சிறப்புக் கட்டுரை: சீனா - இந்தியா சர்ச்சை... எல்லைத் தகராறா? இயலாத தகராறா? - T.S.S.மணி
ஒரு வாரமாக ஊடகங்களில், சீனா - இந்தியா போரையே நடத்தி விட்டனர். கெட்டிக்காரத்தனமாக சிக்கிம் எல்லையில், சீனா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது. எல்லை ஓரத்தில் ஒரு சாலை அமைக்கிறார்கள். அதன்மூலம் அவர்களது பெரும் ராணுவ வாகனங்கள் நடமாடும். எந்த நேரத்திலும் இந்தியா மீது தாக்கலாம். அதனால்தான் இந்தியா தனது ராணுவத்தைப் பலமாக அந்த எல்லையில் குவிக்கிறது. எந்த நேரத்திலும் போர் மூளலாம். ஜி-20 மாநாட்டில்கூட இந்தியப் பிரதமரும், சீனப் பிரதமரும் பேச மாட்டார்கள். ‘பிரிக்ஸ்’ கூட்டத்தில்கூட இருவரும் தனியாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள். 1962இல் நடந்த இந்திய - சீனப் போர் போல இருக்குமா? ‘நாங்கள் 1962 போல பலவீனமாக இல்லை, இப்போது பலம் வாய்ந்தவர்கள்’ என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி பேசினார். அதற்கு, ‘இருக்கலாம். நாங்களும் முன்னைப் போல இல்லை. மேலும், பல மடங்கு உங்களை விட பலம் வாய்ந்தவர்களாக ஆகியிருக்கிறோம்’ என்று சீன தூதர் கூறினார். இப்படியெல்லாம் நம்மூர் ‘பாமரனை’ப் பாதிக்கும் அளவுக்குச் செய்திகள். கடைசியில், ஜி-20 வந்தது. மோடியும், ஸீ ஜின்பிங்கும் கைகொடுத்துக் கொண்டனர். நன்றாகப் பேசினர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தனர். இப்படியாகச் செய்திகள் வருகின்றன.
ஒரு காட்சி ஊடக விவாதத்தில் ஒரு மூத்த ஊடகவியலாளர் கூறினார். “இந்தியா அருகே அமெரிக்கா தானே அதிக ராணுவ பலத்தை வைத்துக்கொண்டு மிரட்டுகிறது? ‘டியாகோ கார்சியா’ தீவில் தனது ராணுவத்தளத்தை வைத்துக்கொண்டுள்ளது. அதில் போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் வைத்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தீவிலிருந்து, அரை மணி நேரத்தில், கேரளா மீதும், கன்னியாகுமரி மீதும் குண்டு போட முடியுமே? அமெரிக்காவிடம், போர் விமானங்கள் தாங்கிய 18 போர்க் கப்பல்கள் இருந்தால், சீனாவிடம் ஒன்றுதானே இருக்கிறது? பங்களா தேஷ் போர் நேரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா தானே வந்தது? சீனா வரவில்லையே? அமெரிக்காவின் ஏழாவது போர்க் கப்பல்தானே வங்காள விரிகுடா கடலுக்கு வந்து இந்தியாவை மிரட்டியது? (1962-க்குப் பிறகுதான், 1971 வந்தது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்) எதற்காக இந்தச் சிறிய எல்லை பிரச்னையை வைத்து, போர், போர் என்கிறார்கள்?” எனக் கேட்டார். இன்னொரு மூத்த ஊடகவியலாளரான, பதிப்பகத்தார், “இந்த எல்லை பிரச்னை ஒர் இரவில் தீரக்கூடியதா? சீனாவுடன் இந்தியா இன்னமும் வணிகத்தை அதிகப்படுத்தி, நல்லுறவைக் கூட்ட வேண்டும். அதன்பிறகு தானாகவே இந்த எல்லைப் பிரச்னையைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்” என்கிறார். ஆனால், இங்கே பொது வெளியில், ஒரு கவிஞர், தனது கவிதை மூலம், “சீன எதிர்ப்புதான்” அவரது “இந்திய தேசப்பற்று” என்பதை நிரூபிக்க முயன்று வருகிறார். இவையெல்லாம் அதிகமாக நமது வட்டார ஊடகங்களில், விவாதமாக ஆக்கப்படுவதில்லை. மாறாக, அடுத்த நாட்டுடன் பிரச்சனையா? உடனடியாக எது நியாயம் என்றுகூட பார்க்காமல், ‘இந்திய தேசப்பற்றை’ உயர்த்திப் பிடித்து, பக்கத்து நாட்டைப் பற்றி தாக்கி எழுதிவிட வேண்டும் என்பதே இங்கு ‘பொதுப் புத்தி’யாக இருக்கிறது. ஆனால், இதற்கு இடையில் வேறு சில அறிவார்ந்த கருத்துகளும், வருகின்றன. ஒரு கவிஞர் சொன்னார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில், ஒரு பிரபல ஊடக ஆசிரியர், “பாகிஸ்தானை நாம் ஐரோப்பா அருகே அனுப்பிவிட முடியுமா? சீனாவை நாம் ஆப்பிரிக்க கண்டத்துக்கு அனுப்பி விட முடியுமா? இந்தியாவாகிய நாம்தான் கண்டம் விட்டு கண்டம் தாண்டி நகர்ந்து செல்ல முடியுமா? ஆகவே இருக்கும், அண்டை நாடுகளுடன் எப்படி சமாதானமாக வாழ்வது என்று சிந்திக்க வேண்டும்” என்றாராம். இவ்வாறு நல்ல ஆரோக்கியமான சிந்தனைகள் வரும் நேரத்தில், ‘தேசப்பற்று’ என்ற பெயரில், ‘தேசிய வெறி’யைத் தூண்டாதே என்ற எச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.
மேலும் அலசலுக்காக, நான் இரண்டு மூத்த ஊடகவியலாளர்களிடம் பேசினேன். இன்று காலை சிலர் “மக்மோஹன் எல்லைக்கோடு, இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ளதை முன்பு ஒப்புக்கொண்ட சீனா, இப்போது ஒப்புக்கொள்ள மறுக்கிறதே” என்று கூறினார்கள். “அது அப்படி இல்லையே. ஆங்கிலேயர்கள், இந்தியாவை விட்டுச் செல்லும்போது, ஆங்கிலேயரான மக்மோஹன், இப்படி ஒரு கோட்டைப் போட்டு அதுதான் எல்லை என்று இந்தியாவிடம் கூறிவிட்டுச் சென்றான். அதை அப்போதே சீனா ஒப்புக் கொள்ளவில்லையே” என்று கேட்டேன். அவர்களும் எனது வாதத்தை ஒப்புக்கொண்டார்கள். உண்மையில், மக்மோஹன் எல்லைக்கோடு, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில், ஓடும் பிரம்மபுத்திரா நதியை ஒரு ‘எல்லை’யாகக் காட்டி வரையப்பட்டது. அந்த பிரம்மபுத்திரா நதி, ஆறு மாதங்கள், ஒரு புறமும், முழுமையாக மாறுபட்ட பாதையில் ஆறு மாதங்களும், ஓடக்கூடிய நதி. அதாவது அதை எல்லையாகப் போட்டால், இரு நாடுகளுக்கும், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் இடையில் சண்டையும் சச்சரவும் வந்துகொண்டே இருக்கும். வரட்டுமே சண்டை என்று எண்ணி, வெளியே சென்ற ஆங்கிலேயர்கள், ‘பிளவுபடுத்தி, ஆட்சி செய்’ என்ற நோக்கில் விட்டுச் சென்றார்களா என்பது ஆராயப்பட வேண்டும். அந்த இடைப்பட்ட பகுதிக்குப் பெயர்தான் ‘ஆக்சை சின்’. இந்தப் பகுதிதான் 1962இல் சர்ச்சைக்குள்ளான பகுதி. நான் மேற்கூறிய இரண்டு மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவர் கூறினார், “நான் அஸ்ஸாம் சென்றிருந்தேன். அங்கே உள்ள நதிநீர் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிடம் விவாதித்தேன். அவர்கள் பிரம்மபுத்திரா நதி பற்றிய தங்கள் ஆராய்ச்சியைக் கூறினார்கள். அவள் கடலைப் போன்ற நதி. அந்த நதியை, அவளது பாதையை நாம் கணிக்கவே முடியாது. பிரம்மபுத்திரா நதியின் பாதையை நம்பி நாங்கள் பயிர்களை விதைத்திடுவோம். பிறகு அவள் அந்தப் பாதைக்கும் வந்து விடுவாள். ஆகவே, நாங்கள் பயிர் செய்வதற்கு ஒதுங்கி, அவளுக்கு நிறைய இடத்தை விட்டுவிட்டுத்தான் பயிர் செய்வோம். இவ்வாறு கூறினார்கள். அவர்கள் அந்த நதியை ‘அவள்’ என்றே பெண் பாலுடன் மிக மரியாதையாக அழைத்தார்கள். ஆகவே அந்த பிரம்மபுத்திராவை எல்லையாக ஓர் ஆங்கிலேயர் போட்டுக் கொடுத்தால், அதிலேயே வில்லங்கம்" இருக்கிறது” என்கிறார்.
இவ்வாறு இந்த விவாதம் சென்றது. நாம் 1962 இல் நடந்தது என்ன என்று சிறிது திரும்பிப் பார்க்க வேண்டும் அல்லவா? அன்று ‘இந்திய- சீன எல்லையில் போர் நடந்தது. போரில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அதிக தூரம் வந்துவிட்டு திரும்பிச் சென்று விட்டது. செல்லும்போது, பல இந்திய ராணுவ வீரர்களை போர்க் கைதிகளாகப் பிடித்துச் சென்று விட்டது. பிறகு அவர்களை விடுதலை செய்து எச்சரிக்கை செய்தது’. இவையெல்லாம் நாம் கேள்விப்பட்ட செய்திகள். அதனால்தான் இன்றைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி நாங்கள் 1962 போல இல்லை என்று கூறுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் பி.ராமமூர்த்தி, நாடாளுமன்றத்திலேயே, ‘இது சீன ஆக்கிரமிப்பு அல்ல. வெறும் எல்லைத் தகராறு’ என்று பேசிவிட்டு, அதையே புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தையும் இந்திய அரசு ‘தடை’ செய்தது. அமெரிக்கா, இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்குக்கு எதிராக அன்றும் சரி, இன்றும் சரி செயல்படுவது வெள்ளிடை மலை. அன்றைய சூழலில், நேருவின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவின் வலியுறுத்தலில்தான், நேரு நமது படைகளை சீனா மீது ஆக்கிரமிக்க அனுப்பினார் என்றும், அது எல்லை ஓரத்தில் சீனா அப்போது கட்டிவந்த ஏவுகணை தளத்தை கட்ட விடாமல் செய்வதற்காக அமெரிக்காவால் தூண்டி விடப்பட்டது என்றும் கம்யூனிஸ்டுகள் பேசி வந்தார்கள். இந்திய - சீனப் போரில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதும், பிறகு அதையும் ஒரு காரணமாக வைத்தே கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்ததும் வேறு கதை. இங்கிலாந்திலிருந்து வந்த ‘நீவில் மாக்ஸ்வெல்’ என்ற பிரபல எழுத்தாளர், அந்தப் போர் பற்றி மூன்று ஆண்டுகள் இந்திய வந்து ஆராய்ச்சி செய்து, பல இந்திய ராணுவ வீரர்களையும், தளபதிகளையும் சந்தித்து, ஒரு புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்தின் பெயர், ‘இந்தியாவின் சீனப் போர்’. அந்தப் புத்தகத்தையும் இந்திய அரசு தடை செய்து விட்டது. இவ்வாறு இந்திய அரசின் செயல்பாடுகளில், அந்தக் காலம்தொட்டே, பல கேள்விகள் இன்னமும் நிற்கின்றன.
இன்று நடக்கும் இந்த விவாதத்தில் இந்திய அரசு, சீனா மீது கூறும் குற்றச்சாட்டு, ‘சீனா பூடான் எல்லையில் சாலை போடுகிறது. அது நமது பாதுகாப்புக்கு ஆபத்து’ என்பதே. அதுவும், இந்தியப் பிரதமர் மோடி அவர்கள், அமெரிக்க அதிபரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகே பெரிதாகக் கிளப்பப்பட்டது. ஆனால், சீனா கிளப்பும் பிரச்னை பெரியது. இந்திய ராணுவம் தொடர்ந்து எல்லை மீறுவதாகவும், இப்போதும் சீன எல்லைக்குள் வந்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். அதையும் தாண்டி, சிக்கிம் தனி நாடக இருந்தது. அதை இந்தியா ஆக்கிரமித்துக் கொண்டது. சிக்கிமை தனிநாடாக அறிவிக்க சிக்கிம் மக்கள் விரும்புகிறார்கள் என்ற குண்டையும் தூக்கிப் போடுகிறார்கள். உள்ளபடியே சிக்கிம் 1975 வரை தனி நாடாகத்தான் இருந்தது. இந்திரா காந்தி ஆட்சியில், சிக்கிம் மக்களிடம் பொதுக்கருத்துக் கேட்டு இந்தியா தன்னுடன் சிக்கிமை இணைத்துக் கொண்டது என்பது இன்று ஊடகங்களின் செய்தி. ஆனால், ஒரே நள்ளிரவில், திடீரென இந்திய ராணுவம் சிக்கிம் நாட்டுக்குள் சென்று, சிக்கிமை இணைத்துக் கொண்டது என்பது நமது நினைவில் இருக்கும் செய்தி. தனிக் கொடியுடனும், தனி தேசிய கீதத்துடன் வாழ்ந்த சிக்கிம் மக்கள் அந்த இணைப்புக்குப் பிறகு, இந்தியக் கொடியுடனும், இந்திய தேசிய கீதத்துடனும்
வாழ வைக்கப்பட்டார்கள். நெருக்கடி நிலைக்குப் பிறகு, ஜனதா கட்சி ஆட்சி வந்த பிறகு, பிரதமராக மொரார்ஜி தேசாய் வந்த பிறகு, மொரார்ஜி லண்டன் செல்கிறார். அங்கே ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி, “நீங்கள் சிக்கிம் இணைப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா?” அதற்கு மொரார்ஜி தேசாயினுடைய பதில், “நான் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இந்தியப் பிரதமராக நான் எதுவும் செய்ய முடியாது”. இதுதான் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சருக்கே உள்ள நிலை. அப்படியானால், இந்தியாவை ஆள்வது யார்? முடிவுகளைத் தீர்மானிப்பது யார்? ‘அரசு இயந்திரம்தான்’ என்றால், அது என்ன தன்மையைக் கொண்டது? அது ‘விரிவாக்கம்’ என்ற தன்மையைக் கொண்டதா? அது ‘பிராந்திய மேலாதிக்கம்’ என்ற தன்மையைக் கொண்டதா? இதுபோன்ற கேள்விகளுக்கும் நாம் விடை காண வேண்டியுள்ளது.Spl Story-
No comments:
Post a Comment