Sunday, April 18, 2010
நகரத்திலிருந்து, கிராமம் செல்லும் வேலையற்றோர் கூட்டம்
டெல்லிப் பல்கலைக்கழகம், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தை அடுத்த நிலையில், கல்வியாளர்களாலும், அறிவுஜீவிகளாலும் அங்கீகரிக்கப் படுகின்ற ஒரு அறிவுத் தளம். அந்தப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் உதவிப் பேராசிரியராக இருக் கின்ற சாய்பாபா, இந்திய அரசு சந்திக் கும் பொருளாதார நெருக்கடி பற்றி கூறியிருக் கிறார். இந்தப் பேராசிரியர் புரட்சிகர ஜன நாயக முன்னணி என்ற அமைப்பை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். இவர் பல்வேறு ஜனநாயக உரிமைக் குரல் களை எழுப்புவதில் முன்நிற்பவர். கல்வியாளர்கள் கல்லூரி களுக்குள் முடங்கி இருக்க வேண்டும். என்பதுதான் நிர்வாகங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் ஆளும் வர்க்கக் கட்சிகளின் மாநிலங்கள் தொடங்கி, மத்திய அரசு வரை அமைச்சரவைகளில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில், சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில், இத்தனை முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் இருக்கிறார்கள் என்று கூறுவதில் அந்தந்த கட்சிகள் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் நிலவுகின்ற சமூக பொருளாதார கட்டமைப்பு க்கு எதிராகவோ, அதைக் கேள்வி கேட்டோ யாராவது கல்வியாளர்கள் பேசுவார்களானால், அவர்களை புரட்சியாளர்கள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ முத்திரைக்குத்தயாரும் தயங்குவதில்லை.வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தாங்கள் நடத்திய சாதனைகளை, இந்தியா ஒளி விடுகிறது என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்த கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி. அதுபற்றி இந்த பேராசிரியர் கூறும்போது, உலகமயமாக்கல் கொள்கையினால் இந்தியாவில் முதலில் பலன் பெற்றது ஆளும் கூட்டம்தான் என்றார். அதிகாரத்தை சில குறிப்பிட்ட குடும்பங்களின் கையில் வைத்திருக்கும் நிலை இந்த நாட்டில் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அதிகமான அளவில் பலன்களை அவர்கள் அள்ளியிருக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் சமீபத்தில் அதிகமாக சேர்ந்திருக்கிறார்கள். ஒருபுறம் செல்வம் குவிவதும், மறுபுறம் 80% மக்கள் தொகையினர் ஒரு நாளைக்கு ரூ.20க்கும் குறைவாக பெறுவதும் என்ற நிலை தொடர்கிறது. ஒரு நாளாவது முழுமையாக உணவுக் கிடைக்காத குடும்பங்கள் அதிகமாக இருக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சூழ்நிலை இல்லை என்று அரசாங்கமே கூறுகிறது. மேற்கத்திய நாடுகள், அதிலும் குறிப்பாக அமெரிக்கா தங்கள் கரங்களில் இந்தியாவின் தீண்டப்படாத வளங்களை கையில் எடுக்க இத்தகைய உலகமயமாக்கல் கொள்கைகளை அதிவேகமாக அமுலாக்கு கிறார்கள். அதே சமயம் பெரிய அளவில் நிலவும் வறுமை, பெறும் மோதல்களை உருவாக்குகிறது. கடந்த 6 ஆண்டுகளில் நாம் இரண்டாவது தலைமுறை சீர்திருத்தம் என்ற கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறோம். பேராசிரி யரின் மேற்கண்ட விளக்கங்கள் இந்த நாட்டில் கலகம் உருவாவதற்கான தளத்தை அடையாளம் காட்டுகிறது. முதல் கட்டம், பொருளாதார தாராளமய மாக்கல் மூலமும், அதற்கான சட்ட ரீதியான கட்டமைப்பு மூலமும் எதிரொலித்தது. அது ஐ.டி.துறையை முக்கிய அடிப்படையாக கொண்டிருந்தது. அப்போது குறைவான அளவே அன்னிய நேரடி நிதிமூலதனம் இறக்குமதியானது. இரண்டாவது கட்டம் என்பது நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, பன்னாட்டு மூலதன நிறுவனங்களுடன் கையெழுத்திட்டு, அதன் மூலம் இயற்கை மூலாதாரங்களை கொள்ளையடிக்க அந்நியர்களை அனுமதிப்பது என்ற நிலைக்கு சென்றுள்ளது. இந்தியாவின் மத்தியப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும், பெரும்பான்மையான இரும்புத்தாது, நிலக்கரி, பாக்ஸைட்டு, சுண்ணாம்பு மற்றும் பிற கனிம வளங்கள் கிடைக்கின்றன. அவற்றை மேற்கத்திய நாடுகள் கையிலெடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அவர்களுக்காக பெருவாரியான நிலங்கள் பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. பெருமளவு விளை நிலங்களும், காடுகளும், கனிமவளங்களும் மற்றும் தண்ணீரும் இன்று விற்கப்படுகின்றன. இத்தகைய நிலைமை ஆங்கிலேயர்கள் காலனியாக இந்த நாட்டை வைத்திருந்த போது கூட நிகழவில்லை. இதன் விளைவாக கடந்த 5 ஆண்டுகளாக, தங்கள் நிலங்கள் பறிபோவதை எதிர்த்து மக்களுடைய எதிர்ப்பு இயக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் தொழில் மயமாதலுக்கான திட்டங்கள் ஆகியவற்றுக்கும் வட்டார அளவிலான எதிர்ப்புகள் வருகின்றன. மேட்டுக்குடிகளில் அடக்கு முறைகளுக்கு ஒப்ப, எதிர்ப்புகள் பல நேரங்களில் வன்முறையாகவும், ஆயுதம் தாங்கியும் கூட எழுகின்றன. சில நேரங்களில் தலைமை இருந்தும், இல்லாமலும் கூட எதிர்ப்புகள் நிகழ்கின்றன. உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கங்கள் இந்தியாவையும் கடுமையாக பாதிக்கின்றது. அமெரிக்க போன்றே 50 லட்சம் தொழிலாளர்கள் நமது நாட்டிலும் வேலையிழந்துள்ளார்கள். நூற்பாலைத் துறை கிட்டத்தட்ட அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவற்றின் பாதிப்புகளை நடுத்தர வர்க்கம் அனுபவிக்கிறது. இனியும் அவர்கள் மேற்கத்திய முறையில் சுகமான வாழ்வை எதிர்கொள்ள முடியாது. ஐ.டி. போன்ற சேவை நிறுவனங்களின் ஊழியர்கள் இப்போது தான் பாதிக்கப்படுகிறார்கள். டெல்லிக்கு அருகே உள்ள கர்காவோன் என்ற இடத்தில் மையமாகி இருந்த ஆலைகளில், உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் முதன்முறையாக பொறியாளர்களும் இப்போது வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர். இதுவே தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும் இணைந்து போராடுவதற்கான சூழல் முகிழ்வதைக் காட்டகிறது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக வேலையிழந்து, நகர்ப்புறங்களை விட்டு கிராமப்புறங்களுக்கு மக்கள் செல்கிறார்கள். ஆனால் கிராமங்களில் அவர்களுக்கு வேலை கொடுக்க எதுவுமே இல்லை. நகரம் மற்றும் கிராமம் எங்குமே வாழ்வாதரம் கிடைக்காமல் நமது மக்கள் திணறுகிறார்கள். விவசாயம் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. ஆனாலும் 60% மக்கள் தொகை விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்து நிற்கின்றது. 50 ஆண்டுகளாக இந்தியா தனது உணவுப் பாதுகாப்பை இழந்து வருகிறது. ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும், அவை தொழிற்சாலைகளாக மாறவில்லை. அதனால் கிராமங்களிலும், நகரங்களிலும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன. தெருக் களிலும் மோதல்கள் எழுகின்றன. நல்வாய்ப்பாக அத்தகைய தன்னெழுச்சி களை ஒழுங்குபடுத்த ஒரு புரட்சிகர இயக்கம் இங்கே இருக்கிறது. ஆதிவாசிகளை அவர்களது பாரம்பரிய நிலங்களிலிருந்து அகற்றுவதற்காக, பச்சை வேட்டை என்ற ராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது. 5வது மாதமாக 2,50,000 ராணுவ வீரர்களை, ஒரு முழுமையான போருக்காக அரசு இறக்கிவிட்டுள்ளது. அமெரிக்கா ராணுவத்தின் தந்திரங்கள், இங்கே இந்திய மக்கள் மீது சொந்த நாட்டு அரசின் ராணுவத்தால் அமுலாக்கப்படுகிறது. அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் அவர்களால் கொல்லமுடிகிறது. வட்டார மொழியும், வட்டார அரசியல் பின்னணியும் தெரியாமல் சாதாரண ராணுவ வீரர்கள் தோல்வியை தழுவிகிறார்கள். வெற்றிகரமாக முன்னேற முடியாததால், நிராயுதபாணியான இலக்குகளைத் தாக்குகிறார்கள். அதன் விளை வாக மாவோயிஸ்ட் இயக்கத்தால் நமது ராணுவத் தினர் தாக்கப்படுகிறார்கள். ஏற்கனவே முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று முத்திரைக்குத்தி முடித்தவர்கள், இப்போது ஆதிவாசிகளையும், தலித்களையும் அதே முத்திரைக் குத்தி அழைக்கிறார்கள். இது இவை கல்வியாளர் கக்கும் கசப்பான உண்மைகள். பொருளாதார, அரசியல் சூழலின் விளைவே நடந்து வரும் உள்நாட்டுப் போர் என்ற செய்தியை கல்வியாளர் மட்டுமல்ல, நாமும் உணர வேண்டியிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment