இன்று நாடெங்கிலும் நடந்து வருகின்ற விவாதம், கனிம வளங்கள் உள்பட இயற்கை மூலாதாரங்களை பாதுகாக்க வேண்டுமா அல்லது பயன்படுத்த வேண்டுமா அல்லது கொள்ளைபோக அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வி தான். அதுதான் இன்றைக்கு இந்தியாவின் இதயப்பகுதியாக இருக்கின்ற மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை மூலாதாரங்கள் கொட்டிக் கிடக்கும் இடங்கள் எல்லாமே, காடுகளாகவும், மலைகளாகவும், மலைசார்ந்த பகுதிகளாகவும் இருக்கின்றன. அதனால் அந்தப் பகுதிகளில் பெரும்பாலும் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாமே, எளிமையாக எட்டக்கூடிய சமவெளிப்பகுதிகளில் பங்குப் போடப்படுகின்றன. அதிலும் கூட ஏழை, எளிய, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு போய்ச் சேர வேண்டிய சலுகைகளும், நல்வாழ்வுத் திட்டங்களும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் சென்றடைந்து விடுகிறது. அதனால் மலைகள் மற்றும் மலை வாழ் மக்கள் கவனிக்கப்படுவதேயில்லை. இந்திய நாடு சுதந்திரமடைந்து 62 ஆண்டுகள் கடந்து விட்டன என்று கூறுகிறார்கள். ஆனாலும் கூட நமது நாட்டின் மலைவாழ் மக்கள், எந்தவொரு புதிய வளர்ச்சிகளையும், நல்வாழ்வுத் திட்டங்களையும் சந்திக்காமலேயே இருக்கிறார்கள். இதைத் தான் உள்கட்டுமான வசதிகள் அந்தப் பகுதிகளில் இல்லாமலேயே இருக்கின்றன என்ற செய்தியை இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சந்தன் யாதவ் கூறியிருந்தார். அந்த இளைஞர் தலைவர் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் படித்தவர். அதனால் தான் அவருக்கு அத்தகைய விவரம் எட்டியதா என்பது நமக்கு தெரியவில்லை.
அதே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் படித்து வருகின்ற இளம் மாணவர்களும், மாணவிகளும் பல்வேறு கேள்விகளை இந்திய சமுதாயம் பற்றி கேட்கத் தொடங்கியுள்ளார்கள். அப்படி கேள்வி கேட்பவர்கள், மக்களுக்கெதிரான போர் என்ற பெயரில் ஒரு கருத்தரங்கு நடத்தினார்கள். அதையும் கூட, காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினர் விட்டு வைக்கவில்லை. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினர், அதேப் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். இன்று இந்தியாவில் பழங்குடி மக்களுக்கெதிராக பச்சை வேட்டை என்ற பெயரில், ராணுவத்தை ஏவிவிட்டு வேட்டையாடக் கூடிய போரை நடத்தும் கதாநாயகனாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காட்சி ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார். அதே சிதம்பரம் மேலே குறிப்பிட்ட பல்கலைக்கழகத்திற்கு, உரையாற்றச் சென்ற போது இளம் மாணவியால் கேள்வி கேட்கப்படுகிறார். இத்தகைய நிகழ்ச்சிகளை மையமாக நடத்தி வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்களுக்கு, வழிகாட்டல் கொடுத்து வரும் சீரிய சிந்தனையாளர்களான பேராசிரியர்கள் மத்தியிலிருந்து, முக்கியமான மூத்த பேராசிரியர் அமித் பாதுரி சென்னை வந்திருந்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்று தெரிகிறது.
இந்திய இதயப்பகுதியில் நடந்து வருகின்ற மாவோயிஸ்ட்களின் ஆயுதப்போராட்டம் என்பது, அதற்கு அடிப்படையான உண்மையான காரணங்களை மறைத்து மேலே எழுந்து வந்துள்ளது என்று அந்த பேராசிரியர் கூறுகிறார். அதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவியான அன்னை சோனியா காந்தியை துணைக்கு அழைத்து பேசினார். ஏனென்றால் விவாதிக்கப்படும் மாவோயிஸ்ட் பிரச்சனை பற்றி கருத்துக் கூறும் போது, சோனியாக காந்தி அந்த பிரச்சனையின் வேர்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதாக கூறியிருந்தார். அத்தகைய மேற்கோளை கையிலெடுத்துக் கொண்ட பேராசிரியர் அமித் பாதுரி, அடிப்படை உண்மையான நிலம், தண்ணீர், காடுகள், கனிமவளங்கள் ஆகியவை யாருடைய நலனுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அவையெல்லாமே இந்திய அரசால், பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கும், பெருவணிகக் குழுமங்களுக்கும் இலவசமாக தாரை வார்க்கப்படுகின்றன என்ற செய்தியை பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறு கொடுக்கப்படுவதனால் தான் அம்பானிகளும், மற்ற பெருவணிகக் குழுமங்களும் இன்று உலகமட்டத்தில் தங்களுக்குள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் இதயப்பகுதியில் அல்லது போர் நடக்கும் பகுதியில் இல்லாத தான், தென்திசையிலுள்ள சென்னையை நோக்கி வந்திருக்கும் காரணமே, இத்தகைய உண்மைகளுக்கு அகில இந்திய அளவில் ஒருமைப்பாட்டையும், தோழமையையும் காட்டத்தான் என்று நமக்கு விளக்குகிறார்.
டாடா குழுமத்திற்கு இலவசமான நிலம், தண்ணீர், உள்கட்டுமான வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படுகின்றன என்றார் அவர்.
மாவோயிஸ்ட்கள் இந்த பிரச்சனையை பார்க்கின்ற கண்ணோட்டத்தில் இல்லாமல் நாம் வித்தியாசமான எதார்த்த சூழ்நிலைகளை காணவேண்டாமா என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார். இந்த விவாதம் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை பற்றியதோ, அல்லது ஆயுதப் போராட்டத்தை பற்றியதோ அல்ல என்று அவர் தெளிவாக வரையறுக்கிறார். 3 வித்தியாசமான மட்டங்களில், அந்த வட்டாரத்தில் சண்டை நடக்கிறது என்று விவரிக்கிறார். நிலத்திற்கான சண்டை, நீருக்கான சண்டை, கனிமவளங்களை காப்பாற்றுவதற்கான சண்டை என்று அதை வருணிக்கிறார்.
மேற்கண்ட சண்டைகள் மாவோயிஸ்ட் இருப்பதாக கூறப்படும் பகுதிகளில் மாத்திரம் நடக்கவில்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராமிலும், ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்தை எதிர்த்தும், ரைகரிலும் நடக்கின்றன என்றும் கூறினார். ஒவ்வொரு இடத்திலும் தனிப்பட்ட உழவர்களோ அல்லது விவசாய கூட்டமோ, தங்களது நலனுக்காக பெருவணிக குழுமங்களின் பறித்தெடுத்தலை எதிர்த்து போராடுகிறார்கள். நிலமற்ற விவசாயிகளும், சிறு நிலவுடைமையாளர்களும் அத்தகைய தற்காப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். நிலங்கள் மீதும், காடுகள் மீதும் தங்களது சமூக கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் போராடுகிறார்கள். அந்த மக்களின் சமூக உரிமைகளை அரசு உடைக்க விரும்புகிறது. உடைத்து அவற்றை சில தனியார் பெருவணிக குழுமங்களுக்கு தாரைவார்க்க அரசு முயற்சிக்கிறது. அத்தகைய முயற்சியில் இத்தனை ஆண்டுகளாக தங்களது சமூகத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த பாரம்பரிய நிலங்களையும், காடுகளையும் எடுத்துக்கொடுப்பதற்கு, மேற்படி சமூகங்களின் ஒப்புதலை பெறுவதற்கான எந்த முயற்சியையும் அரசு செய்யவில்லை.
இயற்கை மூலாதாரங்களை கையாளும் போது, அவற்றை இன்று வரை பாதுகாத்து வரும் சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல், பறித்து எடுத்தல் சாத்தியமானதா? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, இயற்கையுடன் இணைந்து வாழ்பவர்கள் பழங்குடி மக்கள். அவர்கள் நிலத்துடனும், நீருடனும், வனங்களுடனும், மீன்களுடனும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை பச்சை வேட்டை என்ற பெயரில், அந்த இயற்கை மூலாதாரங்களை விடுத்து பிரிக்க முடியுமா?
நியாங்கிரியில் இருக்கும் ஆதிவாசிகள் இயக்கமும், காந்திய வழியில் அணைகட்டுவதை எதிர்த்துப் போராடும் நர்மதா பச்சாவோ அண்டலன் அமைப்பும், போஸ்கோ எதிர்ப்பு மக்கள் போராட்டமும், வன்முறையற்ற வழிகளில் தானே ஆண்டுபலவாக நடந்து வருகின்றன என்ற கேள்வியை பாதுரி முன்வைக்கிறார். அப்படிப்பட்ட போராட்டங்களை அரசு ஆதரித்ததா என்று கேட்கிறார். அந்தப் பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் செயல்படவில்லையே என்றும் கேள்வி எழுப்புகிறார். கலிங்கா நகரில் இன்று அமைதி வழி மக்கள் போராட்டங்களை அரசு ஒடுக்குவது ஏன் என்ற கேள்வியை கூடுதாலாகக் கேட்கிறார். மாவோயிஸ்ட்களும், வன்முறைப்போராட்டமும், இல்லாத பகுதிகளிலும் அரசு, இயற்கை மூலாதாரங்களை பறித்தெடுக்க மக்கள் போராட்டங்கள் மீது தாக்குதல்களை தொடுக்கிறது. இது மக்கள் மீதான போர். மேற்கண்ட பேராசிரியரின் வாதங்களுக்கு எந்தவொரு அரசுத்தரப்பும் பதில் கொடுக்க முடியாது என்பது மட்டும் புரிகிறது.
Sunday, June 6, 2010
Subscribe to:
Posts (Atom)