Monday, April 19, 2010
கடல் தாண்டி, மௌனத்தை கலைக்கும் போர்க் குற்றப்பட்டியல்
சில நாட்களுக்கு முன்னால் இந்தியாவின் தலைநகரில், தமிழ் மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில், கடல் தாண்டி நடந்த போர்க்குற்றங்கள் விவரிக்கப் பட்டன. வரிசைப்படுத்தப்பட்டன. டப்ளிங் நகரில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற நியாயம் தேடும் அமைப்பு நடத்திய நீதி மன்றத்தில், ராஜபக்சே அரசு குற்றம் சாட்டப்பட்டு, போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் அம்பலப் படுத்தப் பட்டன. அதில் கலந்து கொண்டு தீர்ப்பாயத் தின் பங்கை சிறப்பாக செய்த, டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் ராஜேந்திர சச்சார் இந்த கூட்டத்திலும் தன்னுடைய உணர்தல்களை வெளிப் படுத்தினார். இதே ராஜேந்திர சச்சார்தான் பி.யூ.சி.எல்.என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அகில இந்திய தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டவர். இன்றும் கூட அந்த அமைப்பின் முக்கிய கூட்டங்களில் பங்கு கொண்டு, நாடு தழுவிய மனித உரிமை இயக்கத்திற்கு வழி காட்டிக் கொண்டிருப்ப வர். இந்திய அரசே முஸ்லிம் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நிலைமை பற்றி ஆய்வு செய்வதற்கு, இந்த நீதியரசர் சச்சார் தலைமையில் தான் ஆணையம் அமைத்தது. சச்சார் தனது அறிக்கையின் மூலம், ஓரங்கட்டப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டு, தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் இந்திய முஸ்லிம்களின் உண்மை நிலையை உலகுக்கு அறிவித்தார். அதில் வறுமையிலும், கல்வி கிடைக்காமையிலும், அரசியல் அதிகாரத்தில் பங்கின்றியும் இந்திய முஸ்லிம் கள் படுத்தப்படும் பாடு விவரிக்கப்பட்டிருந் தது. இந்த அறிக்கையே இந்திய முஸ்லிம் இயக்கங்களுக்கு, ஒரு போராடும் ஆயுதமாக கைக்கு வந்தது. அத்தகைய பெருமைமிகு நீதியரசர் சச்சார் இப்போது தமிழினம், இலங்கைத் தீவில் பட்ட துன்பங்களை வெளிப்படுத்த வந்திருக்கிறார் என்பது தமிழர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு. கேரளாவைச் சேர்ந்த பல அதிகாரிகள் இந்திய அரசில் தலைமை பொறுப்புகளை ஏற்று, அதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் என்ற பட்டியல், தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து படிக்கப் படுகிறது. அந்த பட்டியலில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், போன்ற பலரும் இடம் பெறுகிறார்கள். அதே கேரளாவைச் சேர்ந்த பிரபல மனித உரிமை போராளி யான முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மேற்கண்ட கூட்டத்திற்கு, தனது பலவீன மான உடல் நிலையிலும், வீடியோ பதிவு மூலமாக, இலங்கை அரசின் கொடூரங்களை சித்தரித்து உரை ஒன்றை அனுப்பியிருந்தார். இவையெல்லாமே டெல்லி வாழ் வட இந்தியர்களுக்கும், புதிய பார்வையைக் கொடுக்க உதவின. அவற்றிற்கு ஆதாரம் தருவது போல, பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, டெல்லி சென்று அந்தக் கூட்டத்தில் ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். இந்தியா தழுவிய ஒரு மௌனம் அங்கே கலைக்கப்பட்டது. பேசப்படாத ஒரு இன அழிப்பு அங்கே அம்பலப்படுத்தப்பட்டது. மாணவர்கள் வழிகாட்டிகளாக அங்கே தோன்றினார்கள். தமிழர்களுக்கு எதிரான ரத்தம் தோய்ந்த போரில், மனிதாபிமானத் திற்கு எதிரான குற்றங்களும், போர்க் குற்றங்களும் நிகழ்ந்ததை எடுத்து வைத்தார் கள். சாட்சிகள் இல்லாமல் ஆயிரக்கணக்கில் தமிழர்களை படுகொலை செய்த, இன அழிப்புக்கு இலங்கைத் தீவு ஒரு முன்மாதிரி படைத்துவிட்டது என்ற செய்தி அங்கே கூறப்பட்டது. ஒடுக்கும் அரசாங்கங்களுக்கு, உலகம் முழுவதிலும் இதுவே ஒரு வழிகாட்டி யாக மாறிவிடும். அந்த முன்மாதிரி இந்தியாவில் காஷ்மீரிகள் மீதும், பஞ்சாபிகள் மீதும், வடகிழக்கிலும், சிவப்பு எல்கைகள் என்று வர்ணிக்கப்படும் மாவோயிஸ்டுகள் மீதும் நடத்தப்படும் அபாயம் எச்சரிக்கை மணியாக அந்தக் கூட்டத்தில் ஒலிக்கப்பட்டது. அதை ஆள்வோர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என வர்ணிக்கலாம். அல்லது சமாதானத்திற்கான போர் என சித்தரிக்கலாம். அப்போது அதைக் கேட்பதற்கு யாருமே இருக்கமாட்டார்கள். இலங்கை அரசு எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு செலுத்தவில்லை. தன் சொந்த நாட்டு மக்கள் மீதுதான், சமாதானத்திற்கான போரை நடத்தியது. அதன் விளைவாக எங்கும் சவக்குழிகள் தோண்டப்பட்டன. சவக்குழிகள் மயான அமைதியை தந்து கொண்டுதான் இருக்கும். அத்தகைய அமைதிக்காக அங்கே போர் நடத்தப்பட்டது. ஐ.நா.சபையின் விளக்கத்தில் கூறுவதானால், இன அழிப்பு என்பது திட்டமிட்ட, பரந்து பட்ட இன அடையாள அழிப்பு அல்லது ஒரு முழுமையான தேசிய இனத்தை, மதத்தை, இனத்தை அல்லது மொழிக்குழுவை இல்லாமல் செய்வதற்கான முயற்சி. இதுதான் இலங்கையில் நடந்த நிகழ்வும். ஈழத் தமிழருக்கு எதிரான இன அழிப்பு சமீபத்தில் தொடங்கிய ஒரு போர் அல்ல. ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு அது நடத்தப் பட்டது. 4வது ஈழப் போர் பற்றி மட்டும் தான் இப்போது உலகச் சமூகம் பேசுகிறது. 2009ம் ஆண்டு மே மாதத்தில் முள்ளி வாய்க்காலில் நடந்த போர் பற்றித்தான் தெரிந்திருக்கிறது. 1949ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாள், ஜெனிவாவில் ஐ.நா. சபையால் நடத்தப்பட்ட மாநாட்டில் பிரகடணப் படுத்தப்பட்டப் போர்க் குற்றங்கள், ஒன்று விடாமல் இலங்கையில் அமுலாக்கப் பட்டுள்ளது.இலங்கை ராணுவம் இனவாத தன்மைக் கொண்டது. 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்துக் கொண்டு அந்த சிங்கள இனவாத ராணுவம், தீவின் வடக்கிலும், கிழக்கிலும் தாக்குதல் நடத்தியது. வேறு வழியில்லாமல் தமிழ் மக்கள், விடுதலைப்புலிகளின் பிடிக்குள் இருந்த பகுதிக்கு விரைந்தனர். மட்டக்கிளப்பில் வாகரையிலும், கிழக்கு திரு கோணமலையில் மூதூரிலும், மன்னாரில் மூசாலியிலும், வன்னிப்பகுதியில் பல இடங்களிலும் தமிழ்மக்கள் விரட்டப் பட்டு, வேரோடு அழிக்கப்பட்டு, பலாத் காரமாக இடம் பெயர்ந்து சென்றது, திட்டமிட்டு செய்யப் பட்ட ஒரு செயல். 20 முறைக்கு மேல் இடம் பெயர்தலை மேற்கொண்டவர்கள் பலர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் சாதாரண உள்நாட்டு அகதிகள் அல்ல. மாறாக வேர் பிடுங்கப்பட்ட மக்கள். அது மானூடத் திற்கு எதிரான குற்றம் இல்லையா? தங்கள் நிலங்களையும், உடமை களையும் இழந்த நிலையில் விரட்டப்பட்ட தமிழ் மக்கள் உளவியல் ரீதியில் ஒரு இன அழிப்பை கூடுதலாக அனுபவிக்கிறார்கள். கட்டமைப்பு ரீதியான இன அழிப்பை, பூகோளரீதியான இன அழிப்பை எதிர்கொள் கிறார்கள். யாழ்பாண நூல்நிலையம் எரிக்கப் பட்ட நாளிலிருந்து, உலகத் தமிழர் மாநாடு தாக்கப்பட்ட நாளிலிருந்து, அங்கே பண்பாட்டு இன ஒழிப்பு நடந்து வருகிறது. அரசு ஏற்பாடு செய்த இன கலவரங்கள் 1956, 1958,1961, 1974, 1977 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டது. உச்சகட்ட மாக 1983ல் ஜூலை படுகொலை தமிழருக்கு எதிராக நடத்தப்பட்டது. அதை கருப்பு ஜூலை என அழைத்தார்கள்.1966ம் ஆண்டு ஐ.நா.சபையின் அனைத்து நாட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான மாநாட்டில் தெளிவாக அறிவிக்கப்பட்ட, எல்லா மக்களுக்கும் சுய நிர்ணயத்திற்கான உரிமை உண்டு என்ற சட்டப்பிரிவு, தமிழர்களுக்கு மட்டும் பொருந்ததா? இலங்கை அரசும் அந்த ஒப்பந்தத்தில் ஒரு பங்காளி என்பது சிரிப்பிற்குரிய செய்தி. சமீபத்தில் கிழக்கு தைமூர் நாடும், மோன்டெனேகுரோ நாடும் பிரிந்து செல்வதற்கான உரிமையை, வாக்கெடுப்பு மூலம் பெறவில்லையா? மேற்கண்ட உரத்த சிந்தனைகளை கொளத்தூர் மணியின் உரையிலும், உடன் பேசிய ஆர்வலர்களின் உரையிலும் கேட்டு தெளிந்த டெல்லிவாசிகள், இனியாவது ஈழத்தமிழர் பிரச்சினையை உலக மக்களின் பிரச்சினை என உணர்வார்களா என்று நமது மனது அடித்துக் கொள்கிறது.
Subscribe to:
Posts (Atom)