Friday, August 25, 2017

குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனிதக் கடவுள்’ ஆனது எப்படி?

சிறப்புக் கட்டுரை: குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனிதக் கடவுள்’ ஆனது எப்படி? - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனிதக் கடவுள்’ ஆனது எப்படி? - டி.எஸ்.எஸ்.மணி
ஒரு மதத் தலைவருக்குப் பின்னால் எப்படி இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டது? ஏன் பஞ்சாப் மாநிலமும், அரியானா மாநிலமும், சண்டிகர் யூனியன் பகுதியும் அலறுகின்றன? மத்திய ஆட்சி ஏன் மிரள்கிறது?
பஞ்சகுல்லாவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது 2002ஆம் ஆண்டு போடப்பட்ட பாலியல் குற்ற வழக்கை அநாமதேயக் கடிதங்களுக்குப் பிறகு நீதிமன்றம் தானாகவே முன்னெடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து விசாரிக்கப்பட்டு இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிய வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. அந்த இரண்டு பெண் சிஷ்யர்களில் ஒருவர் வயதுக்கு வராத சிறுமி. இன்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘குற்றவாளி’ எனக் கூறப்பட்டு, எத்தகைய தண்டனை என்பது வருகிற 28 அன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ள நேரத்தில், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் எனக் கூறுகிறார்கள். சிறுமி பாதிக்கப்பட்டதால், தண்டனை கூடும் என்ற கருத்தும் உள்ளது.
வெள்ளிக்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, விசாரணை, விவாதங்கள் ஆகியவை அரசு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலும் முடிந்துவிட்டன. வெள்ளிக்கிழமை தீர்ப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பகுதியிலும் திரண்டிருந்தனர். பல தொண்டர்கள் கைகளில் ஐந்தடி நீளக் கம்புகளை வைத்திருந்தனர். இவர் தனது ஆசிரமமான ‘சிரசி’யிலிருந்து பஞ்சகுலா நீதிமன்றத்துக்குப் புறப்பட்டு வரும்போதும் 200 கார்களுடன் பவனி வந்தார். இதை எதிர்பார்த்து 150 பட்டாலியன் துணை ராணுவமும் ராணுவமும்கூட வரவழைக்கப்பட்டிருந்தனர். அதற்கு முன்பே கைபேசிகளையும் இணையத் தொடர்புகளையும், அரசு தற்காலிகமாக ரத்து செய்து வைத்திருந்தது. செய்தி பரவக் கூடாது என்ற அரசின் கவனம் அது. 230 தொடர் வண்டிகளும் பேருந்துகளும் ஆகஸ்ட் 24 முதல் 27 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன.
மதியம் 2.30-க்கு என்று கூறி, 2.50-க்கு அவர் ‘குற்றவாளி’ என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. எந்த ஒரு தொடர்பு சாதனங்களும் இல்லாததால், ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் நீதினமன்றம் முன்பு கூடியிருந்தவர்கள், விடுதலை என்ற தவறான செய்தியைக் கேள்விப்பட்டு ஆரவாரத்தில் கொண்டாடினர். இதேபோல, ஒரு தலைவர் ‘பிணையில் விடுதலை’ என்ற தவறான செய்தியால், தமிழகத்தில் குறிப்பாக காளையர்கோவிலில் வெடி போட்டு, கோபுரத்தில் போட்ட சரம் தீப்பற்றி எரிந்தது தமிழகத்தில்கூட நடந்துள்ளது. பிறகு உண்மைத் தீர்ப்பு கேள்விப்பட்டு வன்முறைகளில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.
இரண்டு மாநிலத்திலும் ரயில்வே நிலையங்களும் நீதிமன்றம் அருகே பெட்ரோல் பங்குகளும் தீக்கிரையாகின. பிரபல தொலைக்காட்சி ஊடக வாகனம் தீக்கிரையானது. 17 பேர் பலியானதாகவும் 200 பேர் காயம்பட்டதாகவும் முதலில் தெரிந்தது. வன்முறையும் தொடர்கிறது. ராணுவமும் துணை ராணுவமும் இறங்கி அடிக்கின்றனர்; சுடுகின்றனர். பலிகள் கூடிக்கொண்டே போகும்.
இதை பற்றிய செய்தியை நமது மாநிலத்தில், ‘கற்பழிப்பு சாமியார்’ எனப் போடுகிறார்கள். இவர் வெறும் கற்பழிப்புக் குற்றவாளியாக மட்டுமே பார்க்கப்பட்டாரா? அப்படியானால் எப்படி இந்த அளவுக்கு மக்கள் லட்சக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட இவருக்குப் பின்னால் மட்டுமல்ல, இவருக்கு ஆதரவாகத் தெருவுக்கு வந்து போராட முடியும்? தமிழ்நாட்டிலும் ஒரு சாமியார் வன்புணர்ச்சிக்காக இரண்டு ஆயுள் தண்டனை வாங்கிய வரலாறு உண்டு. எத்தனை பேர் அவருக்காகப் போராட வந்தார்கள்?
இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் உதவியை நாடி 2012ஆம் ஆண்டு அதாவது இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, காங்கிரஸ் கட்சி தேர்தலில் ஆதரவு கேட்டு வந்தது. இவரும் அப்போது காங்கிரஸை ஆதரித்தார். அடுத்து 2014ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா இவரது ஆதரவைக் கேட்டார்கள். இவரும், பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்தார். ஏன் இப்படிப் பெரிய கட்சிகள் எல்லோரும் இவருக்கு பின்னால் சென்றார்கள்? அப்படியானால் அந்தப் பெரிய கட்சிகளை விட இவர் அந்த வட்டாரத்தில் பெரியவர் என்றுதானே பொருள்? ஏன் இவருக்கு இந்த அளவுக்கு ஆதரவு?
சீக்கிய மதத்தில் சாதிகள் கிடையாது என்பதுதானே பொதுவான புரிதலாக இங்கே இருக்கிறது? உண்மை நிலை அப்படி இல்லை. சீக்கிய மதத்திலிருந்து வெளியே வந்த ஒடுக்கப்பட்ட மக்களது தலைவரான இவர், இந்து மதத்தின் சாதிக் கட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளாமல், தனித்த அடையாளத்தைக் காட்டி உருவாக்கியதுதான் ‘தேரா சச்சா சவுதா’. இவரது ஆதரவாளர்களில், பெண்கள் அதிகம். குர்மீத் ராம் ரஹீம் சிங் தலைமை தாங்கும் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மதப் பிரிவு, ‘சாதிகள் கூடாது’ என்ற சமூக நீதியைப் பரப்புரை செய்து நடைமுறைப்படுத்துகிறது. அதற்கே உரித்தான ஆதரவு இருக்கத்தானே செய்யும்? சாதிகளை எதிர்த்த தலைவர்களைப் புரிந்துகொண்டுள்ள தமிழ் மண், அவர்கள் பின்னால் திரண்ட மக்கள் கூட்டத்தையும் உணர்ந்துள்ள தமிழ் மண் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து 104 நல்வாழ்வுத் திட்டங்களை இவர் அமல்படுத்திவருகிறார். அதில், குறைந்த விலைக்கு உணவுப் பொருள்கள் வழங்குகிறார். இங்கே அதுபோல செய்பவர்களை, ஏழை மக்கள் அணிதிரண்டு அரசியல் தலைமையில் ஏற்றுக்கொள்கிறார்களே அதுபோல. அடுத்து, இலவசமாக மருந்துகளை வழங்குகிறார். இங்கும்கூட, அரசியல் தலைமைகள், இலவச மருத்துவமனைகளையும் குறைந்த விலைக்கு மருந்துகளையும் வழங்கி எளிய மக்களைக் கவர்வதில்லையா? அதுபோல. நல்வாழ்வுத் திட்டங்களை வழங்கும் பணியை அரசு செய்யாதபோது, அதைச் செய்கின்ற மதத் தலைவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?
ஆகவே, பின்தங்கியுள்ள மக்களை, கோடிக்கணக்கில் பின்தங்கியவர்களாகவே தக்கவைத்துக்கொள்ளும் ஒரு மோசமான சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலையை ஆளவந்தோர் தக்கவைத்துக்கொள்ளும் வரை சாதி, மத, வேறுபாடுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ள ஒரு சமூகத்தை நாம் வைத்துக்கொண்டிருந்தால், அங்கே சமத்துவம் பேசுபவர்கள், நல்வாழ்வுத் திட்டம் தருபவர்கள் பின்னால்தான் கோடிக்கணக்கில் மக்கள் அணி திரள்வார்கள். அந்த உண்மையைத்தான் நாம் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சந்திக்கிறோம்.
அதற்காகப் பாலியல் வன்முறையைச் செய்தவரை எப்படி ஆதரிக்க முடியும் என்பது நியாயமான கேள்வி. ஆனால், இவ்வாறு அணி திரண்டுள்ள மக்கள், இன்றைய ஆள்வோர்மீது நம்பிக்கை இல்லாத சூழ்நிலையில், சாதாரணப் பொதுமக்கள் இது போன்ற சாமியார்களை நம்புவதும் அரசு வேண்டுமென்றே பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் கருதுவதும் நடக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி, இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் ஒரு திரைப்பட நடிகராகவும் ஆகிவிட்டார். கேட்கவா வேண்டும்? சில படங்களில் இவர் பெரிய கதாநாயகனாக நடித்துள்ளார். ஆளும் பொலிவுடன் உயரமாக, தாடி வைத்து ஆக்ரோஷத்துடன் தோற்றமளிப்பார். இவையெல்லாம் இருப்பதால்தான் இவருக்குப் பின்னால் மக்கள் கூட்டமும் அரசியல் கட்சிகளும் செல்கின்றன என்பதே இன்றைய நிலை.
எளிய மக்கள் மத்தியில்தான் பிரபலம் என்று நினைத்தால் அது தவறு. படித்த, பணக்கார, மேல்நிலை வாழ்க்கையில் உள்ளோரும் இவரை அதிகமாக நேசிக்கிறார்கள், அணி திரள்கிறார்கள் என்கின்றன ஊடகங்கள். அது மட்டுமின்றி, நீதிமன்றம் முன்னால் திரண்ட 300 ஊடகங்களில், வெளியூர் ஊடகத்தார் இவரை பாலியல் குற்றவாளி எனப் புரிந்துகொண்டு செய்தி எடுக்கும்போது, உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவரிடம், ஆங்கிலக் காட்சி ஊடகம் கேட்கிறது: “ஏன் இவருக்குப் பின்னால் இவ்வளவு கூட்டம்?” அதற்கு அவர் பதில் கூறுகிறார்: “ஒரு பேரிடர் வருமானால், இவரது ஆதரவாளர்கள்தான் அங்கே களத்தில் இறங்கி உதவிகள் அனைத்தும் செய்வார்கள். பாலியல் தொழிலுக்குச் செல்லும் பெண்கள் பல நூறு பேரை இவரது ஆதரவாளர்கள் மீட்டு, திருமணம் செய்து வைத்துள்ளனர்.”
அதாவது சமூக அர்ப்பணிப்புள்ள, சமூக நீதியைப் பரப்புகின்ற, நல்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்துகிற ஒரு கூட்டத்தையும், அதன் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங்கையும், மக்கள் மனிதக் கடவுளாகப் பார்க்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியானால், இந்த நற்பணிகளைச் செய்ய வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி தானே எழுகிறது.
கட்டுரையாளர்: டி.எஸ்.எஸ்.மணி
தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: manitss.mani@gmail.com

No comments:

Post a Comment