத்தில் மக்கள் ஒடுக்கப்பட்ட நிலைமைகளை விளக்கிச் சொல்லியே, அதை எதிர்க்க வேண்டிய நியாயங்களை பரப்பி வந்தனர். அதன் அடிப்படையில்தான் முதலாளித்துவ புரட்சிகள் என்று சொல்லக்கூடிய, மன்னராட்சிகளை எதிர்த்த மக்களது கலகங்கள் நடந்தன. அவற்றை தலைமை தாங்கிய சக்திகள் ஆட்சிக்கு வந்த நாடுகளின் தொழில்மயமாதல் என்பதற்கு முன்னுரிமை கிடைத்தது. கடந்த கால ஆட்சிமுறையிலிருந்து மாறுபட்ட ஆட்சிமுறையை நடத்திக் காட்டினால்தான், புதிய முதலாளிய சக்திகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய புதிய முறையில், ஆட்சியாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற நிலைமையை காட்டினர். அப்படி உருவாக்கப்பட்டதுதான் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையும். மக்கள் பிரதிநிதிகளை நேரடியாக மக்களே தேர்ந்தெடுத்து, ஆட்சியை ஆளுகின்ற முறையாக அது வர்ணிக்கப்பட்டது. அத்தகைய ஜனநாயக ஆட்சிமுறையிலும், சில நாடுகளில் அல்லது பல நாடுகளில் அவ்வப்போது ஆட்சியாளர்களின் ஒரு குறிப்பிட்ட கும்பல் மட்டுமே, அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்துக் கொள்ளும் விபத்துக்களும் நடந்தன. எப்போதாவது நடந்தால் விபத்து என்று கூறலாம். ஆனால் பல நாடுகளிலும் அப்படி நடக்குமானால் அதை என்னவென்று கூறுவது போன்ற கேள்விகளை, ஜனநாயக சக்திகள் உலகமெங்கும் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அவ்வாறு நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையிலும், அதிகாரத்தை கையில் குவித்துள்ள ஒரு கும்பலின் அல்லது ஒரு குடும்பத்தின் அல்லது பாரம்பரிய வாரிசின் அல்லது ஒரு கட்சியின் ஆட்சிமுறையே தொடர்வது என்ற நடைமுறையை பல நாடுகளிலும் காணமுடிகிறது. இந்தியாவில் நடந்து வரும் ஆட்சியைக் கூட அவ்வாறு விமர்சிப்பவர்கள் உண்டு. 100 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சி, மீண்டும், மீண்டும் இங்கே ஆட்சிக்கட்டிலுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி நேரு குடும்பத்தின் வாரிசுகள் மட்டுமே ஆட்சி அதிகாரத்திற்கு வந்துக் கொண்டிருப்பதாக, ஒரு குற்றச்சாட்டும் இங்குள்ள ஆட்சியாளர்கள் மீது இருக்கிறது. சமீபத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயிடம், அவரது குடும்பத்தவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்களா என்ற கேள்வியை ஊடகவியலாளர்கள் கேட்ட போது, அவர் இதைத்தான் உதாரணமாக சொன்னார். அதாவது இந்தியா போன்று காந்திகளோ, அமெரிக்கா போன்று புஷ்களோ, இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் முழுமையாக கையில் வைத்திருக்கவில்லை என்றும், தங்கள் குடும்பத்தில் இரண்டு தம்பிகள் மட்டும்தான் இருக்கிறோம் என்றும் பதில் கூறியிருந்தார். இதுவே ஜனநாயக ரீதியான ஆட்சி முறையில், சர்வாதிகாரமான அணுகுமுறையை கையாள்வதற்கு பல உதாரணங்கள் இருப்பதை பட்டவர்த்தமாக காட்டுகிறது. அதிலும் ஒரு நாட்டு அதிபரின் வார்த்தைகளிலேயே, இப்படிப்பட்ட வர்ணனை பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் தேர்தலில் அதிகமான வித்தியாசத்தில், பொன்சேகாவை மகிந்த ராஜபக்சே தோற்கடித்து அதிபராக தொடர்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றார். அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்ற முறையிலான ஜனநாயக ரீதியான அங்கீகாரம்தான். அதே போல நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும், மகிந்தா தலைமையிலான கட்சியும், அதன் கூட்டணியும் பெரும் வெற்றியைப் பெற்றது. வெற்றி பெற்றவர்கள் தங்கள் சார்பாக ஒரு தலைமை அமைச்சரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மகிந்தா தலைமையிலான கட்சியில் தீர்மானகரமான முடிவை எடுப்பது மகிந்தாவாகத்தான் இருக்கும். அதனால் அவர் தனது தம்பியான பசில் ராஜபக்சேயை பிரதமராக நியமிப்பார் என எங்கும் பேசப்பட்டது. பசில் ராஜபக்சே ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, அதிபரின் ஆலோசகர் என்பதாக பொறுப்புக் கொடுக்கப்பட்டவர். அதனால் அவரை பிரதமராக்குவார் என்ற யூகம் பலராலும் நம்பப்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கைகளுக்கு எதிராக டி.எம். ஜெயரத்னே என்ற முன்னாள் சோசலிஸ்ட் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும்கட்சி மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் பெற்று விட்டதால், 20வது இலங்கைப் பிரதமராக மகிந்தாவின் நெருக்கமான நண்பர் ஜெயரத்னே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு வயது 78. ஏற்கனவே பிரதமராக இருந்த ரத்னஸ்ரீ விக்ரேமாநாயகே என்பவர் இருந்த இடத்தில் இனிமேல் டி.எம்.ஜெயரத்னே இருப்பார். இந்த ஜெயரத்னே, மகிந்தாவின் கடந்த அமைச்சரவையில் தோட்டத் தொழிலுக்கான அமைச்சராக இருந்தார். இவர் தபால்காரராக இருந்து அரசியல்வாதியாக வந்து, சோசலிஸ்ட் என்பதாக அறிமுகமானவர். இத்தகைய ஒரு ஏற்பாட்டை மகிந்தா செய்யக் காரணம் என்ன? உலக நாடுகள் மத்தியில் இலங்கையில் சர்வாதிகாரம் நடக்கவில்லை என்று மகிந்தா நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதே போல தங்கள் குடும்பத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதாகவும் காட்ட வேண்டியிருக்கிறது. அதற்காகவே அவர் ஜெயரத்னேயை இத்தகைய உயர் பொறுப்புக்கு கொண்டு வந்தார் என்பதும் புரியப்படுகிறது. ஏப்ரல் 8ம் நாள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 225 உறுப்பினர்கள் கொண்ட சபையில், 144 இருக்கைகளை மகிந்தாவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கைப்பற்றியது. இது மூன்றில் இரண்டு பங்கை விட, 6 இருக்கைகள் குறைவு. மகிந்தா தலைமையிலான ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டணி என்பது சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தோன்றியது. சந்திரிகாவின் மூலம் அதிபர் வேட்பாளராக தங்கள் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட மகிந்த ராஜபக்சேதான், பொறுப்புக்கு வந்ததும் தேர்தலுக்கு முன்பே, சந்திரிகாவை தூக்கி எறிந்தார். அதே போல ஆட்சிக்கு வந்ததும் தனது தம்பி கோத்தபாய ராஜபக்சேயை, பாதுகாப்பு செயலாளராக நியமித்தார். இன்னொரு தம்பி பசில் ராஜபக்சேயை, எம்.பி.யாக நியமித்து தனக்கு ஆலோசகராக ஆக்கிக்கொண்டார். இந்த மூன்று சகோதரர்களின் கைகளில்தான் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டன. முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி 60 இருக்கைகளை வென்றது. மகிந்தா கட்சிக்கு தேசிய பட்டியலில் 17 இடங்கள் கிடைத்தது என்றால், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்தன. இலங்கை தமிழரசுக் கட்சி 14 இடங்களை வென்றது. அதில் ஒன்று தேசியப்பட்டியலில் சேரும். ஜனத விமுக்தி பெரமுனா தலைமையிலான, ஜனநாயக தேசிய கூட்டணி, இரண்டு தேசிய பட்டியல் இடங்களையும் சேர்த்து 7 இடங்களைப் பிடித்தது. அதில் ஒன்றுதான் முன்னாள் ராணுவத்தளபதி சரத்பொன்சேகா வெற்றி பெற்ற கொழும்பு தொகுதி. நேற்று இலங்கை நாடாளுமன்றம் கூடியுள்ளது. வெற்றி பெற்ற உறுப்பினரான பொன்சேகாவை, நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிப்பார்களா என்ற விவாதம் உலகெங்கும் நடந்தது. ஆனால் கோத்தபாய அப்போதே அனுமதிப்போம் என்று கூறிவந்தார். நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் சரத்பொன்சேகா, காவலர்களின் பாதுகாப்பில் அழைத்து வரப்பட்டார். அப்போதும் அவரது கன்னிப் பேச்சில், நாடாளுமன்றத்திலேயே தன்னை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக பேசினார். தன்மை விடுதலை செய்ய வேண்டும் என கோரினார். அதிபர் தேர்தலில் பொன்சேகா தோற்றவுடன், அவரரை பலாத்காரமாக மகிந்தாவின் ராணவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது. அனைவருக்கும் தெரியும். சட்ட விரோத காவலில் முன்னாள் ராணுவ தளபதியை, அதிபர் தேர்தலில் போட்டியிட்டு பல லட்சம் வாக்குகள் பெற்ற ஒருவரை வைத்திருப்பதும் உலக சமூகத்திற்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் கூட, பொன்சேகாவை நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கு கொள்ள வைத்ததன் மூலம், ஜனநாயகம் இலங்கையில் சிறப்பாக நடப்பதாக, உலக நாடுகளை நம்ப வைக்க முடியும். இது தான் இத்தகைய ஜனநாயக எதிர்ப்பார்ப்புகளில், சர்வாதிகாரிகளும் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரம். உண்மையில் இலங்கையில் என்ன நிலைமை நிலவுகிறது என்று, மனித உரிமை ஆர்வலர்களிடம் விசாரித்தால் தெரிந்து விடும். உலக பொதுமன்னிப்பு சபை இலங்கைத் தீவில் உள்ள அவரசநிலையை நீக்கி விட கோரிக்கை வைத்துள்ளது. 40 ஆண்டுகளாக இலங்கையில் பொது மக்கள் மீதும், குறிப்பாக தமிழர்கள் மீதும் கருப்பு சட்டங்கள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன. அவசர நிலை விதிகள், பயங்கரவாத தடுப்பு சட்டம், பொது பாதுகாப்பு அவசர சட்டம் மற்றும் அவசர சட்ட முறைகள் அங்கே இருக்கின்றன. உலக கண்காணிப்பு அமைப்புகளால் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில், உலகில் ஜனநாயகம் 150 நாடுகளில் சோதிக்கப்பட்டால், அதில் 108வது நாடாக இலங்கை இருக்கிறது என்கிறார்கள். சிவில் உரிமைகளை கணக்கில் எடுத்தாலும், அரசியல் உரிமைகளை கணக்கில் எடுத்தாலும் இலங்கை பின்தங்கியே இருக்கிறது. ஊடகச்சுதந்திரம் என்ற அளவில் 150 நாடுகளை கணக்கில் எடுத்துப் பார்க்கும் போது, இலங்கை 116வது நாடாக இருக்கிறது. ஊழல் அளவை கணக்கில் எடுத்தால் 149 நாடுகளில், இலங்கை 79 வது நாடாக இருக்கிறது. இவ்வாறு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஒரு கும்பலின் பட்டவர்த்தனமான, விதி மீறல், சட்ட மீறல், உரிமை மீறல் ஆட்சியிலும் வெற்றிகரமாக தேர்தல்கள் நடத்தப்படமுடியும். முத்திரைக் குத்தப்பட்ட சர்வாதிகாரிகளே மீண்டும் ஜனநாயக ரீதியான வெல்ல முடியும். சர்வாதிகார சூழலுக்கு மத்தியில், ஜனநாயக பசுமைத் தளங்களையும் அவர்கள் காட்ட முடியும். இதற்கெல்லாம் இலங்கை ஒரு முன்னணுதானமாக நிற்கிறது.

Thursday, April 22, 2010

மோடிக்குப் பின்னால் இன்னொரு மோடியா?

கிரிக்கெட் என்று அழைக்கப்படும் மட்டைப்பந்து ஆட்டத்தில், பல்வேறு வகையான போட்டிகள் நடந்து வருவது வரலாறு. மேட்டுக்குடி பண்பாட்டு அடையாளமாக பார்க்கப்படும் இந்த ஆட்டம், பல பத்தாண்டுகளாக இந்தியாவில் பிரபலமான ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களால் கொண்டு வந்து இறக்கப்பட்ட இந்த விளையாட்டு, இந்தியாவில் மண்ணின் புகழை உயர்த்திப் பிடிக்கும் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து ஆட்டங்களை விட அதிக செல்வாக்குப் பெற்றது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான கபடி ஆட்டம், அநேகமாக ஓரங்கட்டப்பட்டு விட்டது. நகர்ப்புறங்களையும், மேட்டுக்குடிகளையும் மையமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப் பட்ட இந்த மட்டைப் பந்து ஆட்டம், ஊடகங்களின் உதவியால் நாடெங்கும் கிராம, நகர வேறுபாடில்லாமல், ஏழை, பணக்கார வித்தியாசமில்லாமல் பரவி விட்டது. மட்டைப்பந்து ஆட்டத்தில் போட்டிகளை வர்ணனை செய்பவர்கள் கூட, பிரபலமாகத் தொடங்கினார்கள். இந்திய மட்டைப்பந்து ஆட்ட குழுவில், ஒவ்வொரு போட்டிக்கும் யார், யாரை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற செய்தி கல்லூரித் தேர்வு முடிவு போல, தீவிரமாக எதிர்பார்க்கப்படுகிறது. அதை யொட்டி தீவிர சர்ச்சைகளும் எழுகின்றன. பி.சி.சி.ஐ. என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆட்டக்காரர்களை தேர்வு செய்யும் போது, அரசியல் விளையாடியது என்பதாக உள்ள குற்றச்சாட்டு அந்தக் காலத்திலேயே எழுந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த குறிப்பாக சென்னையைச் சேர்ந்த ஆட்டக்காரர்களை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இணைந்தே வந்து கொண்டிருக்கும். மும்பையைச் சேர்ந்த சிலர் எப்போதுமே, இந்திய கிரிக்கெட் ஆட்ட குழாமில் இடம்பெற்றே தீருவார்கள் என்பதாகவும் அந்த வழக்கம் இருந்து வருகிறது.ஆங்கிலத்தில் மட்டும் நடந்து கொண்டி ருந்த ஆட்ட வர்ணனை, ஒரு மேட்டுக்குடி சிந்தனை வார ஏட்டின் மூலம் தமிழிலும் கொண்டு வரப்பட்டது. பிறகு வானொலி களிலும், காட்சி ஊடகங்களிலும் அதுவே பழக்கமானது. பெருமைக்காக ஆங்கில வர்ணனைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழர்கள், இப்போது தமிழில் கேட்கத் தொடங்கி அதில் மூழ்கவும் ஆரம்பித்து விட்டனர். 11 முட்டாள்கள் களத்தில் நிற்க, ஒரு முட்டாள் பந்து வீச, இன்னொரு முட்டாள் மட்டை அடிக்க என்ற பெர்னாட்ஷாவின் கேலிப் பேச்சு, இப்போது காணாமலே போய் விட்டது. தெருவில் போகும் வழிப்போக்கர் உட்பட, ஸ்கோர் எவ்வளவு என்று கேட்கும் நிலைக்கு, இந்த போதை சென்று விட்டது. டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் கிரிக்கெட் என்ற பெயர்களில் ஆட்டங்கள் நடக்கும் போதே, அரசியல்வாதிகள் தொடங்கி அடிமட்ட மக்கள் வரை அது ஆட்டிப் படைத்தது. இப்போது உலகம் முழுவதிலும் வணிகமயமாகும் காலம். அதில் இந்தியாவில் இருக்கும் நடுத்தர வர்க்கம், முதன்மைப் பாத்திரத்தை வகிக்க துடிக்கிறது. அத்தகைய துடிப்பை காசாக்குபவர்கள்தான், வணிகத் தொழிலில் முன்னேற முடியும். அப்படிப் பட்ட ஒரு சூழல் இப்போது ஐ.பி.எல். மூலம் உருவாகியுள்ளது. இதற்கு முந்தியக் கட்டம், மேட்ச் பிக்சிங் என்று அழைக்கப்பட்ட ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித் துக் கொள்வதும், அதையொட்டி பந்தயம் கட்டுதலை உற்சாகப்படுத்துவதும், பந்தயப் பணத்தில் கிடைக்கும் பங்கு பணமே, பல நூறு கோடியாக இருப்பதும், அதையே ஆட்டக்காரர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதும் என்ற ஒரு கட்டம் அம்பலத்திற்கு வந்தது. இப்போது ஐ.பி.எல். என்ற இந்தியன் பிரீமியர் லீக் என்ற வணிகத்தனமான செயல்பாடு அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. அதில் ஒரு நாள் ஆட்டம் தான் நடக்கும். பல வெளி ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு ஊரின் பெயரிலும் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற முடியும். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒரு பிரபல நபர், கவர்னராக நியமிக்கப்படுவார். பெருநகர்களில் நடத்தப்படும் இத்தகைய ஆட்டங்கள் ஒப்பந்தம் பெயரில், வணிக குழுமங்களுக்கு விற்கப்படும். சென்னையில் நடந்த ஆட்டத்தை இந்தியா சிமெண்ட்ஸ் வாங்கிய தென்றால், கொச்சியில் நடப்பதாக இருந்த ஆட்டத்தை இன்னொரு கம்பெனி விலைக்கு வாங்கும். அதில் தான் வில்லங்கம் கிளம்பியது. திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகாரத்துறை இணை அமைச்சருமான சசிதரூர், தனது பெண் தோழிக்கு பெரும்பான்மையான பங்கை கொடுத்து, அதன் மூலம் உருவான வணிகக் குழுமத்திற்கு கொச்சி ஆட்டத்தை வாங்கி விட்டார் என்பதே குற்றச்சாட்டு. இதில் இன்றைய ஐ.பி.எல். தலைவரான லலித்மோடி முக்கிய பங்கு வகித்தார். அவர் அம்பலப்படுத்தியதனால் அந்த பிரச்சினை நாடெங்கும் வெடித்து, நாடாளுமன்றத்தில் எதிரொலித்து சசிதரூர் ராஜினாமா வரை இட்டுச் சென்றுள்ளது. இப்போது லலித் மோடி பற்றியும் குற்றச்சாட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன. வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களது சோதனையின் மூலம் சிலவற்றை அம்பலப்படுத்தினர். லலித் மோடி தலைமையிலான ஐ.பி.எல்., மத்திய அமைச்சர் சரத்பவாரின் ஆசிர்வாதத்தில் தான் தொடங்கினார் எனப் பேசப்பட்டது. பவாரும் லலித் மோடியின் ராஜினாமாவை வேண்டத் தொடங்கினார். லாலு, பால்தாக்கரே போன்றோரும் கூட ஐ.பி.எல். லை கலைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இப்போது லலித் மோடி ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதும், பி.சி.சி.ஐ. உடனடியாக ஐ.பி.எல். நிர்வாகக் குழுவை கூட்டச் சொல்வதும், மே 1ம் நாளுக்கு முன்பு கூட்டமாட்டேன் என லலித் மோடி அடம்பிடிப்பதும், பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. ஒரு முழுமையான சூதாட்டம் என்று இப்போது ஐ.பி.எல். வர்ணிக்கப்படுகிறது. இத்தகைய திறமைசாலி லலித் மோடியின் பின்னணியைப் பார்த்தால், இன்னமும் கூட வேடிக்கையான செய்திகள் உள்ளன. ரூ.4,000 கோடி மூலதனத்தில் ஒரு பெரிய வணிகப் பேரரசின் வாரிசுதான் இந்த லலித் மோடி. அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். 2009 2010 நிதியாண்டில் இந்தியாவில் அதிகமாக வரி கட்டியவர் இந்த மோடி. சமீபத்திய நிதியாண்டின் முதல் கட்டத்தில் கூட, அவர் ரூ.8 கோடி வரி கட்டி னார். அவரது குற்றயியல் பின்னணி இன்னமும் வேடிக்கையானது. 1985ம் ஆண்டு மார்ச் 1ம் நாள், டியூக் பல்கலைக்கழகத்தில் கொக்கைன் என்ற போதைப்பொருளை கடத்துவதற்கு சதி செய்ததாகவும், கொலை செய்யும் எண்ணத்தோடு பயங்கர ஆயுதத் தால் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர். 1985ம் ஆண்டு ஏப்ரல் 2ம் நாள் ஒரு இரண்டாந்தரமான கடத்தலில் நண்பருடன் ஈடுபட்டதாகவும் அதில் கடுமையான காயத்தை ஏற்படுத்தும் அளவு தாக்கியதாகவும், கடத்த சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர். வடக்கு கரோலினாவில் அந்த வழக்கு நடக்கும் போது, குற்றத்தை ஒப்புக் கொண்டவர். அதையொட்டிய பேரத்தில் 2 ஆண்டு மட்டுமே சிறை தண்டனைப் பெற்ற வர். டியூக் பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்த பிறகு 1986ல் அதே நீதிமன்றம் சென்று, உடல் நலமின்மையால் இந்தியா செல்ல அனுமதி கேட்டவர். 1990ம் ஆண்டிற்குள் 200 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று அப்போது நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டவர். 2006ம் ஆண்டு யுனைடெட் அரப் எமிரேட்சில் கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அதே சமயம் பல்வேறு வணிகக் குழுமங்களிலும் தலைமை எடுத்தவர். இத்தகைய லலித் மோடி இமாச்சல பிரதேசம் கிரிக்கெட் கழகம், ராஜஸ்தான் கிரிக்கெட் கழகம், ஆகியவற்றில் அங்கம் வகித்தவர். சமீபத்தில் பஞ்சாப் கிரிக்கெட் கழகத்திலும் விடவில்லை. பி.சி.சி.ஐ.யில் ஜக்மோகன் டால்மியாவை தோற்கடித்து சரத்பவாரை தலைவராக கொண்டு வருவதில் லலித் மோடி பங்களிப்பு செய்து உள்ளார். அவர் ரகசியமாக ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய 3 ஐ.பி.எல். வணிகக் குழுமங்களிலும் மௌனமான பங்காளியாக இருக்கிறார். அது தவிர மேட்ச் பிக்சிங், மற்றும் ஐ.பி.எல். ஆட்ட பெட்டிங் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுக்களையும், வருவாய்துறை கூறிவருகிறது. இப்போது கொச்சி அணியை வாங்கிய குழுமத்தின் பிரதிநிதி புதிய பிரச்சினையை எழுப்பியுள்ளார். லலித்மோடிக்கும், நரேந்திர மோடிக்கும் வலுவான தொடர்பு இருக்கிறது என்பது தான் இந்தப் பிரச்சினை. அகமதாபாத் ஐ.பி.எல். பந்தயத்தில் நரேந்திர மோடி பங்காளியாக இருப்பதும், அதற்காக அங்கு போட்டி நடத்த ஐ.பி.எல். ஆணையரை லலித் மோடி நிர்ப்பந்தம் செய்ததும், இவர்கள் மூலம் அம்பலமாகி யுள்ளது. முதல் ஐ.பி.எல். பந்தயம், ராஜஸ்தான் முதலமைச்சராக வசுந்தரஜே சிந்தியா இருக்கும் போது நடந்தது. அதனால் வசுந்தராவும், நரேந்திரமோடியும், லலித் மோடி மீது செல்வாக்கு செலுத்தி அகமதாபாத்திற்கு அழைத்திருப்பார்கள் என்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளையாட்டுப் போட்டியிலும் பணம் விளையாடும் போது, அது குற்றவாளிகளின் கைகளில் போய்த்தான் தஞ்சம் அடையும் என்பதற்கு இதை விடவும் உதாரணம் தேவையா?

Wednesday, April 21, 2010

அமைச்சரவை மாற்றத்தில் சிதம்பரமும் கவிழ்வாரா?

தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்காலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியாலும் ஆர்வத்தோடு அமைச்சராக் கப்பட்ட, சசிதரூர் தானாகவே சிக்கிக் கொண்ட ஒரு ஐ.பி.எல். சூதாட்டத்தில் மாட்டி, ராஜினாமா செய்யும் நிலைமை உரு வாகிவிட்டது. இதைப்போலவே, சில, பல ஐ.மு.கூ. அமைச்சர்கள் மாறுத லுக்குள்ளாக்கப்படுவார்கள் என்ற பேச்சு டெல்லியில் எதிரொலித்துக் கொண்டி ருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் நிதித்துறையை கையில் வைத்திருப்பதில் பெருமையும், பலன்களும் பெற்ற ப.சிதம் பரம், திடீரென நிதித்துறை ஐ.மு.கூ.வின் இரண்டாவது கட்ட ஆட்சியில், பிரணாப் முகர்ஜி கைகளுக்கு சென்றதில் மனம் உடைந்ததாக கூறினார்கள். அதையொட்டி உள்துறை அவருக்கு கொடுக்கப்பட்டதில் முழுமையான ஈடுபாட்டை காட்டவில்லை என்பது போல ஊடகங்கள் சித்தரித்தன. இப்போது மாவோயிஸ்ட் பிரச்சனை தீவிரமான விவாதத்திற்கு வந்திருக்கும் சூழலில், உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் தீவிரமான வழிகாட்டலை, சிதம்பரம் கொடுக்கிறார் என்பதற்காக, உள்ளேயும், வெளியேயும் முரண்பட்ட காரணங்கள் காட்டப்பட்டு, அவர் பல வீனப்பட்டிருப்பதாக ஒரு சித்திரம் வரை யப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின், காந்தியவாதிகளின்,சர்வோதயா இயக்க ஆர்வலர்களின், வினோபாஜியின் வழி வந்தவர்களின், காங்கிரஸ் சோஷலிஸ்டுகளின், நேரு வழி சோஸலிச ஆதரவாளர்களின், ஜெயபிரகாஷ் நாராயணனின் வழிச் சென்றவர்களின் மற்றும் ஆங்கிலே யர்களால் பயங்கரவாதிகள் என்று முத்தி ரைக் குத்தப்பட்டு இருந்த நாட்டுப் பற்றாளர்களின், பழைய பாணியிலான ஓய்வு பெற்ற கம்யூனிஸ்ட்களாக தெபாகா, தெலுங்கானா காலத்தவர்களின், பிள்ளைகளும், பேரன்களும் இன்று சிதம் பரத்தின் அணுகுமுறையை, மாவோயிஸ்ட் பிரச்சனையில் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே என்றால், ஒன்றுபட்ட மத்தியபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திக்விஜய் சிங், ஒரு ஆங்கில அச்சு ஊடகத்தில், இந்த பிரச்சனையை அந்த வட்டாரத்தில் வாழ்ந்து வரும் மக்களுடைய நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் அலட்சி யப்படுத்தி விட்டு கையாள முடியாது என்று கூறியிருக்கிறார். ஒரு நாகரிகமான சமுதாயத்தின், பிரபலமான ஜனநாயக நாட்டில், மக்கள் தான் இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் திக்விஜய் கூறியிருக்கிறார். அதேபோல திக்விஜய் சிங்கின் கூற்றை ஒரு லட்சம் விழுக்காடு ஆதரிப்பதாக கூறியுள்ள, மணிசங்கர் ஐயர், ஒரு முறை சிதம்பரம் பற்றி கடுமையாகவே பேசினார். 1986ம் ஆண்டிலிருந்து 89ம் ஆண்டு வரை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாநிலங்களவை அமைச்சராக இருந்த சிதம்பரம், அதற்கு பொருத்தமில்லாதவர் என்று ராஜிவ் காந்தி கொலையையொட்டி, அவர் சாட்சி கூண்டிலே ஏறி நாலு அமர்வுகளில் பேசியதிலிருந்தே தெரிய வந்தது என்று மணிசங்கர் ஐயர் கூறி னார். 1995ம் ஆண்டு மே 24ம் நாள், ராஜிவ் காந்தி கொலையையொட்டி நடந்த புலனாய்வுக்கு பொறுப்பெடுத்த அவர் 1996ம் ஆண்டு ஏப்ரல் மாத முட்டாள்கள் தினத்தன்று, தமிழ் மாநில காங்கிரசுக்கு மாறிச் சென்றது வரை, அந்த புலனாய்வில் அக்கறையற்றுச் செயல்பட்டதைக் காணமுடிந்தது என்றும் அந்த முன்னாள் மத்திய பெட்ரோலியம் அமைச்சர் கூறியுள்ளார். இப்போது திக்விஜங் சிங்கினுடைய சிதம்பரம் மீதான குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்காக, திக்விஜய் 100 விழுக்காடு மட்டுமல்ல 1000 விழுக்காடு மட்டுமல்ல, 1,00,000 விழுக்காடு சரியாகச் சொன்னார் என்று கூறியுள்ளார். அதாவது மாநிலங்களின் தோல்வி என்று மாவோயிஸ்ட் வளர்ச்சியைப் பற்றி வருணிக்கின்ற சிதம்பரத்தை, வறுத்தெடுப்பது போல மணிசங்கர் ஐயர் குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசிலிருந்து மாநிலங்களுக்கு கட்டாயப்படுத்தி பெசா என்று அழைக்கப்படுகின்ற, பட்டியல் இடப்பட்ட இடங்களின் விரிவாக்கத்தை உள்ளடக்கிய, பஞ்சாயத்து சட்டத்தின் சாராம்சத்தை எழுத்திலும், உணர்விலும் அமுல்படுத்த சொல்லி வலியுறுத்த தவறிவிட்டார் என்கிறார் அவர். அதுதான் வனப்பகுதிகளில் இருக்கின்ற சூழ்நிலையை, அரசுக்கு எதிராக தூண்டி விடுவதற்கான ஒரே காரணமாக அமைந்து விட்டது என்பது அவரது வாதம். அதனால் தான் இந்தியாவின் இதயப்பகுதியில், அரசுக்கு எதிராக ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி, புற்றீசலென புறப்பட்டு விட்டது என்கிறார் அவர். சிதம்பரம் பற்றி, திக்விஜய் சிங் அறிவுஜீவித் திமிர் கொண்டவர் என்பதாக எழுதியிருந்தார். அதேபோல சுற்றுச்சூழல் மற்றும் வனஇலாகாவின் அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷûம், திக் விஜய் சிங் கருத்தை ஆதரித்து விட்டார். ஆனால் சிதம்பரம் மட்டும் மாவோயிஸ்ட்டுகளை முழுமையாக துடைத்தெரியும் என்ப தாகவும், அழிப்போம் என்றும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அதை தனது கட்டளையின் கீழ் உள்ள துணை ராணுவம், மற்றும் காவல்துறை மற்றும் இந்திய அரசின் விசுவாச ஊடகங்கள் மூலமாக எடுத்துச் சொல்லி வருகிறார். இறுதி ஆய்வில் இது சட்ட ஒழுங்கு பிரச் சினை அல்ல. அதையும் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இந்திய நாட்டு கிராமங்களில் சட்டம் மீறிய செயல்பாடு என்பது சாதாரணமாக நடந்து வரும் நிர்வாக முறைதான். ஒவ்வொருவராக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பேசி வருகிறார்கள். அருந்ததிராய்களும், ஹிமன்சுகுமார்களும் மட்டுமின்றி, நிதியரசர்கள் பி.பி.சவந்த், சுரேஷ், பேராசிரியர் யஸ்பால், டாக்டர்கள் கிரி, பார்கவா, சுப்பிரமணியம் போன்ற இந்திய மக்கள் தீர்பாயத்தின் தொடர்பிலுள்ள பல்வேறு அறிவுஜிவிகளும் ஒவ்வொருவராக, சிதம்பரத்தின் அணுகுமுறையினை எதிர்த்து பேச தொடங்கி விட்டார்கள். பிரபல ஊடகங்கள் டெஹல்கா, அவுட் லுக், மெயின்ஸ்ட்ரீம் மற்றும் கொல்கத்தா தொலைக்காட்சிகள் பேசத் தொடங்கி விட்டனர்.தண்டகாருண்யா பகுதியில் உள்ள மலைகளும் நதிகளும் நடக்கின்ற அடக்கு முறைகள் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்லி வருகின்றன. தண்டேவாடாவில் கொல்லப்பட்ட துணை ராணுவ வீரர் களின் குடும்பங்களுக்கு, தாங்களும் ஆறுதல் தொகை அளிப்போம் என்று மாவோயிஸ்ட்டுகள் அறிவிக்கும் அள வுக்கு, அவர்களது செல்வாக்கு அங்கே நிறைந்திருக்கிறது.வெளி உலகத்தில் தனிமைப் படுத்தப்படும் சிதம்பரத்தின் கருத்துக்கள், காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பை சந்திக்கிறது என்றால், அதற்கு பின்னால் கட்சித் தலைமையின் முக்கிய பிரமுகர்கள் இருப்பதாக சொல் லப்படுகிறது. சிதம்பரத்திற்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்த மூத்த காங்கிரஸ் பிரமுகர்கள், காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் வேண்டியவர்கள். இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தொடர்ந்து அந்த வட்டாரத்தின் கனிம வளங்களை, பழங்குடியினரை விரட்டி விட்டு பன் னாட்டு முலதன நிறுவனங்களிடம் ஒப்படைக்க அமைச்சர் அவசரப்படுவது ஏன் என்று கேள்வி கேட்கிறார்கள்.2004ம் ஆண்டு வேதாந்தா ரிசோர் சஸ் என்ற ஸ்டெரிலைட் ஆலையின் பன்னாட்டு முலதன வணிகக் குழுமம், தனது ஆண்டறிக்கையில், அதன் தலை வர் பிரியான் கில்பெர்ட்சன் கூற்றை பதிவு செய்துள்ளது. அதில் இந்திய அரசாங் கத்தில் நிதியமைச்சராக நியமனம் கிடைத்த காரணத்தினால், தங்கள் தலைமைக் குழுவில் இருந்து 2004ம் ஆண்டு மே 22ம் நாள் ப.சிதம்பரம் ராஜினாமா செய்தார் என்று எழுதப்பட்டுள்ளது. அவரது பங்களிப்பிற்கு நன்றியும் கூறப் பட்டுள்ளது. இந்தியாவின் தொடர்ந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவார் என்று தாங்கள் நம்புவதாகவும் எழுதப்பட்டுள்ளது. இதுவே, வேதாந்தா குழுவில் அங்கம் வகிப்பவராகவே சிதம்பரம் பணியாற்றி வருவதை பறை சாற்றுகிறது. இப்போது இத்தகைய பெரும் பொறுப்பில் உள்ள தனி நபரின் நலனுக்காக, நாட்டு நலன் மற்றும் மக்கள் நலன் பின் தள்ளப்படுவது அம்பலமாகி உள்ளது.இதன் விளைவாக அடுத்த மாதம் மத்திய அமைச்சரவையில் வர இருப் பதாக கூறப்படும் மாற்றத்தில் பாதிக் கப்படுவரா சிதம்பரம் என்பதே இப் போது விவாதிக்கப்படும் செய்தியாக இருக்கிறது.

Tuesday, April 20, 2010

கோகோகோலா தண்டிக்கப்படுமா?

அமெரிக்க பன்னாட்டு மூலதனக் கம் பெனியான, கோகோகோலா அதனது நடவடிக்கைகளால் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. குளிர்பானங்கள் விற் பனை என்ற பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்து பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக இந்தியா நாடாளுமன்றத்தில் அதைப்பற்றிய குற்றச்சாட்டுகள் ஏராளமாக எழுப்பப் பட்டுள்ளன. அப்படிப்பட்ட கோக் நிறுவனம் நாளை(ஏப்ரல்21) அட்லாண்டாவில் தனது ஆண்டு பங்குதாரர் கூட்டத்தை கூட்டுகிறது. அப்போது அனைத்து பங்குதாரர்களுக்கும், சில பங்கு தாரர்கள் கோக் நிறுவனத்தின் தலைமை பற்றி சில எச்சரிக்கைகளை கொடுத்து வருகிறார்கள். அதாவது இந்த நிறுவனம் தன்னுடைய சிக்கலான நிதி ஆதாரம் பற்றியும், தன் மீது குற்றங்கள் சாட்டப்பட்டது பற்றியும், இந்தியாவில் அதனது பாட்டிலிங் முறை களில் தொடர்ந்து எழக்கூடிய விமர்சனங்கள் பற்றியும், நேரடியாக மற்றும் வெளிப்படையாக தனது பங்குதாரர்கள் மத்தியில் கூறுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்த பங்கு தாரர் கூட்டத்தில் அமித் ஸ்ரீவத்சவா என்ற பங்குதாரர் பேசயிருக்கிறார். கேரளாவில் பிளாச்சிமடாவில் கோக் நிறுவனம் ஏற்படுத்திய பாதிப்புகளுக்காக ரூ.480 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு உயர்மட்ட குழு மார்ச் 22ம் நாள் இந்த அபராதத்தை விதித்தது. நிலத்தடி நீரை கெடுத்தற்கான இழப்பீடு தொகையை இணைத்துக் கொள்ளாமலேயே, பாதிப்புகளுக்கு இந்த அளவிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பிளாட்சிமடாவிலிருக்கும் கோக் பாட்டில் தொழிற்சாலை, கேரள அர சாங்கத்தின் உத்தரவுப்படியும், வட்டார மக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மூடப்பட்டது. அதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் கலாதேரா என்ற இடத்தில் கோக் நிறுவனம் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வட்டாரத்தில் கோக் நிறுவனம் தனது இயங்குதலை தொடங்கிய காலத்திலிருந்து, தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாகி, வறட்சி நிலைமை உருவாகி விட்டது. 1998ம் ஆண்டில் அந்த வட்டாரத்தை, அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டார்கள் என்று காரணம் காட்டி ராஜஸ்தான் அர சாங்கம் அறிவித்தது. ஆனாலும் கூட 2000வது ஆண்டில் அங்கே கோக் நிறுவனம் புதியதொரு ஆலையை தொடங்கியது. கட்டிடங்களைக் கட்டுவதற்கு முன்னால் நடத்தப்பட வேண்டியசுற்றுசூழல் தாக்கம் பற்றிய மதிப்பீடு மீதான அறிக்கையை, கோக் நிறுவனம் மற்றவர்களுடன் பகிரங்கமாக பரிமாறிக் கொள்ள மறுத்து வந்தது. இந்த முறையில் அதன் காலா தேரா ஆலை இயங்கி வருகிறது. 2008ம் ஆண்டில் கோக் நிறுவனத்தால் ஆய்வுக்காக ஆணையிடப் பட்ட டெரி என்ற அமைப்பால் செய்யப் பட்ட ஆய்வின் அடிப்படையில், அந்த பாட்டில் ஆலை மூடப்படவோ அல்லது இடமாற்றப்படவோ அல்லது உற்பத்திக் காக வெளியிடத்திலிருந்து தண்ணீரை இறக்குமதி செய்யவோ செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தன்னு டைய சொந்த ஆய்வினால் வந்திருக் கக்கூடிய ஆலோசனைக்கூட, அந்த நிறுவனம் அலட்சியப்படுத்தியது. அதே சமயம் 2009ம் ஆண்டில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மிக மோசமான அளவில் வறட்சியில் பாதிக்கப்பட்ட காலாதேரா என்ற தொடர்ந்து இயங்க முடிவு செய்தது. ஆனால்ஆர்வலர்கள் அந்த ஆலையை அங்கே மூடி விட தொடர்ந்து போராடினார்கள். இந்திய கிராமங்களில் வாழும் மக்களி டமிருந்து கோக் நிறுவனத்தின் மீது பல புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தின் காலாதேரா நகரில், சிறு விவசாயிகள் தாங்கள் பாதிக்கப்பட்ட விவரங்களையெல்லாம் பட்டியலிடுகிறார் கள். 10 ஆண்டுகளுக்கு முன்னால் கோக் பாட்டில் ஆலை வருவதற்கு முந்திய காலத்தில் அந்த வட்டாரத்தில் விவசாய நிலங்களுக்கான தண்ணீர் முறையாக கிடைத்துக் கொண்டுள்ளது. அந்த ஆலை இயங்கத் தொடங்கியப் பிறகு, நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. அதனால் அருகாமை பகுதிகளில் விவசாயம் செய்வதே இயலாமல் போய் விட்டது. அதன் விளை வாக சிறு விவ சாயிகள் எல்லாம் 8 ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருக்கின்ற மாவு மில்லுக்கு தங்கள் நிலங்களையெல்லாம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதன் பிறகு தொடர்ந்து கோக் ஆலை இயங்கத் தொடங்கிய பிறகு, சுற்றியிருக்கும் விவ சாய நிலங்கள் எல்லாம் முக்கியமான அளவு நீர் வரத்து குறைந்து போனதால், விவசாயம் செய்யமுடியாமல் தங்கள் விளை நிலங்களை புழுதியில் போட்டு விட்டார்கள். மேற்கண்ட நிலைமை பற்றி இந்தியாவின் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தனது ஆய்விலும் கண்டுபிடித்தது. காலாதேரா பகுதியில், கோக் ஆலை வந்தபிறகு 22.36 மீட்டர் தண்ணீர் குறைந்துள்ளது என்று அந்த ஆய்வு கூறியது. அதிலும் குறிப்பாக 2007ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுக்குள் மட்டும் 6 மீட்டர் அளவு தண்ணீர் மட்டம் கீழ் இறங்கியுள்ளது என்று கணிக்கப்பட்டது. அதுமட்டுமின்றிசுற்றுப்புற சூழலையும் அந்த ஆலை மாசு படுத்தியுள்ளது. இந்தியாவின் வறட்சி பாதித்த பகுதிகளில், கோகோகோலா தனது பாட்டிலிங் ஆலைகளை தொடங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட செயலை ஒரு நிறுவனம் செய்யக் கூடாது என்ற பிரச்சினையும் இப்போது அந்த நிறுவனத்தின் பங்குதாரர் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. எங்கெங்லாம் வட்டார மக்கள் தண்ணீருக்கான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்களோ, அங்கெல்லாம் இந்த ஆலை வந்திறங்கிய பிற்பாடு, மக்கள் தங்களது வாய்ப்புகளை இழந்தி ருக்கிறார்கள். இது அடிப்படையான ஒரு மனித உரிமைப் பிரச்சினை. காலாதேரா பகுதியில் மட்டும் இந்த ஆலையை சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாழ்ந்து வரும் 10,000 குடும்பங்கள் இப்போது இந்த ஆலையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு சொந்தமான நிலத்தடி நீரை, அதாவது அவர்களது பாரம்பரிய இயற்கை செல்வத்தை கோகோகோலா நிறுவனம் கொள்ளையடித்து வருகிறது. அதை எதிர்த்து மக்கள் போராட்டக் குழுவை அமைத்து அங்கே போராடி வருகிறார்கள். இந்துஸ்தான் கோகோ கோலா பெவேரேஜஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இந்திய கோகோகோலா நிறுவனத்தின் துணை ஆலை இத்தகைய குற்றச் சாட்டுக் களை மறுத்து, தங்கள் ஆலை இயங்குதலுக்கு அங்கு கிடைக்கும் தண் ணீ ரில் ஒரு விழுக்காடுதான் பயன்படுத்து கிறோம் என்றும் கூறிவருகிறது. தங்களது பாட்டில் ஆலைகளுக்கு தண்ணீரை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம் என்றும் விளக்கம் கூறுகிறது. இதே போல கேரளா மாநிலத்தில், பாலக்காடு மாவட்டத்தில் இருக்கின்ற பிளாட்சிமடா கிராமத்தில், இதே போல வந்திறங்கிய கோகோகோலா பாட்டிலிங் ஆலை, அந்த வட்டாரத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை கீழ் இறக்கியது, நீரையும் கெடுத்தது. அதன் விளைவாக தமிழ் பேசும் ஆதிவாசி மக்கள் வாழ்கின்ற அந்த பகுதியில், அவர்கள் நீண்டகாலமாக குளிப்பதற்கும், சமையலுக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வந்த பெரிய குளத்து நீர் வற்றிப் போனது. குளத்தில் பூமியிலேயே கீறல்கள் விழுந்தன. வட்டார மக்கள் திரண்டு போராடியதன் விளைவாக, ஊராட்சி மன்றம் தீர்மானம் போட்டு, மாநில அரசாங்கமும் அந்த ஆலையை முடியது. அதன் பிறகுதான் கேரள அரசு நியமித்தக் குழு அந்த ஆலை யின் மீது அபராதம் விதித்துள்ளது. இதே நிலைமைதான் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருக்கின்ற கங்கைகொண் டான் பகுதியின், கோக் ஆலையாலும் விளைகிறது. வட்டார அளவில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைகிறது. தாமிரபரணி தண்ணீரை குடிநீர் வடிகால் வாரியம் கோக் ஆலைக்கு வாரி இரைக்கிறது. மக்கள் போராடியும் கூட நல்ல விளைவுகள் கிடைக்கவில்லை. இந்தியாவில் இருக்கும் அரசாங்கங்களை எதிர்த்து போராடுவதன் மூலம், தனியார் பன்னாட்டு நிறுவனங் களுக்கு கொடுக்கும் சலுகைகளை நிறுத்த முடிவதில்லை. அதனால்தான் இப்போது கோக் பங்குதாரர் கூட்டத்திலேயே, ஆர்வலர்கள் இறங்கி விட்டார்கள். பூசாரியை வேண்டுவதைவிட, சாமியையே சந்திக்கச் சென்று விட்டார்கள். இதுதான் இன்றைய காலத்தின் சுற்றுசூழல் ஆர்வலர்கள் எடுத்திருக்கின்ற புதிய தந்திரம். எப்படியோ மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் இதுபோன்ற ஆலைகளை ஏதாவது ஒரு வகையில் தண்டித்தால், அதுவே அவர்களின் அராஜகங்களுக்கு முடிவாக இருக்கும்.

Monday, April 19, 2010

கடல் தாண்டி, மௌனத்தை கலைக்கும் போர்க் குற்றப்பட்டியல்

சில நாட்களுக்கு முன்னால் இந்தியாவின் தலைநகரில், தமிழ் மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில், கடல் தாண்டி நடந்த போர்க்குற்றங்கள் விவரிக்கப் பட்டன. வரிசைப்படுத்தப்பட்டன. டப்ளிங் நகரில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற நியாயம் தேடும் அமைப்பு நடத்திய நீதி மன்றத்தில், ராஜபக்சே அரசு குற்றம் சாட்டப்பட்டு, போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் அம்பலப் படுத்தப் பட்டன. அதில் கலந்து கொண்டு தீர்ப்பாயத் தின் பங்கை சிறப்பாக செய்த, டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் ராஜேந்திர சச்சார் இந்த கூட்டத்திலும் தன்னுடைய உணர்தல்களை வெளிப் படுத்தினார். இதே ராஜேந்திர சச்சார்தான் பி.யூ.சி.எல்.என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அகில இந்திய தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டவர். இன்றும் கூட அந்த அமைப்பின் முக்கிய கூட்டங்களில் பங்கு கொண்டு, நாடு தழுவிய மனித உரிமை இயக்கத்திற்கு வழி காட்டிக் கொண்டிருப்ப வர். இந்திய அரசே முஸ்லிம் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நிலைமை பற்றி ஆய்வு செய்வதற்கு, இந்த நீதியரசர் சச்சார் தலைமையில் தான் ஆணையம் அமைத்தது. சச்சார் தனது அறிக்கையின் மூலம், ஓரங்கட்டப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டு, தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் இந்திய முஸ்லிம்களின் உண்மை நிலையை உலகுக்கு அறிவித்தார். அதில் வறுமையிலும், கல்வி கிடைக்காமையிலும், அரசியல் அதிகாரத்தில் பங்கின்றியும் இந்திய முஸ்லிம் கள் படுத்தப்படும் பாடு விவரிக்கப்பட்டிருந் தது. இந்த அறிக்கையே இந்திய முஸ்லிம் இயக்கங்களுக்கு, ஒரு போராடும் ஆயுதமாக கைக்கு வந்தது. அத்தகைய பெருமைமிகு நீதியரசர் சச்சார் இப்போது தமிழினம், இலங்கைத் தீவில் பட்ட துன்பங்களை வெளிப்படுத்த வந்திருக்கிறார் என்பது தமிழர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு. கேரளாவைச் சேர்ந்த பல அதிகாரிகள் இந்திய அரசில் தலைமை பொறுப்புகளை ஏற்று, அதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்ற பட்டியல், தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து படிக்கப் படுகிறது. அந்த பட்டியலில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், போன்ற பலரும் இடம் பெறுகிறார்கள். அதே கேரளாவைச் சேர்ந்த பிரபல மனித உரிமை போராளி யான முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மேற்கண்ட கூட்டத்திற்கு, தனது பலவீன மான உடல் நிலையிலும், வீடியோ பதிவு மூலமாக, இலங்கை அரசின் கொடூரங்களை சித்தரித்து உரை ஒன்றை அனுப்பியிருந்தார். இவையெல்லாமே டெல்லி வாழ் வட இந்தியர்களுக்கும், புதிய பார்வையைக் கொடுக்க உதவின. அவற்றிற்கு ஆதாரம் தருவது போல, பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, டெல்லி சென்று அந்தக் கூட்டத்தில் ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். இந்தியா தழுவிய ஒரு மௌனம் அங்கே கலைக்கப்பட்டது. பேசப்படாத ஒரு இன அழிப்பு அங்கே அம்பலப்படுத்தப்பட்டது. மாணவர்கள் வழிகாட்டிகளாக அங்கே தோன்றினார்கள். தமிழர்களுக்கு எதிரான ரத்தம் தோய்ந்த போரில், மனிதாபிமானத் திற்கு எதிரான குற்றங்களும், போர்க் குற்றங்களும் நிகழ்ந்ததை எடுத்து வைத்தார் கள். சாட்சிகள் இல்லாமல் ஆயிரக்கணக்கில் தமிழர்களை படுகொலை செய்த, இன அழிப்புக்கு இலங்கைத் தீவு ஒரு முன்மாதிரி படைத்துவிட்டது என்ற செய்தி அங்கே கூறப்பட்டது. ஒடுக்கும் அரசாங்கங்களுக்கு, உலகம் முழுவதிலும் இதுவே ஒரு வழிகாட்டி யாக மாறிவிடும். அந்த முன்மாதிரி இந்தியாவில் காஷ்மீரிகள் மீதும், பஞ்சாபிகள் மீதும், வடகிழக்கிலும், சிவப்பு எல்கைகள் என்று வர்ணிக்கப்படும் மாவோயிஸ்டுகள் மீதும் நடத்தப்படும் அபாயம் எச்சரிக்கை மணியாக அந்தக் கூட்டத்தில் ஒலிக்கப்பட்டது. அதை ஆள்வோர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என வர்ணிக்கலாம். அல்லது சமாதானத்திற்கான போர் என சித்தரிக்கலாம். அப்போது அதைக் கேட்பதற்கு யாருமே இருக்கமாட்டார்கள். இலங்கை அரசு எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு செலுத்தவில்லை. தன் சொந்த நாட்டு மக்கள் மீதுதான், சமாதானத்திற்கான போரை நடத்தியது. அதன் விளைவாக எங்கும் சவக்குழிகள் தோண்டப்பட்டன. சவக்குழிகள் மயான அமைதியை தந்து கொண்டுதான் இருக்கும். அத்தகைய அமைதிக்காக அங்கே போர் நடத்தப்பட்டது. ஐ.நா.சபையின் விளக்கத்தில் கூறுவதானால், இன அழிப்பு என்பது திட்டமிட்ட, பரந்து பட்ட இன அடையாள அழிப்பு அல்லது ஒரு முழுமையான தேசிய இனத்தை, மதத்தை, இனத்தை அல்லது மொழிக்குழுவை இல்லாமல் செய்வதற்கான முயற்சி. இதுதான் இலங்கையில் நடந்த நிகழ்வும். ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்பு சமீபத்தில் தொடங்கிய ஒரு போர் அல்ல. ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு அது நடத்தப் பட்டது. 4வது ஈழப் போர் பற்றி மட்டும் தான் இப்போது உலகச் சமூகம் பேசுகிறது. 2009ம் ஆண்டு மே மாதத்தில் முள்ளி வாய்க்காலில் நடந்த போர் பற்றித்தான் தெரிந்திருக்கிறது. 1949ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள், ஜெனிவாவில் ஐ.நா. சபையால் நடத்தப்பட்ட மாநாட்டில் பிரகடணப் படுத்தப்பட்டப் போர்க் குற்றங்கள், ஒன்று விடாமல் இலங்கையில் அமுலாக்கப் பட்டுள்ளது.இலங்கை ராணுவம் இனவாத தன்மைக் கொண்டது. 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்துக் கொண்டு அந்த சிங்கள இனவாத ராணுவம், தீவின் வடக்கிலும், கிழக்கிலும் தாக்குதல் நடத்தியது. வேறு வழியில்லாமல் தமிழ் மக்கள், விடுதலைப்புலிகளின் பிடிக்குள் இருந்த பகுதிக்கு விரைந்தனர். மட்டக்கிளப்பில் வாகரையிலும், கிழக்கு திரு கோணமலையில் மூதூரிலும், மன்னாரில் மூசாலியிலும், வன்னிப்பகுதியில் பல இடங்களிலும் தமிழ்மக்கள் விரட்டப் பட்டு, வேரோடு அழிக்கப்பட்டு, பலாத் காரமாக இடம் பெயர்ந்து சென்றது, திட்டமிட்டு செய்யப் பட்ட ஒரு செயல். 20 முறைக்கு மேல் இடம் பெயர்தலை மேற்கொண்டவர்கள் பலர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் சாதாரண உள்நாட்டு அகதிகள் அல்ல. மாறாக வேர் பிடுங்கப்பட்ட மக்கள். அது மானூடத் திற்கு எதிரான குற்றம் இல்லையா? தங்கள் நிலங்களையும், உடமை களையும் இழந்த நிலையில் விரட்டப்பட்ட தமிழ் மக்கள் உளவியல் ரீதியில் ஒரு இன அழிப்பை கூடுதலாக அனுபவிக்கிறார்கள். கட்டமைப்பு ரீதியான இன அழிப்பை, பூகோளரீதியான இன அழிப்பை எதிர்கொள் கிறார்கள். யாழ்பாண நூல்நிலையம் எரிக்கப் பட்ட நாளிலிருந்து, உலகத் தமிழர் மாநாடு தாக்கப்பட்ட நாளிலிருந்து, அங்கே பண்பாட்டு இன ஒழிப்பு நடந்து வருகிறது. அரசு ஏற்பாடு செய்த இன கலவரங்கள் 1956, 1958,1961, 1974, 1977 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டது. உச்சகட்ட மாக 1983ல் ஜூலை படுகொலை தமிழருக்கு எதிராக நடத்தப்பட்டது. அதை கருப்பு ஜூலை என அழைத்தார்கள்.1966ம் ஆண்டு ஐ.நா.சபையின் அனைத்து நாட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான மாநாட்டில் தெளிவாக அறிவிக்கப்பட்ட, எல்லா மக்களுக்கும் சுய நிர்ணயத்திற்கான உரிமை உண்டு என்ற சட்டப்பிரிவு, தமிழர்களுக்கு மட்டும் பொருந்ததா? இலங்கை அரசும் அந்த ஒப்பந்தத்தில் ஒரு பங்காளி என்பது சிரிப்பிற்குரிய செய்தி. சமீபத்தில் கிழக்கு தைமூர் நாடும், மோன்டெனேகுரோ நாடும் பிரிந்து செல்வதற்கான உரிமையை, வாக்கெடுப்பு மூலம் பெறவில்லையா? மேற்கண்ட உரத்த சிந்தனைகளை கொளத்தூர் மணியின் உரையிலும், உடன் பேசிய ஆர்வலர்களின் உரையிலும் கேட்டு தெளிந்த டெல்லிவாசிகள், இனியாவது ஈழத்தமிழர் பிரச்சினையை உலக மக்களின் பிரச்சினை என உணர்வார்களா என்று நமது மனது அடித்துக் கொள்கிறது.

Sunday, April 18, 2010

நகரத்திலிருந்து, கிராமம் செல்லும் வேலையற்றோர் கூட்டம்

டெல்லிப் பல்கலைக்கழகம், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை அடுத்த நிலையில், கல்வியாளர்களாலும், அறிவுஜீவிகளாலும் அங்கீகரிக்கப் படுகின்ற ஒரு அறிவுத் தளம். அந்தப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் உதவிப் பேராசிரியராக இருக் கின்ற சாய்பாபா, இந்திய அரசு சந்திக் கும் பொருளாதார நெருக்கடி பற்றி கூறியிருக் கிறார். இந்தப் பேராசிரியர் புரட்சிகர ஜன நாயக முன்னணி என்ற அமைப்பை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். இவர் பல்வேறு ஜனநாயக உரிமைக் குரல் களை எழுப்புவதில் முன்நிற்பவர். கல்வியாளர்கள் கல்லூரி களுக்குள் முடங்கி இருக்க வேண்டும். என்பதுதான் நிர்வாகங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் ஆளும் வர்க்கக் கட்சிகளின் மாநிலங்கள் தொடங்கி, மத்திய அரசு வரை அமைச்சரவைகளில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில், சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில், இத்தனை முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் இருக்கிறார்கள் என்று கூறுவதில் அந்தந்த கட்சிகள் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் நிலவுகின்ற சமூக பொருளாதார கட்டமைப்பு க்கு எதிராகவோ, அதைக் கேள்வி கேட்டோ யாராவது கல்வியாளர்கள் பேசுவார்களானால், அவர்களை புரட்சியாளர்கள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ முத்திரைக்குத்தயாரும் தயங்குவதில்லை.வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தாங்கள் நடத்திய சாதனைகளை, இந்தியா ஒளி விடுகிறது என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்த கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி. அதுபற்றி இந்த பேராசிரியர் கூறும்போது, உலகமயமாக்கல் கொள்கையினால் இந்தியாவில் முதலில் பலன் பெற்றது ஆளும் கூட்டம்தான் என்றார். அதிகாரத்தை சில குறிப்பிட்ட குடும்பங்களின் கையில் வைத்திருக்கும் நிலை இந்த நாட்டில் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அதிகமான அளவில் பலன்களை அவர்கள் அள்ளியிருக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் சமீபத்தில் அதிகமாக சேர்ந்திருக்கிறார்கள். ஒருபுறம் செல்வம் குவிவதும், மறுபுறம் 80% மக்கள் தொகையினர் ஒரு நாளைக்கு ரூ.20க்கும் குறைவாக பெறுவதும் என்ற நிலை தொடர்கிறது. ஒரு நாளாவது முழுமையாக உணவுக் கிடைக்காத குடும்பங்கள் அதிகமாக இருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சூழ்நிலை இல்லை என்று அரசாங்கமே கூறுகிறது. மேற்கத்திய நாடுகள், அதிலும் குறிப்பாக அமெரிக்கா தங்கள் கரங்களில் இந்தியாவின் தீண்டப்படாத வளங்களை கையில் எடுக்க இத்தகைய உலகமயமாக்கல் கொள்கைகளை அதிவேகமாக அமுலாக்கு கிறார்கள். அதே சமயம் பெரிய அளவில் நிலவும் வறுமை, பெறும் மோதல்களை உருவாக்குகிறது. கடந்த 6 ஆண்டுகளில் நாம் இரண்டாவது தலைமுறை சீர்திருத்தம் என்ற கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறோம். பேராசிரி யரின் மேற்கண்ட விளக்கங்கள் இந்த நாட்டில் கலகம் உருவாவதற்கான தளத்தை அடையாளம் காட்டுகிறது. முதல் கட்டம், பொருளாதார தாராளமய மாக்கல் மூலமும், அதற்கான சட்ட ரீதியான கட்டமைப்பு மூலமும் எதிரொலித்தது. அது ஐ.டி.துறையை முக்கிய அடிப்படையாக கொண்டிருந்தது. அப்போது குறைவான அளவே அன்னிய நேரடி நிதிமூலதனம் இறக்குமதியானது. இரண்டாவது கட்டம் என்பது நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, பன்னாட்டு மூலதன நிறுவனங்களுடன் கையெழுத்திட்டு, அதன் மூலம் இயற்கை மூலாதாரங்களை கொள்ளையடிக்க அந்நியர்களை அனுமதிப்பது என்ற நிலைக்கு சென்றுள்ளது. இந்தியாவின் மத்தியப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும், பெரும்பான்மையான இரும்புத்தாது, நிலக்கரி, பாக்ஸைட்டு, சுண்ணாம்பு மற்றும் பிற கனிம வளங்கள் கிடைக்கின்றன. அவற்றை மேற்கத்திய நாடுகள் கையிலெடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்களுக்காக பெருவாரியான நிலங்கள் பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. பெருமளவு விளை நிலங்களும், காடுகளும், கனிமவளங்களும் மற்றும் தண்ணீரும் இன்று விற்கப்படுகின்றன. இத்தகைய நிலைமை ஆங்கிலேயர்கள் காலனியாக இந்த நாட்டை வைத்திருந்த போது கூட நிகழவில்லை. இதன் விளைவாக கடந்த 5 ஆண்டுகளாக, தங்கள் நிலங்கள் பறிபோவதை எதிர்த்து மக்களுடைய எதிர்ப்பு இயக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழில் மயமாதலுக்கான திட்டங்கள் ஆகியவற்றுக்கும் வட்டார அளவிலான எதிர்ப்புகள் வருகின்றன. மேட்டுக்குடிகளில் அடக்கு முறைகளுக்கு ஒப்ப, எதிர்ப்புகள் பல நேரங்களில் வன்முறையாகவும், ஆயுதம் தாங்கியும் கூட எழுகின்றன. சில நேரங்களில் தலைமை இருந்தும், இல்லாமலும் கூட எதிர்ப்புகள் நிகழ்கின்றன. உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கங்கள் இந்தியாவையும் கடுமையாக பாதிக்கின்றது. அமெரிக்க போன்றே 50 லட்சம் தொழிலாளர்கள் நமது நாட்டிலும் வேலையிழந்துள்ளார்கள். நூற்பாலைத் துறை கிட்டத்தட்ட அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவற்றின் பாதிப்புகளை நடுத்தர வர்க்கம் அனுபவிக்கிறது. இனியும் அவர்கள் மேற்கத்திய முறையில் சுகமான வாழ்வை எதிர்கொள்ள முடியாது. ஐ.டி. போன்ற சேவை நிறுவனங்களின் ஊழியர்கள் இப்போது தான் பாதிக்கப்படுகிறார்கள். டெல்லிக்கு அருகே உள்ள கர்காவோன் என்ற இடத்தில் மையமாகி இருந்த ஆலைகளில், உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் முதன்முறையாக பொறியாளர்களும் இப்போது வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர். இதுவே தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும் இணைந்து போராடுவதற்கான சூழல் முகிழ்வதைக் காட்டகிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக வேலையிழந்து, நகர்ப்புறங்களை விட்டு கிராமப்புறங்களுக்கு மக்கள் செல்கிறார்கள். ஆனால் கிராமங்களில் அவர்களுக்கு வேலை கொடுக்க எதுவுமே இல்லை. நகரம் மற்றும் கிராமம் எங்குமே வாழ்வாதரம் கிடைக்காமல் நமது மக்கள் திணறுகிறார்கள். விவசாயம் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. ஆனாலும் 60% மக்கள் தொகை விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்து நிற்கின்றது. 50 ஆண்டுகளாக இந்தியா தனது உணவுப் பாதுகாப்பை இழந்து வருகிறது. ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும், அவை தொழிற்சாலைகளாக மாறவில்லை. அதனால் கிராமங்களிலும், நகரங்களிலும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன. தெருக் களிலும் மோதல்கள் எழுகின்றன. நல்வாய்ப்பாக அத்தகைய தன்னெழுச்சி களை ஒழுங்குபடுத்த ஒரு புரட்சிகர இயக்கம் இங்கே இருக்கிறது. ஆதிவாசிகளை அவர்களது பாரம்பரிய நிலங்களிலிருந்து அகற்றுவதற்காக, பச்சை வேட்டை என்ற ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. 5வது மாதமாக 2,50,000 ராணுவ வீரர்களை, ஒரு முழுமையான போருக்காக அரசு இறக்கிவிட்டுள்ளது. அமெரிக்கா ராணுவத்தின் தந்திரங்கள், இங்கே இந்திய மக்கள் மீது சொந்த நாட்டு அரசின் ராணுவத்தால் அமுலாக்கப்படுகிறது. அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் அவர்களால் கொல்லமுடிகிறது. வட்டார மொழியும், வட்டார அரசியல் பின்னணியும் தெரியாமல் சாதாரண ராணுவ வீரர்கள் தோல்வியை தழுவிகிறார்கள். வெற்றிகரமாக முன்னேற முடியாததால், நிராயுதபாணியான இலக்குகளைத் தாக்குகிறார்கள். அதன் விளை வாக மாவோயிஸ்ட் இயக்கத்தால் நமது ராணுவத் தினர் தாக்கப்படுகிறார்கள். ஏற்கனவே முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று முத்திரைக்குத்தி முடித்தவர்கள், இப்போது ஆதிவாசிகளையும், தலித்களையும் அதே முத்திரைக் குத்தி அழைக்கிறார்கள். இது இவை கல்வியாளர் கக்கும் கசப்பான உண்மைகள். பொருளாதார, அரசியல் சூழலின் விளைவே நடந்து வரும் உள்நாட்டுப் போர் என்ற செய்தியை கல்வியாளர் மட்டுமல்ல, நாமும் உணர வேண்டியிருக்கிறது.

Saturday, April 17, 2010

விளையாட்டுப் போட்டி விபரீதமாகுமா?

விளையாட்டுப் போட்டி என்றாலே இன்றைய காலத்தில் அது வியாபாரப் போட்டி என்பதாக மாறிவருகிறது. கல்வி எப்படி இந்த நாட்டில் வியாபாரமாகி விட்டதோ, அதே போல விளையாட்டும் வியாபாரமாகி வருகிறது. மட்டைப்பந்து விளையாட்டில் முன்பெல்லாம் இரண்டு நாடுகளுக்கு மத்தியில் இரண்டு இன் னிங்ஸ் என்பதாக போட்டி நடக்கும். அல்லது ஒரு நாள் போட்டி என்ற பெயரில் ரஞ்சி ட்ராபிகள் நடக்கும். இப்போது ஐ.பி.எல். என்று ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் முழுமையாக வியாபாரமாக ஆக்கியிருக்கிறார்கள். இந்த ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்தையும், ஒவ்வொரு நிறுவனம் ஒப்பந்தம் போட்டு விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கு தூதர் என்பதாக பிரபல திரைத் துறை கலைஞர்களை நியமித்துக் கொள் கிறார்கள். அந்தப் பாணியில் கொச்சியில் நடத்தயிருக்கும் ஐ.பி.எல். போட்டி இப் போது சிக்கலாகி விட்டது. சிக்கல் மத்திய அமைச்சரின் அதி காரத் தலையீட்டின் மூலம் அரசிய லாக்கப் பட்டுள்ளது. ஒரு அமைச்சர் தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் பெரும் பான்மை பங்கு கொண்ட ஒரு நிறுவனத் திற்கு, கொச்சி யில் நடக்கயிருக்கும் ஐ.பி.எல். போட்டியை விற்றதற்காக, செல்வாக்கு செலுத் தினார் என்று சிக்கல் எழுந்துள்ளது. மாட்டிக் கொண்ட அமைச்சர் வெளி விவகாரத் துறையின் இணை அமைச்சரான சசிதரூர். பிரச்சினையை கிளப்பி இருப்பது ஐ.பி.எல். அமைப்பின் தலைவராக உள்ள லலித் மோடி. ஊடகங்கள் மூலம் நடந்த இந்த மோதல் தலைமை அமைச்சர் வரை சென்றது. ஆதாரம் கிடைத்தால் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவும் தயார் என தலைமை அமைச்சர் கூறினார்.சசிதரூரோ அன்னை சோனியாவை போய் அணுகினார். விளைவு லலித் மோடியின் ஐ.பி.எல். அலுவலகம் வரு மான வரித்துறை யினரால் சோதனை யிடப்பட்டது. இந்திய ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் யாருக்கும் வருமான வரித்துறை அதிகாரி களின் சோதனையிடல் நடக்கும் என்பது இங்குள்ள நடைமுறை வரலாறு. ஆனால் நேற்று நாடாளுமன்ற அவைகளில் இந்த பிரச்சினையே பெரிதாக கிளப்பப் பட்டது. சசிதரூர் அறிக்கை தரக்கூடாது என்றும் பிரதமர்தான் இதுபற்றி பேச வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வாதாடி, அவையை தள்ளப் போடவைத்தார்கள். அடிப்படையில் ஒரு விளையாட்டுப் போட்டி, வியாபார மானதால் கிளம்பி யுள்ள விபரீதமே இது. இன்று ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளும், முன்கூட்டியே முடிவு களைத் திட்டமிட்டு நடத்தப்படும் போட்டிகளாக ஆக்கப்பட்டுள்ளன. அதில்தான் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் புரள்கின்றன. விளை யாட்டு வீரர்களும் கோடிகளில் நீச்சலி டுகிறார்கள். இந்த நேரத்தில் டெல்லியில் காமன்வெல்த் கேம்ஸ் என்ற பெரியதொரு விளையாட்டுப் போட்டி நடக்கயிருக்கிறது. காமன்வெல்த் நாடுகள் பங்கு கொள்ளும் போட்டி இது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்வது உண்டு. அதுபோல பிரபலமானது இந்த காமன்வெல்த் போட்டி. போட்டிக்கான தயாரிப்பிற்காக டெல்லி மாநிலம் அல்லோல கல்லோலப் படுகிறது. டெல்லி மாநகரையே ஒளிமிக்க பெருநகரமாகக் காட்ட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். டெல்லி மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கும் அனுபவமிக்க ஷீலா தீட்சித், வர இருக்கும் காமன்வெல்த் போட்டி மாநகரில் எத்தகைய பிரச்சினைகளை உருவாக்குமோ என்ற அச்சத்திலும் இருப்பதாக அவ்வப்போது அறிவிக்கிறார். டெல்லியை மெருகேற்ற பெருமளவு நிதி செலவழிக்கப்படுகிறது. காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடு கள், அதற்கு உதவி செய்யும் உள்கட்டு மானங்கள், வெளிநாட்டவர்களுக்கு தங்கும் வசதி கள், பொழுது போக்குகள், உணவு விடுதிகள், மற்ற பலவகை ஏற்பாடுகள் ஆகியவற்றை தயார் செய்ய கட்டுமானங் களை உருவாக்கி வருகிறார்கள். அதில் ஒவ்வொரு வகையான வேலைகளையும் செய்ய, வெவ்வேறு தொழிலாளர்களைக் கொண்டு வந்து இறக்குகிறார்கள். பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் டெல்லிக்கு இடம் பெயர்கிறார்கள். அப்படி இடம் பெயர்ந்து வரும் தொழி லாளர் எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டும் என்று அரசு கணக்குப் போட்டுள்ளது. அழகுபடுத்தும் பணிகளைச் செய் வதற்காக ஒரு லட்சம் குடும்பங்கள் இடம் பெயர்ந்து டெல்லி வந்துள்ளன. பூங்காக் களை அமைக்கவும் அவர்கள் பயன் படுகிறார் கள். தொழிலாளர் விதிகளை மீறி, குழந்தைத் தொழிலாளர்களாக உள்ள 14 வயது முதல் 16 வயது வரை உள்ள 2000 சிறுவர்கள் பல விளையாட்டு போட்டி இடங்களில் வேலை செய்கிறார்கள். கட்டுமானப் பணிகளில் இதுவரை மரணம் மட்டுமே 70 வது பேருக்கு நடந்திருக்கிறது. தொழிலாளர்களது வாழும் இடங்களில் சுகாதாரக்கேட்டினால் நோய்கள் பரவி வருகின்றன. இப்போது வயது வந்த 50,000 பிச்சைக்காரர்கள் மற்றும் 60,000 குழந்தைப் பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விளை யாட்டுப் போட்டி நடக்கும் இடங் களை விட்டு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். நகருக்கு வெளியே கொண்டு போய் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். செலவழிக்கப்படும் நிதியைப் பார்த்து டெல்லி மக்கள் கொந்தளிக்கிறார்கள். டெல்லி அரசாங்கத்தால் விளையாட்டுப் போட்டிக்காக வே புதிய வரிகள் மக்கள் மீது போடப்பட்டுள் ளன. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டுமான வசதிகள் இதையொட்டி டெல்லி மக்களுக்கு கிடைக்கும் அதே சமயம் இந்த வளர்ச்சிக்காக செலவழிக்கப்படும் மனித சக்தியும், ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்கமும், கவனிக்கப்படவில்லை. அக் டோபர் மாதத்திற் குள் இந்த ஏற்பாடுகளை எல்லாம் முடித்தாக வேண்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட் டிகள் நடந்து முடிந்த பிறகு டெல்லியில் 30 லட்சம் பேர் வீடற்றவர்களாக, தெருவில் நிற்பார்கள். தங்கள் வேலை முடிந்த பிறகு இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள், 15 லட்சம் பேர் டெல்லிவாசியாக முழித்துக் கொண்டிருப்பார்கள். தங்கள் குடிசைகளையும், குடியிருப்புகளையும், நகரை அழகுபடுத்து வதற்காகவோ, பூங்கா கட்டுவதற்காகவோ, புல்டவுசர் களிடம் இழந்த நிலையில் ஒரு லட்சம் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மாற்று வீடுகள் கொடுக்க அரசு உதவவில்லை. சாலையோரத்திலோ, நகருக்கு வெளியேயோ தற்காலிக குடியிருப்புகளை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சினையின் ஆழம் தெரியாது என்று நாம் கூறமுடியுமா? டெல்லி முதல்வரின் வார்த்தையில் சொல்லப்போனால், விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு, 30 லட்சம் வீடற்றவர் கள் இருப்பார்கள் என்கிறார். அவர்களுக்கு வீடு கொடுப்பது முதல் கடமையாக இருக் கும் என்றும் சொல்கிறார். விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு என்று சொல்வதன் மூலம், பிரச்சினையை தள்ளிப் போடுவது என்ற பொறுப்பற்ற செயல்தான் தெரிகிறது. விளையாட்டுப் போட்டிக்கு வருகின்ற வெளிநாட்டவருக்கு டெல்லியிலும், அதை யொட்டி இந்தியாவிலும் ஏழைகளே இல்லை என்பதாகக் காட்ட வேண்டும் என அரசு விரும்புகிறது. பீகார் போன்ற அண்டை மாநில அரசாங்கங்களிடம், டெல்லி அரசாங்கம் பிச்சைக்காரர்களை திருப்பி அழைத்துக் கொள்ளும்படி கேட்டு வருகிறது. யாருமே ஒத்துழைக்கவில்லை. மணி சங்கரய்யர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருக்கும் போது, ஒரு கூட் டத்தில் தனது உள்ளாட்சித் துறைக்கு ஒரு பகுதி நிதியை ஒதுக்க சொன்ன நேரத்தில், மறுக்கப்பட்டார். அதே நேரம் அதே கூட்டத்தில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக ரூ.700 கோடி கேட்கப்பட்ட போது, மத்திய அமைச்சரவை உடனடியாக அந்தத் தொகையை ஒதுக்கியது. இந்திய மக்களின் உள்ளாட்சிக்கு கேட்கப்பட்டது, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக கேட்கப்பட்ட தொகையைக் காட்டிலும் மிகவும் குறைவான அளவுதான். விளை யாட்டுப் போட்டிக்கு ஆர்வமாகத் தொகை ஒதுக்கும் மத்திய அரசு, விவசா யத்துறையின் தேவை வரும்போது, உற்சாகமாக செயல்படவில்லை என்று ஓய்வு பெற்ற அதிகாரி ராகவன் கூறுகிறார். அதனால் நமது ஆட்சியாளர்களுக்கு, விவசாயத்தை விட விளையாட்டுப் போட்டியே முக்கியமானது. இந்திய மக்கள் பெரும்பான்மையானோர் வறுமை எல்லைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். விவசாயம் மழையின்மை யால் பொய்த்து விட்டது. இத்தகைய சூழலில், வெளிநாட்டவரை குளிர்விக்க விளையாட்டுப் போட்டிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசை நாம் என்ன சொல் வது? இதற்குப் பெயர்தான் ரோம் நகர் பற்றி எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்ற பழமொழிக்கு உண்மை அர்த்தமா?

Friday, April 16, 2010

நாட்டுப்பற்றா? ஸ்டெர்லைட் ஆலைப்பற்றா?

நேற்று இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும் அமளி ஏற்பட்டது. தண்டேவாடேயில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் பற்றி எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பினர். அரசு முழுமையான அறிக்கை யை வெளியிடவேண்டும் என்று எதிர்கட்சி கள் சண்டையிட்டனர். கூச்சல், குழப்பத்தால் மக்களவையும், மாநிலங்களவையும் மாறி, மாறி தள்ளி வைக்கப்பட்டன. ஆளும் கூட்டணி மத்தியிலிருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. பா.ஜ.க.வின் எஸ்வந்த்சிங், ஆந்திராவில் மாவோயிஸ்ட்களுடன் அரசாங் கம் அரசியல் லாபங்களுக்காக சமரசம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இது ஆளும் கட்சி பக்கத்திலிருந்து எதிர் கூச்சலைத் தூண்டிவிட்டது. உள்ளபடியே சென்ற முறை ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க. கட்சி களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மாவோ யிஸ்ட்கள் கொடுத்த மறைமுக ஆதரவால் தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்ற புரிதலில் பா.ஜ.க. எம்.பி. அப்படிப் பேசி யிருக்கிறார்.ஆளும் ஐ.மு.கூ. ஆட்சிக்கு உள்ளேயே, மாவோயிஸ்ட்களை கையாள்வதில் கருத்து வேறுபாடு இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. தங்கள் கட்சி ப.சிதம்பரத்திற்கு ஆதரவு கொடுப்பதாக பா.ஜ.க. மக்களவையில் பகிரங்கமாக அறிவித்தது. அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில தலைவர்கள் சிதம்பரத்தை எதிர்ப்பதாக வும் பா.ஜ.க. குற்றம் சாட்டியது. அதை விளக்கும் போது, பா.ஜ.க. நக்சலிசத்தை ஒடுக்குவதில், உள்துறை அமைச்சகத்துக்கும், மத்திய அரசுக்கும் முழுஆதரவு தருகிறது என்றும் அதே போல காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் முழு ஆதரவு தருமா என்று ஒரு குழப்பமான கேள்வியை எழுப்பியது. பச்சை வேட்டையை நடத்தும் மத்திய அரசு மாநில அரசை ஈடுபடுத்தாமல், தயாரிப்பின்றி தாக்குதலை தொடங்கி விட்டார்கள் என்பது பா.ஜ.க. வாதம். சி.ஆர்.பி.எஃப். இதற்காகவே பயிற்சி எடுத்ததாக சிதம்பரம் கூறினார். மாநிலங் களுக்குத்தான் இந்த பிரச்சினையில் முதன்மைப் பொறுப்பு என்பதையும் வலியுறுத்தினார். அதன் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ராம்மோகனின் ஒரு நபர் ஆணையம் அந்த விசாரணைரயை செய்யும் என்றும் சிதம்பரம் பதில் அளித்தார். இரண்டு வாரத்திற்குள் அந்த விசாரணை அறிக்கை முடிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்பதாக சிதம்பரம் சமாதா னம் கூறினார். எதிர்கட்சி வரிசையையும், ஆளுங்கட்சி வரிசையையும் சமாதானப்படுத்த, அடுத்த தந்திரத்தை சிதம்பரம் கையாண்டார். எங்களை, உங்களை நம் எல்லோரையும் எதிர்த்துதான் மாவோயிஸ்ட்கள் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் என்று ஒரு போடு போட்டார். இதுவே நாடாளுமன்றவாதிகள் மத்தியில் ஒற்றுமை யை ஏற்படுத்தும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆனால் பச்சை வேட்டையால் பலன் பெறுகின்ற, சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசாங்கம், தனது நன்றியை சிதம்பரத்திற்கு தெரிவித்துக் கொள்வது போல, மேற்கு வங்கத்தில் பலன் பெறக்கூடிய மார்க்சிஸ்ட் அரசாங்கமும், மறைமுகமாக மகிழும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் அதன் எதிரொலியாக, மேற்கு வங்கத்தில் பச்சை வேட்டையின் மூலம் சி.பி.எம். அரசுக்கு ஆதரவு தருவது தவறு என்ற குரலை, நாளைய மேற்கு வங்க ஆட்சியாளராக வரயிருக்கின்ற மம்தா பேனர்ஜி கிளப்பினார். இதுவே ஐ.மு.கூ. என்ற ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டியது.பா.ஜ.க.வின் அருண்ஜெட்லி சில புதிய செய்திகளையும் கூறினார். அதில் பெருவாரியாக மாவோயிஸ்ட்கள் பெற்றிருக்கும் ஆயுதங்கள், இந்திய பாதுகாப்பு படையிடம் இருந்து பறித்தெடுத்த ஆயுதங்கள் என்ற செய்தியைக் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான, திக்விஜய்சிங் ஏற்கனவே சிதம்பரத்தை கடுமையாகத் தாக்கியிருந்தார். நக்சலைட் ஒருவரது துப்பாக்கியிலிருந்தும், காவல்துறையின் துப்பாக்கியிலிருந்தும் வெளிவருகின்ற ஒவ்வொரு தோட்டாவும், ஒவ்வொரு இந்திய குடிமகனது உயிரைப் பறிக்கப்போகிறது என்பதாக திக்விஜய்சிங் கூறியிருந்தார். அதன் மூலம் உள்நாட்டுப் போரில் அரசப்படைகள் தாக்குதல் நடத்துவதைக் கேள்விக்குறி யாக்கியிருந்தார். நாட்டுப் பற்றை உயர்த்திப் பிடிக்கும் பார்வையும் அதில் வெளிப்பட்டது. அவரது அறிக்கையை முன்னாள் மத்திய அமைச் சரும், புதிய மாநிலங்களவை உறுப்பினரு மான மணிசங்கர் அய்யர் ஆதரித்துள்ளார். அடுத்து இன்னொரு மூத்த காங்கிரஸ் தலைவரான கேஷவ்ராவ், மாவோயிஸ்ட் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பேச்சு வார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்று கூறியுள்ளார்.மேற்கண்ட கருத்து வேறுபாடுகள் எதுவும் செயலுக்கு செல்வதில்லை. ஆனால் மாவோயிஸ்ட்கள் பெயரைச் சொல்லி, பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் போர் செயலுக்குச் செல்கிறது. அதை நடத்தும் இடத்தில் உள்துறை அமைச்சர் இருக்கிறார். அதனால் பயன்படும் இடத்தில், மாநில பா.ஜ.க. அரசு மட்டும் தான் இருக்கிறதா? இவ்வாறு எழும் கேள்விகளுக்கு இன்னொரு வகையில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பதில் கூறுகிறார். ஆங்கில ஊடகத்தில் தன் பெயரிலேயே கட்டுரையாக எழுதிய, அந்த தமிழ் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தமிழகத்தில் மாசுபடுத்தலில் பிரபலமாக உள்ள ஸ்டெர் லைட் ஆலை நிறுவனத்திற்கு உதவவே ப.சிதம்பரம் இந்தப் போரை நடத்துகிறார் என்கிறார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேரடியாக ராணுவத்தை இறக்கக்கூடாது எனக்கூறியும், அதை மீறி சிதம்பரம் துணை ராணுவத்தின் மூலம் போர் தொடுக்கிறார் என்பது அந்த மூத்த அதிகாரியின் கருத்து. தனது ஏப்ரல்4 லால்கர் பயணத்தின் போது, சிதம்பரம் மாவோயிஸ்ட்களை காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் கோழைகள் என்று அழைத்ததனால், ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் படையினர் இரண்டே நாட் களில் தங்களது தாக்குதலை நடத்திக் காட்டிவிட்டனர் என்பது அவரது வாதம். நடந்த மோதலுக்கு முழுக்காரணமும் சிதம்பரம்தான் என்று அந்தக் கட்டுரையாளர், இந்த நிகழ்ச்சிகளை கோடிட்டும் மட்டும் காட்டவில்லை. மாறாக பொருளாதார லாப உறவுகள் அதற்கு பின்னால் இருப்பதாக ஆய்வு செய்கிறார். தூத்துக்குடியில் 15 ஆண்டுகளாக மாசுபடுத்தலை, உச்சகட்ட மாக செய்து வரும் ஸ்டெர்லைட் தாமிரம் உருக்கு ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா என்ற பெரு வணிக குழுமம் பற்றி பேசுகிறார். அத்தகைய வேதாந்தா குழுவின ருடன் சிதம்பரத்திற்குள்ள பொருளா தார உறவுகள், அந்தக் கட்டுரையாளரின் முக்கிய குறிப்புகளாக உள்ளன. 2003ம் ஆண்டில் மும்பை உயர்நீதி மன்றத்தில், லண்டனை தளமாகக் கொண்ட வேதாந்தா பன்னாட்டு மூலதன நிறுவனத்திற் காக சிதம்பரம் வாதாடினார் என்ற செய்தியை அம்பலப்படுத்துகிறார். அதையடுத்து அதே வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக மாறுகிறார் என்றும் ஆதாரம் தந்துள்ளார். 2004ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு ஒரு நாள் முன்பு மே 22ம் நாள், தனது வேதாந்தா உறவை ராஜினாமா செய்கிறார் என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். அந்த வேதாந்தா நிறுவனம்தான் உலகத்தி லேயே பெரிய அளவுக்கு அலுமினியத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த அலுமினிய தயாரிப்பான 13 லட்சம் டன்களில், 3,85,000 டன் உற்பத்தி யை வேதாந்தா செய்கிறது. ஒரிசாவில் உள்ள ஆதிவாசிகள் பகுதியில், அலுமினியத்திற்கான கனிம வளத்தை ஜர்சுகுடா என்ற இடத்தில் வேதாந்தா கைப்பற்றியுள்ளது. அதை யொட்டி லாஞ்சிகார் பகுதியில் 50 லட்சம் டன் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையையும் வைத்துள்ளது. அதே போல 3,750 மெகா வாட் மின் உற்பத்தி ஆலையையும் அதே இடத்தில் நிறுவியுள்ளது. அதன் துணை நிறுவனமான பால்கோவின் உற்பத்தி 10 லட்சம் டன் வரை உயர்ந்துள்ளது. லாஞ்சி கார் பகுதியில் மட்டும் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் கனிம வளத்தை 750 லட்சம் டன் தேக்கி வைத்துள்ளது. மேலும் அதே அளவு பாக்சைட் எடுக்க அரசு வேதாந்தாவிற்கு வாக்குறுதி கொடுத்துள்ளது. இது மேலும் 50 ஆண்டுகளுக்கு பாக்சைட் வளத்தை கொள்ளையடிக்க அந்த தனியாருக்கு உதவிகரமாக இருக்கும். ஜர்சுகுடாவில் இன்னொரு பெரிய உருக்காலையை தொடங்கப் போவதாகவும் வேதாந்தா கூறி வருகிறது. இவை அனைத்துமே பழங்குடி மக்களின் பாரம்பரியமான செல்வங்கள். இந்தக் கொள்ளைக்கு நேரடி தொடர்பில் உள்ள ஒருவரே, இத்தகைய போரை இந்தப் பகுதி மக்கள் மீது நடத்த விரும்புகிறார் என்பதுதான் அந்த ஓய்வு பெற்ற அதிகாரியின் விவரிப்பாக இருக்கிறது. நாட்டுப்பற்றுக்கு எதிராக, ஸ்டெர்லைட் வீட்டுப்பற்றுதான் தண்டேவாடா தாக்குதல் களுக்கும் காரணம் எனும் போது அதிர்ச்சி யாக இருக்கிறது.

Thursday, April 15, 2010

உள்நாட்டுப் போரை, காங்கிரஸ் ஒரே கருத்தில் சந்திக்கிறதா?

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை எதிர்கொள்வதில், ஒரே கருத்துடன் இருக்கிறதா? அந்த கூட்டணியில் முதன்மைக் கட்சியாகவும், முக்கியக் கட்சியாகவும் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஒரே கருத்து செயல்படுகிறதா? ஒத்த கருத்து இல்லாமல் மத்திய அமைச்சரவை எந்த பிரச்சனையையாவது தீர்க்க முடியுமா? உள்துறை அமைச்சர் பொறுப்பிலிருப்பவர் சுயேட்சையாக முடிவு செய்து செயல்பட முடியுமா? அது சரியாக இருக்குமா? இதுபோன்ற கேள்விகள் இப்போது மத்திய அரசை குழப்பி வருகின்றது. முன்னேறிய ஆங்கில ஊடகம் ஒன்று இந்த பிரச்சனையின் ஆழத்தை அலசுவதற்காக பல்வேறு விவாதங்களை செய்கிறது. அதில் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் பற்றி பல எதிர் விவாதங்களை கொண்டு வந்தது. சமத்துவமற்ற ஒரு சமூகபொருளாதார எதார்த்தம் இருக்கும்போது, அரசின் நிராகரிப்பும், கடுமையான சுரண்டலும், பீதியுறும் வகையில் எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது என்பது ஒரு கருத்து. மாவோயிஸ்ட் படையை முழுமையாக தூக்கியெறியாமல், வளர்ச்சிக்கான எந்தவொரு முயற்சியும் வீண்தான் என்ற இன்னொரு கருத்தும் வெளிவந்துள்ளது. இவை இரண் டையும் தாண்டி, வன்முறையை சந்திக்க வன்முறை தான் வழி என்று ஒரு கருத்து. பணக்காரர்களிடமிருந்து சீர்திருத்தம் செய்வது தான் ஏழைகளின் புரட்சி என்பதாகவும் சிலர் பேசுகிறார்கள். எத்தனை குற்றயியல் தன்மையோடு, அரசியல் நோக்கத்தோடு நக்சலைட்டு களின் சவால் இருந்தாலும், அது பணக் காரர்களுக்கும், ஏழைகளுக்கும் மத்தியில் ஒரு பங்குதாரர் உறவை ஏற்படுத்தக் கூடிய புதிய சமூக ஒப்பந்தத்தை உரு வாக்குகிறது என்றும் கூட கருத்து வெளி வந்துள்ளது. சீர்திருத்தம் என்ற வார்த்தையை இதுவரை நிதி சந்தைக்கும், தொழில் துறைக்கும் மட்டுமே அடையாளம் கண்டு வருகிறோம். மாறாக இந்தி யாவை புனரமைக்க, தாராள மயமாக்கல் என்ற விளக்கத்தை, அரசாங்கம், காவல்துறை ஆகியவற்றையும், நமது சிந்தனை களையும், வாழும் முறைகளையும் தாராள மயமாக்க வேண்டும். மேற்படி கருத்துக்களும் எதிரொலிக்கின்றன. மனதை சீர்திருத்தாமல், நேர்மையான தாராளமயம் வெற்றி பெறாது என்கிறார்கள் அவர்கள். ஏழைகள் இருக்கின்ற ஒரு நாட்டில், ஒரு மேட்டுக்குடி எவ்வாறு சிந்திப்பார் என கேள்வி எழுப்புகிறார்கள். தங்களுடைய வளர்ச்சிக்காக லாபங்களை தேடுபவர்கள், சில தானியங்களையோ அல்லது சிறுதுளி களையோ வேலையாட்களுக்கு வீசி எறிவது போல நடந்துக் கொள்கிறார்கள் என்றும் ஆள்வோர் பற்றி கருத்துக்கள் அத்தகைய ஊடகங்களில் வெளிப் பட்டுள்ளன. இப்படிப்பட்ட மனப் பான்மைகள் ஜமீந்தார்களுடைய மனப்பான்மைகளாக தெரிகிறதே தவிர, ஜனநாயகவாதிகளுடைய மனப் பான்மை அல்ல என்றும் அவர்கள் தெரிவித் தார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒரு பிரிவினர் ஏழை மக்களை, வாக்கு எந்திரங்களாக பார்க்கின்றனர். அதற்காக அவர்களுக்கு ஏதாவது தர்மம் செய்ய வேண்டும் என எண்ணுகிறார்கள். பசித்த வாய்களுக்கு சிறிது தானியங்களை தூவுவது, உணவுக்கான உரிமை என்று எண்ணுகிறார்கள். கல்விக்கான உரிமை என்பதும் புத்தகங்களை ஏழைகள் மீது எறிவது என்பதாக புரிந்திருக்கிறார்கள். தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம், இடைக்கால நிலத்து வேலைகளுக்கு வாய்ப்பளிக்கிறது. குறைந்த காலத்தில், குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குகிறது. மீதம் இருப்பதை ஏழைகளுக்கு வழங்கு என்ற லாபம் தேடும் பண்ணையாதிக்க தன்மைத்ததாக ஐ.மு.கூ.வின் திட்டங்கள் இருக்கின்றன. எளிய மக்களை வருவாய் தேட உற்சாகப்படுத்தவில்லை. பணக் காரர்கள் போல முன்னேறி வளர எண்ணமூட்டவில்லை. இப்படிப்பட்ட கருத்துக்களும் ஊடகங்களில் வெளிப் படுகின்றன. கூட்டணி ஆட்சி பற்றி மக்களி டையே உள்ள கருத்துக்கள் இப்படி யெல்லாம் ஆங்கில காட்சி ஊடகங் களில் வெளிப்பட்டது என்றால், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முளைத்திருக் கின்ற கருத்து வேறுபாடுகள் கடுமை யாக இருக்கின்றன. இப்போது விவாதிக்கப் படும் மாநிலம் புதிதாக தோன்றியசத்தீஸ்கர் மாநிலம். இந்த மாநிலத்தின் பகுதிகள் அனைத்தும், கடந்த காலத்தில் மத்திய பிரதேச மாநிலத்திற்குள் அடக்க மாகியிருந்தன. அப்போது பிரபலமான காங்கிரஸ் ஆட்சியை நடத்தி வந்த முதல்வர், காங்கிரசின் மூத்த தலைவரான திக்விஜய்சிங். அதனால் அந்த மூத்த தலைவருக்கு, சத்தீஸ்கர் மாநில மக்கள் பற்றியும், அதிலும் குறிப்பாக பழங்குடி மக்களின் வாழ்நிலைப் பற்றியும் அடிப் படையான அறிவு இருக்கும் என்பது ஒரு பொதுவான பார்வை. இத்தகைய அடிப்படையான புரிதல்களை, மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கின்ற ப.சிதம்பரத்திற்கு இருக்குமா என்பது வெள்ளிடைமலை போல ஊரறிந்த ஒரு உண்மை. அப்படிப்பட்ட திக்விஜய்சிங் அடிப்படையிலேயே ப.சிதம்பரத்தின் அணுகுமுறை பற்றி மாறுபடுகிறார். அதாவது சட்டஒழுங்கு பிரச்சனையாக மாவோயிஸ்ட் பிரச்சனை பார்க்கப்படக் கூடாது என்பது திக்விஜய்சிங்கின் அழுத்தமான கருத்து. ஆனால் அப்படித் தான் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அந்த பிரச்சனையை பார்க்கிறார் என்று திக்விஜய்சிங் குற்றம் சாட்டுகிறார். சட் டம் ஒழுங்கு என்பது ஒரு மாநிலத்தின் முதலமைச்சரால் கவனிக்கப்பட வேண் டியது என்று முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங் வலியுறுத்துகிறார். ஆனால் மத்திய அமைச்சகத்தில் உள்ள உள்துறை அமைச்சர் அதை சட்டஒழுங்கு பிரச்சனையாக பார்க்கக் கூடாது என்று திக்விஜய்சிங் ஆதங்கப் படுகிறார். இந்த இடத்தில் இன்னொரு அரசியல் பிரச்சனையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. சத்தீஸ்கர் மாநி லத்தை ஆள்வது பா.ஜ.க. அந்த கட்சி திக்விஜய்சிங்கிற்கு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அடித்தளத்தை காலி செய்து விட்டு, ஆட்சிக்கு வந்திருக்கிறது. பா.ஜ.க.வின் செயல்பாடுகளால், பழங்குடி மக்கள் பிரச்சனை விபரீதமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மாட்டிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசுக்கு பிணைக் கொடுத்து விடுதலைச் செய்யும் வேலையை, உள்துறை அமைச்சர் செய்கிறார் என்றும் கூட அந்த மூத்த காங் கிரஸ் தலைவர் எண்ணிப்பார்க் கலாம். பா.ஜ.க. சங் பரிவாரது அரசியல் கட்சியாக பயணம் செய்து வருகிறது. அதனால் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தோ, பஜ்ரங் தள்ளோ, ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கோ, அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்தோ, அடிப்படை மக்கள் மத்தியில் இறங்கி நல்ல அல்லது கெட்ட வேலைகளைச் செய்வார்கள். குஜராத்தில் வி.எச்.பி. செய்தது போல, சத்தீஸ்கரில் ஆர்.எஸ்.எஸ். செய்கிறது. அதாவது மாநில அரசு தனது காவல்துறை மூலம் ஏற்படுத்தியுள்ள சல்வா ஜுடும் என்ற கூலிப்படையை, கூட்டிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். அப்பாவி பழங்குடி மக்கள் மீது சொல்லொணா கொடுமைகளை இழைத்து வருகிறது. இவ்வாறு சல்வா ஜுடும் மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் குண்டர்பாணி செயல்பாடுகளால் பாதிக்கப்படும் மக்கள், பாதுகாப்பிற்கு மாவோயிஸ்ட்கள் பக்கம் செல்கிறார்கள். இதைத் தான் சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகி கடுமையாக கண் டிக்கிறார். அஜித் ஜோகி கருத்துக்கும், திக்விஜய்சிங் கருத்துக்கும் மரியாதைக் கொடுக்காமல், அகில இந்திய காங் கிரஸ் தலைமையும், அவர்களால் நடத்தப் படும் மத்திய அரசும் என்ன செய்யப் போகிறார்கள்? காலப்போக்கில் தங்க ளுக்குள்ள அடித்தளங்களை இழக்கப் போகிறார்களா? எதை இழந் தாலும் இந்தியாவின் கனிம வளங்களை, அன்னிய பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விடுவதில் குறியாக இருக்கிறார்களா? இத்தகைய தொடர் போக்கின் மூலம், மத்திய காங்கிரஸ் தலைமை பா.ஜ.க.வின் வலையில் வீழ்ந்து விட்டதா? இவ்வாறு தான் அரசியல் அணி சேர்க்கையை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

Wednesday, April 14, 2010

மாணவர்கள் மீதும் பச்சை வேட்டை

இந்திய தலைநகரில் உள்ள அந்த முன்னேறிய பல்கலைக்கழகத்தின் வளாகம் தொடர்ந்து கவனிக்கப்படுகிறது. கண்காணிக் கப்படுகிறது. தாக்கப் படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, மக்கள் மீதான போர் என்ற மன்றத்தை உருவாக்கி, நூற்றுக் கணக்கில் மாணவ, மாணவிகளை திரட்டிய ஜனநாயக மாணவர் சங்கம் அது பற்றிய நேரடி வர்ணனையைக் கொடுத்தார்கள். அதாவது அன்று அவர்கள் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா, லால்கர் பகுதிகளில் நடந்து வரும் அரசப்படைகளின் பச்சை வேட்டை யைக் கண்டித்து உரையாற்றிக் கொண்டிருந் தார்கள். அப்போது அந்த அரங்கத்திற்குள் நுழைந்த என்.எஸ்.யூ.ஐ.என்ற காங்கிரஸ் மாணவர் அமைப்பும், ஏ.பி.வி.பி. என்ற பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பும், சமத்துவத்திற்கான இளைஞர்கள் என்ற இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களும், கூட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை தாக்கினார் களாம். அதில் ஒரு மாணவியை தள்ளி விட்ட அந்த குண்டாயிசம் செய்த மாணவர்கள் எல்லோராலும் எதிர்க்கப்பட்டார்கள். காங்கிரஸ் மாணவர்கள் நழுவி விட, ஏ.பி.வி.பி. மாணவர்கள் 15 பேர் அரங்க மேடை வரை ஏறி, அடித்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்காக கூடியிருந்த மாணவர்கள் அதை எதிர்த்து முழக்கமிட்டிருக்கிறார்கள். மாவோயிசம் வெல்லட்டும் என்பதும் கூட முழக்கமாக வெடித்திருக்கிறது. உள்ளே நுழைந்த வன்முறை யாளர்கள் நன்றாக புடைக்கப் பட்டிருக்கிறார்கள். அது பற்றி டி.எஸ்.யூ. கூறும்போது, ஜே.என்.யூ.விலும், வெளியிலேயும் பச்சை வேட்டையை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். இரண்டு நாட்கள் பல்கலை வளாகத்தில் வலதுசாரி அரசியலின் பாசிச பண்பை நேரில் காணமுடிந்தது. ஏற்கனவே கடந்த காலங்களிலும் அந்த வன்முறையாளர்கள் இது போன்றே நடந்திருக்கிறார்கள். அன்று ஏப்ரல் 9ம் நாளும் கோதாவரி தாபா என்ற அரங்கில் நடந்து கொண்டிருந்த கலை நிகழ்ச்சிக்கு நடுவில்தான் இத்தனை கலாட்டாவும் நடந்திருக்கிறது.ஜே.என்.யூ.வில் பிரபலமான அதிக செல்வாக்குள்ள மாணவரமைப்பான அய்சா, இப்போது மெல்ல டி.எஸ்.யூ.வுடன் செல்லாமல் நழுவத் தொடங்கியுள்ளது. தங்களையும் பச்சை வேட்டைக்காரர்கள், மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தி விடுவார்களோ என்ற அச்சத்திலும், அதனால் தங்களது பிரபல மாணவர் தளத்தை இழந்து விடுவோமோ என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். அதே போல சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ.யின் எஸ்.எஃப்.ஐ. மற்றும் ஏ.ஐ.எஸ்.எஃப். அமைப்புகளும் ஒதுங்கிக் கொண்டன. இப்போது வலதுசாரி சிந்தனையாளர்கள் ஒருபுறமும், டி.எஸ்.யூ.புரட்சிகர சிந்தனையுடன் மறுபுறமும் என விவாதம் மாறிவிட்டது. இந்தியாவின் பெரிய ஜனநாயகத்தில் மாட்டிக் கொண்டுள்ள ஏழ்மையில் ஏழ்மையான மக்கள் மீது, இந்திய அரசே பச்சை வேட்டை என்ற நரபலி வேட்டையை தனது துணை ராணுவப் படையின் மூலம் செய்து வருவதை அம்பலப்படுத்தியதுதான் அன்றைய கலை நிகழ்ச்சி. இன அழிப்பு என்ற அளவுக்கு வறுமையால் ஏற்கனவே அழிந்து கொண்டிருக்கும், இந்த நாட்டின் இதயப்பகுதியில் வாழும் ஆதிவாசி மக்கள், அந்நிய மற்றும் இந்திய பெரு வணிகக்குழுமங்களால் எதிர்கொள்ளும் அழிப்பு நடவடிக்கையைப் பற்றி, பல்கலை வளாகத்திற்குள் பேசக்கூடாது என்பது வலதுசாரி மாணவர் அமைப்புகளின் கூக்குரல். முதலில் ஏ.பி.வி.பி.க்காரர்கள் சி.ஆர்.பி.எஃப். பலியானதை கொண்டாடுகிறார்கள் என்று பொய்யைப் பரப்பினார்கள். பிறகு உள்ளே நுழைந்து தாக்கத் தொடங்கினார்கள். அதையொட்டி அருகே உள்ள வசந்த் கஞ்ச் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்கள். தங்களது வன்முறை மூலம் நிகழும் கலைநிகழ்ச்சியை தடுக்கப் போவதாக கூறினார்கள். முழக்கமிட்டே தடுத்து விடலாம் என முயன்றார்கள். மாணவர்கள் மனித சங்கிலியாக நின்று கொண்டதால், விரக்தியடைந்தார்கள். பெண் மாணவிகள் மீது குறிப்பாக தாக்குதலை நடத்தினார்கள். அதில் சிலர் காயம்பட்டார்கள். மருத்துவமனைக்கும் எடுத்துச் செல்லப்பட்டார்கள். தாக்க வந்த மாணவக் குண்டர்களை, சிதம்பரம் மன்மோகன் குழுவினுடைய பச்சை வேட்டை மாணவர்கள் என்பதாக டி.எஸ்.யூ. இப்போது அழைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து காவல்நிலையத்தில் டி.எஸ்.யூ.வினரும் புகார் கொடுத்தார்கள். மறுநாளே பொதுவான மாணவர்கள் பலரும் சேர்ந்து வளாகத்திற்குள்ளேயே, பாசிஸ்ட்களுக்கு எதிராக பேரணி வந்தார்கள். அப்போதும் கூட மஹிமந்தவி விடுதி முன்னால் ஏ.பி.வி.பி. மற்றும் என்.எஸ்.யூ.ஐ. மாணவர்கள் கூச்சல் போட்டார்கள். அவர்களுடன் வந்திருந்த வெளியாட்கள் சுவரொட்டிகளை கிழித்தார்கள். இதுதான் 2006ம் ஆண்டின் குஜராத் இனஅழிப்பு, 1984ன் டெல்லி இன அழிப்பு, மகாரஷ்டிரா மாநிலத்தின் கேர்லாஞ்சியில் தலித் மீதான படுகொலைகள் போன்றவற்றை, இந்திய ஜனநாயகம் கொண்டாடிய முறை என்பதாக டி.எஸ்.யூ. மாணவர்கள் வர்ணிக்கிறார்கள். இதில் நிர்வாகத்தின் ஆதரவும் வன்முறையாளர்களுக்கு இருக்கிறது என்பது புரட்சிகர மாணவர்களின் கருத்து. சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசாங்கம் சல்வாஜீடும் என்ற கூலிப்படையை பயன்படுத்தியும் பச்சை வேட்டைக்கு முன்பே, ஆதிவாசி மக்களை நிர்ப்பந்தமாக இடம் பெயரச் செய்கிறது. அதே போல பல்கலைக்கழக நிர்வாகிகளும், கலைநிகழ்ச்சிக்கு அனுமதி பெறவில்லை என்று சம்பவதினத்தின் இரவிலேயே நேரில் வந்து அறிவித்தார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் எந்தக் குடிமகனும், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ, ஊர்வலம் செல்லவோ சுதந்திரம் உண்டு என்று எழுதியுள்ளார்கள். ஆனால் உள்ளூர் காவல்துறை அனுமதி பெறாமல், மேற்கண்ட அடையாள எதிர்ப்புகளைக் கூடத் தடுத்துவிடுவார்கள். இதற்காக 15 நாட்களுக்கு ஒரு முறை, தடையை அறிவித்து அதையே 30 ஆண்டுகளாக இடைவெளியின்றி தொடர்வார்கள். இது சென்னை மாநகர காவல்துறையின் அத்துமீறல். தலைநகர் டெல்லியில் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருக்காதா என்ன? ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும் போது, அவரை எதிர்த்து தெரு நாடகம் நடத்தியதற்காக, சப்தர்ஹஷ்மி காங்கிரஸ் குண்டர்களால் அடித்தே கொல்லப்பட்டார். அப்படிப்பட்ட நகரமல்லவா அது? கலை நிகழ்ச்சிகளை பிற்போக்காளர்கள் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. 1999ம் ஆண்டு மாஞ்சோலை தொழிலாளர் பேரணி மீது, தாமிரபரணி நதிக்கரையில் நடந்த படுகொலைகளை ஆவணப்படமாக்கியதைக் கூட, அவர்கள் தாங்கிக் கொள்ளவில்லையே? கோவையில் 17 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஆவணப்படமாக்கி, வெளியிடும் போது, அவர்கள் தடுக்காமல் இல்லையே? எல்லா இடத்திலும் அவர்கள் ஒரே மாதிரிதான் நடப்பார்கள் போலிருக்கிறது? இந்தியாவின் இதயப் பகுதியிலுள்ள கனிம வளங்களை, மிட்டால், வேதாந்தா, டாடா, எஸ்ஸார், ஜிண்டால், போஸ்கோ போன்ற வணிக குழுமங்களுக்காக தாரை வார்க்க, சி.ஆர்.பி.எஃப். மற்றும் மாநில காவல்துறையை காடுகளுக்குள் இந்திய அரசு அனுப்புவது ஏன்? இந்தக் கேள்வியை இப்போது மாணவர் சமுதாயம் கேட்கிறது. சல்வாஜூடும் மற்றும் அரசப்படைகளால் 4 மாத பச்சை வேட்டையில் 70 ஆதிவாசி பெண்களை வன்புணர்ச்சி செய்தது ஏன்? இந்தக் கேள்வியை இப்போது மாணவிகள் கேட்கிறார்கள். வன்னிப்போரில் தமிழினத்தை அழிக்காதே என முழக்கமிட்டதற்காக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தையே, ரத்தக்காடாக ஆக்கவில்லையா? சத்தீஸ்கர் ஆதிவாசிகளை கொல்லாதே என்று முழக்கமிட்ட, ஜே.என்.யூ. மாணவர்களை புகுந்து அடிப்பதும் பச்சை வேட்டையின் தொடர்ச்சி தானே? இந்த நாட்டில் மட்டும் வளர்ச்சி என்ற பெயரில் உடைமைகள் பறிப்பும், அழிப்பு வேலையும் நடக்கிறது என்ற மாணவர் கூற்றை எப்படி மறுப்பது?

Tuesday, April 13, 2010

கல்விக்கூடத்தில் எதிரொலிக்கும் மாவோயிசம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏப்ரல் 6ம் நாள் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் 76 வீரர்கள் மட்டுமே இறந்து போனதாக, மத்திய சிறப்பு காவல்படை சார்பாக அரசு அறிவித்தது. அதன் பிறகு அது பற்றிய பல்வேறு விவாதங்கள் நாடெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கில காட்சி ஊடகங்களில் அதிகமான அளவு, அரசு தரப்பு தாக்குதல்கள் உள்நோக்கம் கொண்டவை என்பதாக சொல்லப்பட்டு வருகின்றன. அதாவது பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில், மலைகளிலும், காடுகளிலும் கிடைக்கின்ற கனிம வளங்களை கொள்ளையடித்துச் செல் வதற்கு வருகின்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு அரசு தாரை வார்க்கிறது என்பது அத்தகைய உள்நோக்கத்தின் அடிப்படைக் கருத்தாக இருக்கிறது. அப்படிச் சூழலில் பாரம்பரியமாக தாங்கள் காத்து வரும் கனிமவளங்களை, அந்நிய னுக்கு கொள்ளை போக அனுமதிக்க தயாராக இல்லாத தன்மைதான் மோதலை ஏற்படுத்தியுள்ளது என அவை சித்தரிக்கின்றன. கட்டாயமான இடம் பெயர்தலை விரும்பாத பழங்குடி மக்களும், அவர்களுடைய நலனுக்காக ஆயுதம் தூக்கி உள்ள மாவோயிஸ்ட்டுகளும் இந்தப் போரில் அங்கம் வகிப்பதாக அவை கூறுகின்றன. பரபரப்புக்காகவும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், கருத்துச் சொல்வதன் மூலம் அத்தகைய ஊடகங்கள் வணிகம் செய்கிறார்கள் என்று கூட நாம் எண்ணிப்பார்க்கலாம். ஆனால் நாட்டுப்பற்று கொண்ட, அறிவாளி பிரிவினரான அதிலும் முன்னோடிப் பாத்திரத்தை வகிக்கின்ற, மாணவச் சமூகம் இதுபற்றி விவாதித்தால், கவனமாக கவனிக்கவேண்டியுள்ளது. ஏனென்றால் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நாட்டுப் பற்றை இழந்து, தனி மனித லாபத்திற்காக ஊழலில் ஈடுபடலாம். ஆனால் இந்த நாடு எதிர்காலத்தை வளரும் இளைய சமுதாயத்திடம், குறிப்பாக மாணவச் சமுதாயத்திடம் ஒப்படைத்திருக்கிறது. அப்படிப்பட்ட மாணவ சமூகத்திற்குள், இந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்ட்டு தாக்குதல் விவாதிக்கப்படும் போது, அல்லது சச்சரவாக மாறும்போது, அதிக கவனத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது.இந்தியாவிலுள்ள கல்விச்சாலைகளில் அதிலும் உயர்கல்விச் சாலைகளில், அதிகளவில் முன்னேறிய பல்கலைக்கழகமாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மதிக்கப்படுகிறது. இதுவும் மற்றவை போல சுயாட்சித் தன்மை கொண்டதாக, உயர்ந்த கல்வியாளர்களின் வழிகாட்டலில் நடத்தப்படும் பல்கலைக்கழகம். அதில் கடந்த வெள்ளிக்கிழமை, அய்சா என்ற அகில இந்திய மாணவர் கழகமும், டி.எஸ்.யூ. என்ற டெல்லி மாணவர் கழகமும் நடத்திய, மக்கள் மீதானப் போர் என்ற பெயரில் ஒரு மன்றத்தை தொடங்கினார்கள். அதில் சத்தீஸ்கர் விவகாரம் விவாதிக்கப்பட்டது. அதைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்திய தேசிய மாணவர் சங்கமும், பா.ஜ.க. தலைமையிலான அகில பாரதீய வித்யார்தி பரிஷத்தும் சேர்ந்து, கருத்தரங்கு நடத்தியவர்களை தாக்கி இருக்கிறார்கள். அதற்கு ஒரு காரணத் தையும் அவர்கள் சொல்கிறார்கள். அதாவது மாவோயிசத்தை ஆதரித்து, சத்தீஸ்கரில் அரசப்படை வீரர்கள் கொல்லப்பட்டதை வரவேற்று கருத்தரங்கு நடத்தியதாக குற்றம் சாட்டினார்கள். ஆனால் கருத்தரங்கு நடத்திய மாணவரமைப்புகள் அதை மறுத்தன. மக்கள் மீது அரசப்படை போர் நடத்துவதாகவும், அதை எதிர்த்துத்தான் தாங்கள் கருத்தரங்கு நடத்துவதாகவும் அவர்கள் கூறினார்கள். மறுநாளே நக்சல் எதிர்ப்பு மன்றம் என்பதாக காங்கிரஸ், பா.ஜ.க. மாணவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி விட்டார்கள். அவர்களுடன் இட ஒதுக்கீட்டை மறுக்கும் மாணவர் அமைப்பான, சமத்துவத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பும் சேர்ந்து கொண்டது. நேற்று இந்த நக்சல் எதிர்ப்பு மாணவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பல்கலைக்கழக வளாகத்திற்குள், நிர்வாக அனுமதியின்றி எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்பது அவர்களது கோரிக்கை. அதில் மத்திய ஆட்சியாளர்களின் விருப்பங்கள் பிரதிபலித்தன. கடந்த 40 ஆண்டுகளாக ஜே.என்.யூ. மாணவர் பேரவை, முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிகரமாக மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அது அங்கீகரிக்கப்பட்ட ஜே.என்.யூ. மாணவர் பேரவை சட்ட திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடைசியாக நடந்த மாணவர் தேர்தல் 2007ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு லிங்டாக்குழு பரிந்துரைகளின் படி, உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் மாணவர் பேரவைத் தேர்தல் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் கல்விச்சாலைகளின் வரலாற்றிலேயே, பணமோ, ஆள்பலமோ இல்லாமல் ஜனநாயக ரீதியாக நடந்து வந்த தேர்தல்,ஜே.என்.யூ. மாணவர் பேரவை தேர்தல் மட்டுமே. அதற்கும் வேட்டு வைத்து விட்டது புதிய குழுவின் பரிந்துரை.இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புரட்சிகரமான மார்க்சிய லெனினிய கட்சியின் வழிகாட்டலில் செயல்பட்டு வரும் அய்சா என்ற மாணவர் அமைப்பு, ஜே.என்.யூ. மாணவர் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது. 1990ம் ஆண்டில் ஆகஸ்ட் 9ம் நாள் அலகாபாத்தில் தோன்றிய இந்த மாணவர் அமைப்பு, ஜே.என்.யூ. என்ற முன்னேறிய அறிவாளித் தளத்தில் தொடர்ந்து மாணவர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது. 1994 மற்றும் 1995 ஆண்டுகளில் இந்த அய்சாவின் பிரபல முன்னோடியான சந்திரசேகர், ஜே.என்.யூ. மாணவர் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை பண்ணை ஆதிக்கவாதிகள் உதவியுடன் லாலு கட்சி எம்.பி. 1997ம் ஆண்டு பீகாரில் சிவான் பகுதியில் சுட்டுக் கொன்றார். அது டெல்லியிலுள்ள ஜே.என்.யூ.வில் எதிரொலித்தது. 16 மாநிலங்களில் வேலை செய்தாலும் அய்சா அமைப்பு, ஜே.என்.யூ. வில் தான் பிரபலமாக இருக்கிறது. 2006ம் ஆண்டு அய்சாவைச் சேர்ந்த, ஒரு அமெரிக்க குடிமகனான டெய்லர் வாக்கர் வில்லியம்ஸ், ஜே.என்.யூ. மாணவர் பேரவையில் துணைத் தலைவராக வெற்றி பெற்றார். 2007ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் நந்திகிராம் வன்முறையின் எதிரொலியாக, சி.பி.எம்மின் மாணவர மைப்பான எஸ்.எஃப்.ஐ. தோற்கடிக்கப் பட்டு, ஜே.என்.யூ. மாணவர் பேரவையில் 4 முக்கிய இடங்களையும் அய்சா கைப்பற்றி யது. இத்தகைய தொடர் வெற்றிகளை புரட்சிகரமானவர்கள் சங்கம் எப்படி பெறலாம் என்ற ஆதங்கத்தில்தான், அரசாங்கத்தின் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தடைகள் இரண்டு ஆண்டுகளாக, ஜே.என்.யூ.வின் மாணவர் பேரவையை செயல்பட விடாமல் செய்துள்ளது. ஜனநாயக முறையில் நம்பிக்கை உள்ளவர்களாக அறிவித்துக் கொள்ளும் ஆளும் வர்க்க கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் இணைந்து, பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயக இயங்குதலுக்கு தடையாக இருப்பது எதனால்? சென்ற வாரம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் சுனில் மாண்டிவால் என்பவர், மாவோயிஸ்ட் தலைவர் கோபாத் காண்டியு டன் தொடர்பு கொண்டிருந்தார் என்று காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். இவர் மாவோயிஸ்ட் இலக்கியங்களை படித்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. ஜே.என்.யூ. ஆசிரியர் சமூகமும், 40 ஆண்டுகளாக நடந்து வந்த மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து கிறது. 1960ன் கடைசியில் உருவான நக்சல்பாரி விவசாய ஆயுதப் போராட்டம், இந்திய நாடெங்கும் இருக்கும் உயர்கல்விச் சாலைகளில், மாவோ சிந்தனையை நோக்கி பல மாணவர்களை அணி திரட்டியது. அடக்கு முறை எங்கெல்லாம் இருக்குமோ, அங்கெல் லாம் எதிர்ப்பு இருக்கும் என்ற மாசே துங்கின் மேற்கோள் இங்கே உண்மையாகிக் கொண்டிருக்கிறது. கல்வியறிவு கிடைக்கப் பெறாத, வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே வாடும் பழங்குடி மக்களை விரட்டுவதற்காக, அவர்கள் மீது அரசப் படைகளை ஒரு புறம் ஏவிக் கொண்டே, அதன் எதிரொலியாக ஜனநாயக குரல் எழுப்பும் மாணவ சமூகத்தை எதிர்ப்பதற்கும் இந்தியாவை ஆளும் கட்சிகள் தயாராகி வருவது ஆரோக்கியமாகத் தெரியவில்லை.