Wednesday, April 14, 2010
மாணவர்கள் மீதும் பச்சை வேட்டை
இந்திய தலைநகரில் உள்ள அந்த முன்னேறிய பல்கலைக்கழகத்தின் வளாகம் தொடர்ந்து கவனிக்கப்படுகிறது. கண்காணிக் கப்படுகிறது. தாக்கப் படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, மக்கள் மீதான போர் என்ற மன்றத்தை உருவாக்கி, நூற்றுக் கணக்கில் மாணவ, மாணவிகளை திரட்டிய ஜனநாயக மாணவர் சங்கம் அது பற்றிய நேரடி வர்ணனையைக் கொடுத்தார்கள். அதாவது அன்று அவர்கள் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா, லால்கர் பகுதிகளில் நடந்து வரும் அரசப்படைகளின் பச்சை வேட்டை யைக் கண்டித்து உரையாற்றிக் கொண்டிருந் தார்கள். அப்போது அந்த அரங்கத்திற்குள் நுழைந்த என்.எஸ்.யூ.ஐ.என்ற காங்கிரஸ் மாணவர் அமைப்பும், ஏ.பி.வி.பி. என்ற பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பும், சமத்துவத்திற்கான இளைஞர்கள் என்ற இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களும், கூட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை தாக்கினார் களாம். அதில் ஒரு மாணவியை தள்ளி விட்ட அந்த குண்டாயிசம் செய்த மாணவர்கள் எல்லோராலும் எதிர்க்கப்பட்டார்கள். காங்கிரஸ் மாணவர்கள் நழுவி விட, ஏ.பி.வி.பி. மாணவர்கள் 15 பேர் அரங்க மேடை வரை ஏறி, அடித்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்காக கூடியிருந்த மாணவர்கள் அதை எதிர்த்து முழக்கமிட்டிருக்கிறார்கள். மாவோயிசம் வெல்லட்டும் என்பதும் கூட முழக்கமாக வெடித்திருக்கிறது. உள்ளே நுழைந்த வன்முறை யாளர்கள் நன்றாக புடைக்கப் பட்டிருக்கிறார்கள். அது பற்றி டி.எஸ்.யூ. கூறும்போது, ஜே.என்.யூ.விலும், வெளியிலேயும் பச்சை வேட்டையை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். இரண்டு நாட்கள் பல்கலை வளாகத்தில் வலதுசாரி அரசியலின் பாசிச பண்பை நேரில் காணமுடிந்தது. ஏற்கனவே கடந்த காலங்களிலும் அந்த வன்முறையாளர்கள் இது போன்றே நடந்திருக்கிறார்கள். அன்று ஏப்ரல் 9ம் நாளும் கோதாவரி தாபா என்ற அரங்கில் நடந்து கொண்டிருந்த கலை நிகழ்ச்சிக்கு நடுவில்தான் இத்தனை கலாட்டாவும் நடந்திருக்கிறது.ஜே.என்.யூ.வில் பிரபலமான அதிக செல்வாக்குள்ள மாணவரமைப்பான அய்சா, இப்போது மெல்ல டி.எஸ்.யூ.வுடன் செல்லாமல் நழுவத் தொடங்கியுள்ளது. தங்களையும் பச்சை வேட்டைக்காரர்கள், மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தி விடுவார்களோ என்ற அச்சத்திலும், அதனால் தங்களது பிரபல மாணவர் தளத்தை இழந்து விடுவோமோ என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். அதே போல சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ.யின் எஸ்.எஃப்.ஐ. மற்றும் ஏ.ஐ.எஸ்.எஃப். அமைப்புகளும் ஒதுங்கிக் கொண்டன. இப்போது வலதுசாரி சிந்தனையாளர்கள் ஒருபுறமும், டி.எஸ்.யூ.புரட்சிகர சிந்தனையுடன் மறுபுறமும் என விவாதம் மாறிவிட்டது. இந்தியாவின் பெரிய ஜனநாயகத்தில் மாட்டிக் கொண்டுள்ள ஏழ்மையில் ஏழ்மையான மக்கள் மீது, இந்திய அரசே பச்சை வேட்டை என்ற நரபலி வேட்டையை தனது துணை ராணுவப் படையின் மூலம் செய்து வருவதை அம்பலப்படுத்தியதுதான் அன்றைய கலை நிகழ்ச்சி. இன அழிப்பு என்ற அளவுக்கு வறுமையால் ஏற்கனவே அழிந்து கொண்டிருக்கும், இந்த நாட்டின் இதயப்பகுதியில் வாழும் ஆதிவாசி மக்கள், அந்நிய மற்றும் இந்திய பெரு வணிகக்குழுமங்களால் எதிர்கொள்ளும் அழிப்பு நடவடிக்கையைப் பற்றி, பல்கலை வளாகத்திற்குள் பேசக்கூடாது என்பது வலதுசாரி மாணவர் அமைப்புகளின் கூக்குரல். முதலில் ஏ.பி.வி.பி.க்காரர்கள் சி.ஆர்.பி.எஃப். பலியானதை கொண்டாடுகிறார்கள் என்று பொய்யைப் பரப்பினார்கள். பிறகு உள்ளே நுழைந்து தாக்கத் தொடங்கினார்கள். அதையொட்டி அருகே உள்ள வசந்த் கஞ்ச் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்கள். தங்களது வன்முறை மூலம் நிகழும் கலைநிகழ்ச்சியை தடுக்கப் போவதாக கூறினார்கள். முழக்கமிட்டே தடுத்து விடலாம் என முயன்றார்கள். மாணவர்கள் மனித சங்கிலியாக நின்று கொண்டதால், விரக்தியடைந்தார்கள். பெண் மாணவிகள் மீது குறிப்பாக தாக்குதலை நடத்தினார்கள். அதில் சிலர் காயம்பட்டார்கள். மருத்துவமனைக்கும் எடுத்துச் செல்லப்பட்டார்கள். தாக்க வந்த மாணவக் குண்டர்களை, சிதம்பரம் மன்மோகன் குழுவினுடைய பச்சை வேட்டை மாணவர்கள் என்பதாக டி.எஸ்.யூ. இப்போது அழைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து காவல்நிலையத்தில் டி.எஸ்.யூ.வினரும் புகார் கொடுத்தார்கள். மறுநாளே பொதுவான மாணவர்கள் பலரும் சேர்ந்து வளாகத்திற்குள்ளேயே, பாசிஸ்ட்களுக்கு எதிராக பேரணி வந்தார்கள். அப்போதும் கூட மஹிமந்தவி விடுதி முன்னால் ஏ.பி.வி.பி. மற்றும் என்.எஸ்.யூ.ஐ. மாணவர்கள் கூச்சல் போட்டார்கள். அவர்களுடன் வந்திருந்த வெளியாட்கள் சுவரொட்டிகளை கிழித்தார்கள். இதுதான் 2006ம் ஆண்டின் குஜராத் இனஅழிப்பு, 1984ன் டெல்லி இன அழிப்பு, மகாரஷ்டிரா மாநிலத்தின் கேர்லாஞ்சியில் தலித் மீதான படுகொலைகள் போன்றவற்றை, இந்திய ஜனநாயகம் கொண்டாடிய முறை என்பதாக டி.எஸ்.யூ. மாணவர்கள் வர்ணிக்கிறார்கள். இதில் நிர்வாகத்தின் ஆதரவும் வன்முறையாளர்களுக்கு இருக்கிறது என்பது புரட்சிகர மாணவர்களின் கருத்து. சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசாங்கம் சல்வாஜீடும் என்ற கூலிப்படையை பயன்படுத்தியும் பச்சை வேட்டைக்கு முன்பே, ஆதிவாசி மக்களை நிர்ப்பந்தமாக இடம் பெயரச் செய்கிறது. அதே போல பல்கலைக்கழக நிர்வாகிகளும், கலைநிகழ்ச்சிக்கு அனுமதி பெறவில்லை என்று சம்பவதினத்தின் இரவிலேயே நேரில் வந்து அறிவித்தார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் எந்தக் குடிமகனும், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ, ஊர்வலம் செல்லவோ சுதந்திரம் உண்டு என்று எழுதியுள்ளார்கள். ஆனால் உள்ளூர் காவல்துறை அனுமதி பெறாமல், மேற்கண்ட அடையாள எதிர்ப்புகளைக் கூடத் தடுத்துவிடுவார்கள். இதற்காக 15 நாட்களுக்கு ஒரு முறை, தடையை அறிவித்து அதையே 30 ஆண்டுகளாக இடைவெளியின்றி தொடர்வார்கள். இது சென்னை மாநகர காவல்துறையின் அத்துமீறல். தலைநகர் டெல்லியில் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருக்காதா என்ன? ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும் போது, அவரை எதிர்த்து தெரு நாடகம் நடத்தியதற்காக, சப்தர்ஹஷ்மி காங்கிரஸ் குண்டர்களால் அடித்தே கொல்லப்பட்டார். அப்படிப்பட்ட நகரமல்லவா அது? கலை நிகழ்ச்சிகளை பிற்போக்காளர்கள் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. 1999ம் ஆண்டு மாஞ்சோலை தொழிலாளர் பேரணி மீது, தாமிரபரணி நதிக்கரையில் நடந்த படுகொலைகளை ஆவணப்படமாக்கியதைக் கூட, அவர்கள் தாங்கிக் கொள்ளவில்லையே? கோவையில் 17 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஆவணப்படமாக்கி, வெளியிடும் போது, அவர்கள் தடுக்காமல் இல்லையே? எல்லா இடத்திலும் அவர்கள் ஒரே மாதிரிதான் நடப்பார்கள் போலிருக்கிறது? இந்தியாவின் இதயப் பகுதியிலுள்ள கனிம வளங்களை, மிட்டால், வேதாந்தா, டாடா, எஸ்ஸார், ஜிண்டால், போஸ்கோ போன்ற வணிக குழுமங்களுக்காக தாரை வார்க்க, சி.ஆர்.பி.எஃப். மற்றும் மாநில காவல்துறையை காடுகளுக்குள் இந்திய அரசு அனுப்புவது ஏன்? இந்தக் கேள்வியை இப்போது மாணவர் சமுதாயம் கேட்கிறது. சல்வாஜூடும் மற்றும் அரசப்படைகளால் 4 மாத பச்சை வேட்டையில் 70 ஆதிவாசி பெண்களை வன்புணர்ச்சி செய்தது ஏன்? இந்தக் கேள்வியை இப்போது மாணவிகள் கேட்கிறார்கள். வன்னிப்போரில் தமிழினத்தை அழிக்காதே என முழக்கமிட்டதற்காக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தையே, ரத்தக்காடாக ஆக்கவில்லையா? சத்தீஸ்கர் ஆதிவாசிகளை கொல்லாதே என்று முழக்கமிட்ட, ஜே.என்.யூ. மாணவர்களை புகுந்து அடிப்பதும் பச்சை வேட்டையின் தொடர்ச்சி தானே? இந்த நாட்டில் மட்டும் வளர்ச்சி என்ற பெயரில் உடைமைகள் பறிப்பும், அழிப்பு வேலையும் நடக்கிறது என்ற மாணவர் கூற்றை எப்படி மறுப்பது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment