10 லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற ஈழத்தின் வடக்கு மாகாண மாவட்டங்களில், 4 லட்சம் சிங்கள ராணுவக் குடும்பங்களின் சிங்களர்கள் குடியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் இலங்கைத் தீவில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்மந்தன், ம.வெ. சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மா.அ.சுமந்திரன் ஆகிய 5 பேரும், டெல்லி சென்று இந்திய அரசின் தலைவர்களை சந்தித்தனர். அதன் பிறகு தமிழக அரசின் முதல்வரையும் சந்தித்தனர். அப்போது அங்கே நிலவுகின்ற நிலைமைகள் பற்றி புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜியையும், வெளி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவையும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும், தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனையும் மேற்கண்ட இலங்கை நாடாளுமன்ற குழுவினர் சந்தித்து பேசியுள்ளனர். இந்திய தலைவர்களில் சிதம்பரம் தவிர அனைவருமே அக்கறையுடன் அவர்களது பேச்சை கேட்டுள்ளனர். உள்ளதில் குறைவான நேரத்தை பேசுவதற்காக கொடுத்தவர் ப. சிதம்பரம் மட்டுமே.
இலங்கையில் நடந்த நாலாவது வன்னிப் போரில், அதிகமான அளவு தமிழின அழிப்பு நடந்ததற்கு பொறுப்பு இந்திய அரசு தான் என்ற செய்தியும், இந்திய அரசியல் தலைவர்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் அப்படிப்பட்ட கருத்து இருப்பதும் டெல்லி தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு, இந்தியாவின் செல்வாக்கிற்கு சவால்விட்டு வருவதை இந்திய தலைவர்கள் உணர்ந்துள்ளார்கள். இப்போது சீனாவின் செல்வாக்கினால், ராஜபக்சே அரசு இந்திய அரசின் ஆலோசனைகளை கேட்பதில்லை என்ற புரிதலும் டெல்லிக்கு வந்துள்ளது. இந்தியாவிலிருந்து சிறப்பு தூதரை, இலங்கை அனுப்பி அங்கு நடைபெறும் தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வு ஏற்பாடுகளை பார்வையிட மத்திய, மாநில அரசுகள் திட்டமிடும் நேரத்தில், ராஜபக்சே அரசு அதை மறுத்துள்ளது. அதே சமயம் தமிழர் புனர்வாழ்வு பணிகளுக்காக ரூ. 500 கோடியை இந்திய அரசு ஏற்கனவே ராஜபக்சே அரசிடம் ஒப்படைத்துள்ளது. அப்படியிருந்தும் கூட தாங்கள் கொடுத்த நிதியின் செயல்பாட்டை தாங்களே பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்பது டெல்லிக்கு கொழும்பு கொடுத்திருக்கும் ஒரு சாட்டையடியாகத்தான் பார்க்க வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற யாழ்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்றைய நிலையில் 10 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கிளிநொச்சியில் சமீபத்தில் சிங்கள ராணுவ தளபதி ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறார். அதில் அந்த வட்டராத்தின் அரசாங்க தமிழ் அதிகாரிகள் பங்கு கொண்டுள்ளனர். அவர்களிடம் அந்த சிங்கள தளபதி பேசவில்லை. மாறாக கொக்கரித்திருக்கிறார். ரத்தம் சிந்தி சிங்களர்களாகிய நாங்கள், புலிகளிடமிருந்து இந்த நிலத்தை கைப்பற்றியிருக்கிறோம் என்று கொக்கரித்திருக்கிறார். அதனால் அந்த நிலம் சிங்களர்களுக்கு சொந்தமானது என்று அந்த ராணுவத் தளபதி கொக்கரித்துள்ளார். இது வெறும் கொக்கரிப்பாக மட்டும் நிற்கவில்லை. மாறாக செயல்பாட்டிற்கும் சென்றுள்ளது.
வவுனியாவிலிருக்கும் மாணிக் பண்ணை என்ற முள்வேலி முகாம்களிலிருந்து, வெளியே கொண்டுவரப்பட்டு மீள்குடியேற்றம் என்ற பெயரில் கிளிநொச்சியில் உள்ள இடைக்கால முகாம்களில் இருக்கும் மக்கள் தங்களது பழைய வீடுகளை பார்வையிட சென்றுள்ளனர். உடைந்து போன பழைய வீடுகளை பார்த்துவிட்டு தற்காலிக முகாம்களுக்கு திரும்பிய மக்கள், இந்திய அரசு கொடுத்த 4 தகரங்கள், மற்றும் சிமெண்ட் ஆகியவற்றுடன் மீண்டும் தங்களது இடிந்த வீடுகளுக்கு சென்றபோது, அவை ரா ணுவத்தினரால் சுத்தமாக புல்டௌசர் மூலம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டிருக்கிறார்கள். அந்த இடங்கள் ராணுவத்தரால் அபகரிக்கப்படுள்ளன என்பதை அறிந்திருக்கிறார்கள். இது போல முல்லைத் தீவு மாவட்டத்தில் இந்துபுரம், திருமுறிகண்டி, சாந்தப்புரம் ஆகிய இடங்களில் உள்ள 4,811 ஏக்கர் நிலங்களை ராணுவம் அபகரித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 2,500 ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது. வடக்கு மாகாணம் முழுமைக்கும் 10,000 ஏக்கர் நிலங்களை ராணுவம் அபகரித்துள்ளது.
இப்போது வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் சிங்கள ராணுவத்தினர் நிற்கிறார்கள். அவர்களது குடும்பத்தினரை கொண்டு வந்து நிரந்தரமாக குடியேற்ற, குடியிருப்புகளை சீன அரசின் உதவியுடன் செய்யத்தொடங்கியுள்ளனர். அதில் ராணுவத்தினரின் குடும்பத்தினர் உட்பட குறைந்தபட்சம் 4 லட்சம் சிங்களர்கள் நிரந்தரமாக வடக்கு மாகாணத்தில் குடியேறப் போகிறார்கள். 10 லட்சம் தமிழ் மக்கள் வாழும் தமிழ் நிலத்தில், குறைந்தபட்ச 4 லட்சம் சிங்களர்கள் ஆயுதபாணியான பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட இருப்பது தான், உடனடியாக இருக்கின்ற ஆபத்தான பிரச்சனை.
யாழ் நகரில் இருக்கின்ற முக்கிய இரண்டு விடுதிகளையும், ராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்குள் தென்னிலங்கையின் சிங்கள மக்கள் 30 லட்சம் பேர், சுற்றுலா பயணிகளாக வடக்கு மாகாணத்திற்கு வருகை புரிந்தததாக, இலங்கை அரசே தெரிவித்துள்ளது. அப்படி வருபவர்களுக்கு தங்குவதற்கு கூட, யாழ்பாணத்தில் விடுதிகள் இல்லாத சூழ்நிலையில் தமிழ் மக்கள் வீடுகளில் தங்கிச் செல்கிறார்கள். சிங்களர்களின் இந்த சங்கடங்களை போக்குவதற்காக, யாழ் நகரில் உள்ள சுபாஸ் விடுதியில் தங்கியுள்ள 51வது சிங்களப் படையணியின் தலைமையகம், கோப்பாயில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மாற்றப்படுகிறது என்பதாக செய்தி வந்துள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களை உடைத்தெரிவது என்பது ஒரு ஆதாரபூர்வமான போர்க் குற்றம். யாழ்பாணத்தில், கிளிநொச்சியில், முல்லைத்தீவில் மாவீரர் துயிலும் இல்லங்கள், ராணுவத்தால் உடைத்தெரியப்பட்டுள்ளன. இறந்த பிறகும் தமிழர்களை அமைதியாக உறங்க அனுமதிக்காத ஒரு இனவெறிபிடித்த சிங்கள ராணுவம் தமிழர் நிலத்தில் ஆட்டம்போட்டு வருகிறது. இத்தகைய நில அபகரிப்பும், தமிழர் நில அடையாள அழிப்பும் செய்து வரும் ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு, மூக்கணங்கயிறு இடுவதற்கு தமிழ் நாட்டு தமிழர்கள் தயாரா? தமிழக முதல்வர் முயல்வாரா? இத்தகைய கேள்விகள் தான் நமக்கு எழுகிறது.
Wednesday, July 21, 2010
Subscribe to:
Posts (Atom)