இந்திய அரசின் துணை ராணுவமான மத்திய சிறப்பு காவல்படை வீரர்கள் 75 பேருக்கு மேல், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் மரணமடைந்தார்கள் என்ற செய்தி, இந்திய துணைக் கண்டத்தையே நிலை குலைய வைத்தது. உடனடியாக கருத்து சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்று முதலில் கூறினார். பிறகு மாவோயிஸ்ட்கள் பற்றி நாம் இதுவரை அலட்சியமாக இருந்தது தவறு என்று கூறியிருக்கிறார். மத்திய அரசு அலட்சியமாகயிருந்திருக்கிறது என்பது அமைச்சரின் வாக்குமூலம். ஆனால் எந்த விஷயத்தில், யாரைப் பற்றி அரசு அலட்சியமாக இருந்தது என்பது ஆராயப்பட வேண்டிய கேள்வி. மாவோயிஸ்ட்கள் பற்றி அலட்சியமாக இருந்து விட்டோம் என்பது உள்துறை அமைச்சரின் கூற்று. ஆனால் கடந்த ஓராண்டாக, புதிய மத்திய அரசாங்கத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைத்த பிறகு, புதிதாக உள்துறை அமைச்சகப் பொறுப்பை ஏற்ற நாளிலிருந்து, மாவோயிஸ்ட்கள் பற்றி கண்டித்தும், எச்சரித்தும், இறங்கிப் பேசியும், பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், வன்முறையைக் கைவிடச்சொல்லியும், ப.சிதம்பரம் அறிக்கைகள் கொடுத்து வருகிறார். இவ்வாறு தனது அமைச்சகப் பணிகளில் முக்கிய பகுதியை, ஓராண்டு முழுக்க நக்சலைட்டுகளைப் பற்றிய செய்திகளை சேகரிப்பதும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விவாதங்களை செய்து வந்ததும், அதையொட்டி அறிக்கைகளை வெளியிட்டதும் அலட்சியப்படுத்திய முறைகள் என்பது நமக்கு இப்போது தான் புரிகிறது. அதேசமயம் பலவீனமான திட்டமிடுதலை, அரசுதரப்பு வைத்திருந்ததினால் தான், மாவோயிஸ்ட்களின் இத்தனை பெரிய தாக்குதல் நடத்தப்பட முடிந்தது என்று சில ஊடகங்கள் விளக்கமளித்துள்ளன.
மேற்கண்ட தாக்குதல் நடத்தப்பட்ட இடம் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள, தண்டேவாடா என்ற பகுதி. இந்த பகுதி காடுகளையும், மலைகளையும் கொண்ட பகுதி. மத்திய சிறப்பு காவல்படையினர் தங்களது புதிய தலைமையாக வந்திறங்கிய டி.ஐ.ஜி.யின் கட்டளைக்கு பணிந்து, வட்டாரத்திலிருக்கும் காவல்துறைக்கே அறிவிக்காமல் அங்கே இறங்கி முகாமிட்டு, தேடுதல் பணியை தொடங்கியிருக்கிறார்கள் என்பதாக செய்திகள் வருகின்றன. அதேசமயம் துணை ராணுவப் படையினரின் ஒவ்வொரு நடவடிக்கையும், மாவோயிஸ்ட்கள் முகர்ந்து வந்திருக்கிறார்கள் என்றும் இப்போது கூறுகிறார்கள். ஒரு மலைமுகட்டில் இருந்து தங்களுடைய தாக்குதலை மாவோயிஸ்ட்கள் தொடுத்தார்கள் என்பதாகவும் விளக்குகிறார்கள். அந்த மலைப்பகுதிக்குள் மாட்டிக் கொண்ட சி.ஆர்.பி.எப்., தானியங்கி துப்பாக்கிகள் மூலம் தொடர்ந்து சுட்டுக்கொண்டிருந்த மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு முன்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை என்பது விளங்குகிறது. தப்பிச் செல்வதற்கான பகுதிகளைக் கூட கண்ணிவெடிகள் மூலமாக, புரட்சியாளர்கள் தகர்த்து விட்டார்கள் என்பதாக கூறுகிறார்கள். இது உளவுத்துறையின் தோல்வியா? பயிற்சி முறையின் தோல்வியா? தயாரிப்புத் திட்டத்தின் தோல்வியா? இதுபோன்ற கேள்விகளை ஆட்சியாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். பதட்டத்தின் காரணமாக, நிலைகுலைந்த நிலையில், விமானப்படை மூலம் மாவோயிஸ்ட்கள் மீது தாக்குதல் நடத்துவது பற்றி மீண்டும் பரிசீலிக்கப் போகிறோம் என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் மீது ஒரு போர் திணிக்கப்பட்டுள்ளது என்பதாகவும் விளக்குகிறார். ஜனநாயகத்தை பாதுகாக்க தற்போதைக்கு நமது நரம்புகளை கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாக இருக்க வேண்டும் என்பதாகவும் அவர் விளக்குகிறார்.
இப்படி முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகளை வெளியிடுவதற்கு உள்நாட்டுப் பாதுகாப்பை சிரமேற்றுள்ள ஒரு மத்திய அமைச்சரால் முடிகிறது. அதேசமயம் போலி மருந்துகளையும், காலாவதியான மருந்துகளையும் விநியோகம் செய்கின்ற நபர்கள் பயன்படுத்தும் நிறுவனங்களில், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாக வருகின்ற செய்திகளும், அவரை நிலைகுலையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர், தங்கள் மீது ஒரு போர் திணிக்கப்பட்டதாக உணர்ந்திருப்பது எதற்கான அடித்தளம் என்று தெரியவில்லை.
குறிப்பிட்ட சத்திஸ்கர் மாநிலம், இந்தியாவின் இதய பகுதியான மலைவாழ் மக்கள் அதாவது பழங்குடி மக்கள் வாழக் கூடிய, கனிம வளங்கள் நிறைந்த பகுதி என்பதும், அதனாலேயே அந்த பகுதியின் மீது போர் தொடுத்து, கனிம வளங்களை பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும் எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியது நினைவுக்கு வருகிறது.
சத்திஸ்கர் மாநிலத்தின் டி.ஜி.பி.யாக இருக்கும் விஷ்வ ரஞ்சன் என்ற அதிகாரியிடம் ஊடகவியலாளர்கள், பல சந்திப்புகளில் அனுபவம் பெற்றிருக்கிறார்கள். சாதாரணமான இந்திய குடிமக்கள் தவறாக வழிகாட்டப்படுகிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அந்த சாதாரண இந்திய குடிமக்களின் வரிப்பணத்தில் தான், இந்த டி.ஜி.பி.யின் தலைமையிலான காவலர்களும், இவர்களால் இயக்கப்படும் கூலிப்படையான சல்வா ஜுடும் என்ற கும்பலும், சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி வருத்தப்பட வேண்டியிருக்கிறது. சல்வா ஜுடும் என்ற கூலிப்படை அப்பாவி கிராமத்தவர்கள் மீது நடத்தி வரும் சூறையாடல், பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலைகள் ஆகியவற்றிற்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவழிக்க இந்த மேலதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. சல்வா ஜுடும் மட்டுமல்ல, உயர்காவல் அதிகாரியே கூட, மேற்கண்ட தண்டேவாடா மாவட்டத்தில் பாலியல் வன்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்கு உள்ளானார் என்ற செய்தியும், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் டி.ஜி.பி.யால் எடுக்கப்படவில்லை என்ற விவரமும் அதிர்ச்சியைத் தருகிறது. இப்படிப்பட்ட மேலதிகாரிகளின் கீழ் பணிபுரியும் காவலர்கள், எந்தவகை மனஉறுதியை பெற்றவர்களாக இருப்பார்கள் என்பது கேட்கப்பட வேண்டும். மக்கள் மீது அநீதிகள் நடத்தப்படும் போதெல்லாம், காவல்துறையின் அத்துமீறல்கள் அரங்கேறும் போதெல்லாம், மேலிருந்து உத்தரவு வந்தது என்று கூறத்தான் அந்த காவலர்களுக்குத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு காவல் உயர் அதிகாரியின் தலைமையில் தான் அங்கே சல்வா ஜுடும் என்ற கூலிப்படை அட்டூழியங்கள் அப்பாவி ஆதிவாசிகள் மீது நடத்தப்படுகிறது. அதை எதிர்த்து கேள்வி கேட்ட காந்தியவாதி ஹிமன்சு குமாரின் ஆசிரமம் உடைக்கப்பட்டது. அதை எதிர்த்த அவரது பாதயாத்திரை தடுக்கப்பட்டது. நியாயம் கேட்க வந்த மேதாபட்கர் தலைமையிலான பெண்கள் குழு மீது, அழுகிய முட்டைகள் வீசப்பட்டன. இவையெல்லாமே தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அப்பாவி ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வந்த ஜனநாயக சக்திகளுக்கு ஏற்பட்ட இடர்கள். இதுபற்றி ப.சிதம்பரத்திற்கு எதுவுமே தெரியவில்லையா? அங்கே சல்வா ஜுடும் நடத்திய வன்கொடுமைகள் பற்றி, நடத்தப்படயிருந்த பொதுவிசாரணையில், கலந்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்த ப.சிதம்பரம், கலந்து கொள்ளாமல் பின்வாங்கியது எதனால்?
சல்வா ஜுடும் என்ற கூலிப்படையுடன் மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இணைந்து செயல்படுவதை பி.யூ.சி.எல். அம்பலப்படுத்தி வருகிறதே? சத்திஸ்கர் மாநிலத்தை ஆளுகின்ற பா.ஜ.க. அரசு அத்தகைய வன்முறைக்கு காவடி தூக்கி வருகிறதே? இவையெல்லாம் அந்த அரசியல் அமைப்புகளை எதிர்த்து அரசியல் செய்வதாக கூறும் காங்கிரஸ் கட்சியின் உள்துறை அமைச்சருக்கு தெரியாதா? தெரியாவிட்டாலும், சத்திஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான காங்கிரஸ்காரர் அஜித் ஜோகி, சல்வா ஜுடும் பற்றி கடுமையாக கண்டித்து வருகிறாரே? அந்த கண்டிப்பு மத்திய காங்கிரஸ் தலைமையில் இருந்து எதிரொலிக்கவில்லையே? அதன் காரணம் என்ன?
பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு இந்திய கனிமவள செல்வத்தை கொள்ளையடிக்க, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசு, எப்படி தட்டிக்கேட்க முடியும்? மாவோயிஸ்ட்கள் பெயரைச் சொல்லி, கனிம வளங்களை பாரம்பரியமாக காத்து வருகின்ற அப்பாவி ஆதிவாசி மக்கள் மீது போர் தொடுப்பதைத் தவிர வேறெதை அவர்கள் செய்யப் போகிறார்கள்? அதனால் சிதம்பரமும், மத்திய அரசும் அலட்சியப்படுத்தியது மாவோயிஸ்ட்களை அல்ல. இந்திய மக்களைத் தான்.
Thursday, April 8, 2010
Subscribe to:
Posts (Atom)