Monday, July 23, 2018

அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?



சிறப்புக் கட்டுரை: அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?

சிறப்புக் கட்டுரை: அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?
டி.எஸ்.எஸ். மணி
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வோர் ஆட்சியிலும், அந்த ஆட்சியாளர்களை எதிர்த்தோ, ஆட்சியாளர்களின் திட்டங்களை எதிர்த்தோ, மக்கள் மத்தியிலிருந்தும் அறிவுஜீவிகள், ஊடகங்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியிலிருந்தும் கேள்விகள் எழுவது இயற்கையே. அப்படிக் கேள்விகள் எழாவிட்டால், ஆட்சியாளர்களுக்குத் தாங்கள் கொண்டுவந்த திட்டங்களை பற்றிய நிறை குறைகள் தெரியாமல் போய்விடும். அப்படிக் கேள்விகள் எழும்போதுதான், ஆட்சியாளர்கள், தங்களது செயல்பாடுகளில் திருத்தங்களைக் கொண்டுவர முடியும். அவ்வாறு கேள்விகள் எழுவதை அனுமதிக்கும்போதுதான், ஆட்சியாளர்கள், மக்களுக்குத் தங்களது திட்டங்களில் உள்ள பலமான அம்சங்களைப் புரியவைக்க முயல முடியும். ஆகவே எப்படியும், மக்கள் மத்தியிலிருந்து அதிருப்திக் குரல்கள் எழுவது என்பது எப்போதுமே ஆரோக்கியமானதுதான்.
அதேநேரம், அத்தகைய அதிருப்தியின் குரல்களை அடக்கவும், ஒடுக்கவும் ஆட்சியாளர்கள் நினைத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதற்கு எதுவுமே இல்லாமல் போய்விடும். அவர்களால், மக்களை தங்கள் திட்டங்கள்பால் ஈர்க்க முடியாமல் போகும். எந்த வகையிலும், அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் மக்களை அணுகுவதற்கு, ஆட்சியாளர்களின் கைகளை பலவீனப்படுத்தவே செய்யும். இதுவே ஜனநாயகத்தின் ஆணி வேராகக் காணப்பட வேண்டும். இதையே திருவள்ளுவர் கூறுகிறார். இதையே உலகமெங்கும் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்த பெரும் மேதைகள் பலரும் கூறக் கேட்டிருக்கிறோம்.
ஆங்கிலேயன் இந்த நாட்டை ஆண்டுவரும்போது நடந்த அடக்குமுறைகளைப் பற்றி பாரதியார், “இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம்” என்று கூறினார். இன்றைய நமது ஆள்வோர், ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள். ஆனால், இவர்களும் தற்போது மாறிவருகிறார்கள். மாற்றுக் கருத்தைப் பேசினாலோ, மாறுபட்ட கருத்துகளைக் கேட்டாலோ, கைது என்ற அணுகுமுறையைக் கையாளுகிறார்கள்.
ஏன் இப்படி நடக்கிறது? ஒன்று, அவர்கள் அச்சத்தின் காரணமாக, என்ன செய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடுகிறார்கள். அல்லது அவர்களுக்கு ஆலோசனை கூறும் அதிகாரிகள், அடக்குமுறைகள் மூலம் அனைத்தையும் வென்றுவிடலாம் என துர்போதனை சொல்பவர்களாக இருக்க வேண்டும். எது எப்படி என்பதை அவர்களுக்கே விட்டு விடுவோம்.
அரண்டவன் கண்ணுக்கு…
அடுத்து, ஒரு புதுக் கரடியை ஆள்வோர் இறக்கி விடுகிறார்கள். அதுதான், நக்சல் எனும் சொல்லாடல். பயங்கரவாதம் எனும் பய பீதிக் கூற்று. இந்தப் பீதியை அவிழ்த்து விடுபவர்களுக்கு, அவர்களுக்கே உரித்தான தேவைகள் இருக்கலாம். ஆனால், நக்சல் என்றால் என்ன? 1967ஆம் ஆண்டு அன்றைக்கு இருந்த ஆட்சியில் சமூக, அரசியல் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடின. மக்கள் மத்தியில் நிலம் இல்லை, வேலை இல்லை, ஊதியம் இல்லை, விலைவாசி குறையவில்லை, உழைப்பவனுக்கு வாழ வழியில்லை என்ற சூழல் இந்திய நாடெங்கும் பரவிக் கிடந்தது. பொதுவுடைமைவாதிகளும் தேர்தல் பாதையில் ஒட்டிக்கொண்டு, மக்களுக்காக எதையுமே நல்லது செய்ய முடியாத நிலை வந்தது. அப்போது, புரட்சிகரப் பொதுவுடைமைவாதிகள் கல்லூரிப் பேராசிரியர் சாரு மஜும்தார் தலைமையில் திரண்டு தங்களது உழைப்பால் வந்த நிலத்தை, பொருள்களை, தாங்களே எடுத்துக்கொள்வது எனக் கிளர்ந்து எழுந்த இடம்தான், நக்சல்பாரி என்னும் கிராமம்.
மேற்கு வங்க மாநிலத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில், சிலிகுரி வட்டத்தில், நக்சல்பாரி என்ற கிராமத்தில், நிலமற்ற உழவர்கள் கிளர்ந்து எழுந்தார்கள். அந்தக் கிளர்ச்சியின் தாக்கத்தினால், பின்னால் வந்தவர்களும், ஆள்வோரும் மக்களின் கிளர்ந்தெழுதல்களை, நக்சல் வழி என அழைக்கத் தொடங்கினர். அத்தகைய நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நாம் நக்சல் என்றே அழைத்தாலும், அவர்கள் சொல்வது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
நக்சல்கள் கூறுவது என்ன?
அந்த நக்சல்கள் இந்திய நாடு, அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அடகு வைக்கப்படக் கூடாது என்றும், அந்நிய நாட்டின் சரக்குகளை இந்தியாவில் சந்தையாக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள். இதைத்தானே இன்று நம்மை ஆளும் பாஜகவோ, அத்துடன் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்போ கூறிவருகிறது? சுதேசி, விதேசி என்ற முழக்கங்களைக் காவிவாதிகளும் கூறவில்லையா? பிறகு ஏன் நக்சல் என ஒரு பிரிவினரை மட்டுமே முத்திரை குத்துகின்றனர்?
நக்சல் என்பவர்கள், நிலமற்ற உழவர்கள் உழைக்கும் நிலங்களை, நிலப்பிரபுக்கள் பலாத்காரமாகக் கைக்கொள்ளக் கூடாது என்கிறார்கள். நக்சல் என்பவர்கள், சாதிய வெறியுடன், ஆதிக்கவாதிகள், தாழ்த்தப்பட்டோரை அடக்கி ஆளக் கூடாது என்கிறார்கள். இத்தகைய கூற்றுகளை நமது அரசியல் சட்டமும் சொல்கிறதே? அப்படியானால் எதற்காக இந்த நக்சல்களைப் பிரித்துப் பார்க்கிறீர்கள் என்ற கேள்வி அறிவுஜீவிகளிடமிருந்து வருமல்லவா?
அதற்கும் நம்மை ஆள்வோரிடம் நல்ல பதில் இருக்கிறது. வன்முறை நன்முறையல்ல; அதில் ஈடுபடுபவர்களை நக்சல் என்கிறோம் என்று ஆள்வோர் பதில் கூறலாம். உண்மைதான். வன்முறை நன்முறையல்லதான். அந்த வன்முறையை, புரட்சியாளர்களோ, பண்ணையார்களோ, ஆதிக்கச் சாதிவாதிகளோ, மத வெறியர்களோ, காவல் துறையினரோ, ராணுவத்தினரோ, யார் கையில் எடுத்தாலும் அது நன்முறையல்ல. சரி. தமிழ்நாட்டுச் சூழலுக்கு வருவோம்.
போராட்டமும் ஆர்ப்பாட்டமும்
இங்கே இன்று எதற்கெடுத்தாலும் போராட்டம் நடக்கிறதே என ஆள்வோர் கேட்கிறார்கள். போராட்டம் என்றால், நகர்ப்புறங்களில், காவல் துறை அனுமதி பெற்றோ, அனுமதி பெறாமலோ, காவல் துறையின் கைது நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் போராட்டம் என்ற பெயரில் செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உண்மையில் அவையெல்லாம் போராட்டங்கள் அல்ல. அவற்றிற்கு உண்மையான பெயர் ஆர்ப்பாட்டம் தான். அதாவது, புரட்சியாளர் லெனின் வார்த்தைகளில், அவை வெறும் கிளர்ச்சிகள்தான். இந்தக் கிளர்ச்சிகளால், அடையாளபூர்வமாக எதிர்ப்பைக் காட்டலாம். அவ்வளவே. அது ஆள்வோருக்கு, ஒரு செய்தியை அறிவுறுத்துவதாக இருக்கும்.
2017 ஜனவரிக்குப் பிறகு, அதாவது, ஜல்லிக்கட்டு எழுச்சிக்குப் பிறகு, தமிழ்நாட்டில் அமைதி வழியில் அறப் போராட்டம் என்ற புரிதலில், மக்கள் எல்லோருமே, ஒரே இடத்தில் திரண்டு அமைதியாக அமர்வது என்று புதிய வடிவத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அதுவே, தங்களது கோரிக்கையை வலியுறுத்த, வன்முறையற்ற நன்முறையில், அமைதி வழியில் மக்கள் அணிதிரள்வது என்ற வடிவம். நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பிலும் பொதுமக்கள் இப்படி அணி திரண்டதைக் கண்டோம். அத்தகைய எதிர்ப்புகளை, ஆள்வோர் பகிரங்கமாக எதிர்க்கத் தயாராயில்லை. ஏனென்றால், அவை ஊர் அறிந்த, அமைதி வழியிலான அணி திரளல். எனவே, இதை எதிர்கொள்வது கடினமானது.
அரசு கண்டுபிடித்த வழி
இத்தகைய அணி திரளலைச் சமாளிக்க ஆள்வோர் ஒரு தந்திரத்தைப் பிரயோகிக்க முயல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவையோ, சில குழுக்களையோ, தீவிரவாதிகள், நக்சல்கள் என்று முத்திரை குத்தி, அவர்களைச் சாக்காகக்கொண்டு, ஒட்டுமொத்த மக்களது எழுச்சியையும் அடக்கி ஆள்வது என்பதே அது. அத்தகைய தந்திரத்தை ஆள்வோர், ஜல்லிக்கட்டு எழுச்சிக்குப் பிறகு கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி, கைது, தடை, துப்பாக்கிச் சூடு என்று அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
இந்த இடத்தில் யார் அப்படி முத்திரை குத்தப்படுவோர் என ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அத்தகைய முத்திரை குத்தல் தொடங்கியது. மக்கள் அதிகாரம் என்னும் அமைப்பினர் தீவிரவாதிகள் எனக் குறிப்பிடப்பட்டார்கள். அரசு அவர்களை மக்கள், கலை இலக்கியக்காரர்கள் என்று கூறுகிறது.
அமைதிவழி நக்சல்கள்!
சரி, இருக்கட்டும். அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழகத்தில் செயல்படுகிறார்கள். எப்போதாவது, அந்த அமைப்பு வன்முறையில் ஈடுபட்ட வரலாறு உண்டா? இல்லையே. அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு என்று நடத்தினாலும், காவல் துறையின் அனுமதியைப் பெற்றுத்தான் தங்கள் கிளர்ச்சிகளை நடத்துகிறார்கள். அனுமதி மறுக்கப்படும்போது, நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று நடத்துகிறார்கள். இது நாட்டு மக்களுக்குத் தெரியாவிட்டாலும், காவல் துறைக்கு நன்றாகவே தெரியும் அப்படித் தெரிந்திருந்தும்கூட, அதிருப்தியின் குரல்வளையை நெரிக்க அவர்களை நக்சல்கள் என்ற தவறான சித்திரிப்பைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் காவல் துறைக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அமைப்பினர், நக்சல்பாரிப் பாதை என்று எழுதுகிறார்களே, பேசுகிறார்களே, பாடுகிறார்களே என்று காவல் துறையினர் கேட்கலாம். ஆனால், குறிப்பிட்ட அமைப்பினரின் , செயல்கள் அமைதி வழியிலும், சட்ட ரீதியான வடிவிலும்தானே இருக்கின்றன? அப்படி இருக்கையில் அவர்களை நீங்கள் நக்சல்கள் என்று எப்படி முத்திரை குத்துவீர்கள்? அமைதிவழி நக்சல்கள் என்று வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போங்கள்.
உதாரணமாக, நக்சல்பாரிப் பாதை என்பது, ஆயுதம் தாங்கிப் புரட்சி செய்யும் பாதை. அந்தப் பாதையில், ஜார்கண்டில், சத்தீஸ்கரில், பிகாரில், ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கிப் புரட்சிகர வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சட்ட ரீதியாக, கலை, இலக்கியத் தளங்களில் இயங்கிவருவோரை, அதே முத்திரை குத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?
உண்மை வரலாற்றை நாம் கவனிப்போமானால், சாரு மஜும்தார் முன்வைத்த வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் வழி என்ற பாதையை மறுத்து, வெகுமக்களைத் திரட்டப் போகிறோம் என்று கூறி, 1971இலேயே வெளியே வந்த அமைப்புகள்தான் தமிழ்நாட்டில் இயங்கிவருகின்றன. அவை நக்சல் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தலாம். ஆனால், செயல் என்ன என்று பார்த்து அணுகுமுறையைக் கையாள்வதுதானே அரசின் கடமை? பேனைப் பிசாசு ஆக்குவது சரியான நடைமுறையா?
அற வழியில் அணி திரள்வோரை நக்சல் முத்திரை குத்துவதும், தீவிரவாதிகள் முத்திரை குத்துவதும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் அணி திரளவே உதவும். தேர்தல் பாதையில் செல்லும் கட்சிகளின் தலைவர்களையும், கருத்துக் கேட்டாலே, தீவிரவாதம் என்று முத்திரை குத்திக் கைது செய்யும் போக்கு எந்த வகையிலும், ஆரோக்கியமான முறையுமல்ல. ஆக்கத்தை அது தரப்போவதுமில்லை. இதுபோன்ற செயல்கள் மக்கள் மத்தியில் அரசின் மீது வெறுப்பையே வளர்க்கும் என்பதை ஆள்வோர் எப்போது உணரப் போகிறார்கள்? உணர்ந்தால் அவர்களுக்கு நல்லது.
(கட்டுரையாளர் குறிப்பு: டி.எஸ்.எஸ். மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

Monday, July 2, 2018

பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!

பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!

பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!
சென்னையிலிருந்து சேலம் செல்லும் சாலை ஒன்றை எட்டு வழியுடன் போடுவதற்காக, இந்திய நடுவண் அரசின் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அரவணைப்பில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியார் அறிவிக்கும்போது அதை ஆங்கிலத்தில் கிரீன் காரிடார் (Green Corridor) என்றார். தமிழில் அப்படியே அதை நேரடியாக மொழிபெயர்த்து (Literal Translation) 'பசுமை வழிச் சாலை' என்றும் அறிவித்துள்ளார். அதையே ஊடகங்களும் ஏற்றுக்கொண்டு அப்படியே குறிப்பிடுகின்றன. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அனைவரும் தமிழில், 'பசுமை வழிச் சாலை' என்றே விளித்து அறிக்கைகள் பறக்கின்றன.
பலருக்கும் "இது எப்படி பசுமை வழிச் சாலை?" என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. அதன் விளைவாக, காடுகளுக்கு மேலே கட்டப்பட்டுள்ள ஒரு மேம்பாலத்தின் படத்தைக் காட்டி, "இதுதானே உண்மையான பசுமை வழிச் சாலை?" என்பதாகவெல்லாம், சமூக வலைதளங்களில் எழுதித் தள்ளுகிறார்கள். இந்தப் புதிய வழித்தடத்திற்கு இது பொருத்தமான பெயர்தானா?
ஆங்கிலத்தில், வணிக மொழியில் ஓர் இடத்தில் உள்ள சாலையை விரிவுபடுத்தப் போகிறார்கள் என்றால், அதை, பிரவுன் ஃபீல்டு புராஜக்ட் (Brown Field Project) என்று அழைக்கிறார்கள். அதேநேரம், ஒரு இடத்தில் புதிதாக ஒரு சாலையை (New Road) போடப் போகிறார்கள் என்றால், அதை, வணிக மொழியில், கிரீன் ஃபீல்டு புராஜக்ட் (Green Field Project) என்று அழைக்கிறார்கள்.
ஆகவே, இங்கே சேலத்திற்குப் போட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு துடிக்கும் சாலை, இதுவரை வயல்களாகவும், மலை ஓரங்களாகவும் இருக்கின்ற, அதாவது, பாதையே இல்லாத தடத்தில் போடப்படும் சாலை என்பதால் இந்தப் புதிய பாதையை, கிரீன் ஃபீல்டு புராஜக்ட் (Green Field Project) என்று அழைக்க வேண்டும். அதன் அர்த்தம் அது, கிரீன் காரிடார் அல்ல (Green Corridor). எனவே, அதன் பொருள், பசுமை வழிச் சாலையும் அல்ல. பச்சைத் தமிழன் என்பதை Green Tamilan என மொழிபெயர்ப்பது அபத்தம் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்!
இங்கே ஆங்கிலத்திற்கு ஆங்கிலமும், ஆங்கிலத்திற்குத் தமிழும் என இரண்டுமே தவறாகக் கையாளப்படுகின்றன. ஓர் உதாரணத்தின் மூலம் இதைத் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். Assault என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் தாக்குதல். ஆனால், தமிழ்நாடெங்கும், அசால்ட் (Assault) என்ற சொல் கேர்லெஸ் (Careless), கேஷுவல் (Casual) போன்ற சொற்களுக்கு இணையாகப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.
அசால்ட் என்பது எப்படியோ மாறுபட்ட பொருளில் புழங்கத் தொடங்கிவிட்டது. ஆனால், ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு இதன் பொருள் தெரியும். ஆனால், Green Corridor என்பது அது உணர்த்தும் பொருளில் மொழிபெயர்க்கப்படாமல் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எனவே, பசுமையைக் குறைக்கும் இந்தச் சாலைக்குப் பசுமை வழிச் சாலை என்ற பொருத்தமில்லாதப் பெயர் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தினால் அசால்ட் என்பது கேஷுவல் என ஆனதுபோல இதுவும் நிலைபெற்றுவிடும். எனவே, ஊடகங்களில் தொடங்கி, அரசியல்வாதிகள், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் உட்பட அனைவருமே இந்த எட்டு வழிச் சாலையை, ‘புதிய சாலை’ என்பதாகக் குறிப்பிடுவார்களா?
(மூத்த ஊடகவியலாளர் பாபு ஜெயகுமார், சென்னைப் பல்கலைக்கழக ஊடகத் துறை அரங்கு கூட்டத்தில் பேசியதன் அடிப்படையில் எழுதப்பட்டது இது.)
- டி.எஸ்.எஸ்.மணி