சென்ற மாத இறுதியில், புது டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பலகலைக்கழகத்தில் நடந்த ஜனநாயக மாணவர் சங்கத்தின், ‘மக்கள் மீது நடத்தப்படும் போர்’ என்ற கருத்தரங்கு ஒன்றில், காங்கிரசு கட்சியின் மாணவர் சங்கத்தினர் உள்ளே நுழைந்து கலாட்டா செய்தனர். அதன்விளைவாக புரட்சிகர சிந்தனை உள்ள மாணவர்களிடம் நன்றாக உதை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டனர். அடுத்த நாளே காங்கிரசு மாணவர்கள் தங்கள் சார்பாக ஒரு எதிர்ப்பு மன்றத்தை உருவாக்கிகொண்டனர்.இந்தியாவின் அரசியல் தலைமையில், அதாவது ஆட்சி அதிகாரத்தில் அமெரிக்கச் செல்வாக்கு கூடி வரும் இன்றைய நாட்களில் அறிவுஜீவிகளின் பங்கு என்பதும், அறிவுஜீவிகளின் கருத்து என்பதும் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய போக்கை ஆள்வோரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். பொதுவாக ஆட்சியாளர்கள் அறிவிக்கும் சலுகைகளும், திட்டங்களும் அறிவுஜீவிகள் கொடுக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகின்றன. அதை அப்படியே உலக வங்கிக்கும், அனைத்து நாட்டு நிதியத்துக்கும், ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் அனுப்பி மத்திய அரசு அதிகமான அளவில் நிதிகளைப்பெற்று வருகிறது. அதற்கு அடிப்படையாக இருப்பது அறிவுஜீவிகளின் புள்ளிவிவர ஆராய்ச்சிதான். அத்தகைய ஆராய்ச்சிகளை அதிகம் செய்து வருவது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்தான். அதுமட்டுமின்றி இந்த குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள ஐ.நா. அதிகாரிகள் மத்தியிலும், அந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் மத்தியிலும், உலக வங்கி போன்ற கடன் கொடுக்கும் உலக மார்வாடிகள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் செய்த ஆராய்சிகளின் அடிப்படையில் தான் பல முடிவுகளும் ஆள்வோரால் எடுக்கப்படுகின்றன. இது போன்ற அறிவுஜீவிகளின் கோரிக்கையில்தான் இந்தியாவில் தகவல் பெறும் உரிமைசட்டமே இயற்றப்பட்டது. இதுபோன்ற அறிவுஜீவிகளின் தொடர்ந்த பரப்புரையில்தான் பா.ஜ.க விற்கு எதிரான மதச்சார்பற்ற இந்தியாவிற்கான பரப்புரை நாடு முழுவதும் நடத்தப்பட்டு காங்கிரசுக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அதில் நேரடியாக இதுபோன்ற அறிவுஜீவிகளிடம் தொடர்பு வைத்திருந்தவர் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி. அதில் சப்னம் ஹஸ்மி போன்றோர் அடக்கம். ஆகவே இத்தகைய அறிவுஜீவிகளின் பங்கை முழுமையாக மறுக்க முடியாத இக்கட்டில் காங்கிரஸ் தலைமை இருக்கிறது.
அதனால்தான் மாவோயிஸ்டுகளின் பிரச்சனையை தொடங்கிய காலத்திலிருந்து உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவுஜீவிகள் எப்படி மாவோயிஸ்டுகளை நியாயப்படுத்தலாம் என அலறுகிறார். அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகளும் சிதம்பரத்தால் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து அறிவுஜீவிகளை உருவாக்கித் தரும் பட்டறையாக பயன்படுத்தப்படும் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இவர்களது கண்களை உறுத்துகிறது. மாவோயிஸ்ட்கள் பிரச்சனையில், மத்திய துணை ராணுவப்படை கடுமையான இழப்புக்களை பெற்று திணறிக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்குள்ளேயே சிதம்பரத்திற்கு எதிராக பல சிந்தனைகள் கிளம்பியுள்ளன. இதனால் சிதம்பரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சோசலிச கொள்கைகளை கொண்டிருப்பது போலவும், அவர்களது கொள்கைகளின் அமுலாக்கத்திற்கு ப.சிதம்பரம் நடத்தும் பச்சைவேட்டை என்ற மாவோயிஸ்ட்கள் ஒழிப்பு என்ற பெயரில், ஆதிவாசிகளுக்கெதிராக நடத்தப்படும் நரவேட்டை, தடையாக உள்ளதாக கட்சித்தலைமையில் கேள்விக்குறியாகியுள்ளது.
அதுபற்றி சமீபத்தில் சென்னை வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா கூறும்போது, அது காங்கிரசின் திட்டமிட்ட தந்திரம் என்று காங்கிரஸ் கட்சியைச் சாடினார். இத்தகைய சூழ்நிலையில் தான் இப்போது சிதம்பரத்தின் தேனீர் கோப்பை விருந்து வெளியே வந்துள்ளது.
காங்கிரசுக் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள தைரியமாக நமது உள்த்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகத்திற்குள் நேற்று சென்றிருக்கிறார். அப்போது பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆராய்ச்சிப் படிப்புப் படிக்கும் ஒரு மாணவி பல்வேறு கேள்விகளால் சிதம்பரத்தை துளைத்திருக்கிறார். விபா என்ற அந்த மாணவி அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகள் மீது கேள்விகளை தொடுத்திருக்கிறார். அவருக்கு அருகேயிருந்த இன்னொரு மாணவியும், முதல் மாணவியை ஆதரித்து குரலெழுப்பியிருக்கிறார். இது அமைச்சர் சிதம்பரத்திற்கு சிக்கலை உருவாக்கியிருக்கிறது. முழக்கங்கள் இட்ட மாணவிகளை, காங்கிரஸ் மாணவர்கள் அடக்க முயன்றுள்ளனர். ஆனாலும் அவர்கள் அடங்கவில்லை. அப்போது அமைச்சர் அதை கவனித்துவிட்டு, யார் அந்த பெண்மணி என்பதாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கமாக வெள்ளை உடையில் வந்து திருவாளர் பரிசுத்தமாக காட்சி தரும் சிதம்பரம், நேற்று நீலவண்ணச் சட்டையும், காக்கி கால்சட்டையும் அணிந்து வந்திருக்கிறார். குரலெழுப்பிய மாணவிகளை விரட்டத் தொடங்கிய பெண் காவலர்களை சிதம்பரம் அடக்கியிருக்கிறார். காக்கி கால்சட்டை அணிந்து வந்த சிதம்பரம், காக்கி வேட்டையை அடையாளம் காட்டுவதாக மாணவர்கள் மத்தியில் நையாண்டி செய்திருக்கின்றனர். ஆர்வமாக கேட்ட அமைச்சரிடம், விபா என்ற மாணவி கேள்விகளை கேட்கத் தொடங்கியிருக்கிறார்.
முதல் கேள்வியே மணிப்பூரைப் பற்றியது. மணிப்பூரில் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டம் ஏன் அமுல்படுத்தப்படுகிறது என்று ஒரு மனிதஉரிமை கேள்வியை அமைச்சர் மீது தூக்கியெறிந்திருக்கிறார். அதை எதிர்த்து காந்திய வழியில், 7 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் சர்மிளா என்ற பெண்மணியின் போராட்டத்தை ஏன் அடக்குகிறீர்கள் என்று அடுத்த கேள்வியை அமைச்சர் மீது தொடுத்திருக்கிறார். வழக்கம்போல் சிதம்பரம் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வதற்கே பிறந்த ஒரு மாமனிதர் போல், பதில் கூறியிருக்கிறார்.
உங்களுக்குக் கிடைத்த செய்திகள் அனைத்தும் தவறு என்றும், அவை நாளேடுகளிலிருந்தும், இதழ்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை என்றும், அதற்காக உங்களை குறைசொல்லப்போவதில்லை என்றும், உங்கள் வயதில் நானும் அப்படித்தான் எடுத்துக்கொண்டிருப்பேன் என்றும் ஒரு நிதானவாதிப் போல பதில் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு உண்மையான பதிலையும் அவரே கூறியிருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு முன்பிருந்த பல அரசுகளும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தி வந்தன என்றும், அப்போது எல்லோரும் அமைதி காத்தார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தகைய சிறப்புச் சட்டத்தை நீக்கவேண்டும் அல்லது திருத்தவேண்டும் என்றும் கூறிய முதல் அமைச்சர் தான் தான் என்று மார்தட்டியிருக்கிறார். அதற்கான அனைத்துக் கட்சி ஒப்புதல் வேண்டும் என்றும், அதன் மீது தான் செயல்பட்டு வருவதாகவும் கூறி சமாளித்திருக்கிறார். இதற்கு திருப்தியடையாத அந்த மாணவி, அடுத்த கேள்வி கேட்க முனைந்திருக்கிறார். உடனடியாக சிதம்பரம், எனது கடமை பதில் சொல்லுவது மட்டும்தான் என்றும், நீங்கள் கேட்க விரும்பும் பதிலை சொல்வது அல்ல என்றும் கூறி தனது இறுமாப்பை காட்டியிருக்கிறார்.
அந்த மாணவியை சுட்டிக்காட்டி வேண்டுமானால் உங்களைப் போன்றவர்கள் ஜனநாயக வழியில் அதிகாரத்திற்கு வந்து, அதன் மூலம் கொள்கைகளை மாற்றுங்கள் என்றும், அதற்காக ஆயுதம் தூக்காதீர்கள் என்றும் கூறியிருக்கிறார். அதாவது கேள்வி கேட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவியை, ஆயுதப்போராட்ட ஆதரவாளர் என்பது போல உள்துறை அமைச்சர் முத்திரை குத்துகிறார். அத்தோடு நிறுத்தாமல் மத்திய அரசு நியமித்த அர்ஜுன்சென் குப்தா குழு, 77% இந்தியர்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கு குறைவாக கூலி வாங்குவதாக கூறியிருப்பது உண்மையானால், 60 கோடி கைப்பேசிகள் இந்தியாவில் எப்படியிருக்கும் என்று நக்கல் அடித்திருக்கிறார். தன்னால் ஒரு சிறந்த பொருளாதாரவாதியை காட்ட முடியும் என்றும் உறுமியிருக்கிறார். வேதாந்தா என்ற கனிமவள கொள்ளை அடிக்கும் பன்னாட்டு மூலதன நிறுவனம் பற்றி, தனது அலுவலகம் வந்து தேநீர் குடித்து விவாதிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
சிதம்பரத்தின் தேநீர் கோப்பையில் இருக்கும் நச்சு தான், மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையின் தாய் அமைப்பான கனிமவளக் கொள்ளையன் வேதாந்தா நிறுவனம் என்பது இதன்மூலம் நமக்குத் தெளிவாகிறது.
Saturday, May 8, 2010
Subscribe to:
Posts (Atom)