Thursday, March 12, 2020

சிபிஎம் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?

சிபிஎம் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?

சிபிஎம் கட்சியில் ஓரங்கட்டப்படுகிறாரா சீதாராம் யெச்சூரி?

-டி.எஸ்.எஸ்.மணி

இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக தோழர் சீதாராம் யெச்சூரி இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும், அகில இந்தியப் பேராயத்தில் (காங்கிரஸ்) அகில இந்திய அளவில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் மத்தியிலிருந்து ஓர் அகில இந்திய உயர்குழுவான மத்தியக் கமிட்டியைத் தேர்வு செய்வார்கள். அந்த மத்தியக் கமிட்டி, ஓர் அகில இந்தியப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும். அவ்வாறு சென்ற காங்கிரஸில் தேர்வு செய்யப்பட்டவர்தான் தோழர் சீதாராம் யெச்சூரி.
அதற்குமுன், அகில இந்தியப் பொதுச் செயலாளராக தோழர் பிரகாஷ் கரந்த் இருந்தார். அந்தக் காங்கிரஸில் கட்சி எதிர்காலத்தில் செல்ல வேண்டிய வழி பற்றிய விவாதம் நடத்தி முடிவு எடுக்க இரண்டு வகையான செயல் தந்திர அறிக்கைகள் வைக்கப்பட்டன. ஒன்று, தோழர் பிரகாஷ் கரந்த் வைத்தது. இன்னொன்று, தோழர் சீதாராம் யெச்சூரி வைத்தது. பிரகாஷ் கரந்த்தால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில், ‘2014 முதல் நடக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசை மதவாத ஆட்சி’ என்று விமர்சித்து இருந்தது. தோழர் சீதாராம் யெச்சூரி முன்வைத்த அறிக்கையில், ‘மோடி அரசைப் பாசிச ஆட்சி’ என்று வகைப்படுத்தி இருந்தது. அதேபோல, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாமா, கூடாதா என்ற செயல் தந்திரத்திலும், வேறுபாடு காணப்பட்டது.
ஒவ்வொரு மத்தியக் குழுக் கூட்டத்திலும், அரசியல் தலைமைக் குழு (பொலிட் பீரோ} கூட்டத்திலும், காங்கிரஸ் உடன் கூட்டா, இல்லையா என்ற விவாதம் வந்தபடியே இருக்கும். அப்போதெல்லாம், மேற்கு வங்க மாநிலத்தின் சிபிஎம் கிளை, காங்கிரஸுடன் கூட்டு என்ற கருத்தை முன்வைப்பார்கள். ஆனால், மத்தியக் குழுக் கூட்டத்தில் அது மறுக்கப்படும்.
மூன்று நாட்களுக்கு முன்பு சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூடியது. அதில், வருகிற மாநிலங்களவைக்கான தேர்தலில், கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரியை, மாநிலங்களவை உறுப்பினராக ஆக்குவது சம்பந்தமான விவாதம் வந்தது. ஏற்கெனவே, சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்த மத்தியக் குழுக் கூட்டத்தில், மேற்கு வங்க தோழர்கள், தங்கள் மாநிலத்திலிருந்து தோழர் சீதாராம் யெச்சூரியை, மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும் என்று கூறியிருந்தார்கள்.
அதனாலேயே நடந்து முடிந்த அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தில், அது விவாதத்துக்கு வந்தது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய, 46 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மேற்கு வங்க சட்டப் பேரவையில் தேவை. ஆனால், இடதுசாரி கட்சிகளுக்கு மொத்தமாக இருப்பதோ, 28 எம்.எல்.ஏ.க்கள்தான். ஆகவே, காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுத்தான், சிபிஎம் உறுப்பினரை எம்.பி ஆக்க முடியும். ஏற்கெனவே, 2005 முதல் 2017 வரை சீதாராம் யெச்சூரி, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மீண்டும் 2017இல் அவரை எம்.பி ஆக்குவதற்கு, மேற்கு வங்க சட்டப் பேரவையில், காங்கிரஸ் கட்சி ஆதரவு தருகிறேன் என்று கூறியிருந்தது. ஆனாலும் அப்போது, சிபிஎம், காங்கிரஸ் ஆதரவைப் பெற மறுத்து விட்டது. ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று சீதாராம் யெச்சூரியை எம்.பி ஆக்கி விடலாம் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்று நாம் தோழரை எம்.பி ஆக்க வேண்டாம் என்று பெரும்பான்மை பொலிட் பீரோ உறுப்பினர்கள் முடிவு செய்து விட்டனர். அந்த அரசியல் தலைமைக் குழுவான, பொலிட் பீரோ கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டிய 17 பேரில், 9 பேர்தான் கலந்து கொண்டதாக மார்ச் மாதம் 9ஆம் நாள் அன்று ஆங்கில ஏடு ஒன்று, ‘சிபிஎம் யெச்சூரியை ராஜ்ய சபா அனுப்புவதற்கு எதிராக முடிவெடுத்தது’ என்று தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. எப்படி கட்சியின் உயர்குழுவில் கலந்துகொண்டவர்கள் கணக்கு அந்த ஆங்கில ஏட்டுக்குச் சென்றது என்பது ஒரு விவாதமாகியுள்ளது.
அடுத்த நாள், மார்ச் 10ஆம் நாள் இன்னொரு ஆங்கில ஏடு, ‘யெச்சூரியை ராஜ்ய சபாவுக்கு அனுப்புவதில், சிபிஎம் கட்சியில் இருவித அபிப்பிராயம்’ என்று தலைப்பிட்டு, அரசியல் தலைமைக் குழுவான பொலிட் பீரோ கூட்டத்தில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களின் ஆதரவைப் பெற யெச்சூரி முயற்சி என்று எழுதியிருந்தது. மறுநாளான, மார்ச் 11ஆம் நாள், முதலில் இரண்டு நாட்கள் முன்பு இந்தச் செய்தியை வெளியிட்ட அதே ஆங்கில ஏடு, ‘பிகாஷ் இடது - காங்கிரஸ் வேட்பாளர்’ என்று தலைப்பிட்டு, பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா என்ற சிபிஎம் கட்சியின் கொல்கத்தா முக்கிய வழக்கறிஞரும், முன்னாள் கொல்கத்தா மேயருமான தோழர் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டு வேட்பாளராக ராஜ்ய சபாவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தான் மார்ச் 12ஆம் நாள் வேட்பு மனு செய்வதாக அவரே கூறியதாகவும் வெளியிட்டுள்ளது. அதேபோல் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா 12ஆம் தேதி வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார்.
மேற்கண்ட செய்தி மீண்டும், இடது சாரி அணிகளுக்கு இடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சீதாராம் யெச்சூரி ராஜ்ய சபா சென்றால், சிபிஎம் கட்சியின் கொள்கைகளைப் பேசவும், பாஜக அரசின் மோடி + அமித் ஷா பாசிச தன்மையைத் தோலுரித்துக்காட்ட ராஜ்ய சபாவில் முழங்கவும், அதுவே, ஊடகங்களின் மூலம் பிரபலமாகி வெளிப்படவும் செய்யுமே?
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தோழர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினராக ஆவதற்கு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறலாம் என்றால், அதையே ஏன் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரிக்கு மறுக்க வேண்டும் என்பதே அந்த விவாதத்தின் சாரம்.