தமிழகத்தை ஆண்டுவரும் ஆளுங்கட்சி, டெல்லியை ஆண்டுவரும் அதாவது இந்தியாவை ஆண்டுவரும் ஆளுங்கட்சியுடன் கூட்டணியாக செயல்படுவது உண்மை தான். அதுமட்டுமின்றி இந்த கூட்டணியான ஐக்கியமுற்போக்கு கூட்டணி தனது 2வது ஆட்சியின் முதல் ஆண்டை முடித்திருப்பதும் உண்மை தான். அதைப்பற்றி ஓராண்டாக தான் சந்திக்காத ஊடகவியலாளர்களை, தலைமை அமைச்சர் சந்தித்ததும் உண்மை தான். எந்தவொரு கேள்விக்கும் விரிவான விடையை தலைமை அமைச்சர் கொடுக்கவில்லை என்பதே ஊடகக்காரர்களின் வருத்தம். ஆனாலும் சில கேள்விகளுக்கு அவர் விரிவாக விடையளித்ததாகத் தான் தெரிகிறது. உதாரணமாக ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய கேள்விகளுக்கு, தவறு எதுவும் நடக்கவில்லையென்று மத்திய அமைச்சர் ஆ.ராஜாவிற்கு ஒரு பாராட்டே கொடுத்துள்ளார். ஆனாலும் கடைசியில் தவறு நிரூபணமானால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் தான் ஒரு சிறிய நெருடல் தெரிகிறது.
மாநிலத்தில் தேர்தல் வரயிருக்கும் காலத்தில், கூட்டணி கட்சிகளுக்குள் அதுவும் பெரிய கட்சிகளுக்குள் ஒரு பேர உரசல் இருக்கத்தான் செய்யும். தங்கள் தங்கள் பாணியில் ஒவ்வொருவரும், தங்கள் பேரத்தை அதிகப்படுத்துவதற்காக நெருக்கடி தருவார்கள். மத்திய அரசை ஆளுகின்ற பாரம்பரியக் கட்சியான காங்கிரஸ் கட்சி இப்படிப்பட்ட நெருக்கடிகளை தருகின்ற பாணியே தனிதான். அப்படிப்பட்ட ஒரு அடிநீரோட்ட காய் நகர்த்தல்கள் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படுகிறதா? மாநில ஆட்சியில் கூட்டணி ஆட்சியை நிறுவ, ஏதாவது நிர்ப்பந்தம் இப்போதிலிருந்தே கொடுக்கப்படுகிறதா? அதற்காக மத்திய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த முயல்கிறார்களா? எதிர்கட்சிகள் மீது சி.பி.ஐ. வழக்குகள் மூலம் நிர்ப்பந்தம் கொடுப்பதாக காங்கிரஸ் மீது ஏற்கனவே புகார் இருக்கிறதே? அதையும் கூட பிரதமர் தனது பேட்டியில் மறுத்திருக்கிறாரே?
இப்போது வெளிவரப்பட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வமான அறிக்கை, அப்படிப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்துகிறது அல்லவா? மத்திய உள்துறை இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் விடுதலைப்புலிகள் வந்துள்ளனர் என்பதாகவும், விடுதலைப்புலி ஆதரவாளர்களால் தமிழக பாதுகாப்புக்கு ஆபத்து என்பதாகவும் கூறியுள்ளார். இதுதான் இப்போது மேல்மட்டங்களில், பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கையில் நிலவும் கொந்தளிப்பைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட, அதன் ஆதரவு அமைப்புகள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி தமிழகத்திற்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர் என்பதாக கூறுகிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி.
ஏனென்றால் இலங்கைத் தீவில், விடுதலைப்புலிகள் அமைப்பில் போரில் வென்று, அதிபர் மகிந்தா அந்த வெற்றியின் ஓராண்டை கொண்டாடியும் விட்டார். அதனால் அங்கே கொந்தளிப்பான சூழல் இல்லை. தமிழ்நாட்டிலும் காவல்துறை விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு, எந்தவொரு ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தவும் எளிதாக அனுமதிக் கொடுப்பதில்லை. நீதிமன்ற உத்தரவில் அனுமதிப் பெற்றவர்களையும், ஆயிரம் நிபந்தனைப் போட்டு அடக்கி வருவது தமிழக காவல்துறையின் வழக்கமாக ஆகிவிட்டது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் நிலவும் சட்டஒழுங்கு நிலைமைப் பற்றி அபாண்டமாக மத்திய அரசு ஓர் அறிக்கையை வெளியிட வேண்டிய தேவை என்ன?
உள்துறையின் அறிக்கையில் எஞ்சியுள்ள விடுதலைப்புலியின் போராளிகளும், தலைவர்களும் நம்பிக்கை துரோகிகள் என இந்திய அரசையும், எதிரிகள் என இலங்கை அரசையும் பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்று பொறுப்பற்ற ரீதியில், ஒரு பொல்லாப்பை கூறியுள்ளது. கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது என்று உள்துறை கூறுகிறது. இத்தகைய கூற்று, உள்துறையின் தாக்கும் குறிகளாக அப்பாவி ஈழ அகதிகள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. தமிழக முதல்வர் தனது முயற்சியில், ரூ.100 கோடியை ஒதுக்கி தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு மேம்பாட்டு உதவிகளை செய்து வருகின்ற நேரத்தில், அந்த அப்பாவி 1 லட்சம் மக்கள் மீது இப்படிப்பட்ட அபாண்ட பழியை, மத்திய அரசு சுமத்த வேண்டிய காரணம் என்ன?
இணையதளத்தில் ஈழப்போரின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என்ற இந்திய விரோதப்போக்கை, இலங்கைத் தமிழரிடையே விதைக்கின்ற வகையில் கட்டுரைகள் எழுதப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் இருக்கின்ற தமிழர்களின் கருத்துரிமைக்கு, எழுத்துரிமைக்கு எதிராக இந்திய அரசு தொடுக்கின்ற மிரட்டல் என்பதாகத் தான் எடுத்துக்கொள்ளப்பட முடியும். இதே கருத்தை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பேசியிருக்கிறார்கள். அவர்களிடம் முறையாக அந்த அவைகளில் பதில் சொல்லாத, உள்துறை அமைச்சகம் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடுவதன் நோக்கம் என்ன?
மாநில நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதும் புலி ஆதரவாளர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள் எனவும் மத்திய அரசு கூறுகிறது. அதனால் தான் விடுதலைகள் புலிகள் அமைப்பை சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஒரு நியாயப்படுத்தல் அறிக்கையை, உள்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மாநில ஆட்சியை நெருக்குவதற்கும், மிரட்டுவதற்கும் என்று சொன்னால் சரியாக இருக்குமா? இதற்கு முன்னால் மத்திய அரசு இதுபோன்று மாநில அரசை மிரட்டிய வரலாறு உண்டா? அதற்காக பொய்க் காரணங்களை கூறிய ஆதாரங்கள் இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் தேட வேண்டும்.
2005ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதாவை முதல்வராகக் கொண்டு, அ.தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. அப்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இதுபோன்ற பீதியுற வைக்கும் கடிதத்தை, மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. 200405 ஆண்டுக்கான உள்துறை அறிக்கையில், சிவராஜ் பாட்டீல் தமிழ்நாட்டில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக ஒரு அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டார். 200304 ஆண்டுக்கான அறிக்கையில், உள்துறை அமைச்சர் அத்வானி அப்படிப்பட்ட எந்தவொரு சட்டஒழுங்கு பிரச்சனையையும் தமிழ்நாடு பற்றி கிளப்பவில்லை. இடைப்பட்ட ஓராண்டில் எதுவும் நடக்காதபோது, மத்திய உள்துறை ஏன் அப்படி பீதியை கிளப்பியது? அடுத்து அன்றைய முதல்வரை கொலை செய்வதற்காக, 2 விடுதலைப்புலிகளின் தற்கொலை பெண்புலிகள் இறங்கியிருப்பதாக, முதலமைச்சருக்கு உள்துறை அமைச்சர் கடிதம் அனுப்பினார். இவை அனைத்துமே தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு இல்லை என்ற கற்பித்தலை ஏற்படுத்தத்தான் என்று அன்றைய முதல்வர் அறிக்கை விடுத்தார்.
இப்போது செம்மொழி மாநாட்டிற்கான துரிதப் பணிகளில், தமிழக ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் செம்மொழி தமிழ் மாநாடு மூலம், விரும்பியோ, விரும்பாமலோ, தமிழின உணர்வும், தமிழ் மொழி உணர்வும் மேலோங்கும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதனால் தான் இந்த சந்தர்ப்பத்தில், இப்படியொரு அச்சுறுத்தல் அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதை புரிந்துக்கொள்ளும் தமிழக அரசியல் சக்திகள், சரியான வழியில் பதில் கொடுத்து, அச்சுறுத்தும் அறிக்கைகளை முறியடிக்க முடியும். தேர்தல் அரசியல் களத்தில் இருக்கும் தமிழக அரசியல் சக்திகள், விவரம் புரிந்து வியூகம் உடைப்பார்களா என்பதே நமக்கு எழுகின்ற கேள்வி.
Wednesday, May 26, 2010
Subscribe to:
Posts (Atom)