Saturday, July 22, 2017

இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! - டி.எஸ்.எஸ்.மணி
சீனா, இந்தியா எல்லை பிரச்னை என்பதை இந்திய ஊடகங்கள் போர் வரை கொண்டு நிறுத்திய பிறகு, இப்போது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முதன்முறையாக வாய் திறந்து, “இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தைத் திரும்பப் பெறும்" எனப் பேசியிருக்கிறார்.
இது நமது ஆங்கில ஏட்டின் செய்தி. அதுவும் அமெரிக்கா, ‘இரு நாடுகளும் பேசித் தீருங்கள்’ என்று கூறிய பிறகுதான் நடக்க வேண்டுமா? சரி. இருக்கட்டும். நல்லது நடந்தால் சரி. இப்போதாவது இந்திய அரசு, ‘தாங்களும் எல்லை மீறிச் சென்றிருப்பதை இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்களா?’ என்ற கேள்விக்குக்கூட நாம் போக வேண்டாம். ஆனால், சீனாவிலிருந்து வரும் ‘க்ளோபல் டைம்ஸ்’ என்ற ஏடு, தனது தலையங்கத்தில், ‘இந்து தேசியவாதத்தால் சீன விரோத உணர்வு வளர்ந்து வருகிறது. மோடி பதவியேற்ற பிறகு, இந்து தேசியவாத உணர்வு மேலோங்கி வருகிறது. இந்து தேசியவாதத்தால் இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் உருவாகி உள்ளது’ என்று கூறியுள்ளது.
இது நமது தமிழ் ஏட்டின் செய்தி. இந்தச் செய்திகூட, உண்மையில் சீனா அப்படிக் கண்டுபிடித்துள்ளதா அல்லது இந்திய அரசியலுக்குள் புகுந்து, ஆளும் பாஜக-வுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் மற்றும் இடசாரி கட்சிகளை வளைத்துப்போட இப்படி எழுதுகிறார்களா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. இது ஒருபுறம் இருக்க, மீண்டும் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் ‘புதிய’ அணுகுமுறை உற்சாகப்படுத்தப்படுகிறது.
அதாவது, மஹிந்த ராஜபக்சே ஆட்சியில், ‘தமிழின அழிப்பு போர்’ நடத்தப்பட்டு, தமிழின விடுதலை தற்காலிகமாக தள்ளிப்போடப்பட்டது. அத்தகைய சிங்களப் பேரினவாதப் போரின் வெற்றிக்கு யார், யார் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள் என்பது, உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்குத் தெரிந்த செய்தி. ஆனால் போர் முடிந்த பிறகு அமெரிக்கா வேறொரு நிலையை எடுத்தது. மஹிந்தா அரசுக்கு எதிராக அமெரிக்கா, ஐக்கிய நாட்டு மனித உரிமை கழகத்தில் போர்க் குற்றங்களுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தைக்கூட, இந்திய அரசு நீர்த்துப்போகச் செய்தது. அத்தகைய செயலையும் அமெரிக்கா அங்கீகரித்தது.
சீனா முழுமையாக ‘மஹிந்தா ஆதரவு நிலையையே’ எடுத்தது.
தீர்மானத்தைக் கொண்டுவந்தவர்கள், மஹிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராகவும், சீனா போன்ற நாடுகள் ஆதரவாகவும் இருந்தார்கள். ஆனால், யாருமே தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டு அடுத்து இலங்கையில் நடந்த தேர்தலில் அம்பலமானது.
தேர்தல்வரும் நேரத்தில் இலங்கை அதிபர் மஹிந்தா, “இந்திய அரசின் வெளிவிவகாரத்துறையின் உளவு நிறுவனமான ரா அதிகாரி தனது கட்சிக்கு எதிராக சதி செய்கிறார்” என பகிரங்கமாக அறிவித்தார். உடனே ஓர் அதிகாரியை இந்திய அரசு மாற்றியது.
அதேநேரம், மஹிந்தாவுக்கு எதிராக அதிபருக்கு நின்ற மைத்திரிபால சிறிசேனா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தார். அவருடன் கூட்டுச்சேர்ந்திருந்த ரணில் விக்ரமசிங்கே அமெரிக்கா மற்றும் இந்திய அரசின் ஆதரவைப் பெற்றிருந்தார். இந்திய அரசுக்கோ, அமெரிக்க அரசுக்கோ, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கு அரசியல் தீர்வு வர வேண்டும் என்பதை விட, இலங்கைத் தீவில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அதுவே நடந்தேறியது.
அதனால், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இந்த ஆண்டு மீண்டும் ஐக்கியநாட்டு மனித உரிமைக் கழகத்தில் இலங்கை பற்றிய தீர்மானம் விவாதத்துக்கு வந்தபோது, ‘தாங்கள் விரும்பிய ஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டு விட்டதே’ என்ற நிலைப்பாட்டில், இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைக்காகக் கேட்ட கால அவகாசத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஆனாலும், அவர்கள் ஆதரவு பெற்ற மைத்திரி-ரணில் அரசும், சீனசார்பு நிலையை எடுத்து, ஹம்பந்தோட்டா துறைமுகம், நாடு தழுவிய நெடுஞ்சாலை போன்ற ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சீன அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொடுத்து விடும் ஒப்பந்தங்களை போட்டுவிட்டனர்.
இது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெருத்த அடியைக் கொடுத்துள்ளது.
ஆகவே, இன்றைய இலங்கை அரசுக்கும் நெருக்கடியைக் கொடுக்க அமெரிக்காவும் இந்திய அரசும் திட்டமிடுகிறார்கள். ஏற்கெனவே, இந்த தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த அல்லது மட்டுப்படுத்த, அமெரிக்க சந்தையை உற்சாகப்படுத்த அல்லது அமெரிக்க மேலாதிக்கத்தை விரிவுபடுத்த அமெரிக்க அரசு, இந்திய அரசை மட்டுமே நம்பி இருக்கிறது.
ஆகவேதான், இந்தியப் பெருங்கடலில் ஏற்கெனவே அமெரிக்காவின் பிடியில் உள்ள ‘டியாகோ கார்சியா’ என்ற ஆங்கிலேயர்களின் தீவு, ‘அமெரிக்கா ராணுவத் தளமாக’ இயங்கிவரும் வேளையில், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து உண்டு என்ற உண்மை ஊரறிந்தது என்றாலும்கூட, ஆறு மாதங்களுக்கு முன்பு அதன் அருகே மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள், ‘டியாகோ கார்சியா’ தீவில் உள்ள அமெரிக்கப் படையால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, கைதாகி, தண்டம் கட்டிய செயலைக்கூட இந்திய அரசோ, ஊடகங்களோ பெரிதுபடுத்தவில்லை. மாறாக, இலங்கையில் வந்து இறங்கியுள்ள சீனாவின் சக்திதான், இந்தியாவுக்குப் பெரும் ஆபத்தை உருவாக்கும் என்ற செய்தியை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, ‘கடல் வழியாக சீனா இந்தியாவை சுற்றி வளைக்கும் ஆபத்து இல்லை’ எனக் கூறியுள்ளார். ஏன் என்றால், ‘சீனா நேரு காலத்திய பஞ்சசீலக் கொள்கைப்படியான அமைதிவழி சக வாழ்வு என கூறும்போது, நாங்களும் அதையே விரும்புகிறோம். தூதரக உறவுகள் நடைபெறுகின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம், செப்டம்பரில் சீனாவில் நடக்க இருக்கின்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு முன்னால் நடக்கும்’ என்றெல்லாம் இப்போது சுஷ்மா கூறுகிறார்.
அமெரிக்காவின் தேவைக்காகவோ, இந்திய ஆட்சியாளர்கள் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்காகவோ, ‘சீனாவுடன் ஒரு மோதல் போக்கை’க் காட்டி காட்டி, மக்கள் மத்தியில் ஒருவிதமான, ‘இந்திய தேசிய வெறியை’ ஏற்படுத்த முயன்றுவந்தாலும், அதை ‘தமிழ்நாட்டில் விற்க’ ஈழத் தமிழர் பிரச்னைதான் கிடைத்ததா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. ஆகவே, இந்திய அரசின் பாதுகாப்புக்கு இடையூறாக சீனா இருந்தாலும், அமெரிக்கா இருந்தாலும் அதை புரிந்துகொள்வதில் இந்திய மக்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதே சமயம், ‘ஈழத் தமிழர் பிரச்னை’யைப் பயன்படுத்தி, அமெரிக்கா இந்திய அரசுகளின் மேலாதிக்கத்தை ஈழத் தமிழர்களின் மேல் திணிக்க எண்ணாதே என்றும் கூற வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment