இப்போது இந்திய அரசு கிளப்பியிருக்கும் புதிய பூதம் இதுதான். இது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நமக்கெல்லாம் தெரிந்த, பிரபாகரன் தலைமையிலான, "தமிழீழ விடுதலை புலிகள்" அமைப்பு இப்படி ஒரு முழக்கத்தையோ, கொள்கையையோ, இலட்சியத்தையோ, அதற்க்கான வரை படத்தையோ, வைத்ததாக நமக்கு இதுவரை தெரியவில்லை என்பதால், இது ஒரு பெரும் அதிர்ச்சிக்கு உரிய செய்தி என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். இந்த செய்தியை மத்திய அரசின் உள்துறை நியமித்துள்ள, " சட்டவிரோத கூட்ட தடுப்பு சட்டத்தின்" கீழ் நடத்தப்படும் விடுதலை புலிகள் மீதான தடை பற்றிய தீர்ப்பாய விசாரணையில், அரசு தரப்பு முன்வைத்த " ஆதாரங்கள்" என்ற ஆவணத்தால் விவாதமாக கிளப்பப்பட்டுள்ளது. அதுதான் விடுதலை புலிகள் அமைப்பு, " அகண்ட தமிழகம்" என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டிருந்தது என்றும், அதில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு வரும் என்றும், அதற்க்கான அவர்களது வரைபடம் இதுதான் என்றும் ஒரு வரைபடத்தை, அரசு தரப்பு முன்வைத்ததை ஒட்டியே, இந்த விவாதம் அதிக முக்கியத்துவம் பெற்று விட்டது.
இந்த வாதத்தை மத்திய அரசு, டில்லியில் நடந்த தீர்ப்பாயத்தின் விசாரணையில் வைத்தது என்றால், அதுவே சென்னையில் நடந்த விசாரணையிலும் நடந்தது. வேடிக்கை என்னவென்றால், மத்திய அரசின் இந்த முன்முயற்சி, தமிழ்நாட்டில் உள்ள அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி, அவர்களையும் ஈடுபடுத்தி, அவர்கள் மூலமாகவும் இத்தகைய ஆவணத்தை முன்வைக்க சொல்லிவிட்டார்கள் என்பதுதான் விஷயத்தை மேலும் சிக்கலாக்கி விட்டது. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்டறிந்து வைத்தார்களா என்ற கேள்வி அப்படியே நிற்கிறது. இதுதான் அரசு இயந்திரத்திற்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திற்கும் உள்ள பிரச்சனை.
மத்திய அரசு. பல்வேறு அமைச்சரவைகளை கொண்டுள்ளது. அவற்றில் வெளிவிவகார துறை இருக்கிறது. அதேபோல உள்துறை இருக்கிறது. இவை இரண்டுமே சம்பந்தப்பட்ட பிரச்சனையாக, புலிகளின் தடை என்ற பிரச்சனை வருகிறது. ஏன் என்றால் விடுதலை புலிகள் அமைப்பு என்பது, யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அந்நிய நாட்டை சேர்ந்த அமைப்பு. அது அருகாமை நாடான இலங்கையாக இருக்கலாம். அந்த நாட்டிற்கு இந்திய அரசு ஒரு கச்சதீவை கொடுத்திருக்கலாம். அந்த நாட்டுடன் ராஜீவ் காலத்திலேயே ஒப்பந்தம் ஒன்றை டில்லி போட்டிருக்கலாம். இப்போதும் அந்த நாட்டில் உள்ள தமிழர்களின் போரை ஒடுக்க இந்திய அரசு உதவி செய்திருக்கலாம். இப்போதும் அந்த நாட்டுடன் அரசுமட்டத்தில் நல்லுறவை டில்லி பேணிக்கொண்டு இருக்கலாம். அதற்காக அந்த நாட்டு விவகாரம் வேறு, இந்திய நாட்டு விவகாரம் வேறுதான்.
ஆகவேஅந்த நாட்டிலுள்ள ஒரு அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பு இந்திய நாட்டிற்கு வெளியே உள்ள அமைப்புதான். அதனால் அந்த அமைப்பு பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு வெளிவிவகார துறை என்பது முக்கிய பொறுப்பு ஆகும். அதாவது அந்த விசயத்தில், வெளிவிவகார துறையின் உளவு பிரிவான" ரா" அமைப்பு தனது முழுமையான பங்களிப்பை செலுத்தித்தான் அது பற்றிய முடிவு எடுக்கப்படும். அதேபோல ஒரு அமைப்பிற்கு இந்திய அரசு தடை விதிக்கிறது என்றால், அது இந்திய நாட்டிற்குள் உள்ள சட்ட-ஒழுங்கு பிரச்சனை என்று அர்த்தம். அதை தீர்மானிப்பது உள்துறை அமைச்சகமாக இருக்கும். அகவே உள்துறையின் பங்களிப்பு இன்றி புலிகள் மீதான தடையை தீர்மானிக்க முடியாது. அகவே இந்த புலிகளின் மீதான தடை என்ற விசயத்தில் மட்டும், சிமி போல இல்லாமல், உல்பா போல இல்லாமல், இரண்டு அமைச்சகங்களும் சேர்ந்துதான் முடி செய்திருக்க முடியும்.
அதாவது அந்த அமைச்சகங்களில் உள்ள அமைச்சர்கள் ஒப்புதல் கொடுத்திருக்கலாம். ஆனால் தீர்மானகரமான பாத்திரத்தை அந்த அமைச்சகங்களில் உள்ள ஐ.எப்.எஸ். என்று சொல்லக்கூடிய அதிகாரிகள் எடுப்பார்கள். அதாவது இந்திய வெளிவிவகார சேவை என்ற படிப்பை படித்து தேர்ந்த மூத்த அதிகாரிகள், எடுத்திருப்பார்கள். அதாவது மத்திய அரசில் இவ்வாறு அரசு இயந்திர்த்தை இயக்கும் அதிகாரிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மாநில அரசாங்கத்திற்கு அந்த பங்கு இருக்கிறதா?
புலிகள் விசயத்தில் தடையை தீர்மானிக்கும் மத்திய அரசு மாநில அரசிடம், அது மத்தியில் கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் கூட, கலந்து முடிவு செய்தலையோ, ஒப்புதல் பெறுவதையோ செய்வார்களா? அப்படி செய்யும் பழக்கம் இந்தியாவில் இல்லை. ஏன் என்றால் இங்கே இருக்கும் அரசு இயந்திரம் மாநில சுயாட்சிகளை வழங்கவில்லை. இங்கே இருக்கும் அரசு கட்டமைப்பு, கூட்டமைப்பு தன்மை கொண்டதாக இல்லை. இங்கே இருக்கும் அரசு கட்டமைப்பு ஒற்றையாட்சி தன்மை கொண்டதாகத்தான் இருக்கிறது. அதனால் அபப்டி ஒரு வாய்ப்பு இங்கே இல்லை.
அதனால்தான் வன்னி போர் நடக்கும் காலத்திலேயே புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் சுப.தமிழ்செல்வன் ராணுவ நடவடிக்கையால் கொல்லப்படுகிறார். உடனேயே தமிழக முதல்வர் அதற்கு அனுதாபம் தெரிவித்து ஒரு தமிழ் கவிதை எழுதுகிறார்.. இது தமிழர்களின் பாரம்பர்யத்தில் வருகின்ற அஞ்சலி செலுத்தும் முறை. ஆனால் அந்த கவிதையை கூட, இந்திய மத்திய அரசின் வெளிவிவகார துறையினர் அதன் உளவுத்துறையினர் ரசிக்கவில்லை என்று கேள்விப்படுகிறோம். அந்த அளவு தமிழர் பிரச்சனையில் வேறுபாடு என்பது தொடர்ந்து இருந்து வரும் ஒன்றுதான். ஆனால் இந்த விடுதலை புலிகள் மீதான தடை பற்றிய பிரச்சனையில் மட்டும் ஒற்றுமை இருந்ததா? அலல்து முறையாக தமிழ்நாடு அரசாங்கத்தை மத்திய ஆள்வோர் கலந்து கொண்டார்களா?
இங்கே புலிகள் அமைப்பின் மீது புதிய ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை வைக்கப்படாத ஒரு குற்றச்சாட்டு இது. புலிகள் அமைப்பு இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டை சேர்த்து தங்களது வரை படத்தில் போட்டு அதன்மூலம், அகண்ட தமிழகம் படைக்க ஏற்பாடு செய்தார்கள் என்பதே அந்த குற்றச்சாட்டு. இது அப்பாண்டம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்திய மத்திய அரசுக்கு இந்த நேரத்தில், இதை விட வேறு வழி தெரிய வில்லை. அதாவது புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு விட்டது என்று இந்திய அரசும் ,இலங்கை அரசும் ஒன்று சேர்ந்து கூவும் நேரத்தில் எதை சொல்லி அந்த அமைப்பை தடை செய்வார்கள்? அதற்காக அவர்கள் உருவாக்கிய ஒரு முயற்ச்சிதான் இது. மே மாதம் புலிகள் அமைப்பின் மீது தடையை நீட்டிக்க எண்ணிதானே மத்திய அரசின் உளவுத்துறைகள் துணையோடு, இங்கே ரயில்வே தண்டவாளங்கள் உடைக்கப்பட்டன என்ற் செய்திகள் அப்போதே வரவில்லையா? அப்போதிலிருந்து இந்த முயற்ச்சிகள் தொடங்கி விட்டன என்று தெரிய வருகிறது. இப்போது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு நாம் விடை காண வேண்டும்.
" புலிகளின் தாகம், தமிழீழ தாயகம்" என்பதுதான் அன்றும், இன்றும் புலிகளின் முழக்கம் என்பது யாவரும் அறிந்த ஒன்று.அப்படி இருக்கையில் எப்படி இபப்டி ஒரு கதையை இவர்கள் கட்டவிழ்த்து விட முடிகிறது? அதுவும் சம்பந்தப்பட்டதீர்ப்பாணையில் தமிழக அரசின் " கியூ" பிரிவின் தலைமை அதிகாயையே வைத்து அப்படி ஒரு ரகசிய ஆவணம் புலிகள் கையில் உள்ளதாக இவர்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அந்த முடிவுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டு அமைச்சரவையின் ஒப்புதலுடனா? இல்லாமலா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியானால் எப்படி தமிழ்நாட்டு உளவுத்துறையின் அதிகாரிகள் இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை புலிகள் அமைப்பு மீது வைக்கலாம்? அப்படியானால் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் மறைவுக்கு இங்கிருந்து தெரிவிக்கப்பட்ட அஞ்சலி கவிதையை எப்படி பார்கிறார்கள்? இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டிய இடத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் குழாம் இருப்பதால்தான் அவர்கள் தீர்ப்பாயத்தில் குறுக்கு கேள்வி கேட்க அனுமதிக்கவில்லை போலும்.
1978 ஆம் ஆண்டு பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் ஒரே அமைப்பில் இருக்கும் போது அன்றைய நக்சல்பாரி தலைமறைவு அமைப்பான வினோத் மிஸ்ரா தலைமையிலான ரகசிய அமைப்புடன் தொடர்பு கிடைத்துள்ளது என்று உமா, பிரபாகரனிடம் கூறினார். அதன்மூலம் பதினாலு மாநிலங்களில் உள்ள ஆயுதம் தாங்கிய படை அமைப்பு தங்களுக்கு உதவும் என்றார். ஆனால் பிரபாகரன் அதை அப்போதே நிராகரித்தார். இந்திய அரசுக்கு எதிரான எந்த அமைப்புடனும் தாங்கள் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று பிரபாகரன் மறுத்து விட்டார். இதுதான் வரலாறு. இப்போது தெரிகிறதா இந்திய அரசின் புதிய விளையாட்டு?
புலிகள் என்றுமே இந்திய அரசை தங்களது நட்பு அரசாக பார்த்து வந்தார்கள் என்ற உண்மையையும், என்றுமே இந்தியாவிற்குள் ஒரு பிளவை ஊக்குவிக்க பிரபாகரன் தயாராய் இருந்தது இல்லை என்பதையும் நாம் உரக்க சொன்னாலும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவரும் சொல்ல வேண்டிய கட்டம் வந்துள்ளது.
Wednesday, October 6, 2010
Subscribe to:
Posts (Atom)