நேற்று சென்னையில் ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய அகலக்கண் விழிக்கும் நிகழ்வு நடந்தது. மத்திய அரசின் முயற்ச்சியில், யு.ஏ.பி.ஏ.. என்ற "சட்டவிரோத கூட்ட தடுப்பு சட்டம்" அடிப்படையில், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தடை செய்த மத்திய ஆரசின் செயலை, பற்றிய பொது விசாரணை ஒன்று நடந்தது. இந்த பொது விசாரணை பொதுமக்களிடம் கருத்து கேட்க என்று நாம் தப்பாக நினத்துவிடக் கூடாது. இது ஒருவிதமான தனி ஆனால் பொது விசாரணை. அதாவது சென்னையில் நடக்கும் இந்த விசாரணையில் சென்னை வாழ் மக்கள் யாரும், பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதாவது தமிழ்நாட்டு மக்கள் யாரும் தங்களை தமிழர்கள் என்று எண்ணிக்கொண்டு, விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழர் விடுதளைக்குத்தானே என்பதால் தாங்களும் கருத்து சொல்லலாம் என்று தவறாக எண்ணிவிடக்கூடாது. அதாவது இந்திய குடிமகன் யாரும், இந்தியாவில் விடுதலை புலிகள் என்ற அமைப்பின் மீது தடை விதித்து இருக்கிறார்களே, அதனால் அது பற்றி ஒரு குடிமகன் என்ற ளவில் தங்களுக்கு உரிமை உண்டே என்று தவறாக நினைத்து விடக்கூடாது.
இது மத்திய அரசிலிருந்து வரும் ஒரு தீர்ப்பாயம். அதாவது வானத்திலிருந்து, வானத்தில் இருப்பவர்கள் பற்றி கருத்து கேட்க, வானத்திலிருக்கும் நட்ச்சத்திரங்கள் போன்ற விதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் ஒரு விசாரணை. அப்படியானால் இதை பார்க்கத்தான் இங்குள்ள தமிழனால் முடியுமே தவிர பங்கு கொள்ள முடியாது என்ற விதியை அவர்கள் சொன்னார்கள்.
இந்த தடை யு.ஏ..பி.ஏ.யின் ஒன்பதாவது பிரிவின் கீழ், குடி உரிமையின் 151 வது பிரிவின்படி, 1967 இன் சட்டத்தின் கீழ், 10 இன் இரண்டாவது விதிப்படி, அதற்க்கான விசாரணையை நடத்துகிறது. டில்லி உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதியரசர் விக்கிரம சித் சென் இந்த தனி நபர் நீதிமன்றத்தின் பொறுப்பில், இந்த விசாரணையை நடத்தினார். அவருக்கு ஒத்துழைக்க, மத்திய அரசின் உதவி சாளிசிடர் ஜெனரல் சந்தியாக் என்ற மூத்த சீக்கிய வழக்கறிஞர் வந்திருந்தார். அவருடன் ஒரு படை போல வழக்கறிஞர்கள் வடக்கே இருந்து வந்திருந்தார்கள். வடக்கே இருந்து வரும் அரசு வழக்கறிஞர்களுக்கு சம்பளம் உண்டாம். ஆனால் டில்லி போல அல்லாமல், மும்பை போல அல்லாமல், தென்னிந்திய அரசு வழக்கறிஞர்களுக்கு அவ்வாறு சம்பளம் கிடையாதாம். ஒரு மூத்தவருடன் அங்கெல்லாம் எத்தனை பேர் வேண்டுமானாலும் செல்வார்களாம். சம்பளம் உண்டாம். இங்கிருந்து செல்பவருக்கு ஒரு அரசு வழக்கறிஞருக்கு மட்டும்தான் சம்பளமாம். இதுவேற ஏற்றத்தாழ்வா? இது மாநில சுயாட்சி கோரிக்கையில் வராதா?
இப்படித்தான் செப்டம்பர்-24 அன்று டில்லியில் இந்த மன்றத்தின் விசாரணை நடந்தது. அதில் வைகோ பேச முற்ப்பட்ட போது, என்ன பதில் கிடைத்ததோ அதுவே இப்போது சென்னையிலும் அனைவருக்கும் கிடைத்தது. அதாவது காலையில் தொடங்கிய விசாரணையில், நீதியரசர் முதலில் இந்த மன்றம் பற்றிய நிபந்தனைகளை முன்வைக்கச்சொன்னார். அதில் சம்பந்தப்பட்ட தடை செய்யப்ப்பட்ட அமைப்பை சேர்ந்த யாராவது இங்கே விசாரணையில், பேசலாம், வாதிடலாம், கருத்துக்களை முன்வைக்கலாம், என்பதாக தெரியப்படுத்தப்பட்டது. இதன் விளக்கங்களை குறிப்பாக விடுதலை புலிகளின் தடை சம்பந்தப்பட்ட அளவில் எப்படி பொருத்தி பார்ப்பது என்பது விளங்காமல் அனைவரும் திணறினார்கள்.
ஏன் என்றால் ஒரு இந்திய நாட்டை சேர்ந்த அமைப்பு தடை செய்யப்பட்டது என்றால், அந்த அமைப்பின் தடை கூடுமா அல்லது கூடாதா என்று விவாதிக்க, அதை விசாரிக்கும் ஆணையத்தில் அந்த குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் நேரில் வந்து விவாதிப்பது, அல்லது விசாரணையில் பங்கு கொள்வது, அல்லது அதை எதிர்த்து கருத்து சொல்வது பொருத்தமானதாக இருக்கும். உதாரணமாக இப்போது தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்பு பற்றி அந்த அமைப்பில் இருப்பவர்கள் வந்து பேசலாம். அதேபோல ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த பொறுப்பாளர்கள் வந்து நேரில் பேசித்தான் இருபது ஆண்டுகள் முன்பு, அவர்கள் அமைப்பின் மீதான தடையை நீக்கினார்கள் என்பது அங்கே கூறப்பட்டது இப்போது தடை செய்யப்பட்டுள்ள உல்பா என்ற " ஒன்றுபட்ட அஸ்ஸாம் விடுதலை முன்னணி" என்ற ஆயுதம் தாங்கி புரட்சி நடத்தும் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விரும்பியவுடன், அதன் மீதான தடையை நீக்க, சிறையில் உள்ள அந்த அமைப்பின் தலைவர்களுக்கு, பிணை கொடுக்க திட்டமிட்டுள்ளது.
இது இந்தியாவிற்குள் உள்ள அமைப்புகளின் நிலைமை. ஆனால் இதே அளவுகோல், தமிழீழ விடுதலை புலிகளுக்கு எப்படி பொருந்தும்? இதுதான் நமது கேள்வி. விடுதலை புலிகள் அமைப்பு இலங்கை நாட்டை சேர்ந்தது. அந்த நாட்டில் ஆயுதம் தாங்கி புரட்சி செய்தவர்கள். அவர்களை அழித்து முடித்து விட்டதாக, இலங்கை அரசும், இந்திய அரசும் கூறிவருகின்றன. அதன் தலைவர்களும் கொல்லப்பட்டதாக இந்த இரு அரசுகளும் ஏற்கனவே அறிவித்து விட்டன. அதன் பிறகும் அந்த குறிப்பிட்ட அமைப்பை இந்திய நாட்டில் தடை செய்யவேண்டிய அவசியம் என்ன என்பதுதான் நமக்கு புரியவில்லை. பதினெட்டு ஆண்டுகளாக அந்த அமைப்பை இந்தியாவில் தடை செய்து வருகிறார்கள். முதலில் அவர்கள் கூறிய காரணம், ராஜீவ் காந்தி மரணமும், இந்தியாவிற்குள் அவர்கள் வன்முறை செய்வார்கள் என்ற யூகமுமாக இருந்தது. இப்போது அங்கே இலங்கையில் போர் முடிந்த நிலையில் எதற்க்காக இப்படி ஒரு வலிந்த முயற்ச்சியை இந்திய அரசு செய்யவேண்டும்?
இலங்கையில் உள்ள அரசு நிறைய கதைகள் சொல்லலாம். நிறைய சந்தேகப்படலாம். முன்னெச்சரிக்கை செய்யலாம். அது அவர்கள் கணக்கு. அந்த கணக்குகள் எப்படி இந்திய அரசுக்கு பொருந்தும்? இலங்கை அரசு தனது புதிய அமைப்பு ஒன்றின் மூலம் புதிய எச்சரிக்கையை அறிவித்துள்ளது. எல்.எல்.ஆர்.சி. என்ற "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மறுவாழ்வு ஆணையம்" சார்பாக சித்தரஞ்சன் டி சில்வா, 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல், 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை நடந்தவற்றை தொகுக்கிறார். அனைத்து நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ரோகன குனரத்னா, புலிகளின் அனைத்து நாட்டு வலைப்பின்னலை உடைக்க அதிகமான முயற்ச்சிகள் வேண்டும் என்று கூறியிருக்கிறார். வட கொரியா, புலிகளுக்கு 1997 இல் ஆயதங்களை விற்பனை செய்துள்ளது என்று குற்றச்சாட்டையும் இலங்கை கூறியுள்ளது. புலிகளின் கணக்கு மேற்பார்வையாளர் பொன்னையா தாய்லாந்துக்கு வெள்யே வந்து அந்த ஆயுத கொள்முதல் செய்தார் என்பதாக இப்போது குற்றம் சாட்டுகிறது. அப்படியானால், 1987 க்கு முன்னால், புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தவர்கள் என்று இந்திய மத்திய அரசையும் குற்றம் சொல்ல மாட்டார்களா?
இலங்கை தனது நாட்டு விடுதலை அமைப்பை பற்றி கூறியவை நமது நாட்டில் அந்த நாட்டு அமைப்பை தடை செய்ய போதுமான ஆதாரமாக எப்படி இருக்க முடியும்? அப்படியானால் பாகிஸ்தான் இப்போது ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளது. அதாவது இந்திய அரசுதான் தெற்காசியாவிலேயே தற்கொலை செய்யும் மனித வெடிகுண்டுகளை தயார்செய்யும் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து குழப்பம் செய்த அரசு என்று பாகிஸ்தான் இப்போது குற்றம் சுமத்தியுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் அமைப்பு, கொழும்பில் இருந்து கொண்டு, தென்னிந்தியாவில் வன்முறை செய்ய திட்டமிடுகிறது என்று இந்திய ஏடுகள் கூறியதற்கு இப்படி ஒரு பதில் தாக்குதலை பாகிஸ்தான் செய்துள்ளது.
ஆனால் இந்த தீர்ப்பாயத்தில், சம்பந்தப்பட்ட புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் அல்லது அந்த அமைப்பின் உறுப்பினர்கள் யாராவதுதான் மனு செய்து தடையை எதிர்த்து வாதிடலாம் என்ற நிபந்தனை எப்படி சாத்தியம் எனபதே கேள்வியாக இருக்கிறது. அத்தகைய தடையினால் தங்கள் அமைப்போ, தாங்களோ பாதிக்கப்பட்டுள்ளோம் என்ற நிலையில் ஒருவர் இந்த விசாரணையில் கலந்துகொள்ளலாம் என்பதை வைத்துதான், வைகோவும், நெடுமாறனும், தமிழக மக்கள் உரிமை கழகமும் இந்த தீர்ப்பாயத்தில் முறையிட்டன. ஆனால் அவர்கள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அல்ல என்றும், அதனால் எப்படி பங்கு கொள்ள முடியும் என்றும் நீதியரசரும். அரசு வழக்கறிஞர்களும் வினவுகிறார்கள்.
தங்கள் அமைப்பினர் மீது புலிகள் அமைப்பிற்கு ஆதரவு கொடுத்ததற்காக, ஆதரித்து பேசியதற்காக, வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பதை டில்லியிலேயே வைகோ வாதாட, அதையும் கூட நீதியரசர் ஏற்காமல் தள்ளுபடி செய்திருந்தார். இப்போது நெடுமாறனும், அவரது வழக்கறிஞரான சந்திரசேகரும், இதே வாதத்தை முன்வைத்தனர். அதாவது தங்களது அமைப்பான தமிழ் தேசிய இயக்கத்தை. தடை செய்ப்பட்ட புலிகளை ஆதரிப்பதாக சொல்லித்தான் தடை செய்துள்ளார்கள் என்பதால் தாங்களும் இந்த தடையால் பாதிக்கப்பட்டோர்தான் என்ற அவர்களது வாதமும் கேட்கப்பட்டது . அதேபோல வழக்கறிஞர் புகழேந்தியும், தங்களது தமிழக மனித உரிமை கழகம், புலிகளை ஆதரிக்கும் அமைப்பு என்றும், இந்தியாவில் அடுத்த நாட்டின் புலிகள் அமைப்பு இருக்க முடியாது என்றும், அதனால் புலிகளின் ஏஜெண்டுகளோ, அனுதாபிகளோதான் இருக்க முடியும் என்றும் அதனால் அனுதாபிகளான தாங்கள் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் வாதம் செய்தார்.
முதலில் சென்னையில் பேசிய கியூ பிரிவின் மாநில கண்காணிப்பாளர், அசோக் குமார், பல ஆவணங்களை முன்வைத்து புலிகள் தடை செயப்பட வேண்டும் என்று கூறும்போது, ஒரு அதிர்ச்சி தகவலை கூறினார். அதாவது புலிகள் தமிழ்நாட்டையும் சேர்த்து, தமிழீழம் உட்பட அகண்ட தமிழகம் காண திட்டமிட்டதாக ஒரு குண்டை போட்டார். அதற்கு புலிகளின் ஆவணங்களை கொடுக்கமுடியுமா என்று கேட்டதற்கு, அது ரகசிய தகவல் என்று கூறி ஒரு வரைபடத்தை[ காவலர்களே தயாரித்த வரைபடத்தை] காட்டி பேசினார். அப்படியானால் அது எந்த ஆண்டு புலிகளின் வெளியீடு? 1987 வரை புலிகளுக்கு ஆயுதமும், பயிற்ச்சியும் கொடுத்தது இந்திய அரசுதானே என்ற கேள்வியை நாம் கேட்க தூண்டுகிறது. ஒரு குடையின் கீழ் அகண்ட தமிழகம் படைப்பதை புலிகள் நோக்கமாக கொண்டதாக கூறுவது பொய் என்று பலரும் கூறினார்கள். புகழேந்தி ஒரு முன்னாள் புலி உறுப்பினரின் ஒப்புதலை பெற்றுவந்த மனுவை கொடுத்தார். அதை மன்றம் கவனித்தது.
இவ்வாறு ஒரு பொருந்தாத விசாரணையை நடத்த முயலும்போது, இங்கே தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் வன்னி போர் முடிவுக்கு பின், வந்திறங்கி படுகின்ற கடினகளையும், ஈழ அகதிகள் இந்த தடையால் பயந்து வாழும் நிலைமையையும், அதனாலேயே அவர்கள் தங்களது மனித உரிமைகள் பாதிக்கபட்டு உளவியல் ரீதியான சித்தரவதைகளுக்கு உள்ளாவதையும் இந்த தீர்ப்பாயம் எண்ணிப்பார்க்குமா என்பதே நமது கேள்வி. இல்லாத அதுவும் இந்த நாட்டில், இந்தியாவில் இல்லாத அமைப்பிற்கு தடை விதிப்பதும் , அதை இந்தியாவில் இல்லாத உறுப்பினர்கள் வந்து பேச வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதும், வேடிக்கையாக இருக்கிறது. பி.யு.சி.எல். அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் கேட்டதற்கும் இதே பதிலை அரசு தரப்பு கூறி, உங்களை புலிகள் அமைப்பின் உறுப்பினராக அறிவித்துக்கொண்டு வாதாடுங்கள் என்று கேட்டுக்கொண்டது அதைவிட வேடிக்கையாக இருந்தது. அதற்கு இந்திய மக்கள் தான் தீர்ப்பு கூறவேண்டும்.
Tuesday, October 5, 2010
Subscribe to:
Posts (Atom)