இலங்கை நாடாளுமன்ற தேர்தல்-2010 முடிவுகள் வெளிவந்துவிட்டன. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, அதிகமான இடங்களைப் பிடித்து, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையி லான ஐக்கிய தேசிய கட்சி, குறைவான இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, அதைவிட குறைவான அளவே வெற்றி பெற்று, தங்கள் கூட்டணியிலுள்ள பிரபல ஜனத விமுக்தி பெரமுணா என்ற கட்சியின் எண்ணிக்கை யை, நாடாளுமன்றத்தில் மிகவும் குறைத்து விட்டது. ஜே.வி.பி.யின் சரிவு ஒரு அதிர்ச்சி தரும் செய்தியாக பதிவாகியுள்ளது. அதே போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் குறைவான அளவில் வாக்குப்பதிவு நடந்தும் கூட, அதிலும் தமிழ் தேசிய கூட்டணி அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டு மொத்தத்தில் அதிபர் தேர்தல் முடிவைப் போலவே, நாடாளுமன்ற தேர்தல் முடிவு களும், மகிந்த ராஜபக்சேயின் அதிகாரத்திற்கு அதிகமான அளவில் அணிகலன்களை ஏற்படுத்தியுள்ளது.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்கும், ஏப்ரல் மாதத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் வித்தியாச மில்லாமல், பெரும்பான்மை மக்களின் பெருத்த ஆதரவு பெற்றவர் மகிந்த ராஜபக்சே தான் என்பதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன், மகிந்தாவிற்கு வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளார். அமெரிக்கா வோ, தனது முன்னாள் இலங்கை தூதரும், இந்நாள் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சருமான ராபர்ட் பிளேக் மூலம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. அதில் அதிபர் ராஜபக்சேயின் நிர்வாகம் தமிழர்களை போய் எட்ட வேண்டும் என்பது முக்கியமானது என்றும், எதிர் கால நம்பிக்கையும், வாய்ப்பு களும் கிடைக்கின்ற வாழ்க்கை தங்களுக்கு கிட்டும் என தமிழர்கள் உணர வேண்டி யது கட்டாயத் தேவை என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இவையெல்லாம் ஏன் நடக்கின்றன? ஒரு தேர்தல் மட்டுமல்ல, இரண்டு நாடு தழுவிய தேர்தல்களை நடத்திக் காட்டி அதன் மூலம் பெருவாரியான மக்களின் வாக்குகளை பெற்றதாக ஒரு பதிவையும் உலகுக்குக் காட்டி, தேர்தல் முறையிலான நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையிலே வலுவான மக்களாட்சியை நடத்துவதாக மகிந்தா இதன் மூலம் நிரூபித்திருப்பதால், இத்தகைய அணுகுமுறைகள் உலக நாடுகளிலிருந்து வருகின்றன. உண்மையில் மேற்கண்ட வாழ்த்துகளுக்கோ, பாராட்டுக்களுக்கோ, எதிர்பார்ப்புகளுக்கோ உரித்தான ஒரு ஆட்சி தான் மகிந்தா தலைமையில் நடக்கிறதா? என்பதை நிதானமாக பரிசீலிக்க வேண்டும். நிச்சயமாக தமிழ் கூறும் நல்லுலகம் அப்படி எண்ணிப் பார்க்கவில்லை. தங்கள் வரலாற்றி லேயே இந்த அளவுக்கு தமிழின அழிப்பு நடத்திய ஆட்சியைக் கண்டதில்லை என்பது தான் அதனது தீர்ப்பு. தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை எந்த விதத்திலும் ஏற்காத, எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காத, அதற்காக குரல் கொடுப்பவர்களை எத்தகையவர் களானாலும் கழுத்தை நெறிக்க தயங்காத ஒரு சிங்களப் பேரினவாத ஆட்சிதான் மகிந்தாவின் ஆட்சி என்பதில், எள்ளளவும் உலகத்தமிழர்களுக்கு சந்தேகமில்லை.
அப்படியானால் இன்று குறிப்பிட்ட உலக நாடுகள், மகிந்தாவை மட்டுமின்றி அவரது நிர்வாகத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, அங்கீகரிக்கக் கூடிய, ஆதரிக்கக்கூடிய சூழ்நிலை ஏன் வந்தது. உலகம் முழுவதும் தேர்தல் மூலம் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாடாளுமன்ற ஆட்சி முறைதான், நாகரீக உலகத்தின் ஜனநாயக பாதையில் முன்னேறிய அணுகு முறை என்ற கருத்து நிலவிக் கொண்டிரு க்கிறது. இந்த கருத்துருவாக்கம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றா? அல்லது உண்மையிலேயே தேர்தல் வழியிலான நாடாளுமன்ற ஜனநாயக பாதை நாகரீகமான முன்னேறிய ஒரு முறையா? அல்லது முன்னேறியதாக இருந்த, நாகரீகமாக செயல்பட்டு வந்த அத்தகைய முறையையும், முறை கேடாக அதிகாரத்தை பயன்படுத் துவோர் இப்போது விபத்துக்குள்ளாக்கி விட்டார் களா?
குஜராத் மாநிலத்தில் 3000 முஸ்லிம் சிறுபான்மையினரை படுகொலை செய்து, இன அழிப்பு நடவடிக்கையை தலைமை தாங்கியதாக, நரேந்திர மோடி குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் மாநில சட்ட மன்றத் திற்கான தேர்தல் வந்தபோது, அவரே அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியும் பெற்றார். அப்படியானால் சிறுபான்மை மக்கள் மீது இன அழிப்பு வன்முறையை அல்லது போரை நடத்திய தலைவர்களை, பெரும்பான்மை மக்கள் இனவெறி உணர்வு கொண்டு ஆதரிக்கிறார்களா? இதுதான் குஜராத்தின் மற்றும் இலங்கையின் பாடம் என்பதாக கற்றுக் கொள்ளப்போகிறோமா?
அப்படியானால் மதச்சிறுபான்மை, தேசிய சிறுபான்மை ஆகியோர் பாதிக்கப்படும் ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில், அவர்களுக்கும் சேர்த்து ஜனநாயகத்தை ஏற்படுத்துவது எந்த முறையில் சாத்தியம்? மேற்கூறப்பட்ட தேர்தல் முறையிலான மக்கள் பிரதிநிதி களை தேர்வு செய்து, அப்படிப்பட்ட சமத்துவத்தை ஏற்படுத்த முடியாது என்பது போல, மேற்கண்ட இரு உதாரணங்களும் சாட்சியம் கூறுகின்றனர். கூட்டமைப்பு என்ற ஒரு அரசு கட்டமைப்பில், சிறுபான்மை யினருக்கு உரிய பாதுகாப்பு இருக்கும் என்று கூறலாமா? ஒற்றை யாட்சி முறைதான் இலங்கைக்கு சிறந்தது என்று அறிவித்த மகிந்தா, அதற்கு உட்பட்டு செயல்பட, மேற்கண்ட தேர்தல்களை பயன்படுத்தியுள் ளார். மியான்மர் நாட்டில் நடந்து வரும் ராணுவ ஆட்சியாளர்களும், திடீரென நாடாளு மன்ற தேர்தலுக்கான ஏற்பாட்டை செய்ய ஒப்புக்கொண்டார்கள். அதே சமயம் வலுவான எதிர்கட்சியான தேசிய ஜனநாயகத்திற்கான லீக் என்ற சூ கி யூவின் கட்சியை நிற்கவிடாமல் தடங்கல் செய்தார்கள். அந்த கட்சியும் தேர்தலை புறக்கணித்தது. இதன் மூலம் ராணுவ ஆட்சியாளர் தேர்தல் பாதையில் வெற்றி பெற்றால் அது ஏற்கக் கூடியாதா? மேற்கண்ட மூன்று விதமான சோத னைகளும் தெற்காசிய வட்டாரத்தில், மறு பரீசிலனை யைக் கோருகின்றன.
சர்வாதிகாரமும், ஏதேச்சதிகாரமும், இன்றைய காலகட்டத்தில் புதிய முகங் களோடு பரிணமிக்கின்றன என்பதாக எடுத்துக் கொள்ளலாமா? அதாவது தேர்தல் முறையில், மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக் கும் முறையிலேயே, தங்களது சர்வாதிகார, ஏதேச்சதிகார கும்பல் மூலம் அதிக அதிகாரங்களை கைப்பற்ற முடியும் என்ப தாக இந்த சோதனைகள் காட்டுகின்றன. இத்தகைய சர்வாதிகாரிகளுக்கு, தங்களது எதிரிகளான சிறுபான்மை இனம் மட்டுமே பகையாளிகள் அல்ல. தங்களது இனஅழிப்பு போரிலே பங்கு கொண்டாலும், அதிகார பகிர்வில் தங்களுடன் போட்டி போடவந்த
சொந்த இனத்தவரையும் எதிரியாகவே கருதுகிறார்கள். அதுதான் சரத்பொன் சேகா விசயத்தில், மகிந்தா காட்டிய அணுகுமுறை.
அந்தக்காலத்தில் ஆட்சியாளர்களைப் பற்றி கூறும்போது, அவர்கள் கேரட்டும், குச்சியும் என்ற கொள்கையை பின்பற்று பவர்கள் என்று கூறுவார்கள். அதாவது குதிரை வண்டியை ஓட்டுவதற்காக, குதிரைக்கு முன்னால் கேரட்டைக் கட்டி, அதைக் காட்டியே ஓட விடுவதும், கையில் குச்சியுடன் அவ்வப்போது அடித்து ஓட விடுவதும், மக்களிடம் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற தந்திரம் என்பதே அதற்குப் பொருள். ஆனால் இப்போது நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, ஆட்சியாளர் களுக்கு கேரட் தேவையில்லை. குச்சி மட்டும் போதும். மிரட்டியே அனைத்தையும் முடித்துக் காட்ட திறமை இருக்கிறது. உதாரணமாக தனது ஆட்சிகாலத்தில் 13வது சட்டத்திருத்தம் பற்றி பேசியே, பிராந்திய கவுன்சில்களுக்கு அதிகாரம் என்ற இனிப்பு பண்டத்தை காட்டியே, செயல்படுத்தாமல் மகிந்தாவால் நீடிக்க முடிந்தது. அனைத்து நாட்டு அளவில் போர்க் குற்றங்கள் பற்றி கடுமையாக குற்றம் சாட்டி வந்தபோதும், உள்ளூர் மக்களின் வாக்குகளை பெறுகின்ற தந்திரத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கனவே மகிந்தா இலங்கையின் நிர்வாக அதிபர் கட்டமைப்பை தனது கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கிறார். இன்னமும் 11 ஆண்டுகள் அவரது ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதை வைத்தே தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடாதா என்ற பலவீன மான குரலும், உலகத்திலிருந்து எழுந்து கொண்டிருக்கிறது. எந்த முறையில் இத்தகைய புதிய முகமூடியை கிழித்தெறிய முடியும் என்கிற சிந்தனையும் உலகத் தமிழர்கள் மத்தியில் உருவாகி வருகிறது. சிறுபான்மை இனத்திற்கு விடுதலை என்பது கருவி ஏந்தி மட்டும் தான் காணப்பட வேண்டுமா? வேறு ஜனநாயக வழி முறைகள் உருவாக்கப்பட முடியுமா? இதுதான் இன்று தமிழர்கள் மத்தியில் உள்ள கேள்வி.
Sunday, April 11, 2010
Subscribe to:
Posts (Atom)