Thursday, September 9, 2010

மாவோ நினைவு ஒருநாள் மட்டுமா?


செப்டம்பர்-9 ஆம் நாள், உலகம் முழுவதும் மா-சே--துங் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் உலகம் முழுவதும் புரட்சியாளர்கள், சீனப்புரட்சியில் மாவோவின் பங்கைப்பற்றி பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்; பரிமாறிக்கொள்கிரார்கள். ஆனால் இந்தியாவில் இன்று மாவோ என்ற பெயர் அடிபடாத நாளே இல்லை. தாளே இல்லை. அந்த அளவுக்கு மாவோ என்ற சொல் இந்தியாவின் வயல்வெளிகளிலும், மலைகளிலும், காடுகளிலும், அதில் வாழும் பழங்குடியினர் மத்தியிலும், பிரபலமாக இருக்கிறது. அதன்விளைவாக பழங்குடியினரை அடக்குவதற்காக அங்கே சென்றுள்ள மத்திய துணை ராணுவம் மத்தியிலும், மாவோ என்ற பெயர் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் பெயராக இருக்கிறது. அதேபோல மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மத்தியிலும் மாவோ என்ற பெயர் இன்று ஒருவிதமான கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. அவ்வாறு மாவோ ஏன் இன்று இந்திய அளவில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்? சீன நாட்டில் மா-சே-துங் தலைமை தாங்கிய புரட்சி, அந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக வேரூன்றியிருந்த நிலப்பிரபுத்துவத்தை, வேரடி மண்ணோடு பிடுங்கி தூக்கி எறிந்தது. அதுமட்டுமின்றி சீன நாட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த சியாங்-கே-ஷேக் ஆட்சியதிகாரத்தை விரட்டியடித்தது. அதுமட்டுமின்றி சீனாவை ஆதிக்கம் செலுத்த வந்த, ஜப்பான் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மாவோ நடத்திய புரட்சியின் மூலம் ஒரு சுதந்திர சீனாவை உருவாக்கிக்கொடுத்தார். அதனால் அவர் நடத்திய புரட்சி, புதிய ஜனநாயகப்புரட்சி என்று அழைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் இணைத்து நடத்தப்பட்ட புரட்சி என்பதால், சீனப்புரட்சியும் புதிய ஜனநாயகப்புரட்சி என்று அழைக்கப்பட்டது. அதாவது மாவோ முன்வைத்த தத்துவ விளக்கத்தின்படி, நிலப்பிரபுத்துவத்தை அழிக்கும் புரட்சியை, முதலாளித்திவ புரட்சி என்று அழைக்கவேண்டும். சீனத்தில் நடந்தது ஒரே நேரத்தில் நிலபிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கும் புரட்சி என்பதால் இந்த முதலாளித்திவ புரட்சி புதிய வகையானது என்பதால் அதை புதிய ஜனநாயக புரட்சி என்று அழைக்கிறோம் என்றார் மாவோ. அதுமட்டுமின்றி நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு வழமையாக உலகம் முழுமையிலும், முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்டதால், முதலாளித்துவ புரட்சி என்று பெயர் பெற்றது. ஆனால் சீனாவில் நடத்தப்பட்ட புரட்சி, பாட்டளிவர்க்கத்தின் தலைமையில் கம்யுனிஸ்டு கட்சியால் நடத்தப்பட்டதால், அது புதிய ஜனநாயக புரட்சி என்று அழைக்கப்பட வேண்டும் என்று மாவோ கூறினார். அதுவே உலகம் முழுவதும் உள்ள கமயுனிச்டுகளால், காலனி நாடுகளின் புரட்சியில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது அவர்கள் கூற்றுப்படி, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அரசியல் சுதந்திரத்திர்க்கான போராட்டத்துடன், நிலவுடமைக்கு எதிரான ஜனநாயக புரட்சியும் சேரும்போது, அதை பல உலக நாடுகளும் மாவோ வழி என்று பின்பற்றுகிறார்கள்.
அத்தகைய மாவோ வழி, பண்ணை அதிகாரமான நிலவுடமை ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தும் போரை, மக்கள் போர் என்று அழைக்கிறது. அதற்க்கான செயல்தந்திரத்தை, கிராமப்புறங்களை விடுதலை செய்து, நகர்ப்புறங்களை சுற்றி வளைத்து விடுதலை செய்தல் என்பதாக அழைக்கிறது. அதற்க்கான போரை கிராமப்புரங்களிளிருந்து தொடங்குகிறது. அதையேதான் இந்தியாவில் உள்ள மாவோவாதிகளும் பின்பற்றுகிறார்கள்.
அதனால்தான் அவர்கள் முதலில் நக்சல்பாரி என்ற கிராமத்தில், விவசாயிகளை அணிதிரட்டி அங்குள்ள பண்ணைத்திமிங்கிலங்களிடம் உள்ள ஆயுதங்களை பிடுங்கி அதன்மூலம் அங்குள்ள நிலங்களை மீட்டு, அந்த கிராமங்களை விடுதலை செய்தனர். அதையே அவர்கள் ஆந்திராவிலும் பின்பற்றி பல இடங்களை தங்கள் செல்வாக்கிற்கு கீழ் கொண்டு வந்தார்கள். அத்தகைய கிராமப்புற போர்களை, பீகார், ஒரிஸ்ஸா, மேற்குவங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் எழுபதின் தொடக்க ஆண்டுகளில் அவர்களால் செயல்படுத்த முடிந்தது. அதை ஆளும்வர்க்கம் கடுமையாக அடக்கியது. மத்திய அரசின் துணை ராணுவ படைகள், மத்திய சிறப்பு காவல் படை, எல்லை பாதுகாப்பு படை, கிழக்கு எல்லை துப்பாக்கி படை, போன்றவை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு, மாவோவாதிகளை அடக்குவதற்காக பயன்படுத்தப்பட்டன. நாட்டை பாதுக்காக உருவாக்கப்பட்ட துணை ராணுவத்தை எப்படி உள்நாட்டு போரை அடக்க பயன்படுத்தலாம் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும் அத்தகைய விமர்சனகளுக்கு செவிமடுக்காமல், மத்திய அரசு பல மாநிலங்களிலும் நக்சல்பாரிகளை கொன்று குவித்தது. அதன்மூலம் இரு பத்தாண்டுகளுக்கு மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் பிரபலம் அடையாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து வந்தன. இப்போது நிலைமை அப்படி இல்லை. இந்தியாவின் இதயப்பகுதியில் அந்த புரட்சியாளர்களது செயல்பாடுகள் தீவிரம் அடைந்தவுடன், அதுவே நாடெங்கிலும் பெரும் பிரச்சனையாக பேசப்படுகிறது.
இன்றைய இந்தியா ஏன் மாவோவாதிகளுக்கு உகந்த இடமாக இருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டும். மாவோ கூறிய நிலபிரபுத்துவம் இந்திய யதார்த்தத்தில், சாதிகட்டுமானத்துடன் இருக்கிறது. இது மிகவும் கொடியது. சாதிகளது ஆதிக்கத்திற்காக அந்த ஆதிக்க சாதிகளாலேயே, பழமை நிலவுடமை பாதுகாக்கப்படுகிறது. முற்ப்பட்டோர் என்ற ஆதிக்க சாதிகள், தங்கள் கைகளில் உள்ள நில உடமைகளால், தங்கள் அதிகாரத்தை கிராமங்களில் நிறுவிக்கொள்கிரார்கள். அதனால் மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் சமுதாயம் மட்டுமின்றி, மற்ற பிற்ப்படுத்தப்பட்ட சமுதாய மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களும் இணைந்து பண்ணை ஆதிக்க சாதியவாதிகளை எதிர்த்து போராட வருகிறார்கள். அதுதான் பீகார் மாநிலத்தில் யாதவர் சமுதாய விவசாயிகள் கிராமங்களில் மாவோவாதிகளுடன் சேர்ந்திருப்பதற்கு காரணமாக அமைகிறது. அவர்களுடன் கூலி விவசாயிகளாக உள்ள தலித் மக்களும், மாவோவாதிகளின் செம்படையில் இணைந்து செயல்படுகிறார்கள். அதேபோல இந்தியாவில் இன்னொரு சூழல் மாவோவாதிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. கிராமங்களில் உள்ள ஆதிக்க சாதி பண்ணையார்கள், இந்துமத சார்பாகவும் இருக்கிறார்கள். அதனால் முஸ்லிம்களும், கிருத்துவர்களும் அவர்களுக்கு எதிரிகள் போல தோன்றுகிறார்கள். அதவும் மாவோவாதிகளுக்கு சாதகமாக போய்விட்டது. பீகார் மாநிலத்திலும், உத்திரப்பிரதேச மாநிலத்திலும், மாவோவாதிகளின் ஆதரவு அணியில், தலித்துகளுடன், யாதவர்களும், முஸ்லிம்களும் இருப்பதை காண முடிகிறது. அதேநேரம் அவர்கள் இறங்கி வேலை செய்யும் பழங்குடி மக்கள் பகுதிகளில், பண்ணை அதிகாரத்திற்கு பதில் இப்போது கார்பரேட் என்று அழைக்கப்படும் பெரும் வணிக குழுமங்கள் அந்த பழங்குடி மக்களின் எதிரிகளாக இருக்கிறார்கள். அவர்கள் இந்திய அரசுடன் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தங்கள் மூலம், பழங்குடி மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய காடுகள், மற்றும் மலைகளில் உள்ள மூலப்பொருள்களை கொள்ளையடிக்கின்றனர். அதுவே அந்த பழங்குடி மக்களை மாவோவாதிகள் பக்கம் தள்ளிவிட்டது. அதாவது இந்த கார்பரேட்டுகள் எனும் பன்னாட்டு பெருவணிக குழுமங்கள்தான் ஏகாதிபத்தியத்தின் பாத்திரத்தை நேரடியாக வகிக்கின்றன. அதனால் இங்குள்ள ஆதிவாசி கிராமங்களில், ஏகாதிபத்தியவாதிகள் நேரடியாக நில உடமையாளர்களாக அல்லது நில ஆக்கிரமிப்பலர்களாக ஆகிவிட்டதால், இங்கே இதுவே மாவோ கூறியபடி புதிய ஜனநாயக புரட்சியாக மாறிவிட்டது. இவ்வாறு இந்திய யதார்த்தம் மாவோவாதிகளின் தத்துவத்திற்கு ஏற்றவகையில் அமைந்துவிட்டது. ஆகவே இங்கே மாவோ நினைவு என்பது ஒரு நாள் கடைப்பிடிப்பாக இல்லாமல், ஆண்டு முழுவதும் முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும் கடைப்பிடிக்கும் ஒரு நினைவாக மாறிவிட்டது. இந்திய வரலாறு, மாவோயிசத்தை ஏற்றுக்கொள்ளபோகிறதா? அல்லது கார்பரேட் நலன்களை விடுத்து, நாட்டு சுதந்திரத்தை காப்பற்றபோகிறதா?