Friday, April 23, 2010
சர்வாதிகாரத்திற்குள், ஜனநாயகத்திற்கு இடமிருக்கிறதா?
இன்றைய உலகம் நேற்றைய உலகம் போல் இல்லை. நேற்றைய உலகில் முடியாட்சி இருந்தது. அதன் பிறகு முதலாளித்துவ சமுதாயங்கள் வளர்ந்தன. அவை நாகரீகமான உலகமாக கருதப்பட்டன. அதாவது நிலக்குவிதல்களை ஆண்டு வந்தவர்கள் மன்னர்களாக காட்சி அளித்த காலம் போய், 19ம் நூற்றாண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகளால், முகிழ்ந்து வந்ததுதான் முதலாளித்துவ சமுதாயமாக காணப்பட்டது. அதனால் அது பண்டைய முறையிலேயே ஆட்சியை நடத்தமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. முடியாட்சிகளை எதிர்த்து கலகங்களை உருவாக்கியது முதலாளித்துவம். அப்படிப்பட்ட புதிய சக்திகள், மன்னராட்சி காலத்தில் மக்கள் ஒடுக்கப்பட்ட நிலைமைகளை விளக்கிச் சொல்லியே, அதை எதிர்க்க வேண்டிய நியாயங்களை பரப்பி வந்தனர். அதன் அடிப்படையில்தான் முதலாளித்துவ புரட்சிகள் என்று சொல்லக்கூடிய, மன்னராட்சிகளை எதிர்த்த மக்களது கலகங்கள் நடந்தன. அவற்றை தலைமை தாங்கிய சக்திகள் ஆட்சிக்கு வந்த நாடுகளின் தொழில்மயமாதல் என்பதற்கு முன்னுரிமை கிடைத்தது. கடந்த கால ஆட்சிமுறையிலிருந்து மாறுபட்ட ஆட்சிமுறையை நடத்திக் காட்டினால்தான், புதிய முதலாளிய சக்திகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதற்காக அவர்கள் உருவாக்கிய புதிய முறையில், ஆட்சியாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற நிலைமையை காட்டினர். அப்படி உருவாக்கப்பட்டதுதான் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையும். மக்கள் பிரதிநிதிகளை நேரடியாக மக்களே தேர்ந்தெடுத்து, ஆட்சியை ஆளுகின்ற முறையாக அது வர்ணிக்கப்பட்டது. அத்தகைய ஜனநாயக ஆட்சிமுறையிலும், சில நாடுகளில் அல்லது பல நாடுகளில் அவ்வப்போது ஆட்சியாளர்களின் ஒரு குறிப்பிட்ட கும்பல் மட்டுமே, அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்துக் கொள்ளும் விபத்துக்களும் நடந்தன. எப்போதாவது நடந்தால் விபத்து என்று கூறலாம். ஆனால் பல நாடுகளிலும் அப்படி நடக்குமானால் அதை என்னவென்று கூறுவது போன்ற கேள்விகளை, ஜனநாயக சக்திகள் உலகமெங்கும் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அவ்வாறு நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையிலும், அதிகாரத்தை கையில் குவித்துள்ள ஒரு கும்பலின் அல்லது ஒரு குடும்பத்தின் அல்லது பாரம்பரிய வாரிசின் அல்லது ஒரு கட்சியின் ஆட்சிமுறையே தொடர்வது என்ற நடைமுறையை பல நாடுகளிலும் காணமுடிகிறது. இந்தியாவில் நடந்து வரும் ஆட்சியைக் கூட அவ்வாறு விமர்சிப்பவர்கள் உண்டு. 100 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சி, மீண்டும், மீண்டும் இங்கே ஆட்சிக்கட்டிலுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி நேரு குடும்பத்தின் வாரிசுகள் மட்டுமே ஆட்சி அதிகாரத்திற்கு வந்துக் கொண்டிருப்பதாக, ஒரு குற்றச்சாட்டும் இங்குள்ள ஆட்சியாளர்கள் மீது இருக்கிறது. சமீபத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயிடம், அவரது குடும்பத்தவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறார்களா என்ற கேள்வியை ஊடகவியலாளர்கள் கேட்ட போது, அவர் இதைத்தான் உதாரணமாக சொன்னார். அதாவது இந்தியா போன்று காந்திகளோ, அமெரிக்கா போன்று புஷ்களோ, இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் முழுமையாக கையில் வைத்திருக்கவில்லை என்றும், தங்கள் குடும்பத்தில் இரண்டு தம்பிகள் மட்டும்தான் இருக்கிறோம் என்றும் பதில் கூறியிருந்தார். இதுவே ஜனநாயக ரீதியான ஆட்சி முறையில், சர்வாதிகாரமான அணுகுமுறையை கையாள்வதற்கு பல உதாரணங்கள் இருப்பதை பட்டவர்த்தமாக காட்டுகிறது. அதிலும் ஒரு நாட்டு அதிபரின் வார்த்தைகளிலேயே, இப்படிப்பட்ட வர்ணனை பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் தேர்தலில் அதிகமான வித்தியாசத்தில், பொன்சேகாவை மகிந்த ராஜபக்சே தோற்கடித்து அதிபராக தொடர்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்றார். அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்ற முறையிலான ஜனநாயக ரீதியான அங்கீகாரம்தான். அதே போல நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும், மகிந்தா தலைமையிலான கட்சியும், அதன் கூட்டணியும் பெரும் வெற்றியைப் பெற்றது. வெற்றி பெற்றவர்கள் தங்கள் சார்பாக ஒரு தலைமை அமைச்சரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். மகிந்தா தலைமையிலான கட்சியில் தீர்மானகரமான முடிவை எடுப்பது மகிந்தாவாகத்தான் இருக்கும். அதனால் அவர் தனது தம்பியான பசில் ராஜபக்சேயை பிரதமராக நியமிப்பார் என எங்கும் பேசப்பட்டது. பசில் ராஜபக்சே ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, அதிபரின் ஆலோசகர் என்பதாக பொறுப்புக் கொடுக்கப்பட்டவர். அதனால் அவரை பிரதமராக்குவார் என்ற யூகம் பலராலும் நம்பப்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கைகளுக்கு எதிராக டி.எம். ஜெயரத்னே என்ற முன்னாள் சோசலிஸ்ட் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும்கட்சி மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் பெற்று விட்டதால், 20வது இலங்கைப் பிரதமராக மகிந்தாவின் நெருக்கமான நண்பர் ஜெயரத்னே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு வயது 78. ஏற்கனவே பிரதமராக இருந்த ரத்னஸ்ரீ விக்ரேமாநாயகே என்பவர் இருந்த இடத்தில் இனிமேல் டி.எம்.ஜெயரத்னே இருப்பார். இந்த ஜெயரத்னே, மகிந்தாவின் கடந்த அமைச்சரவையில் தோட்டத் தொழிலுக்கான அமைச்சராக இருந்தார். இவர் தபால்காரராக இருந்து அரசியல்வாதியாக வந்து, சோசலிஸ்ட் என்பதாக அறிமுகமானவர். இத்தகைய ஒரு ஏற்பாட்டை மகிந்தா செய்யக் காரணம் என்ன? உலக நாடுகள் மத்தியில் இலங்கையில் சர்வாதிகாரம் நடக்கவில்லை என்று மகிந்தா நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதே போல தங்கள் குடும்பத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதாகவும் காட்ட வேண்டியிருக்கிறது. அதற்காகவே அவர் ஜெயரத்னேயை இத்தகைய உயர் பொறுப்புக்கு கொண்டு வந்தார் என்பதும் புரியப்படுகிறது. ஏப்ரல் 8ம் நாள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 225 உறுப்பினர்கள் கொண்ட சபையில், 144 இருக்கைகளை மகிந்தாவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கைப்பற்றியது. இது மூன்றில் இரண்டு பங்கை விட, 6 இருக்கைகள் குறைவு. மகிந்தா தலைமையிலான ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டணி என்பது சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தோன்றியது. சந்திரிகாவின் மூலம் அதிபர் வேட்பாளராக தங்கள் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட மகிந்த ராஜபக்சேதான், பொறுப்புக்கு வந்ததும் தேர்தலுக்கு முன்பே, சந்திரிகாவை தூக்கி எறிந்தார். அதே போல ஆட்சிக்கு வந்ததும் தனது தம்பி கோத்தபாய ராஜபக்சேயை, பாதுகாப்பு செயலாளராக நியமித்தார். இன்னொரு தம்பி பசில் ராஜபக்சேயை, எம்.பி.யாக நியமித்து தனக்கு ஆலோசகராக ஆக்கிக்கொண்டார். இந்த மூன்று சகோதரர்களின் கைகளில்தான் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்டன. முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி 60 இருக்கைகளை வென்றது. மகிந்தா கட்சிக்கு தேசிய பட்டியலில் 17 இடங்கள் கிடைத்தது என்றால், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்தன. இலங்கை தமிழரசுக் கட்சி 14 இடங்களை வென்றது. அதில் ஒன்று தேசியப்பட்டியலில் சேரும். ஜனத விமுக்தி பெரமுனா தலைமையிலான, ஜனநாயக தேசிய கூட்டணி, இரண்டு தேசிய பட்டியல் இடங்களையும் சேர்த்து 7 இடங்களைப் பிடித்தது. அதில் ஒன்றுதான் முன்னாள் ராணுவத்தளபதி சரத்பொன்சேகா வெற்றி பெற்ற கொழும்பு தொகுதி. நேற்று இலங்கை நாடாளுமன்றம் கூடியுள்ளது. வெற்றி பெற்ற உறுப்பினரான பொன்சேகாவை, நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிப்பார்களா என்ற விவாதம் உலகெங்கும் நடந்தது. ஆனால் கோத்தபாய அப்போதே அனுமதிப்போம் என்று கூறிவந்தார். நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் சரத்பொன்சேகா, காவலர்களின் பாதுகாப்பில் அழைத்து வரப்பட்டார். அப்போதும் அவரது கன்னிப் பேச்சில், நாடாளுமன்றத்திலேயே தன்னை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக பேசினார். தன்மை விடுதலை செய்ய வேண்டும் என கோரினார். அதிபர் தேர்தலில் பொன்சேகா தோற்றவுடன், அவரரை பலாத்காரமாக மகிந்தாவின் ராணவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது. அனைவருக்கும் தெரியும். சட்ட விரோத காவலில் முன்னாள் ராணுவ தளபதியை, அதிபர் தேர்தலில் போட்டியிட்டு பல லட்சம் வாக்குகள் பெற்ற ஒருவரை வைத்திருப்பதும் உலக சமூகத்திற்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் கூட, பொன்சேகாவை நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கு கொள்ள வைத்ததன் மூலம், ஜனநாயகம் இலங்கையில் சிறப்பாக நடப்பதாக, உலக நாடுகளை நம்ப வைக்க முடியும். இது தான் இத்தகைய ஜனநாயக எதிர்ப்பார்ப்புகளில், சர்வாதிகாரிகளும் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரம். உண்மையில் இலங்கையில் என்ன நிலைமை நிலவுகிறது என்று, மனித உரிமை ஆர்வலர்களிடம் விசாரித்தால் தெரிந்து விடும். உலக பொதுமன்னிப்பு சபை இலங்கைத் தீவில் உள்ள அவரசநிலையை நீக்கி விட கோரிக்கை வைத்துள்ளது. 40 ஆண்டுகளாக இலங்கையில் பொது மக்கள் மீதும், குறிப்பாக தமிழர்கள் மீதும் கருப்பு சட்டங்கள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன. அவசர நிலை விதிகள், பயங்கரவாத தடுப்பு சட்டம், பொது பாதுகாப்பு அவசர சட்டம் மற்றும் அவசர சட்ட முறைகள் அங்கே இருக்கின்றன. உலக கண்காணிப்பு அமைப்புகளால் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில், உலகில் ஜனநாயகம் 150 நாடுகளில் சோதிக்கப்பட்டால், அதில் 108வது நாடாக இலங்கை இருக்கிறது என்கிறார்கள். சிவில் உரிமைகளை கணக்கில் எடுத்தாலும், அரசியல் உரிமைகளை கணக்கில் எடுத்தாலும் இலங்கை பின்தங்கியே இருக்கிறது. ஊடகச்சுதந்திரம் என்ற அளவில் 150 நாடுகளை கணக்கில் எடுத்துப் பார்க்கும் போது, இலங்கை 116வது நாடாக இருக்கிறது. ஊழல் அளவை கணக்கில் எடுத்தால் 149 நாடுகளில், இலங்கை 79 வது நாடாக இருக்கிறது. இவ்வாறு அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஒரு கும்பலின் பட்டவர்த்தனமான, விதி மீறல், சட்ட மீறல், உரிமை மீறல் ஆட்சியிலும் வெற்றிகரமாக தேர்தல்கள் நடத்தப்படமுடியும். முத்திரைக் குத்தப்பட்ட சர்வாதிகாரிகளே மீண்டும் ஜனநாயக ரீதியான வெல்ல முடியும். சர்வாதிகார சூழலுக்கு மத்தியில், ஜனநாயக பசுமைத் தளங்களையும் அவர்கள் காட்ட முடியும். இதற்கெல்லாம் இலங்கை ஒரு முன்னணுதானமாக நிற்கிறது.
Subscribe to:
Posts (Atom)