ஆகஸ்ட் 2 ஆம் நாள் "முரசொலி" ஏட்டில்,திமுக தலைவர் கலைஞர் எழுதிய
கடிதத்தில், பத்து நாட்கள் கழித்து நடைபெறவுள்ள "டெசோ" மாநாட்டின் "மையக்
கருத்தை விளக்கும் கையேடு" என்று "தீம் பேப்பரை" குறிப்பிடுகிறார். அதே
கடிதத்தில் 29 -07 -2012 தேதியிட்ட "தினமலர்" ஏட்டை மேற்கோள் காட்டி, இலங்கை
தீவை "சீனா" பங்கு போடுகிறது என்றும், "அம்பாத்தோட்டம்" துறைமுகத்தை
செல்வாக்கு செலுத்துகிறது என்றும், அதனால் "தனுஷ்கோடி" அருகே இலங்கை கடல் படை
முகாம் அமைக்க இருக்கிறது என்றும், ஆகவே ராமேஸ்வரம் மீனவர்களுக்கு
"ஆபத்து"எனவும், அதுபற்றி "டெசோ" மாநாடு ஆய்வு செய்யும் என்றும்
எழுதியுள்ளார். சீனா இலங்கை தீவை தனக்கு "சந்தையாக்கி" கொள்வதை எந்த நேரத்தில்
எழுதியுள்ளார்? இந்தியாவிலிருந்து அதன் மத்திய அமைச்சரவையில் இருந்து அதன்
வணிக அமைச்சர் "ஆனந்த சர்மா" இருபத்தைந்து அதிகாரிகளுடன் கொழும்பு சென்றுள
நேரத்தில் இதை குறிப்பிடுகிறார். அதுவும் "இந்திய வணிக கண்காட்சியை"
கொழும்பில் ஆகஸ்ட் 3 முதல் மூன்று நாட்களுக்கு நடத்த அந்த அமைச்சர்
சென்றுள்ளார் என்பது அறிந்து இதை எழுதுகிறார்.
அந்த கண்காட்சியில் 108 இந்திய முதலாளிகளின் பெரும்
நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன என்பது தெரிந்த் பிற்பாடு இதை
எழுதுகிறார்.அதுவும் அமைச்சர் ஆனந்த சர்மா,இலங்கை அரசத் தலைவர் ராஜபகசேவை
சந்திக்க இருக்கிறார என்று தெரிந்த பிறகு இதை எழுதுகிறார். அப்படியானால் இந்த
நேரத்தில் இப்படி ஒரு கடிதத்தை உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் எழுதக் காரணம்
என்ன? இலங்கை தீவை சந்தையாக்க துடிக்கும் சீனாவை எதிர்த்து அதை இந்திய
முதலாளிகளின் "சந்தையாக்க" எண்ணியே அவர் எழுதியுள்ளார் என்பதைத் தவிர வேறு
என்ன இருக்க முடியும்? சரி.கருணாநிதி காங்கிரசுடன் சேர்ந்து மத்திய அரசில்
"ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்" இருக்கிறார். அதனால் அப்படித்தான் சிந்திக்க
முடியும். அதற்காகத்தான் எழுத முடியும். அதை ஏன் "டெசோ" மாநாடு பற்றிய தனது
கடிதத்தில் எழுதினார்? அவருக்கு தமிழக மீனவர்கள் மீது அப்படி ஒரு "அக்கறை".
அதனால்தான் எழுதினார் என்றே வைத்து பார்த்தாலும் அதுவும் எடுபடவில்லை. ஏன்
என்றால் அவர் குறிப்பிடும் "தனுஷ்கோடி" பகுதியில் "இந்திய கடல்படை முகாம்"
ஒன்று அமைக்க வேண்டும் என்று, மீனவர்களை காப்பாற்றும் பெயரில் அவர்கள் அந்த
"டெசோ மாநாட்டு மையக் கருத்து கையேட்டில்" "பரிசீலனக்கான பரிந்துரைகள்" என்ற
தலைப்பில், "பத்தாவது" கோரிக்கையாக எழுதியுள்ளார்கள்.. அதாவது அந்த 'கையேடு"
ஆங்கிலத்திலும், தமிழிலும்,அவரே இன்றைய கடிதத்தில் சொல்வது போல, ஜூலை 16 ஆம்
நாளே :ஊடகங்களுக்கு" கொடுக்கப்பட்டு விட்டது. அதாவது அந்த கையேடும், அதிலுள்ள
"தனுஷ்கோடி கடல்படை முகாமும்" முன்பே திட்டமிடப்பட்ட டில்லியின் திட்டங்கள்.
அதிலேயே அந்த "கை ஏட்டிலேயே"அவர்கள் "தனுஷ்கோடி கடல்படை முகாம்"பற்றி எழுதி
வெளியிட்டு விட்டு, ஏதோ தங்களுக்கு சம்பந்தம் இல்லாத தினமலர் ஏட்டில், ஜூலை 29
ஆம் நாள் வெளியிடப்பட்ட செய்தியை வைத்து பேசுவது போல ஏன் பேசவேண்டும்? தங்களது
திட்டம் ஒன்று, உடன்பிறப்புகளுக்கும் , பொதுமக்களுக்கும், யதார்த்தத்தில்
ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரியவேண்டும் என்பதைத் தவிர வேறு எப்படி
இருக்க முடியும்?
அதுவும் ஏன் அவர் "தினமலர்" ஏட்டை மேற்கோளுக்கு எடுக்க
வேண்டும்? இதேபோல மூன்று வாரங்களுக்கு முன்பே கலைஞர் அவர்கள், இதே முரசொலி
ஏட்டில், தனது கடிதத்தில்,"தினமணி" ஏட்டை மேற்கோள் காட்டி இதே சீனாவின்
செல்வாக்கு சிங்களத் தீவில் வளர்வதை சுட்டிக் காட்டியிருந்தார். வழக்கமாக
"தினமணி , தினமலர்" ஏடுகளை "அவாள்" ஏடுகள் எனச்சாடும் கலைஞர் அவர்கள், அந்த
ஏடுகளை "அதிமுக சார்பு" ஏடுகள் என வசைபாடும் கலைஞர் இப்போது, இந்திய அரசின்
"மறைமுக" திட்டங்களை அமுல்படுத்த அந்த ஏடுகளிடம், "அடைக்கலம்" தேடி செல்வது
ஏன்? அப்போதுதான் தங்களது திட்டம் எதிர்தரப்பாலும் சுட்டிக் காட்டப்டுகின்றன
என்பதை அவர "நிரூபிக்க" முடியும். ஆனால் அந்த குறிப்பிட்ட ஏடுகள் தங்களது
"டில்லி விசுவாசத்தை"என்றைக்குமே மாற்றிக் கொண்டவர்கள் அல்ல. செல்வி.ஜெயலலிதா
தனது சட்டமன்ற தீர்மானத்தில், இலங்கை அரசு மீது, "பொருளாதாரத் தடைகளை"
அறிவிக்க டில்லிக்காரர்களை கேட்டுக் கொண்டதும், அதையே திரும்ப, திரும்ப
சொல்லிவருவதும், நடக்கும் வேளையிலே, ராஜபக்சே அரசுடன் "வணிக உறவுக்கு"
அழுத்தம் தரும் ஒரு இந்திய அரசில் அங்கம் வகிக்கும் கலைஞர், கொழும்பில்
கண்காட்சி நடக்கும் நேரத்தில், "இந்திய முதலாளிகளின் சந்தைப் போட்டி எதிரியான
சீனாவை" பற்றி குறிப்பிடுவதும், அதற்கு மேற்கண்ட ஏடுகளையே மேற்கோள்
காட்டுவதும், ஒரு திட்டமிட்ட "பொருளாதார லாபம்" தேடும் முயற்சிதானே தவிர ,
அதில் "ஈழத் தமிழர் நலனோ, தமிழக மீனவர் நலனோ" சிறிது கூட இல்லை.
அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள் தங்களுக்கு
தொல்லை தரும் சிங்கள கடல்படைக்கு, சற்றும் குறையாமல் "இந்திய கடல் படையும்,
கடலோர காவல் படையும்" செயல்படுவதை பல முறை எடுத்து கூறிவிட்டனர். அவர்களது
"தொல்லைகள்" அடையாள அட்டை விநியோகத்தில் தொடங்கி, சுதந்திர நடமாட்டத்தை
தடுத்தல், மற்றும் மீனவ பெண்களின் சுதந்திரத்தில் தலையிடல் வரை நீண்டு வருவதை
நன்கு உணர்ந்தவர்களாக மீனவர்கள் இருக்கிறார்கள். அந்த மீனவர்கள் கலைஞரையோ,
அவர் அங்கம்வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையோ, இந்திய கடல் படையையோ,
நம்புவதாக இல்லை. ஆனாலும் அந்த மீனவர்களது பெயரைச் சொல்லி, தனுஷ்கோடி கடல்படை
முகாமில் தொடங்கி, அந்த கடல்பகுதியை "ராணுவ பயன்பாட்டிற்கு" ஒப்படைக்க எண்ணும்
"தெற்காசிய ராணுவ வியூகம்" அதில் அடங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட தெற்காசிய
ராணுவ வியூகத்தை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த "அமெரிக்கா" முற்படுவதையும்
நாம் இங்கே கணக்கில் எடுத்து பார்க்க வேண்டும். ஆகவே "டெசோ"மாநாடு இந்திய
அரசின் இலங்கை சந்தைக்கு மட்டுமின்றி, அமெரிக்கா--இந்திய கூட்டு ராணுவ
வியூகத்தை "இந்தியப் பெருங்கடலில்" ஏற்படுத்துவதற்கும், ஒரு களம் அமைத்து
தரும் என்பதே அவர்களது நோக்கம்.
இந்த டெசோ மாநாட்டு கையேடு "அரசியலற்றதாக" இருக்கிறது.
அதாவது, "தமிழீழம்" ப்ற்றி இந்த மாநாடு பேசாது என்பதுதான் வெளிப்படையாக
வெளிவந்தது. ஆனால் இந்திய அரசு வழக்கமாக பேசிவரும் "1987 இன்
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்" பற்றியோ, டில்லி பேசும் 13 வது அரசியல் சட்டத்
திருத்தம் பற்றியோ, வடக்கு-கிழக்கு பகுதிகளை ஒன்றுபடுத்துவது பற்றியோ" இந்த
டெசோ கையேடு பேசவில்லை. சிங்கள காலனியாக்கம் வடக்கே நடப்பதை, மனித உரிமை
பாணியில், வடக்கே சிங்களர்களது குடியேற்றம் பற்றி எடுத்து சொல்லும் இந்த டெசோ
கையேடு, "வடக்கு-கிழக்கு பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்றுவது"
என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் கூற்றைகூட கூறவில்லை. ஆனால் ஒரு மணிநேரம் மாவே
சேனாதிராசாவுடன் பேசிய கலைஞர் "உங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வழியைத்தான்
டெசோ மாநாடு பின்பற்றும்" என்று கூறியாதாக சுமந்த்ரன் எம்.பி. நியு இந்தியன்
எக்ஸ்ப்ரஸ் ஏட்டிற்கு நேர்காணல் கொடுத்துள்ளார். டி.ஏன்.ஏ. நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள டில்லி அதிகாரிகளது "பச்சைக்கொடி"
மாநாட்டில் கலந்து கொள்ள கிடைத்த்து தெரிகிறது.
இதற்கிடையே "நூறு" கல்வியாளர்களது கையெழுத்துடன், மன்னார்
பேராயர் ராயப்பு சோசப்பு முதல் கையெழுத்திட, ஒரு மனு, டி.ஏன்.ஏ. நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு அனுப்பபட்டுள்ளது.அதில் " ஒற்றையாட்சி இலங்கையில்
இருக்கும்போது, எப்படி பிராந்திய கவுன்சில்" தேதல்களில் கலந்து கொள்ள
முடியும்?என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு கேள்விகள்
எழுந்துள்ளபோது, எதையுமே எடுத்து சொல்லாத "அரசியலற்ற" கையேடு யாரால், எதற்காக
இந்த டெசோ மாநாட்டிற்கு தயார் செய்யப்பட்டது? தெளிவாக இந்திய வெளிவிவகாரத்
துறையின் உளவுத துறையான "ரா" என்ற அமைப்பின் கைவரிசைதான் எனப் புரிந்தாலும்,
எதற்காக அவர்கள் இந்த நேரத்தில் இப்படி ஒரு மாநாட்டை கூட்ட சொல்லவேண்டும்?
ஒருபுறம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ்-திமுக கூட்டணியை
வெற்றிபெற வைக்க "ஈழத் தமிழர் ஆதரவு" வாக்குகள் தேவை என்பது, சென்ற
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தரும் படிப்பினை அப்படி ஒரு நெருக்கடி
திமுகவிர்க்கோ, கான்கிரசிர்க்கோ, இருக்கலாம். அனால் "ரா" என்ற உளவுத் துறைக்கு
என்ன நிர்ப்பந்தம்?
நீண்டகாலமாக இலங்கை பிரச்சனையில், அமெரிக்கா, இந்தியாவையே
சார்ந்து நின்று, இலங்கையை கையாண்டு வந்தது. அல்லது கண்காணித்து வந்தது.
அது வன்னிப்போர் துவக்குகளை மவுனித்த பிறகு, அமேரிக்க அரசு பிரமுகர்களால்
பகிரங்கமாக கூறப்பட்டது.ஆனால் சமீபத்தில் அமேரிக்க தலைவர்கள், அதாவது
அய்.நா.மனித உரிமை கவுன்சில் தீர்மானத்திற்கு பிறகு, நேரடியாக இந்திய உதவியை
பெறாமலேயே ராஜபக்சே அரசை கையாள தொடங்கி விட்டனர். அது ஹிலாரி கிளிண்டன்
நேரடியாக ராஜபக்சேவை தொடர்பு கொண்டு, "பொன்சேகாவை" விடுதலை செய்ய சொன்னதும்,
அதை ராஜபக்சே உடனே நிறைவேற்றியதையும் கவனித்தால் புரிய முடியும்.கொழும்பில்
உள்ள ஆட்சியாளர்களுக்கும், நேரடியாக வாஷிங்க்டனுடன் தொடர்பு என்பது
இனிக்கிறது என்று டில்லி கண்டு கொண்டது. ஏற்கனவே கோத்தபாயே, பசில், பொன்சேகா
ஆகியோர் அமேரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதை நாம் நினைவில் நிறுத்திக்
கொள்ள வேண்டும்.
இந்த சூழலில் கொழும்பு, மன்னார் மாவட்ட சம்பூர் அனல்
மின் நிலையத்தை இந்தியாவிற்கு தர ஒப்புக்கொண்டு, பிறகு இலங்கை மாறுகிறது என்ற
பேச்சு வந்துவிட்டது. இந்தியாவிடம் ஒப்புக் கொண்ட ஐம்பதாயிரம் வீடுகள் கட்டும்
திட்டமும் அப்படியே நிற்கிறது. இதற்கெல்லாம் இந்திய அரசு இலங்கை அரசை
"நெருக்கடி" கொடுத்தே வழிக்கு கொண்டுவரவேண்டும் என நினைப்பது, ஒரு " பெரிய
சகோதர மனோபாவம்தான்". அது இந்திய அரசுக்கு உண்டு என்பதில் இரண்டு கருத்து
இருக்க முடியாது. அதற்காகத்தான் "ரா"அமைப்பு, ஒரு டெசோ வேண்டும் என்று
நினைக்கிறது.அதேநேரம் வருகிற நவம்பரில் அய்.நா.மனித உரிமை கவுன்சிலில்,
ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எந் அளவுக்கு இலங்கை அமுல்படுத்தியது
என்று கேள்வி கேட்கும் கூட்டம் நடக்க இருக்கிறது அதற்கு இந்தமுறை
கூட்டத்தளைமையாக அமரப்போவது இந்திய அரசு.அதனால் அதை கூறி இலங்கையை
நிர்ப்பந்திக்கலாம். அதற்காகவே இந்திய "தேசிய புலனாய்வு கழக" ஆலோசகரான
சிவசங்கர் மேனன் ஜூன் இறுதியில் கொழும்பு சென்று வந்தார்.
அதேசமயம் அந்த டெசோ மாநாட்டை ஏன் ராஜபக்சே பெரிதாக
"அலட்டிக் கொள்ளவில்லை?" இந்த டெசோ மாநாடு ராஜபக்செவிர்க்கும், ஒரு விதத்தில்
"நன்மை" பாவிக்கிறது. எப்படி? சமீபத்தில் ராஜபக்சே லண்டன் சென்று தமிழர்களின்
எதிர்ப்பை பெற்று திரும்பியது ஏன்? எதிர்ப்பு இருக்கும் எனத் தெரியும்போது ஏன்
சென்றார்? ஏற்கனவே லண்டனில் பல்கலை கழக உரை நிகழ்த்த முடியாமல் திரும்ப
ஓடிவந்ததை ஏன் மறந்தார்? அவர் மறக்கவில்லை.இந்த முறையும் எத்ரிப்பு இருக்கும
என்பது அவருக்கு தெரியும். பிறகு ஏன் போய் திரும்பினார்?
தென்னிலங்கையில் இப்போது அல்லது சமீபத்தில் ராஜபக்செமீது
சிங்களர்களின் கோபம் கூடி வருகிறது.அதுவும் அமேரிக்க நிர்ப்பந்தத்தில்
பொன்சேகாவை விடுதலை செய்தபிறகு, அந்த "ராஜபக்சே எதிர்ப்பு சிங்களர்கள்"
பொன்சேகா பின்னால் "திரள"தொடங்கி விட்டார்கள். அதை எப்படி உடைப்பது? அமேரிக்க
"தேர்வான" பொன்சேகாவை எப்படி ஓரங்கட்டுவது ? அதற்காகவே தமிழர்களின் எதிர்ப்பை
நேரில் சந்தித்து, தென்னிலங்கை சிங்களர் மத்தியில் தனக்கு இருந்த
எதிர்ப்பையே "ஆதரவாக"மாற்றி விட்டார் ராஜபக்சே. அதேபோல இந்தியாவில்
காங்கிரசின் கூட்டணியான திமுக "டெசோ"நடத்தி காங்கிரசிற்கு உதவும்போது, அந்த
டெசோவிற்கு, "எதிர்ப்பு" தெரிவித்து இலங்கையில் ராஜபக்சே வின் கூட்டணி
கட்சியான "ஜாதிக உறுமைய", அதன்மூலம் ராஜபக்சேவிற்கு உதவுகிறது. இதன்ப்மூலம்
சிங்களர்கள் மத்தியில் ராஜபக்சே வின் "ஆதரவு" கூடும் என்பதே அவர்களது
எதிர்பார்ப்பு. இவ்வாறு ஒவ்வொரு "அசைவும்" அரசியலாக நடக்கும்போது, "அரசியலற்ற"
ஒரு "கையேடு" வைக்கும் "கை" கள், "கை" சின்னத்தார் தவிர வேறு யார்?
இந்த நேரத்தில் ஒன்றை நாமும் நினைவு படுத்தி கொள்ள வேண்டும்.
அதை நமக்கு "இந்திய அமைதி காக்கும் படையின்" ராணுவ உளவுத்துறை தலைவராக இருந்த
கேப்டன் ஹரிஹரன் நினைவு படுத்தி உள்ளார். அதாவது கடந்த ஜூலை 29 ஆம் நாள்
எனபது, இந்திய ராணுவம் ஈழத் தமிழர் பகுதிக்குள் நடத்திய "ராணுவ தலையீட்டின்"
இருபத்தைந்தாம் ஆண்டு நினைவு நாள்.அதை அவர் "தி ஹிந்து" ஆங்கில நாளேட்டில்
கட்டுரையாக எழுதியுள்ளார். "இந்திய ராணுவ தலையீடு" என்ற சொல்லை பயன்படுத்தி
உள்ளார். அதமூலம் நமக்கு அந்த "கொடுமை நாட்களை" நினைவு படுத்தி விட்டார்.
ஆகவே முதலில் ஈழத் தமிழர்கள் மீது "இன அழிப்பு போரை" நடத்தியது இந்திய அரசே
என்பதை நாம் நினைவு படுத்த அதுவே நல்லதொரு சான்று.