Saturday, December 26, 2009
சீனத்தலைவர் மாசேதுங், உலகத் தலைவரானது எப்படி?
இன்று இந்திய அரசையும், இந்தியாவின் மையப்பகுதியான மாநிலங்களையும், குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை உலுக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், அது மாவோயிஸ்டு இயக்கம் என்பதாக சிறுபிள்ளையும் கூறும். அதே போல அருகே இருக்கும் நேபாள நாட்டில், மன்னராட்சியை தூக்கி எறிந்து, மக்களாட்சியை நிறுவிய இயக்கத்தின் பெயரென்ன என்றால், மாவோயிஸ்டு கட்சி என்பதாக அனைவரும் கூறுவர். இன்று இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நேபாளம் சென்று அங்குள்ள பிரச்சனைகளைத் தீர்த்து ஒரு சுமூகமான தீர்வை எட்டுவதற்காக சென்றிருக்கிறார் என்றால், யாரைச் சந்தித்து சுமூகமான தீர்ப்பை ஏற்படுத்துவார் என்ற கேள்விக்கு, நேபாள மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் பிரச்சந்தாவை சந்தித்து பேச இருக்கிறார் என்பதாகத்தான் செய்திகள் வருகின்றன. அப்படி இந்தியாவையும், நேபாளத்தையும் செல்வாக்கு செலுத்தும் இந்த மாவோயிஸ்டுகள் என்ற பெயர், மாவோ என்ற சீனத்தலைவரின் பெயரிலிருந்து வந்திருக்கிறது. மாசேதுங் என்ற அந்த சீனத்தலைவர் மாவோ என்று அழைக்கப்படுகிறார். இவரது பெயர் ஏன் இந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்த வேண்டும்? அப்படி இவர் சாதித்தது என்ன? இதுபோன்ற கேள்விகள் இன்றைய காலகட்டத்தில், இளைய தலைமுறையினருக்கு எழுவது இயல்பு. இன்று டிசம்பர் 26ம் நாள், மாவோ பிறந்தநாள். 1893ம் ஆண்டு இதே நாளில் சாவோசன் என்ற ஊரில், ஹூனான் மாநிலத்தில், சீனாவில் மாசேதுங் பிறந்தார். தனது ஆரம்பப் பள்ளியிலேயே, பாரம்பரிய கன்புயூசியஸ் கருத்துக்களை கற்றார். அவரது தயார் பௌத்த மதத்தை சேர்ந்தவர். அதன் பிறகு அந்த நாட்டின் குடியரசுப் படையில் போர் வீரனாக பணியாற்றினார். மாநில நூலகத்தில் 6 மாதங்கள் படித்தார். ஹூனான் பகுதியிலிருந்தே பட்டம் பெற்றார். பிறகு தலைநகர் பீகிங் சென்றார். அங்குள்ள நூல் நிலையத்தில், உதவியாளராக பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் புரட்சிகர அறிவு ஜீவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் சீன கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்தவர்கள். 1919ம் ஆண்டு ஹூனான் பகுதிக்கு திரும்பினார். அங்கு அரசியல் பணிகளில் ஈடுபட்டார். தானே ஒரு குழுவை உருவாக்கினார். அதன் மூலம் ஒரு அரசியல் இதழை வெளியிட்டார். 1920ம் ஆண்டு தனது பேராசிரியரான யாங் என்பவரின் மகளான யாங் கைஹியூ என்ற சக மாணவியை திருமணம் செய்தார். 1930ம் ஆண்டு, சீனாவை அப்போது ஆண்டு வந்த கொமின்டாங் என்ற தேசிய படையால், கைஹியூ அவரது மகன் அனையிங்கும் கைது செய்யப்பட்டு கைஹியூ படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு மாவோ, யாங் சிங்கிலிருந்து வந்திருந்த தனது சக பணியாளரான 17 வயது பெண் ஹிசிசன் என்பவரை மணமுடித்தார். 1937ம் ஆண்டு அவர்களது மணம் முறிந்தது. பிறகு அவர் சியாங்சிங் என்ற பண்பாட்டுக் கலைஞரை, மணம் முடித்தார். தனது 27வது வயதில், ஷாங்காய் நகரில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரசின் முதல் அமர்வில் பங்கு கொண்டார். இரண்டே ஆண்டுகளில் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார். பிறகு கட்சியால் ஹூனான் பிரதேசத்திற்கே அனுப்பப்பட்டார். இப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்தில் வளர்ந்த மாசேதுங், பின்னாளில் சீனப்புரட்சிக்கே தலைமை தாங்குபவராக வளர்ந்தார்.சீனா ஒரு விவசாய நாடு. அங்கே விவசாயிகள் பெரும்பான்மையாக நிலமற்ற, ஏழை விவசாயிகளாக இருந்து வந்தனர். நிலங்கள் அனைத்தும் போர் பிரபுக்கள் என்று அழைக்கப்படும் பண்ணையார்களின் ஆதிக்கங்களின் கீழ் இருந்து வந்தது. அப்போது உழைத்துக் களைத்த அந்த விவசாயிகளுக்கு மட்டும் தான், உழுதுபட்ட நிலம் சொந்தம் என்ற கொள்கையை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது. உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கொள்கையை முதன்மைப்படுத்தி, மாவோவும் அந்த வட்டாரத்தின் விவசாயிகளை அணி திரட்டி வந்தார். அந்த அணி திரட்டலில் ஏழை விவசாயிகளை, ஆயுதம் தாங்கிய படையாக மாவோ உருவாக்கினார். ஹூனான் பிராந்தியத்தில் மாவோ தலைமையிலான அந்தப்படை, தொழிலாளர்கள், விவசாயிகள் புரட்சிகரப்படை என்று அழைக்கப்பட்டது. மாவோவே ஒரு விவசாய குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்ததால், விவசாயிகள் மத்தியிலும், உழவர்கள் மத்தியிலும் நல்லதொரு மதிப்பு அவருக்கு இருந்தது. அதைப்பயன்படுத்தி, அந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு, மாவோ மார்க்சியத்தை அறிமுகப்படுத்தினார். அவர் தலைமை தாங்கிய அந்தப்படை ஆட்சியாளர்களது படையால் தோற்கடிக்கப்பட்டது. கடும் போருக்குப் பிறகு, மக்கள் படை சிதறடிக்கப்பட்டது. ஹூனானை விட்டு, சன்வான் பகுதிக்கு அந்தப் படைகள் நகர்ந்தன. சிதறிச்சென்ற மக்கள் படையை மாவோ மீண்டும் திரட்டி, சிறிய படையணிகளாக உருவாக்கி, ஒரு ராணுவ பிரிவையே தயார் செய்தார். அதன் தலைமையேற்க கட்சி கிளைகளை உருவாக்கினார்.படைக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு அரசியல் ஆலோசகரை நியமித்தார். அவருடைய வழிகாட்டலில் படையின் செயல்பாடு இருக்கவேண்டும் என்பதை விதியாக்கினார். பகுதி, பகுதியாக இந்த முறையில் உருவாக்கப்பட்ட மக்கள் படைக்குழுக்கள், ஒட்டுமொத்தமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் ஒழுங்கு படுத்தப்பட்டது.மேற்கண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே, எதிர்காலத்தை மாசேதுங்கின் ராணுவப்படைப்புகள் என்பது உருவாக்கப்பட்டது. அதுவே உலகின் பல பகுதிகளிலும் இருக்கின்ற புரட்சியாளர்களுக்கு, ராணுவ வழிகாட்டும் தத்துவமாக உருவானது. அதே போல விவசாயிகள் மத்தியில், மக்கள் இயக்கங்களை உருவாக்கியதிலும், மாவோ முன்னுதாரணங்களை படைத்திருக்கிறார். தான் முதலில் பணியாற்றிய ஹூனான் பகுதி விவசாயிகளை அணி திரட்டுவதற்காக, ஒரு விவசாயத் திட்டத்தை முன்வைத்து அதை நிறைவேற்றுவதற்காக போராட்டங்களை நடத்தினார். அந்த திட்டத்தில் நாளைய சூழலில் விவசாயிகளுக்கு தேவையான உடனடி கோரிக்கைகளையும், எதிர்காலத்தில் முழுமையான விடுதலையை அடைவதற்கான உழுபவனுக்கே நிலம் என்ற கோரிக்கையையும் இணைத்து, விவசாய பெருங்குடி மக்கள் முன்னால் வைத்தார். இதன் மூலம் அணிதிரண்ட விவசாயிகளை விடுதலை செய்யப்பட்ட நிலங்களில் அமர்த்தினார். விவசாய முன்னோடிகளை தேர்வு செய்து, கொரில்லா குழுக்களை உருவாக்கினார். அத்தகைய கொரில்லா குழுக்கள் மூலம், பண்ணை அதிகாரங்களை தகர்த்தெறிந்து, விரட்டப்பட்ட பண்ணையார்களின் நிலங்களை, ஆயுதம் தாங்கிய விவசாயக் கொரில்லாக்களின் பாதுகாப்புடன், நிலமற்ற விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார். அத்தகைய விவசாய பொருளாதாரத்தை வழிநடத்த, புரட்சிகர மக்கள் கமிட்டிகளை, கிராமங்களில் உருவாக்கினார். அவர் உருவாக்கிய கொரில்லா படைகள் இணைக்கப்பட்டு, சீரான படையாக ஆயுதம் தாங்கிய மக்கள் ராணுவமாக கிராமப்புறப் பகுதிகளில் நிலை பெற்றது. அப்படிப்பட்ட பகுதிகள் விடுதலைப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அனுபவங்களின் மூலம், கிராமப்புறங்களை விடுதலை செய்து, நகர்ப்புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்யவேண்டும் என்ற புதிய தத்துவத்தை மாசேதுங் முன்வைத்தார். அதுவே பிற்காலத்தில் மாவோவின் மக்கள் போர்ப்பாதை என்பதாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் விவசாய நாடுகளில், மாவோவின் வழியை பின்பற்றுவோர், இத்தகைய மக்கள் போர்ப்பாதையை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்தான் இந்தியாவிலிருக்கும் மாவோயிஸ்டுகளும், நேபாளத்திலிருக்கும் மாவோயிஸ்டுகளும் வரிசைப்படுத்தப் படுவார்கள்.மக்கள் ஜனநாயக புரட்சி என்பதாக மாவோ, தான் நடத்திய புரட்சியின் கட்டத்தை வர்ணித்தார். அது அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நாட்டு விடுதலைக்காகவும், பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து விவசாயிகளின் விடுதலைக்காகவும் போராடக்கூடிய ஒரு புரட்சியின் கட்டம் என்று அவர் விவரித்ததால், அதன் மூலம் ஏற்படுத்துகின்ற அராசங்கத்தை மக்கள் ஜனநாயக அராசங்கம் என்று அழைத்தார். இது முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சி என்று அழைக்கப்பட்ட, நிலப்புரபுத்துவ எதிர்ப்பு போரையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற தேசவிடுதலை போரையும் இணைத்துப் பார்ப்பதால், இதற்கு புதிய ஜனநாயக புரட்சி என்று பெயரிட்டார். அதுவே இன்று வரை பிரபலமாக இருக்கிறது. மாவோ சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 1954 முதல் 1975 வரை இருந்தார். அதே போல ராணுவ தலைமையிலும் இருந்தார். மக்கள் சீனக்குடியரசுக்கு முதல் தலைவராக செயல்பட்டார். ஆகவே அவரது பிறந்தநாள் இந்த வரலாற்று படிப்பினைகளை, நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நாள்.
Subscribe to:
Posts (Atom)