Tuesday, November 20, 2012

அணு உலை எதிர்ப்பாளர்களும், மீனவர் சங்கங்களும் ஆழ்ந்த அஞ்சலி


       மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களின் மரணம் எல்லோரையும் போல அணு உலை எதிர்ப்பாளர்களையும், மீனவர் சங்கங்களையும்  உலுக்கி விட்டது. நாளை அதாவது புதன்கிழமைதான் மருத்துவரின் இறுதி ஊர்வலம் அவரது மூன்று மகள்களும் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த பிறகு காலை பதினோரு மணிக்கு அவரது இல்லமான தெற்கு உஸ்மான் சாலை அருகே உள்ள கீதாஞ்சலி உணவு விடுதி அருகே உள்ள தெருவிலிருந்து புறப்பட்டு, அருகே உள்ள கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் அடக்கம் செய்ய இருப்பதால், அந்த வட்டாரத்திலும் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற இருபத்தைந்து ஆண்டுகளாக மருத்துவரின் அறிவியல் அறிவின் வழிகாட்டலில் இயங்கும்  ஆர்வலர்கள், அனைத்து மீனவர் சங்கங்களுடன் இணைந்து, ஒரு சுவரொட்டியை ஒட்டி உள்ளனர்.அதில் " கூடங்குளம், கல்ப்பாக்கம் அணு உலைகளின் ஆபத்தை, அறிவியல் ரீதியாக விளக்கிய, மருத்துவர் சி.என்.தெய்வநாயகம்  அவர்களின் மறைவுக்கு அஞ்சலி" என்பதாக நீல வண்ண சுவரொட்டி ஒன்றை ஒட்டி உள்ளனர். இதுதான் வரலாற்றில் சி.என்.டி. இன் "இடத்தை" காட்டுகிறது.

                             இன்று "தி ஹிந்து" ஆங்கில நாளேட்டிலும், செயற்பாட்டாளர்கள் கூறுவதாக மருத்துவரின் முக்கிய பங்கு  கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போர் தொடங்கிய பொது, அதாவது 1988, 89 ஆண்டுகளில் அவர் அறிவியல் ரீதியாக ஆற்றிய பங்கு  குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல அன்றைய டி.ஜி.பி. ராஜசேகரன் நாயர் தனது மனைவியின் மருத்துவத்திற்கு சி.என்.டி.யின் உதவியை நாடியநேரம், அக்கறை என்ற அடிப்படையில், மருத்துவரிடம்  " தாங்கள் அணு சங்கதியை எதிர்ப்பது, மத்திய அரசின் கொள்கைக்கு எதிரானது, அகவே  அந்த எதிர்ப்பை கைவிடுங்கள்" என்று கூறிய போது, " ஒரு மருத்துவரின் கடமை, உண்மைகளை மக்களிடம் கூறுவதுதான். அணு சங்கதியின் கதிர் வீச்சு ஆபத்தை நானா மக்களிடம் கூறுவது எனது அடிப்படை கடமை. அதற்காக நேநேகள் கைது செய்வதானாலும் இப்போதே கைது செய்யுங்கள்" என்று கூறினார்.அதேபோல "போக்ரான் இரண்டு" என்ற அணு குண்டை இந்திய அரசு சோதனை செய்தபோது அதை எதிர்த்த கருத்து கூட்டங்களை  எங்களிடம் போடச்சொல்லி அதில் முக்கிய உரைகளை நிகழ்த்தி எங்களுக்கு அறிவு தந்தவர்  என்பதை எப்படி நாங்கள் அவரது நினைவில் இன்று மறக்க முடியும்?