நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குள்ளான பிரச்சனைகளில் ஒன்று, அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா. சிறிய எதிர்கட்சிகள் ஒரே குரலில் ஆளும் கூட்டணியையும், முக்கிய எதிர்கட்சியையும் எதிர்த்து குற்றம் சாட்டினார்கள். மக்களவையின் கடந்த அமர்வில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்த பெரியகட்சி பா.ஜ.க. ஆனால் அதே அணுசக்தி ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் நோக்கத்தோடு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்காகவும், என்.எஸ்.ஜி. என்று சொல்லக்கூடிய அணுசக்தி எரிபொருள் விநியோகிக்கும் நாடுகள் கொடுக்கும் நிர்ப்பந்தத்தாலும், ஒரு அணுஉலை விபத்து இழப்பீடு சட்டத்தை உருவாக்கவும், அதிலும் மேற்கண்ட அந்நிய சக்திகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும், செய்யும் வகையில் இந்தியாவின் ஆளும் கட்சி எடுக்கும் முயற்சிகளில், பெரிய எதிர்கட்சி அதற்கு ஆதரவு கரம் கொடுக்கின்ற நிகழ்வு சிலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது பா.ஜ.க. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் இழப்பீடு மசோதாவை ஆதரித்துள்ள நிலையில், அதை நாடாளுமன்றத்திலுள்ள சிறிய கட்சிகள் இடதுசாரிகள் உட்பட எதிர்த்து குரல் எழுப்பியுள்ளனர்.
எதிர்ப்பு குரல் மட்டும் எழுப்புவதுடன் நிறுத்தாமல், காங்கிரஸ் பா.ஜ.க. மத்தியில் நடத்தப்பட்ட ரகசிய உடன்பாடு, கள்ள உறவு ஆகியவை பற்றியும் குற்றம் சாட்டியுள்ளனர். இதை பா.ஜ.க. ஆதரவு என்று கருதப்பட்ட ஊடகங்களும் கூட, கேள்வியாக எழுப்பியுள்ளது. அதாவது இன்று பிரபலமாகியிருக்கும் சொராப்தின் போலி துப்பாக்கிச் சூடு வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த மோடியின் நண்பனான முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதையொட்டி, முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டப்படவில்லை என்பதே இவர்களது குற்றச்சாட்டு. பிரபலமாகியுள்ள அந்த சட்டவிரோத படுகொலையில், அன்றைய உள்துறை அமைச்சர் உட்பட, குஜராத் மாநிலத்தின் பெரிய காவல்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி உச்சநீதிமன்றம் வரை அம்பலமாகிவிட்டது. அப்படியிருக்கையில் அந்த மாநிலத்தின் முதல்வருக்கு அத்தகைய சட்டவிரோத படுகொலையில் இருக்கின்ற சம்மந்தமும், அதன் பிறகு அதை மறைத்ததில் உள்ள பங்கும் சர்ச்சைக்கு இடமின்றி வெள்ளிடை மலையாக வெளியே தெரிகிறது. ஆனால் திடீரென குஜராத் ஏடுகளில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அந்த வழக்கை நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரி, குறிப்பிட்ட வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பு இல்லை என்பதாக அறிவித்தது தான் அந்த ஏடுகளின் செய்தி. அதுவே நாடாளுமன்ற உறுப்பினர்களை குரலெழுப்ப செய்துள்ளது.
அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில், சொராபுதின் வழக்கும், நரேந்திர மோடிக்கு நல்லவர் என்ற சான்றிதழும் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதையொட்டி பா.ஜ.க. இழப்பீடு மசோதா நிலைக்குழுவால் நாடாளுமன்றம் முன்பு வரைவு நகலை வைக்கும் போது, அதை ஏற்றுக் கொண்டுள்ளது என்ற செய்தி இடதுசாரிகள் உட்பட சிறிய கட்சிகளை குற்றம்சாட்டும் நிலைக்கு நிர்ப்பந்தித்துள்ளது. மோடியை குற்றம் சாட்டாமல் காங்கிரஸ் பாதுகாத்துள்ளதால், மேற்கண்ட மசோதாவை பா.ஜ.க. ஆதரிக்கிறது என்பதே அந்த குற்றச்சாட்டு. அதை பா.ஜ.க. ஆதரவு பேசி வந்த ஊடகங்களும், செய்தி என்ற பெயரில் அம்பலபடுத்தினர். அதேபோல ஒரு தமிழ் ஏடு ஒரு மரத்துப் பறவைகள் என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டி, காங்கிரசையும், பா.ஜ.க.வையும் குற்றம் சாட்டியிருந்தது.
பா.ஜ.க. மத்திய அரசில் ஆட்சி செலுத்தி வந்த காலத்தில், அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் வர்த்தக உறவை வலுப்படுத்துவதற்காக, மேலை நாடுகளின் நிர்ப்பந்தங்களுக்கு கீழ்ப்படிந்த செய்திகள் நினைவு கூறப்பட வேண்டும். அதேபோல இந்தியாவின் துணை பிரதமராக இருந்த போது எல்.கே.அத்வானி, அமெரிக்கா சென்று அங்குள்ள வர்த்தக சபையில் உரையாற்றி, அதிகமான மூலதனத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து இறக்குமதி செய்வதற்காக உரையாற்றியதையும் நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாட்டுப்பற்றுப் பற்றி பேசி வரும் அதே வேளையில், பா.ஜ.க. அமெரிக்க சார்பாகவும், மேற்கத்திய நாடுகளின் பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் சார்பாகவும் கொள்கைகளை கொண்டிருக்கிறது என்பதும் புதிய செய்தி அல்ல. ஏகாதிபத்திய உலகமயமாக்கலை ஆதரிக்கின்ற ஒரு ஆளும்வர்க்க கட்சியாகத் தான் பா.ஜ.க. திகழ்ந்து வருகிறது. ஆகவே நெருக்கடி வரும் போது, இந்தியா ஆளும்வர்க்க கட்சிகளின் அதிகமான பாரம்பரியம் கொண்ட காங்கிரசுடன் இணைந்து, பா.ஜ.க. நிலைப்பாடு எடுக்கும் என்பதும் அதிர்ச்சி தரும் செய்தியல்ல.
காங்கிரஸ்பா.ஜ.க. கூட்டு சேர்ந்து அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்குள்ளாவதும், அணுஉலை எரிபொருள் விநியோகிக்கும் நாடுகளின் நிபந்தனைகளுக்கு உள்ளாவதும் அதிசயமான நிகழ்வு அல்ல. அதற்கு சொராபுதின் வழக்கு என்று ஒன்று தேவையும் இல்லை. ஆனாலும் இரண்டு மாதங்களில் இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வருகைக்கு முன்பே, பாதையை சுத்தம் செய்து வைப்பதற்காக இத்தகைய இழப்பீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இந்திய ஆளும்வர்க்க கட்சிகளுக்கு தேவையாகயிருக்கிறது. அத்தகைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சி.பி.ஐ. மூலம் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பது என்பதை ஒரு பேரமாக பா.ஜ.க. பெற்றுள்ளது அதன் கெட்டிக்காரத் தனம்.
இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி ஒரு அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா, நிலைக்குழு முன்வைத்த மாற்றங்களுக்கான பரிந்துரைகளோடு நாடாளுமன்றம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஆலையில் விபத்து நடந்து மூன்று மாதத்திற்குள் இழப்பீடு கோருபவர்க்கு, இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். விபத்து நடந்து 15 நாட்களுக்குள் இழப்பீடு பெற்றுத் தருவதற்கான ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். இயற்கை பேராபத்துகளாலும், பயங்கரவாதிகளாலும் அணுஉலை விபத்து ஏற்படுமானால் அரசாங்கமே அனைத்து இழப்பீட்டையும் தர வேண்டும். மின்சக்தி பயன்படுத்துவோரிடம் யூனிட்டிற்கு 4 பைசா என்ற வீதத்தில் உருவாக்கப்படும் நிதி ஒரு அணுசக்தி விபத்து இழப்பீட்டு வைப்புத் தொகையாக இருக்கும். அது தொலைநோக்கில் அரசாங்கத்தின் சுமையை குறைக்கும். இப்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றம் அணுசக்தி எரிபொருள் விநியோகம் செய்யும் அந்நிய சக்திகளை, இழப்பீடு சுமையை சுமப்பதிலிருந்து தப்பிக்க வைக்கிறது. அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டு நிதியை, ரூ.500 கோடியிலிருந்து, ரூ.1500 கோடியாக உயர்த்தியுள்ளது.
இழப்புகளுக்கு ஏற்றார்போல் இழப்பீடு தொகையை கொடுக்கும் பொறுப்பிலிருந்து அந்நிய நாட்டு அணுசக்தி எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்களை நீக்கியுள்ளது என்பது தான், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான ஒன்றாக மேற்கண்ட மசோதாவில் அமைந்துள்ளது. அணுசக்தி விநியோக அந்நிய நிறுவனம் தனது அலட்சியத்தால், அல்லது அதன் அணுஉலை தன்மையால், குறிப்பிட்ட விபத்திற்கு காரணமாகயிருந்தாலும், அத்தகைய சக்திகளை பொறுப்பேற்கச் செய்ய முடியாது என்ற மசோதாவின் அம்சம், நாட்டுப்பற்றுக்கு எதிரான அம்சமாக உள்ளது.
மசோதாவின் 17வது பிரிவு, ஒப்பந்தத்தில் எழுத்துப் பூர்வமாக இருந்தாலோ, அந்நிய விநியோகத்தரோ, அவரது ஊழியரோ செய்த அலட்சியத்தால் விபத்து நேர்ந்தாலோ, வேண்டுமென்றே எந்த நபரும் அத்தகைய விபத்தை ஏற்படுத்தியிருந்தாலோ, அப்போது தான் அணுஉலையை இயக்கும் நிறுவனம் முழுமையாக இழப்பீட்டுக்குப் பொறுப்பெடுக்க முடியும். 17பி என்ற துணைப்பிரிவில் தரம் குறைந்த பொருட்களை விநியோகித்ததற்காக அல்லது தரம் குறைந்த சேவையை செய்தததற்காக என்ற அம்சங்கள் இயக்குநர் நிறுவனத்திற்கும், விநியோகத்தர் நிறுவனத்திற்கும் எழுத்து பூர்வமான ஒப்பந்தமாக ஏற்பட்டிருந்தால் என்ற செய்தி வருகிறது. அதற்கு அமெரிக்க அணுசக்தி எரிபொருள் ஆலைகளின் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி மாற்றங்கள் செய்யப்பட்ட திருத்தங்களுடன் கூடிய மசோதா இப்போது வைக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.சி என்று அழைக்கப்படுகின்ற துணை இழப்பீடுகளுக்கான ஒப்பந்தம் என்ற அமெரிக்க நலனுக்கான ஒப்பந்த அடிப்படையில் இப்போது மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் அமெரிக்க விநியோக நிறுவனத்தை எதிர்த்து, அமெரிக்க நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. தென்கொரியாவிலும், ஹங்கேரியிலும் அணுஉலை இயக்குனரான உள்நாட்டு நிறுவனம், எரிபொருள் விநியோகிக்கும் அந்நிய நாட்டு நிறுவனத்தின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்திற்கு, அந்த விநியோகத்தரை பொறுப்பாக்க முடியும். ஆனால் அது இப்போது இந்தியாவில் மறுக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட பச்சையான சரணடைவு ஒப்பந்தத்தை, அந்நிய நாடுகளுக்கு சாதகமாக உருவாக்குவதில், நாடாளுமன்றத்தின் பெரிய ஆளும் கட்சியும், பெரிய எதிர்கட்சியும் கைகோர்த்திருப்பது பகிரங்கமாக ஒரு உண்மையை தெளிவுப்படுத்துகிறது. அதாவது இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் வர்க்கக் கட்சிகள் தான், ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் நடமாடுகின்றன. அத்தகைய ஆளும்வர்க்க கட்சிகள் இந்திய இறையாண்மையை நாட்டுப்பற்றுடன் பாதுகாப்பதற்கு பதிலாக, நாட்டையே அந்நிய நாட்டு சக்திகளுக்கு ஏலம் விட தயங்குவதில்லை. இந்த உண்மையை நாட்டுப்பற்றுள்ளோர் விழிப்புணர்வுடன் எதிர்ப்பார்களா என்பது தான் இன்றைய கேள்வி.