சாதி கணக்கெடுப்பையும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் இணைத்துக்கொள்ளுமாறு இந்திய மக்களின் பெரும்பான்மையோர் குரலாக, பல பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் அடித்தளம் கொண்ட அரசியல் கட்சிகள் சத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் மத்திய அமைச்சரவை செவி மடுத்ததாகத் தெரியவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இந்த நாட்டில் மிக முக்கியமான ஒரு தேவையாக உள்ளது. எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மக்கள் தொகையை கணக்கெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதிலும் வளரும் நாடுகளில் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதன்மூலம், அந்த நாட்டு மக்கள் மத்தியில் உள்ள வறுமை, வேலையின்மை, அத்தியாவசிய பொருள்கள் இன்மை, குடிநீர் வாய்ப்புகள், கழிவு நீர் ஏற்பாடுகள், வீடுமனை வாய்ப்புகள், இன்னபிற வசதிகள் இன்மை பற்றிய ஒரு சரியான புள்ளிவிவரம் கிடைக்கப்பெறும். அதன்மூலம் ஒரு அரசாங்கம் தனது மக்களில் எத்தனை பேருக்கு தான் போட்டிருக்கின்ற நல்வாழ்வு திட்டங்கள் அந்த மக்களிடம் போய் சேர்ந்தது என்று கணக்கு பார்த்துக்கொள்ள முடியும், அப்படி போய் சேராத நல்வாழ்வு திட்டங்களை குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறிப்பிட்ட மக்களிடம் சென்று சேர்வதற்கு ஒரு அரசு ஏற்பாடு செய்ய முடியும். இவ்வாறு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு அரசாங்கத்தின் அடிப்படையான தேவையாக அமைகிறது. அப்படி அமைகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பில் இப்போது உள்ள மத்திய அரசாங்கம், எவ்வளவு தூரம் அக்கறையுடன் இருக்கிறது என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி வாரியான கணக்கெடுப்பை சேர்க்க வில்லை என்பதே இப்போது எழும்பியிருக்கும் முக்கிய சர்ச்சை. இது ஏன் சர்ச்சைக்குள் ஆக்கப்பட்டுள்ளது என்பது கேள்வியாக இருக்கிறது. ஏற்கனவே இந்திய நாட்டில் 1931 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அப்போது இந்தியாவை ஆண்டுவந்தது, ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவேண்டிய தேவையை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பது தெரிகிறது. அத்தகைய உணர்தலைக்கூட இப்போது ஆண்டுவரும் இந்திய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டுள்ளார்களா என்பது இப்போது கேள்விக்கு உள்ளாகி உள்ளது. அந்த அளவுக்கு சாதிவாரி கணக்கெடுப்பில் என்ன முக்கியத்துவம் உள்ளது? சாதிவாரி கணக்கெடுப்பு என்பது பிற்போக்கானதா? சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதனால் சாதிகள் வளர்ந்துவிடுமா?
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காவிட்டால் சாதிகள் ஒழிந்துவிடுமா? இப்படிப்பட்ட கேள்விகளை நாம் எழுப்பி பதில் காணவேண்டும். ஏன் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று லாலு யாதவும், முலாயம் யாதவும், சரத் யாதவும், நாடாளுமன்றத்திலும் , மக்கள் மன்றத்திலும் தொடந்து குரல் எழுப்பி வருகின்றனர். இதை மூன்று யாதவர்களின் குரல் என்று ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஏன் இந்த யாதவர் தலைவர்கள் இப்படி குரல் எழுப்புகின்றனர்? சென்னையில் சமீபத்தில் பா.ம.க. நடத்திய ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. .அது சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்பதற்காக நடத்தப்பட்டது. அதில் லாலு பிரசாத் யாதவை அழைத்துவந்திருந்தார்கள். அந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது பா.ம.க. நிறுவனத்தலைவரான டாக்டர் ராமதாஸ் ஒரு செய்தியை கூறினார். அதாவது இந்திய மக்கள் தொகையில் தலித் மக்களுக்கு அடுத்தபடி இரண்டாவது அதிகமான அளவில் இருப்பது யாதவர்கள்தான் என்பதை நிரூபிக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு கேட்க வில்லை என்றும், தமிழகத்தில் தலித் மக்களுக்கு அடுத்து இரண்டாவதாக இருப்பது வன்னிய மக்கள்தான் என்பதை நிருபிப்பதற்காக நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை கேட்கவில்லை எனவும் கூறினார். அதாவது தாங்கள் கேட்பது எல்லா சாதிகளுக்கும் அவரவர் மக்கள் தொகை எவ்வளவு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக என்று தெரிவித்தார். அதற்கு ஏற்றாற்போல அந்தந்த சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்பதை விளக்கினார். இது இன்றைய இந்தியாவில் அடிப்படையான ஒன்று என்பது நமக்கும் புரிகிறது.
அதேநேரத்தில் இன்னொரு செய்தியையும் ராமதாஸ் அங்கே நமக்கு கூறியுள்ளார். அதாவது இந்திய நாட்டில், யாதவர்கள் தலித்துகளுக்கு அடுத்தாற்போல் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்டவர்களாக உள்ளார்கள் என்பதே அந்த செய்தி. இது இந்திய நாடு தழுவிய செய்தி என்பதால், தமிழ் நாடும் அதற்குள் அடங்கவே செய்யும். அப்படியானால் தமிழ்நாட்டில், யாதவர் மக்களின் நியாயமான இட ஒதுக்கீட்டுக்காக போராடும் இயக்கங்களின் கோரிக்கையும் இங்கே உறுதிசெய்யப்படுகிறது. ஆகவே இதுவரை சரியாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படாத சாதிகளுக்கும் சரி, அதை ஒட்டி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒதுக்கீடு கல்வியில், வேலைவாய்ப்பில், மற்றும் அரசியலில் கிடைக்காத நிலமையும்சரி, இந்த சாதிவாரி கணக்கெடுப்பை சார்ந்துதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளில், ஆளும் பிற்படுத்தப்பட்டோர், ஆளப்படும் பிற்படுத்தப்பட்டோர், என்ற ஒரு நிலைமை இருக்கிறது.இங்குஏகப்பெரும்ப்பான்மையானவர்கள் நிலம் வைத்துக்கொண்டு இருக்கும் ஒரு சாதியான கொங்குவெள்ளாளர் என்ற சாதியினர், முற்பட்டோரின் வாழ் நிலைக்கு சென்றபோதும், அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பாட்டிலில் சேர்த்துள்ள நிலைமை உள்ளது. இவ்வாறு இருக்கும் யாதார்த்த நிலைமையை, அமுலாகும் இட ஒதுக்கீடு பிரதிபலிக்காமல், கிடைக்கவேண்டிய சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் இருக்கின்ற ஒரு நிலைமையை மாற்றி அமைக்க, இந்த சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக உதவும். ஆளப்படும் பிறபடுத்தப்பட்டோர் என்று நாம் வர்ணிக்கும் சாதிகளில் யாதவர் உட்பட பல சாதிகள் வருவார்கள். அதேபோல மிகவும் பிற்படுத்தபட்டோரில், ஆளப்படும் சாதிகளாக முத்தரையர்களும், மீனவர்களும் இன்ன பிறரும் வருவார்கள். இவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஒதுக்கீடு நியாயமாக கிடைக்கப்பெறவே சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு கட்டாயத்தேவையாக இருக்கிறது.
இப்போது டில்லியில் நடந்த அமைசச்சரவைகுழு கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக சில அமைச்சர்கள் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்கள். அவர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். ஏன் என்றால் அதே கூட்ட்டத்தில், சமூக நீதிக்கான மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக்,சாதிவாரி கணக்கெடுப்பு இணைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினார். ஆனாலும்கூட மூத்த அமைச்சர்கள் சிலர் பிரதமரது வாக்குறுதிக்கே எதிராக பேசுவது என்பதும் அந்த குழுவில் நடந்துள்ளது. சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், சமூக நீதி அமைச்சர் முகுல் வாஸ்னிக்கை,
ஆதரித்து பேசியுள்ளார். ஆனாலும் மூத்த அமைச்சர்களாக உள்ள ஏ.கே. அந்தோணி, கபில்சிபல் போன்றோர் சற்றும் கவலை கொள்ளாமல் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து பேசியுள்ளனர். அப்போது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாயை திறந்துள்ளார். நேரு எப்போதோ கூறியதை மேற்கோள் காட்டி, சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து பேசியுள்ளார்.
எண்பது ஆண்டுகளாக எடுக்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பதில் எடுக்கவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் ஏற்றுக்கொண்டு வாக்குறுதி கொடுத்த பின்னாலும், இந்த மூத்த அமைச்சர்கள், சிதம்பரம் உட்பட ஏன் இதை எதிர்க்க வேண்டும் என்பதே கேள்வி. அதாவது தங்கள் அமைச்சரவையின் தலைவரான பிரதமரைவிட, உயர்வாக அவர்கள் கருதுவது யாரை என்ற கேள்வி எழுகிறது. இந்திய மத்திய அமைச்சர்வையையே ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டது கார்பரேட் என்று அழைக்கப்படும் பெருவணிக குழுமங்கள். அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்கவில்லை. ஏன் என்றால் அதிக எண்ணிக்கை உள்ள சாதிகள் நாளை அரசு வேலை கிடைக்காத சூழலில், தனியார்துறை இட ஒதுக்கீட்டை கேட்பார்கள். ஆகவே அந்த வணிககுழுமங்கள் சாதிவாரி இட ஒதுக்கீட்டையும், அதற்கான அடித்தளமாக இருக்ககூடிய சாதிவாரி கணக்கெடுப்பையும் எதிர்த்து நிற்கிறார்கள். ஆகவே இன்று பெரியார் பிறந்த மண்ணில் வாழும் நாம், சாதிவாரி கணக்கெடுப்பை மறுக்ககூடிய சக்திகளை அடையாளம் காண்பதும், அவர்களை எதிர்த்த ஒரு பெரூம் பேரெழுச்சியை ஏற்படுத்துவதும் தேவையாக உள்ளது.
Friday, July 2, 2010
Subscribe to:
Posts (Atom)