சென்ற வாரம் இந்தியாவின் தலைநகரில் மிக முக்கியமான பேச்சு வார்த்தையை, மத்திய அரசாங்கத்தின் தலைமை அதிகாரத்தில் உள்ளவர்கள் நடத்தினார்கள். அதுவே இந்தியாவிற்குள் இன்னொரு சுதந்திர நாட்டை அங்கீகரிக்கப் போகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியது. அந்தப் பேச்சு வார்த்தையில் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச் சர் ப.சிதம்பரமும் மத்திய அரசு சார்பாக பிரதிநிதிகளாக கலந்து கொண்டார்கள். எதிர்தரப்பில் நாகாலாந்து தேசிய சோச லிஸ்ட் கவுன்சில் தலைவர் ஐசக் சிசி ஸ்வு மற்றும் பொதுச் செயலாளர் துயிங்கலெங் முய்வா, அவர்களது அமைப்பின் நடத்தும் குழு அமைப்பாளர் வி.எஸ்.ஆடெம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதாவது இந்திய அரசாங்கம் தனது பிரதிநிதிகளுடன் மேசைக்கு ஒரு புறம் அமர்ந்திருக்க, மறுபுறம் நாகாலாந்து போராளிகள் அமைப்பின் தலைவர்கள் அமர்ந்து பேசினார்கள். அந்த பேச்சு வார்த்தையின் மூலமே, இந்திய அரசு நாகாலாந்து புரட்சியாளர்களை ஒரு தனித்த அடையாளமாக ஏற்றுக் கொண்டு பேசியது என்பது புலனாகும்.
1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அரசாங்கத்துடன், நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பு, ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இதுவரை இந்திய அரசுடன் இந்த நாகர் போராளிகள் 67 முறை பேச்சு வார்த்தை நடத்தி விட்டார்கள். முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் கே.பத்மநாபய்யா, இந்திய அரசுக்கும், நாகா போராளிகளுக்கும் இடையே தூதுவராக இருந்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்து வந்தார். அது ஒரு பத்தாண்டுகளுக்கு நீடித்தது. 1999ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த பத்ம நாபய்யா, நாகா பேச்சு வார்த்தைக்கான இடைத்தூதுவராக ஓராண்டுக்ககு நியமிக் கப்பட்டார். அதன் பிறகு நமது நாட்டின் விசாரணை ஆணையங்களை வழக்கமாக நமது அரசாங்கம் கால நீட்டிப்புக் கொடுத்து, இழுத்துக் கொண்டே
செல்வது போல, இந்தப் பேச்சுவார்த்தை யையும் இழுத்துக் கொண்டே செல் வதற்காக, கால நீட்டிப்பு கொடுத்து வந்தது. அதுவே பத்தாண்டுகளை கடத்த வைத்து விட்டது. கடந்த ஆண்டுதான் பத்மநாபய்யாவினுடைய பதவிக்கு ஒரு முடிவு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதையொட்டி போராளி களுடன் நேரடியான பேச்சு வார்த்தையை அரசே நடத்தலாம் என்றும், அதன் மூலம் இந்த முடியாத பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணலாம் என்றும் மத்திய அரசு கூறிக்கொண்டது. ஆனாலும் கூட, நின்று போன பேச்சு வார்த்தைக்கு ஒரு உந்துதல் கொடுப்பதற்காக, இந்த ஆண்டு பிப்.12ம் தேதி புதிய இடைத்தூதராக பாண்டேயை மத்திய அரசு நியமித்தது. இவர் மத்திய அரசின் முன்னாள் பெட் ரோலியம் துறையின் செயலாளராக பணி யாற்றியவர். இந்த பாண்டே நாகாலாந்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.சி.ஜமீருக்கு நெருக்கமானவர் என்பதால், முய்வாவிற்கு அவர் மீது அவநம்பிக்கை உண்டு.
1980ம் ஆண்டில், நாகா தேசிய கவுன்சில் இந்தியஅரசாங்கத்துடன் செய்து கொண்ட சீல்லாங் ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை ஒரு சரணடைவு நடவடிக்கை என்று முத்திரை குத்திவிட்டு, அதை விட்டு வெளியே வந்து ஜனவரி 31ம் நாள் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலை ஐசக்கும், முய்வாவும், எஸ்.எஸ்.கப்லாங்கும் உருவாக்கினார்கள். மீண்டும் இந்திய அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் வேறுபாடுகள் ஏற்பட்டதால், 1988ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் இரண்டாக உடைந்தது. ஒன்று ஐசக் மற்றும் முய்வா தலைமையிலும், மற்றொன்று எஸ்.எஸ்.கப்லாங் தலைமையிலும் பிரிந்து செயல்படத் தொடங்கின.
பொதுவாக நாகாலாந்து புரட்சிகர இயக்கங்கள் ஒரு விரிந்த நாகாலாந்தை உருவாக்குவது என்ற கருத்தில் உறுதியாக இருப்பவர்கள். நாகலிம் என்பதாக அவர்கள் அத்தகைய அர சாங்கத்தை அழைக்கிறார்கள். சீனத் தலைவர் மாசேதுங்கின் தத்துவ வழிகாட்டல் படி, நாகாலாந்து மக்கள் குடியரசு என்ற புரட்சிகர அரசாங்கத்தை நிறுவுவதுதான் அவர்களது அடிப்படைக் கொள்கை. அவர்களது அரசியல் அறிக்கை நாகாலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்பதாக எழுதப்பட்டுள்ளது. அவர்களுடைய ஆன்மீகப் பார்வை, நாகாலாந்து ஏசுபிரானுக்கு என்பதாக உள்ளது. ஐசக்முய்வா தலைமையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில், முக்கியமாக தங்குல் நாகர்கள் என்ற இனத்தைக் கொண்டதாக இருக்கிறது. அந்தப் பிரிவினர் நாகாலாந்தின் பெருவாரி யான பகுதிகளில் வாழ்கிறார்கள். அதையும் தாண்டி மணிப்பூர் மாநிலத் தின் மலைப்பகுதிகளில் அவர்கள் வாழ் கிறார்கள். அவர்கள் அனைவருமே பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சேனாபதி, உக்ரூல், சண்டெல், தாமெங்லாங் என்ற நான்கு மாவட்டங்களில் இந்தப் பிரிவினரது செல்வாக்கு இருக்கிறது. நாகாலாந்து மாவட்டத்தில் வோகா, பெக், சுனேபோடோ, கொஹிமா, ஆகிய பகுதிகளிலும், மோகாக்சங், துயன்சங் மாவட்டங்களிலும், ஐசக்முய்வாவின் அமைப்பு ஆழமான ஆதரவைப் பெற் றுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வடக்கு கச்சார் மலைப்பகுதியிலும், கரிபி ஆங்லாங் மாவட்டங்களிலும், நாகர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இந்த அமைப்பினர் செல்வாக்கோடு இருக்கிறார்கள். அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளிலும் இந்த நாகா புரட்சியாளர்கள் அதிகமான ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள்.
கடைசியாக இந்திய அரசாங்கத்திற்கும், இந்த நாகர் புரட்சிகர அமைப்பிற்கும், சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது ஒரு தீர்வு கிடைக்காமல் தேக்கத்தில் நின்று விட்டது. அதன்பிறகு இப்போதுதான் இந்த மாதத்தொடக்கத்தில் அடுத்த பேச்சு வார்த்தை நடத்தப் பட்டுள்ளது. நாகாலாந்து புரட்சியாளர்கள் அமைப்பின் தலைவர்களான ஐசக்கும், முய்வாவும் நெதர்லாந்து நாட்டில் தாங்களாகவே அறிவித்துக் கொண்ட, புரட்சிகர அர சாங்கத்தின் தலைவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இந்திய அரசு பேச்சு வார்த்தைக்காக டெல்லிக்கு அழைத்தது. அவர்கள் விரிந்த நாகாலாந்து என்ற ஒரு மலைகள் சார்ந்த நாகாலாந்தை சுதந்திரமான நாடாக அறிவிக்கக் கோரியும், அத்தகைய நாகா நாடு இந்திய அரசுடன் கூட்டமைப்பு உறவுகளை வைத்துக் கொண்டிருக்கும் என்றும் கூறிக்கொண்டே பேச்சு வார்த்தைக்கு வந்தார்கள். இறையாண்மை என்பது தங்களது உரிமை என்றும் அந்த உரிமை தங்களிடமிருந்து பிரிக்கப்பட முடியாது என்றும், நாகர்களின் வரலாறும், பூகோளமும், பண்பாடும் அதைத்தான் வலியுறுத்துகிறது என்றும் அவர்கள் கூறினார்கள். தங்களுடைய விடுதலைக்கான கோரிக்கையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர்கள் உறுதிபட அறிவிக்கிறார்கள். இதை டெல்லியில் படித்து வரும் நாகாலாந்து மாணவர்களை கூட்டி, அவர்களிடமே இந்த புரட்சிகர தலைவர்கள் அறிவித் தார்கள்.
இந்திய அரசாங்கம் சில மாற்று முன்வைப்புகள் வைத்திருக்கிறது என்று முதலில் தெரிந்தது. அவை எந்த அளவுக்கு தங்களுக்கு ஒத்துவரும் என்று தெரியாது என இந்தத் தலைவர்கள் கூறினார்கள். இந்திய அரசு தேக்கத்தை உடைத்து, சமாதான பேச்சுவார்த்தையை வெற்றி பெற வைக்க முயல்வதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தார்கள். நாகர்களுக்கு ஒரு பொருளாதார சுயாட் சியை அரசு அறிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் நாகர் புரட்சியாளர்களோ எந்த ஒரு பொருளாதார சுயாட்சிக்கும் தாங்கள் போராடவில்லை என்றும், தங்களது நிலைப்பாடு உலகம் தெரிந்த ஒன்றுதான் என்றும் கூறியிருக்கிறார்கள். பேச்சு வார்த்தைகள் முறிந்தால் அதற்குக் காரணம் இந்திய அரசுதான் என்பது அவர்களது வாதம். ஐசக்முய்வாவின் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை நிதி நிலையைக் கையாள்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து போராளி அமைப்புகளுக்கும் ஆயுதப் பயிற்சி கொடுக்கிறது. உலகம் முழுவதும், ஊடகங்களுடனும், தங்களது நாகாலாந்து மக்கள் குடியரசு என்ற புரட்சிகர அர சாங்கத்தின் மூலம் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்திய அரசு முன்வைக்கும் அதிகபட்ச சுயாட்சி என்பதும், நாகர் புரட்சியாளர்கள் முன்வைக்கும் இறை யாண்மை கொண்ட விரிந்த நாகலின் என்பதும் இங்கே கருத்து மோதல்களாக வெடித்துள்ளன. ஒற்றை யாட்சித் தன்மையைக் கொண்ட இந்திய அரசு, நாகாலாந்தின் சுதந்திரத்தை எந்த விதத்தில் அங்கீகரிக்கப் போகிறது என்ற கேள்வி, காஷ்மீருக்கும், மத்திய இந்தியாவின் ஆதிவாசிகளுக்கும் தொடருமா என்ற கேள்வியும் இதையொட்டி எழுகிறது.
Sunday, March 7, 2010
Subscribe to:
Posts (Atom)