இந்திய அரசு தனது 61வது குடியரசு தினத்திற்குள் நுழைந்துள்ளது. அதை விமர்சையாக கொண்டாடினார்கள். இந்திய தலைநகர் டெல்லியில், ஒரு மாபெரும் அணிவகுப்பு வழக்கம் போல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலத் தலைநகர்களிலும் அதேபோல அணிவகுப்புகள் நடந்தன. அணிவகுப்பில் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளை, அரசாங்க ஏற்பாட்டில் வரிசைப்படுத்தி, பொதுமக்களை பரவசமூட்டினர். முக்கியமாக டெல்லியில் நடந்த இந்த குடியரசு தினம், இந்திய அரசின் ராணுவ பலத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது என்பதுதான் பொதுவான மதிப்பீடு. குடியரசு என்பது எந்த வகையிலும், குடிமக்கள் அமைதியாகவும், நலமாகவும், வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்காக ஏற்படுத்தப்படுவது. அது ராணுவ தினம் அல்ல. ஆனாலும் கூட நமது நாட்டில் குடியரசின் பெயரிலேயே, ராணுவ பலம் முதன்மைப்படுத்தி காட்டப்படுகிறது. அதை ஆட்சியாளர்கள் நாட்டின் வல்லரசு தன்மையை காட்டுவதாகப் பெருமைப்படுகிறார்கள். பொதுமக்களும் கூட, அதேபோன்ற மனோபாவத்தில் பெரிதும் இருக்கிறார்கள்.
அநேகமாக சமீபத்திய ஆண்டுகளில், குடியரசு தினங்களை அரசின் கரங்களிலுள்ள ராணுவ பலத்தை காட்டும் தினமாக நடத்திக் காட்டுகிறார்கள். அதில் முப்படைகளில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நவீன ரக ஏவுகணைகளையும், துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும், குண்டுவீசும் விமானங்களையும், போர்க்கப்பல்களையும் காட்டி, இந்திய அரசின் படைபலத்தை முதன்மைப்படுத்துகிறார்கள். இது குடியரசு என்றால் என்ன என்பதற்கான பொருளையே மாற்றிப் புரியும்படி கொண்டுபோய் நிறுத்துகிறது.
போருக்கெதிராக, ஆயுத வியாபாரத்திற்கு எதிராக, நாடுகளை ஆக்கிரமிப்பதற்கு எதிராக, நாடுகளை காலணிகளாக மாற்றுவதற்கு எதிராக, தாங்கள் உருவாக்கிய சரக்குகளுக்கு சந்தைகளை தேடுவதற்கு எதிராக, மக்களது பங்களிப்புடன் கூடிய, மக்கள் நல்வாழ்வு அரசுதான் குடியரசு என்ற பொருளை, மாணவர்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்கின்றோம். அதேநேரத்தில் அதற்கான நாள் வரும்போது, நமது கொண்டாட்டமெல்லாம், போர்ப்படைக் கருவிகளை அலங்கரித்துக் காட்டி, அவற்றிற்கு ஆயுத பூசை போடுவது போல இருக்கிறது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேல், யூதவெறியுடன் ஆக்கிரமிப்புச் செலுத்திய போது, அத்தகைய போர்வெறியை எதிர்த்து பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவு கொடுத்தது தான் இந்திய அரசு. வியட்நாம் மீது அமெரிக்க படை தாக்குதல் தொடுத்த போது, அதைக் கண்டித்து வியட்நாம் விடுதலையை ஆதரித்தது இந்திய அரசு. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த போது, படையணியுடன் இணைந்து செல்வதற்கு ஆர்வப்பட்டு, எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுக்காமல் இருந்தது இந்திய அரசு. அதே அரசு தனது ராணுவ பலத்தை பூட்டிக் கொண்டுள்ளதை, காட்டிப் பெருமைக் கொள்கிறது என்றால், இந்த மாற்றம் ஏன் வந்தது? எதற்காக வந்தது? எங்கிருந்து வந்தது?
இன்றைக்கு இலங்கையில் சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை, முழுமையாக ஆதரித்து, அனுகூலம் செய்தது இந்திய அரசு தான் என்பது பகிரங்கமான உண்மை. இப்படிப்பட்ட அடக்குமுறை ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட, இந்திய அரசுக்கு ஏற்பட்ட மாற்றத்தின் காரணம் என்ன? குடியரசு என்பது ஒரு பாரம்பரிய இனத்தின் அழிப்புக்கு காரணமாக மாறினால், அது கொடிய அரசு என்பதாக அழைக்கப்படும் சூழ்நிலை வராதா? இத்தகைய ராணுவ மயமான கொள்கைகளால் இந்திய அரசு இப்போது தயார் செய்யப்படுகிறதா என்ற கேள்வி, மேற்கண்ட விவரிப்புகளிலிருந்து எழுகிறது. அப்படியானால் இந்திய குடிமக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தாமல், ராணுவ மயமாக்கல் என்ற கொள்கைக்குள் சிக்கிக் கொண்டு, இந்திய அரசு தவிக்கிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை ஆண்டுவந்த நிலை மாறி, ஏகபோக முதலாளிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆளுகின்ற ஒரு நிலைமைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டு விட்டதா? அத்தகைய ஏகபோகங்கள், பன்னாட்டு மூலதன நிறுவனங்களாக மாறி, சிறிய மற்றும் பின்தங்கிய நாடுகளில் தங்களது மூலதன விதைகளைப் போடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் தரகர் வேலையை செய்யும் நிலைக்கு இந்த அரசு போய்விட்டதா? அதற்காக அருகாமை நாடுகளில் உள்ளே நுழைந்து, மூலதனம் இடுவதற்கு உதவிகரமாக இன அழிப்பு, ஜனநாயக மறுப்பு ஆகிய கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கங்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தொடங்கி விட்டதா? அதற்காக தனது ராணுவ பலத்தை அதிகரித்து, அண்டை நாடுகளை மிரட்டிப் பணிய வைக்க செய்கின்ற மனோபாவத்திற்கு சென்று விட்டதா? மேற்கண்ட கேள்விகளை எழுப்பி, பதில்களை தேட முனைந்தால், குடியரசிற்கு உண்மையான பொருளை தேட முடியும்.
காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் ஒரு பகுதி என்பது தான் நமக்கு அரசு தொடர்ந்து கொடுத்து வரும் செய்தி. ஆனால் நேற்றைய குடியரசு தினத்தை, தங்கள் மாநிலத்திற்கும், மக்களுக்கும் எதிரான ஒன்றாக கருதி, அதை புறக்கணிக்க வேண்டும் என ஒரு அறைகூவல் எழுந்தது. அறைகூவல் விடுத்தவர்கள் ஹுரியத் மாநாடு அமைப்பினர். இவர்கள் காஷ்மீரின் சுயாட்சியை வலியுறுத்தி வருபவர்கள். இவர்கள் காஷ்மீர் விடுதலைப் போராளிகளின் அரசியல் பிரதிநிதிகள் என்று இந்திய அரசு அவ்வப்போது குற்றம் சாட்டியுள்ளது. இந்த அமைப்பினர் கொடுத்த அறைகூவலை ஏற்று, காஷ்மீர் மாநிலத்தில் பரவலாக நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. இவையெல்லாம் இந்திய அரசின் தவறான கொள்கை அணுகுமுறைகளால் ஏற்படும் எதிர்ப்புகள்.
குடியரசு தினம் குடிமக்களின் தினம் என்ற பொருளில், நாட்டின் விவசாயப் பொருளாதாரம் பற்றி, நேற்றைய குடியரசு தலைவர் உரை குறிப்பிட்டிருந்தது. அதில் இரண்டாவது பசுமைப் புரட்சி விரைவில் மேற்கொள்ளப்படும் என்பதாக குறிப்பிட்டிருந்தது. இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்கள் பெரும்பாலும் விவசாய பொருளாதாரத்தை சார்ந்து நிற்பவர்கள். விவசாய பொருளாதாரத்தில் முக்கியமாக முன்னேற்றம் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. அதில் ஈடுபடும் பெரும்பான்மையான இந்திய மக்கள், நிலமற்ற ஏழை விவசாயிகளாக இருக்கிறார்கள். இந்த முறை எப்போதும் போல் இல்லாமல், பெரிய அளவில் மழை பொய்த்து விட்டது. அதனால் வட இந்தியாவில் பல பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது. இதை உணர்ந்த இந்திய அரசு அத்தகைய விவசாயிகளுக்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம், யானைப் பசிக்கு, சோளப் பொரி போடலாம் என்று திட்டமிட்டு, அதையே பெருமையாக அறிவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் தான் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய தேவையை அரசு உணர்ந்துள்ளது. அதற்கு ஏற்கனவே நமது அரசக்கு தெரிந்த குறுக்கு வழி மட்டும் தான் புரிந்திருக்கிறதா என்பது நமக்கு விளங்கவில்லை. ஏனென்றால் நேற்றைய குடியரசு தின விழாவில், குடியரசு தலைவரது உரையில், இரண்டாம் பசுமைப்புரட்சியை விரைவில் கொண்டு வருவோம் என அறிவித்துள்ளார். முதலாம் பசுமைப்புரட்சி எப்படி நடந்தது எனபது பிரதிபா பாட்டீலுக்கு தெரியுமா? அமெரிக்க வழிகாட்டலில் செயற்கை வீரிய விதைகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயற்கை ரசாயன உரங்கள் திணிக்கப்பட்டு, அந்நிய நாட்டு உழுபடைக் கருவிகள் இறக்குமதியாகி, இந்திய விவசாயிகளை திவாலா ஆக்கிய செய்தி அவருக்கு புரியுமா? விளை நிலங்களை இவற்றின் மூலம், நச்சாக்கியது அவருக்கு விளங்குமா? மரபணு மாற்று விதைகளை இறக்குமதி செய்வதற்காக, இரண்டாம் பசுமைப் புரட்சியா? மேற்கண்ட கேள்விகளை காய்ந்த வயிறுகளுக்கு சொந்தக்காரர்களான, இந்திய விவசாயிகள் கேட்கிறார்கள்.
Wednesday, January 27, 2010
Subscribe to:
Posts (Atom)