Tuesday, July 13, 2010

அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றமும், இன அழிப்பும்.

.
அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருந்தாலும், சமீபத்தில் உலக தமிழர்கள் மத்தியில் அதிகமாக அங்கலாய்க்கப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு போர் பற்றிய குற்றச்சாட்டுக்களும், அந்த இனவாதப் போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மிறல்களும், அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நிற்கிறது.
கடந்த திங்கட்கிழமை அனைத்து குற்றவியல் நீதிமன்றம் ஒர் அறிக்கையை வெளியிட்டது. அது சுடான் நாட்டினுடைய அதிபரான ஒமர் அல்பஷீர் பற்றியது. ஒரு குழுவினரது உடல் ரீதியான அழிவை ஏற்படுத்துவதற்கான ஒரு வாழ் நிலையை திட்டமிட்டு அவர்கள் மீது நடத்திய கொடுமை அவரால் இழைக்கப்பட்டது என்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. அதுவே இன அழிப்பு என்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ புண்படுத்தி அதன் மூலம் இன அழிப்பை செய்வது என்பதையும், கொலைகளின் மூலம் இன அழிப்பை செய்வது என்பதையும் அதிபர் பஷீர் இழைத்ததாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அதனால் அவரை கைது செய்வதற்கான ஒரு வாரண்டை பிறப்பித்துள்ளது. ஒரு நாட்டின் அதிபராக இருப்பவர் மீது இது போன்ற இன அழிப்புடப குற்றச் சாட்டை சாட்டுவது இதுவே முதல் முறையாகும்.
2009ம் ஆண்டு மார்ச் மாதம் போர்க் குற்றங்களுக்காக பஷீர் மீது இன அழிப்பு குற்றச் சாட்டையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக, அதற்கான ஒரு வாரண்டையும் கூடுதலாக கையில் வைத்திருக்கும் அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம் இப்போது மேலும் பல தூதரக நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பஷீர் இலங்கையின் மகிந்த ராஜபக்சே போல அனைத்து குற்றச் சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
2000மாவது ஆண்டில் ரோம் நகரில் உருவான ஒரு தீர்மானம், அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் வழிகாட்டுதலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ரோம் தீர்மானத்தில் அடிப்படையில் 2009ம் ஆண்டு ஆரம்ப கட்ட விசாரணையில் சூடான் நாட்டு அதிபர் பஷீர் மீது இன அழிப்பு என்ற குற்றச் சாட்டு, அனைத்து நாட்டு நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு மேல் முறையீட்டில், நீதி அரசர்கள் 3 விதமான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பஷீர் பொறுப்பானவர் என்பதாக நம்புவதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார். இத்தகைய இன அழிப்புக் குற்றச்சாட்டு, அனைத்து நாட்டு நீதிமன்றத்தை அரசியல் நோக்கோடு செயல்படுவதாக சூடான் அமைச்சர்கள் குறை சொல்வதற்கும் வழிவகுத்தது. இது தான் இன்றைக்கு இலங்கை அரசாலும், உலக சமூகத்தின் மீது கூறப்படும் குற்றச்சாட்டு.
தர்புரி என்ற மக்களுக்கும், மானுடம் முழுமைக்கும் கிடைத்த வெற்றி என்பதாகவும், பாதிக்கப்பட்ட அந்த இனத்தின் குரல் வெளிவந்தது. ரோம் தீர்மானத்தின் 58வது பிரிவின் படி மேற்கண்ட விசாரணை முறை நடத்தப்பட்டுள்ளது. சூடான் நாடு ரோம் தீர்மானத்தில் ஒரு பங்குதாரராக இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதனால், நீதிமன்ற முடிவுப்படி, பஷீரை ஒப்படைக்க முடியாதென மறுத்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஆண்டு ஐ.நா. வில் மேற்பார்வையில் நடத்தப்பட்ட சூடான் தேர்தலில் பஷீர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதே நிலைமைதான் இலங்கைக்கும் பொருத்தமாக அமையும். இலங்கை அரசும் ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை ரோம் ஒப்பந்தத்திற்கு ஆதாராவாக அறைகூவல் விடுப்பதற்கு இலங்கை அரசு மறுத்துவிட்டது.
2009ம் ஆண்டு ஜூலை 21ம் நாள் வரை, அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக 110 நாடுகள் மட்டுமே இருக்கின்றன. தெற்காசிய நாடுகளில் ரோம் தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுத்து இணைந்திருக்கும் முதல் நாடாக வங்காளதேசம் இருக்கிறது. அதன் மூலம் போர்க் குற்றங்கள் பற்றிய சாட்சிகளையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் கண்டுபிடிக்க உதவுவது, தேசிய விசாரணைகளை நடத்துவது, குற்றம் சாட்டப்படும் தனி நபர்களை சரணடைய வைப்பது ஆகியவற்றை செய்ய ஊக்கமாக இருக்கிறது. ஆசியா கண்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், கம்போடியா, மங்கோலியா, கொரியா குடியரசு, தைமூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ரோம் தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுத்த 7 நாடுகளாகும்.
ஒரு நாட்டு அரசு தனது நாட்டிற்குள் மானுடத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தாலோ, போர் குற்றங்களை இழைத்தாலோ, அந்த நாட்டு அரசின் மீதும், அந்த அரசில் பொறுப்பில் இருக்கும் அதிபர்கள் மீதும் அத்தகைய குற்றச்சாட்டுகளுக்காக பொறுப்பேற்க வைத்து, அவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டிப்பதற்கான அதிகாரத்தை பெற்றது தான், இந்த அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் முறைகளை முன் வைப்பது தான், ரோம் தீர்மானம். ஆகவே ரோம் தீர்மானத்தின் நீயாயங்களை ஏற்று, அதில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் ஒப்புதல் கொடுத்து கையெழுத்திட வேண்டும். இது உலக மனித உரிமை தளத்தில் எதிர்பார்க்கப்படும் ஒரு நியதி. இத்தகைய ஒப்புதலை இது வரை கொடுக்காத இலங்கை அரசையும், இந்திய அரசையும் அந்தந்த நாட்டு மக்கள் நிர்ப்பந்தம் கொடுத்து, கையெழுத்திட வைக்க வேண்டும்.
இப்போது குறிப்பாக உலகத் தமிழர்கள் மத்தியிலும், பொதுவாக உலக மனித உரிமை ஆர்வாளர்கள் மத்தியிலும் தீவிரமாக விவாதிக்கப்படுவது, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை சிங்கள அரசு நடத்திய கொடிய ஒரு போர் பற்றியது. அந்த இனவாதப் போரில் மானுடத்திற்கு எதிரான குற்றங்களும், ஜெனிவா ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் விதிகளை மீறிய குற்றங்களும் இப்போது ஆதாரபூர்வமாக பட்டியலிடப்படுகின்றன. ஜெனிவா ஒப்பந்தத்தை மீறும் குற்றங்களுக்கு, போர்க் குற்றங்கள் என்று பெயர். அத்தகைய போர்க் குற்றங்களை நடத்திய பொறுப்பாளர்கள், தலைவர்கள், அரசாங்கம் ஆகியவை இங்கே குற்றம் சாட்டப்படுகின்றன.
சூடான் அதிபர் பஷீருக்கு எப்படி அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம், விசாரித்து தண்டனை வழங்குவதற்காக, கைது வாரண்டை பிறப்பித்தது போல, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்கும், இன அழிப்புக்கும் உரிய தண்டனையை, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பெறவேண்டும் என்பதே, தமிழ் கூறும் நல்லுலகின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment