Thursday, April 22, 2010
மோடிக்குப் பின்னால் இன்னொரு மோடியா?
கிரிக்கெட் என்று அழைக்கப்படும் மட்டைப்பந்து ஆட்டத்தில், பல்வேறு வகையான போட்டிகள் நடந்து வருவது வரலாறு. மேட்டுக்குடி பண்பாட்டு அடையாளமாக பார்க்கப்படும் இந்த ஆட்டம், பல பத்தாண்டுகளாக இந்தியாவில் பிரபலமான ஒரு விளையாட்டாக இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களால் கொண்டு வந்து இறக்கப்பட்ட இந்த விளையாட்டு, இந்தியாவில் மண்ணின் புகழை உயர்த்திப் பிடிக்கும் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து ஆட்டங்களை விட அதிக செல்வாக்குப் பெற்றது. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான கபடி ஆட்டம், அநேகமாக ஓரங்கட்டப்பட்டு விட்டது. நகர்ப்புறங்களையும், மேட்டுக்குடிகளையும் மையமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப் பட்ட இந்த மட்டைப் பந்து ஆட்டம், ஊடகங்களின் உதவியால் நாடெங்கும் கிராம, நகர வேறுபாடில்லாமல், ஏழை, பணக்கார வித்தியாசமில்லாமல் பரவி விட்டது. மட்டைப்பந்து ஆட்டத்தில் போட்டிகளை வர்ணனை செய்பவர்கள் கூட, பிரபலமாகத் தொடங்கினார்கள். இந்திய மட்டைப்பந்து ஆட்ட குழுவில், ஒவ்வொரு போட்டிக்கும் யார், யாரை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற செய்தி கல்லூரித் தேர்வு முடிவு போல, தீவிரமாக எதிர்பார்க்கப்படுகிறது. அதை யொட்டி தீவிர சர்ச்சைகளும் எழுகின்றன. பி.சி.சி.ஐ. என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆட்டக்காரர்களை தேர்வு செய்யும் போது, அரசியல் விளையாடியது என்பதாக உள்ள குற்றச்சாட்டு அந்தக் காலத்திலேயே எழுந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த குறிப்பாக சென்னையைச் சேர்ந்த ஆட்டக்காரர்களை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இணைந்தே வந்து கொண்டிருக்கும். மும்பையைச் சேர்ந்த சிலர் எப்போதுமே, இந்திய கிரிக்கெட் ஆட்ட குழாமில் இடம்பெற்றே தீருவார்கள் என்பதாகவும் அந்த வழக்கம் இருந்து வருகிறது.ஆங்கிலத்தில் மட்டும் நடந்து கொண்டி ருந்த ஆட்ட வர்ணனை, ஒரு மேட்டுக்குடி சிந்தனை வார ஏட்டின் மூலம் தமிழிலும் கொண்டு வரப்பட்டது. பிறகு வானொலி களிலும், காட்சி ஊடகங்களிலும் அதுவே பழக்கமானது. பெருமைக்காக ஆங்கில வர்ணனைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழர்கள், இப்போது தமிழில் கேட்கத் தொடங்கி அதில் மூழ்கவும் ஆரம்பித்து விட்டனர். 11 முட்டாள்கள் களத்தில் நிற்க, ஒரு முட்டாள் பந்து வீச, இன்னொரு முட்டாள் மட்டை அடிக்க என்ற பெர்னாட்ஷாவின் கேலிப் பேச்சு, இப்போது காணாமலே போய் விட்டது. தெருவில் போகும் வழிப்போக்கர் உட்பட, ஸ்கோர் எவ்வளவு என்று கேட்கும் நிலைக்கு, இந்த போதை சென்று விட்டது. டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் கிரிக்கெட் என்ற பெயர்களில் ஆட்டங்கள் நடக்கும் போதே, அரசியல்வாதிகள் தொடங்கி அடிமட்ட மக்கள் வரை அது ஆட்டிப் படைத்தது. இப்போது உலகம் முழுவதிலும் வணிகமயமாகும் காலம். அதில் இந்தியாவில் இருக்கும் நடுத்தர வர்க்கம், முதன்மைப் பாத்திரத்தை வகிக்க துடிக்கிறது. அத்தகைய துடிப்பை காசாக்குபவர்கள்தான், வணிகத் தொழிலில் முன்னேற முடியும். அப்படிப் பட்ட ஒரு சூழல் இப்போது ஐ.பி.எல். மூலம் உருவாகியுள்ளது. இதற்கு முந்தியக் கட்டம், மேட்ச் பிக்சிங் என்று அழைக்கப்பட்ட ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித் துக் கொள்வதும், அதையொட்டி பந்தயம் கட்டுதலை உற்சாகப்படுத்துவதும், பந்தயப் பணத்தில் கிடைக்கும் பங்கு பணமே, பல நூறு கோடியாக இருப்பதும், அதையே ஆட்டக்காரர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதும் என்ற ஒரு கட்டம் அம்பலத்திற்கு வந்தது. இப்போது ஐ.பி.எல். என்ற இந்தியன் பிரீமியர் லீக் என்ற வணிகத்தனமான செயல்பாடு அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. அதில் ஒரு நாள் ஆட்டம் தான் நடக்கும். பல வெளி ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு ஊரின் பெயரிலும் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற முடியும். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒரு பிரபல நபர், கவர்னராக நியமிக்கப்படுவார். பெருநகர்களில் நடத்தப்படும் இத்தகைய ஆட்டங்கள் ஒப்பந்தம் பெயரில், வணிக குழுமங்களுக்கு விற்கப்படும். சென்னையில் நடந்த ஆட்டத்தை இந்தியா சிமெண்ட்ஸ் வாங்கிய தென்றால், கொச்சியில் நடப்பதாக இருந்த ஆட்டத்தை இன்னொரு கம்பெனி விலைக்கு வாங்கும். அதில் தான் வில்லங்கம் கிளம்பியது. திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகாரத்துறை இணை அமைச்சருமான சசிதரூர், தனது பெண் தோழிக்கு பெரும்பான்மையான பங்கை கொடுத்து, அதன் மூலம் உருவான வணிகக் குழுமத்திற்கு கொச்சி ஆட்டத்தை வாங்கி விட்டார் என்பதே குற்றச்சாட்டு. இதில் இன்றைய ஐ.பி.எல். தலைவரான லலித்மோடி முக்கிய பங்கு வகித்தார். அவர் அம்பலப்படுத்தியதனால் அந்த பிரச்சினை நாடெங்கும் வெடித்து, நாடாளுமன்றத்தில் எதிரொலித்து சசிதரூர் ராஜினாமா வரை இட்டுச் சென்றுள்ளது. இப்போது லலித் மோடி பற்றியும் குற்றச்சாட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன. வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களது சோதனையின் மூலம் சிலவற்றை அம்பலப்படுத்தினர். லலித் மோடி தலைமையிலான ஐ.பி.எல்., மத்திய அமைச்சர் சரத்பவாரின் ஆசிர்வாதத்தில் தான் தொடங்கினார் எனப் பேசப்பட்டது. பவாரும் லலித் மோடியின் ராஜினாமாவை வேண்டத் தொடங்கினார். லாலு, பால்தாக்கரே போன்றோரும் கூட ஐ.பி.எல். லை கலைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இப்போது லலித் மோடி ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதும், பி.சி.சி.ஐ. உடனடியாக ஐ.பி.எல். நிர்வாகக் குழுவை கூட்டச் சொல்வதும், மே 1ம் நாளுக்கு முன்பு கூட்டமாட்டேன் என லலித் மோடி அடம்பிடிப்பதும், பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. ஒரு முழுமையான சூதாட்டம் என்று இப்போது ஐ.பி.எல். வர்ணிக்கப்படுகிறது. இத்தகைய திறமைசாலி லலித் மோடியின் பின்னணியைப் பார்த்தால், இன்னமும் கூட வேடிக்கையான செய்திகள் உள்ளன. ரூ.4,000 கோடி மூலதனத்தில் ஒரு பெரிய வணிகப் பேரரசின் வாரிசுதான் இந்த லலித் மோடி. அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். 2009 2010 நிதியாண்டில் இந்தியாவில் அதிகமாக வரி கட்டியவர் இந்த மோடி. சமீபத்திய நிதியாண்டின் முதல் கட்டத்தில் கூட, அவர் ரூ.8 கோடி வரி கட்டி னார். அவரது குற்றயியல் பின்னணி இன்னமும் வேடிக்கையானது. 1985ம் ஆண்டு மார்ச் 1ம் நாள், டியூக் பல்கலைக்கழகத்தில் கொக்கைன் என்ற போதைப்பொருளை கடத்துவதற்கு சதி செய்ததாகவும், கொலை செய்யும் எண்ணத்தோடு பயங்கர ஆயுதத் தால் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர். 1985ம் ஆண்டு ஏப்ரல் 2ம் நாள் ஒரு இரண்டாந்தரமான கடத்தலில் நண்பருடன் ஈடுபட்டதாகவும் அதில் கடுமையான காயத்தை ஏற்படுத்தும் அளவு தாக்கியதாகவும், கடத்த சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர். வடக்கு கரோலினாவில் அந்த வழக்கு நடக்கும் போது, குற்றத்தை ஒப்புக் கொண்டவர். அதையொட்டிய பேரத்தில் 2 ஆண்டு மட்டுமே சிறை தண்டனைப் பெற்ற வர். டியூக் பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்த பிறகு 1986ல் அதே நீதிமன்றம் சென்று, உடல் நலமின்மையால் இந்தியா செல்ல அனுமதி கேட்டவர். 1990ம் ஆண்டிற்குள் 200 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என்று அப்போது நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டவர். 2006ம் ஆண்டு யுனைடெட் அரப் எமிரேட்சில் கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். அதே சமயம் பல்வேறு வணிகக் குழுமங்களிலும் தலைமை எடுத்தவர். இத்தகைய லலித் மோடி இமாச்சல பிரதேசம் கிரிக்கெட் கழகம், ராஜஸ்தான் கிரிக்கெட் கழகம், ஆகியவற்றில் அங்கம் வகித்தவர். சமீபத்தில் பஞ்சாப் கிரிக்கெட் கழகத்திலும் விடவில்லை. பி.சி.சி.ஐ.யில் ஜக்மோகன் டால்மியாவை தோற்கடித்து சரத்பவாரை தலைவராக கொண்டு வருவதில் லலித் மோடி பங்களிப்பு செய்து உள்ளார். அவர் ரகசியமாக ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய 3 ஐ.பி.எல். வணிகக் குழுமங்களிலும் மௌனமான பங்காளியாக இருக்கிறார். அது தவிர மேட்ச் பிக்சிங், மற்றும் ஐ.பி.எல். ஆட்ட பெட்டிங் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுக்களையும், வருவாய்துறை கூறிவருகிறது. இப்போது கொச்சி அணியை வாங்கிய குழுமத்தின் பிரதிநிதி புதிய பிரச்சினையை எழுப்பியுள்ளார். லலித்மோடிக்கும், நரேந்திர மோடிக்கும் வலுவான தொடர்பு இருக்கிறது என்பது தான் இந்தப் பிரச்சினை. அகமதாபாத் ஐ.பி.எல். பந்தயத்தில் நரேந்திர மோடி பங்காளியாக இருப்பதும், அதற்காக அங்கு போட்டி நடத்த ஐ.பி.எல். ஆணையரை லலித் மோடி நிர்ப்பந்தம் செய்ததும், இவர்கள் மூலம் அம்பலமாகி யுள்ளது. முதல் ஐ.பி.எல். பந்தயம், ராஜஸ்தான் முதலமைச்சராக வசுந்தரஜே சிந்தியா இருக்கும் போது நடந்தது. அதனால் வசுந்தராவும், நரேந்திரமோடியும், லலித் மோடி மீது செல்வாக்கு செலுத்தி அகமதாபாத்திற்கு அழைத்திருப்பார்கள் என்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளையாட்டுப் போட்டியிலும் பணம் விளையாடும் போது, அது குற்றவாளிகளின் கைகளில் போய்த்தான் தஞ்சம் அடையும் என்பதற்கு இதை விடவும் உதாரணம் தேவையா?
Subscribe to:
Posts (Atom)