இன்று தைப்பொங்கல். அதாவது தமிழர்கள் வாழும் நிலங்களில் அறுவடைத் திருநாள். உழவர்களின் திருநாளான இந்த பொங்கல் விழாவை, பாரம்பரியமாக தமிழர்கள் திருநாள் என்று அழைக்கிறோம். மறுநாள் உழவுத்தொழிலுக்கு உதவிகரமாக இருந்த மாடுகளுக்கு நன்றி சொல்லும் முகத்தோடு, மாட்டுப் பொங்கல் என்றும் கொண்டாடுகிறோம். பழமைப் பழக்கங்களில் ஊறிப் போயிருக்கும் நமது மக்கள், அறுவடைத் திருநாளை கொண்டாடும் எண்ணத்தில், தங்களுக்கு அள்ளிக் கொடுத்த சக்திக்கு நன்றி சொல்லும் விதத்தில், இயற்கையைத் தொழுவது என்று சூரியனை வழிபடுகிறார்கள். அதற்காகவே கதிரவனின் கதிர்களுக்கு எதிரே வெளியிடத்தில் பொங்கல் பானையை வைத்து, பொங்கி மகிழ்கிறார்கள். இது உழைக்கும் விவசாயியின் நன்றி காட்டும் பாணி. உழைப்பை செலுத்தியவர்கள், உழைப்பை மதிக்கின்ற முறை. இதில் எந்த மதத்திற்கும் நேரிடையாக சம்பந்தமில்லை. உழவர் பெருமக்கள் வழிபடும் சூரிய ஒளி இயற்கைச் சக்தியாக மட்டுமே காணப்பட வேண்டும்.
மதங்கள் மனிதர்களின் வாழ்க்கைக்கு நெறி காட்ட என்று கூறிக்கொண்டு, மானுடத்தின் நம்பிக்கைகளை நிறுவனமயமாக்கி, ஆளுக்கொரு மதத்தை அவனியில் படைத்து விட்டார்கள். ஒவ்வொரு மதமும் தன்னுடைய நிறுவனத்தை நிலைக்கச் செய்வதற்காக, பல்வேறு கதைகளை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விடவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றன. அப்படி கட்டவிழ்த்து விடப்படும் கதைகள் அனைத்தும், கடவுளர்களின் வாழ்க்கையைச் சுற்றி பிணைந்து வரையப்பட்டுள்ளன. அப்படி எழுதப்பட்டப் புராணங்கள் கற்பனைக் கதைகளாக இருக்கின்றன. அதனால்தான் பாரதியார், புராணங்கள் அனைத்தும் புரட்டெனக் கண்டோம்; ஆனால் அதில் நல்ல பல கவிதை கண்டோம் என்று கூறினார்.
இந்தியாவில் நாம் சந்திக்கும் பண்டிகைகளில், ஒவ்வொரு பண்டிகையும் ஏதாவது ஒரு கற்பனைக் கதையை, அதாவது புராணக்கதையை, அல்லது கடவுளின் கதையை அல்லது கடவுளுக்கு வேண்டியவர் கதையை சார்ந்து கொண்டாடப்படும். ஆனால் பொங்கல் திருவிழா மட்டும்தான், உழைப்பை அடிப்படையாகக் கொண்டு, கொண்டாடப்படும் பண்டிகை. இந்தக் கருத்தை இந்த ஆண்டு பொங்கல் விழா மேடையில், திரைப்பட இயக்குநர் ஜனநாதன் எடுத்துக் கூறினார். அப்படிப் பார்க்கப்போனால், மதம் சார்ந்த பண்டிகையாக இல்லாமல், உழைப்பு சார்ந்த பண்டிகையாக இந்த அறுவடைத் திருநாள் அடையாளம் காணப்படுகிறது.
இதைக்கூட புரிந்து கொள்ளாத சிலர் இது ஒரு மதத்தின் விழா என்பதாக எண்ணிக் கொண்டு, தள்ளி நிற்கிறார்கள். அவர்களது பார்வை மதவாதப் பார்வை யிலிருந்து எழுகிறது. மதங்களைத் தாண்டி, இயற்கை யை வேண்டும் மனிதனின் அணுகு முறை யை புரிந்து கொள்ளும் பக்குவம் இன்னமும் இங்கே வரத் தயங்குகிறது. அதனால்தான் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்களும், சிறுபான்மை மதத்தினரும் இந்த உழைப்பின் திருவிழாவை ஒரு மதத்தின் பண்டிகையாக சுருக்கிப்பார்க்கிறார்கள். ஆனாலும் கூட பெருவாரியான மக்களுக்கு இது தமிழர் திருநாளாக, மதங்கள் தாண்டிய, சாதிகள் மீறிய ஒரு நல்விழா நாளாக அடையாளம் காண முடிகிறது.
உழவர் திருநாளை, தமிழர் திருநாள் என்று அழைக்கிறோம். அதாவது தமிழர் என்றால் உழவர் என்று பொருள் என்பது தான் அதில் பதிந்து இருக்கும் உண்மைச் செய்தி. தமிழர்கள் விடுதலைப்பற்றியும், தமிழினத்தின் மேம்பாடு பற்றியும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றியும், தாய்மொழியின் சிறப்பு பற்றியும் பல்வேறு விதமான விவாதங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் அவற்றை அடைவதற்கான அடிப்படை என்ன என்று விவாதிப்பதில்லை. தமிழர்களுக்கான ஒரே விழாவாக, இந்த பொங்கல் திருநாள்தான் இருக்கின்றது என்பதால், இதை தமிழர் திருநாள் என்பதாக அழைக்கிறோம். அதுவும் உழவர்களின் உழைப்பை சார்ந்து, விளைந்து உள்ள அறுவடைத் திருநாளை, தமிழர் திருநாள் என்று அழைக்கிறோம்.
தமிழர்கள் விலங்கிடப் பட்டிருக்கிறார்கள். அவர்களது விலங்குகளாக சாதிக்கட்டுமானம், மத வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம், வர்க்க வேறுபாடுகள், ஆகியவற்றை அறிஞர்கள் அடையாளம் காண்கிறார்கள். தந்தை பெரியார் தமிழர்கள் எதற்கெல்லாம் அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதை, பிட்டுப்பிட்டு வைத்துள்ளார். அத்தகைய தமிழினத்தை இத்தகைய தடங்கல்களிலிருந்து அல்லது விலங்குகளிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், எத்தகைய அடித்தளத்தில் அந்த இனம் நிற்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதலுக்கு உதவும் விதத்தில்தான், தமிழர் திருநாள் என்று இந்த உழவர் திருநாளை அழைக்கின்றோம்.
உழவர்களின் அடிப்படை தளம் பற்றிய புரிதல் இப்போது தேவைப்படுகிறது. உழவர்கள் முழுமையாக உழவுத்தொழிலை சார்ந்து வாழ்பவர்கள். உழவுத் தொழில் ஊருக்கே சோறு போட்டாலும், மண்ணைச் சார்ந்து நிற்கும் தொழில். மண்ணில் உழவருக்கு இருக்கின்ற உறவு என்பதுதான் அங்கே தீர்மானகரமான பாத்திரத்தை வகுக்கிறது. இதை நில உறவுகள் என்றும் அழைக்கலாம். நிலத்துடன் மனிதனுக்குள்ள அதாவது உழவனுக்குள்ள உறவுகளை இது குறிக்கிறது. இந்த இடத்தில் தமிழனை, உழவனாக புரிந்து கொண்டு, இத்தகைய செய்தியை அணுக வேண்டும்.
நிலத்துடன் மனிதருக்குள்ள உறவுகளை பல வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணையாருக்கும், நிலத்திற்கும் இருக்கின்ற உறவு. நிலத்தில் இறங்கி உழவு செய்யாமல், தண்ணீர் விலகாமல், பாத்திக் கட்டாமல், களைப் பறிக்காமல், உரம் போட தனது கரங்களை வழங்காமல், தானியங்களை அறுவடை செய்யாமல், களத்து மேட்டில் கட்டிப்போடாமல், நிலத்துடன் இருக்கும் சொத்துடைமையை மட்டுமே வைத்திருக்கும் மனிதர்கள் பண்ணையார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் வரப்பின்மேல் நின்று கொண்டு விவசாயத்தை பார்ப்பவர்கள். இவர்களைத்தான் அண்ணா, நிலம் ஆளும் முதலாளிகள் என்று அழைக்கிறார். இவர்களை எந்த விதத்தில் உழவர்கள் என்ற பட்டியலில் சேர்ப்பார்கள் என்பது புரியவில்லை.
வேறொரு வகையான நில உறவு, உழைக்கும் விவசாயிகளுக்கும், விளை நிலங்களுக்கும் உள்ள உறவு. அத்தகைய உறவு தங்கள் சொந்த நிலங்களில், தங்கள் குடும்பத்தினர் உழைக்க, மீதம் தேவையான உழைப்பை வெளியிலிருந்து வாங்கிக் கொள்கின்ற உறவு. இதை பணக்கார விவசாயிகளின் நில உறவு என்று அழைக்கிறார்கள். அடுத்த வகை உறவு என்பது, தங்கள் நிலங்களில் தங்கள் குடும்பத்தவர் உழைப்பை மட்டுமே முழுமையாக, அல்லது பெருவாரியாக சார்ந்திருக்கின்ற பிரிவினர். இவர்களை நடுத்தர விவசாயிகள் என்பதாக அழைக்கிறார்கள். அடுத்து இருப்பது ஏழை விவசாயிகளும், நிலமற்ற விவசாயிகளும். இவர்கள் தங்களுக்கென்று மிகச்சிறிய அளவு நிலத்தை வைத்திருப்பவர்களாகவோ, அல்லது நிலமற்ற கூலி உழவர்களாகவோ இருக்கிறார்கள்.
மேற்கண்ட நிலமற்ற, ஏழை விவசாயிகள் தங்களது உழைப்பு சக்தியை கூலிக்கு விற்றோ, அல்லது குத்தகைக்கு உழைத்தோ அல்லது பண்ணை யடிமையாக வாழ்ந்தோ, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் உழவுத் தொழிலின் முதுகெலும்புகள். இவர்கள் இல்லாமல் விவசாயப் பொருளாதாரம் இல்லை. அப்படிப்பட்ட உழவர் பெருங்குடி மக்களுக்கு, தமிழகத்தில் உள்ள விளைநிலங்கள் சொந்தமாக இல்லை. இதுதான் உண்மையான இடர்பாடு. இந்த உழவர் பெருங்குடி மக்கள், சாதி, மதம், பெண்ணடிமை, வர்க்க வேற்றுமை ஆகியவற்றால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த உழவர்களின் கரங்களில், உழவு நிலங்களும், உழுபடைக் கருவிகளும் வருகின்ற நாள் எந்நாளோ, அதுதான் அவர்களின் விடுதலை திருநாள்.
உழவர் திருநாள் இப்படித்தான் விடுதலை திருநாளாக, தன்னை அறுதியிட்டுக் கொள்ள முடியும். அந்த விடுதலைத் திருநாள் ஒரு உழவர் புரட்சியின் மூலம் தான், சாத்தியமாகும். அதாவது உழவர் புரட்சி மட்டுமே, தமிழர் விடுதலையை சாத்தியமாக்கும். அதுவே தமிழர் திருநாளாக மலரும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment