Monday, September 13, 2010

தேசியஇன உரிமைகளும், ஊடகங்களின் சித்து விளையாட்டும்

.
இப்போது நாடு தழுவிய அளவில் விவாதிக்கப்படுவது காஷ்மீரில் நடைபெற்றுவரும் வன்முறை பற்றித்தான். வன்முறை என்றவுடன் நமது நாட்டு அறிவுஜீவிகளுக்கு மட்டும் அரசு சார்பற்ற சக்திகள் செய்யும் அல்லது ஈடுபட்டுவரும் அல்லது எதிரொலித்துவரும் அதாவது திருப்பி கொடுத்துவரும் வன்முறை பற்றிமட்டும்தான் நினைவுக்குவரும். உண்மையில் வன்முறையை யார் செய்தாலும் அது வன்முறைதான். நன்முறையல்ல. அதை அரசு தரப்பு செய்தாலும், அரசுசாரா சக்திகள் செய்தாலும் அது வன்முறைதான். அரசுசாரா சக்திகள் பொதுவாக வலியச்சென்று வன்முறையில் ஈடுபடுத்து இல்லை. அப்படியானால் அரச சக்திகள் மட்டும் வலியச்சென்று வன்முறையில் ஈடுபடுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. அப்படியானால் வன்முறைகள் ஏன் நடக்கின்றன? அவை ஏன் தொடர்ந்து நடக்கின்றன? அதற்க்கான காரண, காரியங்கள் ஆராயப்படவேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியில் நடக்கும் வன்முறைக்கும் ஒரு புறநிலை காரணம் இருக்கும். இப்போது நடந்துவரும் விவாதம் காஷ்மீரில் நடந்துவரும் வன்முறை பற்றியது. அதை காஷ்மீரில் நடந்துவரும் ஆட்சி, அதற்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம், அதில் அந்த பகுதி மக்களுக்கு உள்ள பங்கு, அந்த பகுதி மக்களுக்கு வரலாற்றில் இந்திய ஆட்சியாளர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்களா என்ற கேள்வி ஆகிய அனைத்து விசயங்களும் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். அப்படியானால் அதை வெறும் வன்முறை என்றும் அதை நிறுத்தவேண்டும் என்றும் மட்டும் பார்த்தால் போதாது. அதற்கான அடிப்படைகளை இல்லாமல் செய்ய என்ன செய்யவேண்டும் என்பது இப்போதாவது உணரப்படவேண்டும். அததகைய சிந்தனை தங்களுக்கு இருப்பதுபோல இந்திய ஆட்சியாளர்கள் காட்டிக்கொள்கிறார்கள். இப்போது இந்த சிக்கல் பற்றி பேசியுள்ள தலைமை அமைச்சர் மன்மோகன், காஷ்மீரில் நடந்துவரும் நிகழ்வுகள் கவலை தருகின்றன என்று கூறியுள்ளார். அங்குள்ள இளைஞர்கள் நமது குடிமக்கள், ஆகவே அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று கூறியுள்ளார். அது சில இடங்களிலாவது ஆயுதப்படையின் சிறப்பு சட்டத்தை திரும்ப பெறலாம் என்று இருக்கலாம். ஏன் என்றால் இரண்டு நாட்களாக இந்த ஏ.எப்.எஸ். ஏ. என்ற ஆய்தப்படையின் சிறப்பு சட்டம் சில இடங்களிலாவது திரும்ப பெறப்பட வேண்டும் என்றும், திரும்ப பெறப்படவேண்டாம் என்றும் சர்ச்சையை நமது மத்திய ஆட்சியாளர்களான காங்கிரசு கட்சியின் மைய முக்கிய குழு விவாதித்தது. ஏற்கனவே காஷ்மீர் சென்ற போது, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முழு ராணுவத்தையும் திரும்ப பெறுவதற்கு முன்னோட்டமாக, காஷ்மீர் காவல்படையின் கையில் அங்குள்ள சட்ட-ஒழுங்கை கொடுத்துவிட்டு, ராணுவம் பின்னே நிற்கும் என்று திருவாய்மலர்ந்தவர்தான் என்பது நினைவு கொள்ளத்தக்கது. ஏன் என்றால் இப்போது , சில இடங்களிலாவது ஆயுதப்படையின் சிறப்பு சட்டத்தை திரும்ப பெறலாம் என்பதாக அவர் கூறியதாக செய்திகள் தெரியவருகிறது. அதேசமயம் பாதுகாப்பு துறையின் அமைச்சரான ஏ.கே.அந்தோணி அவ்வாறு ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெறக்கூடாது என்று காங்கிரசு கட்சியின் தலைமைக்குழுவில் கூறியதாக தெரியவருகிறது. இப்போது நமது பிரதமர் வன்முறையை கைவிடும் எந்த குழுவுடனும் பேசத்தயார் என்று அறிவித்துள்ளார். அதேசமயம் அங்குள்ள காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அந்த மாநிலத்திலிருந்து முழுமையாக திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த இருபது ஆண்டுகளாக, ஆயுதப்படை சிறப்பு சட்டம் காஷ்மீர் பகுதியில் அமுலில் இருக்கிறது. அதேசமயம் ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளாக அந்த சட்டம் வடகிழக்கு மாநிலங்களில் அமுலில் இருக்கிறது. அதை எதிர்த்துதான் ஷர்மிளா என்ற மணிப்பூர் பெண் தொடர் உண்ணாவிரதத்தை எட்டு ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டுள்ளார். இப்படி இந்திய அரசு காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அங்குள்ள மக்களது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளுக்கு கூட அதிகாரத்தை கொடுக்காமல், அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சியாளர்களின், அதிலும் முதல்வர்களின் கோரிக்கைகளையும் மீறி, ஆயதப்படை சிறப்பு சட்டத்தை அந்த இடங்களில் அமுலில் வைத்திருக்கிறார்கள் என்றால், அதன்மூலம் அந்த பகுதிகளில் இந்திய ராணுவ ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றுதானே பொருள். அதை இந்தியாவில் இருக்கும் அறிவுஜீவிகளும், ஊடகத்தினரும் உணர்ந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. ஏன் என்றால் இந்திய ஊடகங்களில் காஷ்மீரில் அரசியல் உரிமையை விட்டுக்கொடுக்காமல் பேசிவரும், ஹுரியத் மாநாடு என்ற கூட்டமைப்பினரை தொடர்ந்து பிரிவினைவாதிகள் என்றே இந்த ஊடகங்கள் அழைத்துவருகின்றன. இந்த ஹுரியத் மாநாடு அமைப்பினருடன் அவ்வப்போது நமது மத்திய அரசு பேச்சுவார்க்த்தை நடத்திவருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களை பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தி அழைப்பது என்பது அவர்களுக்கு எதிரான ஒரு கருத்தை இந்திய மக்களிடம் பரப்புவது என்பதாக பொருள்பட்டு விடுமல்லவா? மத்திய அரசின் கொள்கைப்படி இப்போது பிரதமர் கூறுவது போலவே, அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராய் இருக்கும் குழுக்கள் பற்றி, பகை உணர்வு கொள்ளும் கருத்துக்களை பரப்பாமலாவது ஊடகங்கள் இருக்கவேண்டுமல்லவா? ஆனால் ஊடகங்களுக்கு அப்படிப்பட்ட பொறுப்புணர்வு இருக்கிறதா என்று தெரியவில்லை. இன்று ஊடகங்களின் காலம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரைவிட ஊடகங்கள் மக்கள் மத்தியில் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் முதன்மையாக நிற்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், தேசிய இன உரிமை வேண்டுவோரை, பிரிவினைவாதிகள் என்ற முத்திரை குத்தவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அவர்களது கோரிக்கையான காஷ்மீர் சுயாட்சி என்பதற்கு, வரலாறு ரீதியான காரணங்களை கூறுகிறார்கள். அந்த வரலாற்று காரணங்களை இந்த ஊடகங்கள் மறுக்கின்றனவா? பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் என்றும், இந்தியா வசம் உள்ள காஷ்மீர் என்பதும் யதார்த்தத்தில் இருப்பது எல்லோரும் அறிந்த செய்திதானே? அப்படியானால் காஷ்மீரிகள் மனதில் என்ன எண்ணம் வரும்? அல்லது இருக்கமுடியும்? நீயும் வேண்டாம், அவனும் வேண்டாம் என்னை தனியாக விட்டுவிடு என்ற எண்ணம் தானே வரமுடியும்? அங்கே போய் இந்திய அரசின் மத்திய ராணுவப்படையை நிறுத்திக்கொண்டு அதற்கு ஆயதப்படை சிறப்பு சட்டம் என்ற பெயரில், ராணுவக்காரர்கள் யாரை வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் சுட்டுகொல்லலாம் என்றும் அதுதான் எங்கள் சட்டம் என்றும் கூறும் ஒரு அரசை எப்படி நம்பி அவர்கள் இருக்கமுடியும்? அதை புரிந்தும், புரியாததுபோல, ஊடகங்கள் அவர்களை பிரிவினை வாதிகள் என்றுமட்டும் முத்திரை குத்துவது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?
இவ்வாறான முத்திரையையும் தாண்டி தமிழ்நாட்டு தமிழ் ஏடு ஒன்று ஒரு தலையங்கம் எழுதி உள்ளது. அந்த ஏடு அறிவிஜீவிகளின் கட்டுரைகளை வெளியிடும் ஏடு என்று பெயர்பெற்றது. அறிவாளிகளால் படிக்கப்படும் ஏடு என்றும் பெயர் பெற்றது. அத்தகைய ஏடு அதன் தலையங்கத்தில், "இனி துப்பாக்கிதான் துணை" என்ற தலைப்பில் தனது தலையங்கத்தை எழுதியுள்ளது. காஷ்மீரில் நடப்பது பற்றிதான் அப்படி ஒரு தீர்வை அது இந்திய ஆட்சியாளர்களுக்கு கொடுத்துள்ளது. எதோ இந்திய ஆட்சியாளர்கள் ஏற்கனவே காஷ்மீரில் புல்லை அரிந்துகொண்டிருப்பதுபோல, இவர்கள் துப்பாக்கியை துணையாகக புதிதாக வந்துவிட்டார்கள். கல்லெறிந்தே காஷ்மீர் கனியை வீழ்த்தி விடுவார்களோ என்று இந்த ஏடு கவலைப்படுகிறது. அதாவது காஷ்மீர் மக்கள் தங்கள் பகுதியை, கல்லெறிந்தே பறித்து விடுவார்களோ என்று இங்குள்ள இவருக்கு கவலை. அதாவது காஷ்மீர் இவர்களது கனியாக, இவர்கள் பறித்து சாப்பிட இருக்கவேண்டும் என்று நினைகிறாரோ என்று தெரியவில்லை. அடுத்து அங்கு இவர்கள் அதிகமாக பேசிவரும் தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஓமர் அப்துல்லா, அங்குள்ள ஹுரியத் தலைவரான மிர்வைஸ் உமர் பாரூகிடம் பேச்சுவார்த்தை நடத்துவது இவருக்கு பிடிக்கவில்லை என்று எழுதுகிறார். அது சமாதான சிந்தனையா அல்லது வன்முறை கலந்த எழுத்தா என்பதை இவர் ஒருகாலத்தில் விளக்க வேண்டியிருக்கும். நான்கு மாவட்டங்களிலிருந்து ராணுவத்தை திருப்பபெறவேண்டும் என்று டில்லி சென்று காஷ்மீர் முதல்வர் எப்படி கேட்கலாம் என்பது இந்த தலையங்கம் எழுதிய ஆசிரியரின் ஆதங்கம். அதன்பிறகே இந்த குறிப்பட்ட ஆசிரியரின் உள்நோக்கம் வெளிவருகிறது. தமிழ் ஈழத்தை ஆதரித்தால் நாம் காஷ்மீரிலும் அதே பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், இரும்புக்கரம் கொண்டு ஈழத்தமிழரின் நியாயமான இனப்போராட்டத்தை அடக்க உதவிய இந்திய அரசு, அதேபோல இரும்புகரத்துடன் ராணுவத்தை முழுமையாக இயங்கவிட்டு அநியாயமான காஷ்மீர் பிரிவினையை ஒடுக்குவதுதானே? என்று அவர் கேட்கிறார். இதில் ஈழ விடுதலை நியாயமானது என்று ஒப்புக்கொண்டது ஒருபுறம். அதேநேரம் காஷ்மீர் விடுதலை அநியாயமானது என்பதில், ஒருமதபார்வை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. சரி அதுதான் இல்லை என்றே வைத்துகொள்வோம். ஒரு தேசிய இன பிரச்னையை அங்கீகரிக்கும்போது, இன்னொரு தேசிய இனப்பிரச்சனையை எந்த அடிப்படையில் எதிர்க்கமுடியும்? சரி. அதுவும் வேண்டாம். ஈழப்பிரச்சனையை அடக்கி ஒடுக்கியது தவறு என்றால் அதே தவறை இன்னொரு முறை செய் என்று அரசுக்கு சொல்வதில் எங்கே ஊடக நீதி இருக்கிறது? அப்படியானால் ஈழ விடுதலையை அடக்கிய இந்திய அரசின் செயல் சரிதான் என்ற பொருள்பட்டுவிடாதா?
அடுத்து அதைவிட கொடூரமான ஒரு செய்தியை ஒரு கருத்தை இந்த ஆசிரியர் கூறியுள்ளார். அதாவது ராஜபக்சே செய்ததுபோல, காஷ்மீரில் இந்தியாவின் பிற பகுதியில் உள்ளவர்களை, குடியேற்றும் புத்திசாலித்தனம் நமக்கு இல்லாமல போனதுதான், காஷ்மீர் பிரச்சனை தொடர காரணம் என்று எழுதியுள்ளார். அதாவது ராஜபக்சேயின் திட்டமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களரை கொண்டுவந்து குடியேற்றும் திட்டம் இன்றும்கூடமுழுவெற்றி பெறவில்லை என்ற சூழலில், இந்த எழுத்தாளருக்கு அது ஒரு நல்ல திட்டமாக தெரிகிறது. அதனால்தான் அதை காஷ்மீரில் அமுல்படுத்தவில்லையே என்று வருத்தப்படுகிறார். அதாவது சாரம்சத்தில் இவர் தமிழர்களின் ஈழ தேசிய இன விடுதலைக்கு எதிரான கருத்தை கருத்தியல் மட்டத்தில் கொண்டுள்ளார் என்பது இங்கே வெளிப்படுகிறது. ஆனால் ஒருபுறம் ஈழ ஆதரவு போலவும், தமிழ் ஆதரவு போலவும் இவர்களால் காட்டிக்கொள்ள முடிகிறது. பூனை கடைசியாக பையை விட்டு வெளியே வந்துவிட்டது என்பதைத்தவிர இதை எப்படி விளக்க முடியும்? இவ்வாறு வன்முறைமூலம், அதாவது ராணுவ வன்முறை மூலம் ஒரு தேசிய இனத்தின் உரிமை உணர்வுகளை அடக்கும் அணுகுமுறையை ஒரு ஊடகம் வலிய வலியுறுத்துகிறது என்றால் இது எழுத்து வன்முறை என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.