Tuesday, August 7, 2018

கலைஞர் Passed away

தலைவர் கலைஞர் என்றுதான் நான் உச்சரித்து வந்துள்ளேன். அவர் விரும்பும் விதத்திலேயே அவரை அழைப்பதுதான் பொருத்தம் என்றுதான் எனது மனம் சொன்னது. எனது இளமைக் காலத்தில், அவரது பேச்சும், எழுத்துமே என்னை ஈர்த்தது என்பதை விட, எனது தமிழைத் செதுக்கியது என்றே கூற வேண்டும். "உள்ளபடியே" என்ற சொல்லாடலை நான் அதிகமாகப் பயன்படுத்துகிறேன் என நண்பர்கள் கூறுவார்கள். அது தலைவர் கலைஞரிடமிருந்து "கடன்" வாங்கிய சொல். அண்ணா தனது பேச்சாலும், எழுத்தாலும் என்னை இளமைக் காலத்தில் ஈர்த்தார் என்பது உண்மைதான் என்றாலும், அதிகமாக நான் ரசித்து, பேசுவது கலைஞரின் பேச்சும், எழுத்துமே. நான் சிறு வயதிலிருந்தே சிவாஜி கணேசன் ரசிகர். நெல்லை சிவாஜி ரசிகர் மன்றத்தில் மாவட்ட தலைமையில் பணியாற்றியவன்.அந்தக் காலம் "சிவாஜியா?, எம்.ஜீ.ஆரா?".என்ற சர்ச்சையை இளைஞர்களிடம் விவாதிக்கப்பட்ட காலம். அப்போது, சிவாஜி கணேசனின் நண்பராக தலைவர் கலைஞர் இருந்தார். சிவாஜிக்கு திரைப்படத்திற்கு மட்டுமல்ல பொது வெளிக்கும் கலைஞரின் எழுத்துக்கள் பயன்பட்டன. அதனால் இயல்பாகவே எங்களுக்கு{ சிவாஜி ரசிகர்களுக்கு} ,கலைஞர் மீது ஒரு பாசம் உண்டு.
          திமுக 1967  இல் ஆட்சிக்கு வந்த பின், ஒரு பொதுவுடைமைவாதியான எனக்கு,  சிம்சன்  தொழிலாளர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் மீதான தஞ்சை துப்பாக்கி சூடு, நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக "கியூபிரிவை" உருவாக்கியது, பின்னாளில்  மாஞ்சோலை தொழிலாளர் மீதான காவல்துறைத் தாக்குதலில் தாமிரபரணி படுகொலை, ஈழத் தமிழர் படுகொலையில் எடுத்திருந்த நிலைப்பாடு, நிறைவுக் காலத்தில் நடுவண் அதிகாரத்துடன் இணைந்து சென்றது , "ஏக இந்தியா" என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியது  ஆகியவை அவருடன் மாறுபாடுகளையம், நெருக்கடி நிலையை எதிர்த்து சட்டமன்றத் தீர்மானம் கொண்டுவந்தது,முரசொலியில் நெருக்கடி நிலை எதிர்ப்பை வெளிக்காட்டியது, எனது தலைமறைவுக் கால புரட்சிகர வாழகையிலும்,நெருக்கடி நிலை எதிரிப்பில் அவரது நிலைப்பாட்டை அங்கீகரித்தது,1983 காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்பியது, 1989  இல் திமுக நடத்திய நடுவண் அரசு எதிர்ப்பு பேரணியில், இந்திய மக்கள் முன்னை சார்பாக கலந்து கொண்டது,தமிழுக்காகவும், தமிழின உரிமைக்காகவும்,கலை, இலக்கியத்திற்க்காகவும், தனது எழுத்தில் உருவான நாடகத்திற்காகவும்,குரல் எழுப்பியது,,மரண தண்டனை எதிர்ப்பில் நிலை எடுத்தது,திருநங்கைகளுக்காகவும், குரல் எழுப்பியதால் அவருடன் ஒன்றுபட்டு இருந்த பகுதிகளையும் கண்ட அரசியல் பயணம் என்னுடையது. அவரது ஐம்பது ஆண்டு அரசியல் தலைமை ஏற்ற வாழ்க்கை காலம் தான், எனது புரட்சிகர அரசியல் வாழ்க்கையையும் வகுத்தது என்பதாலேயே, இந்த மாறுபாடுகளும், ஒற்றுமைகளும் நடைபெற்றுள்ளது. நேரெதிரெதிர் அரசியல் முகாம்களில் பயணம் செய்தது கூட, ரசனையானதுதான். தோழர் ஞானி "கலைஞர் பற்றி ரசிக்க முடியாத எழுத்துக்களை" எழுதிய போது, அதை கண்டிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில்  உரையாற்ற { அவரது தேர்வுகள் மூலம்} என்னையும் அழைத்திருந்தார்கள். அதுவே "மாற்றுக்கருத்துளளவர்களிடமும், இருக்கும் கருத்துக்களை அங்கீகரிக்கும் பாங்கு" என காண முடிந்தது.
               மறக்க முடியாத, ஒதுக்க முடியாத, மாற்றுக்கருத்துக்களும் கூட, வேறுபட்டு நிற்க முடியாத ஒரு " ஆளுமை" மறைந்தது என்பதே வருந்தத்தக்கது..     ,