நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயர் இந்திய சுதந்திர வரலாற்றில் போர்க்குணமிக்க மரியாதையைப் பெற்றிருக்கிறது. 1897ம் ஆண்டு ஜனவரி 23ம் நாள் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்டு 18ம் நாள் அவரது மறைவு நாளாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம், பல்வேறு அமைப்புகளால் பல்வேறு தலைவர்களின் தலைமையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தது. அதில் அகிம்சா வழியில் காந்தியார் தலைமையில் இருந்த இயக்கம் பிரபலமானது போலவே, சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கமும் பிரபலமான ஒன்று. ஆயுதந்தாங்கிய ஆங்கிலேயருடைய ராணுவத்திற்கு எதிராக, போராட ஆயுதந்தாங்கிய இந்திய ராணுவம் ஒன்றை போஸ் உருவாக்கினார். அதற்குப் பெயர் தான் இந்திய தேசிய ராணுவம்.
அதில் இந்தியாவின் போர் கைதிகளையும், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தோட்டத் தொழிலாளர்களையும் சேர்த்தார். அவருடைய இளமைக் காலத்தில், பள்ளிப் படிப்பை இன்றைக்கு ஒரிசாவிலிருக்கின்ற கட்டாக் நகரிலும், கொல்கத்தாவின் மாநில கல்லூரியிலும், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் கழித்தார். உயர்கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தார். போஸ் இந்திய சிவில் சர்வீஸ் பணியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு, சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு கட்டத்தில் தலைவராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான ஒரு பிரபல தேர்தல் நடந்த போது, மகாத்மா காந்தி தன்னுடைய ஆதரவாளராக பட்டாபி சீத்தாரமையாவை போட்டியிட வைத்தார். அவருக்கு எதிராக அந்த தலைமைப் பதவிக்கு சுபாஸ் சந்திரபோஸ் போட்டியிட்டார். அந்தப் போட்டியில் போஸ் வென்றார். பட்டாபி சீத்தாராமையாவின் தோல்வி தன்னுடைய தோல்வி என்று மகாத்மா காந்தி அறிவித்தது, காங்கிரஸ் கட்சியை உலுக்கியது. காந்தியாரின் ஆதரவு கிடைக்காத நிலையில், போஸ் தான் வெற்றிப் பெற்ற கட்சித் தலைவர் பதவியை பணிக்குழுவும் வற்புறுத்த ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், ஆகில இந்திய பார்வர்டு பிளாக் என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.
2ம் உலகப்போரின் காலத்தில், ஆங்கிலேய நாட்டுடன், அமெரிக்காவும் சேர்ந்து கொண்டது. அவர்களுக்கு எதிராக ஜெர்மன் நாடும், ஜப்பான் நாடும் இணைந்து கொண்டு போரில் ஈடுபட்டது. உலகப்போர் என்பது பல்வேறு பின்தங்கிய, வளராத நாடுகளை தங்களது காலணிகளாக ஆக்கிக் கொள்வதற்காக, ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் போட்டி. அதாவது நிதி மூலதனத்தை குவித்து வைத்திருக்கின்ற, முதலாளித்துவ நாடுகள் அவற்றின் உச்சகட்டமாக, ஏகாதிபத்தியங்களாக மாறி காலனிகளை கையில் வைத்துக்கொள்ள நடத்துகின்ற போட்டி தான் உலகப்போராக வெடிக்கிறது.
அந்த முறையில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளையெல்லாம் ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியம், தனது பிடிக்குள் இருக்கின்ற காலனி நாடுகளின் விடுதலைப் போராட்டத்தால், பலவீனமாகி வருகின்ற ஒரு சூழல் இருந்தது. இத்தகைய சூழலில் இங்கிலாந்து நாடு, வளர்ந்து வரும் முதலாளித்துவ நாடான அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு, உலகைப் பங்கு போடுகின்ற, பங்கு போட்ட நாடுகளை தக்க வைக்கின்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டது. அவர்களுக்கெதிராக அதே காலனி நாடுகளை கைப்பற்றுகின்ற ஒரு முயற்சியில், ஜெர்மனியும், ஜப்பானும் ஈடுபட்டன. அதன் விளைவே இந்த இரண்டு முகாம்களுக்குள் நேரடியான போர் மூண்டது.
ஆங்கிலேய ஆதிக்கத்தால் அடிமை நுகத்தடியை தாங்கிக் கொண்டிருக்கும் இந்திய மக்கள், அதை எதிர்த்துப் போராட பல்வேறு வழிகளை திட்டமிடுகிறார்கள். அவற்றில் முக்கியமானது காங்கிரஸ் கட்சியை உருவாக்கியது. பல்வேறு சாதிகள், மதங்கள், மொழிகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த ஐக்கிய முன்னணியாக காங்கிரஸ் கட்சி எழுந்தது. அதில் முன்னணி தலைவராக வந்த சுபாஷ் போஸை, காந்தி நாட்டுப் பற்றாளர்களுக்குள் ஒரு நாட்டுப்பற்றாளர் என்பதாக பாராட்டியிருக்கிறார். போஸும் காந்தியை தேசத்தந்தை என்பதாக பாராட்டியிருக்கிறார். ஆனால் ஆங்கிலேயனுடைய ராணுவத்தை எதிர்த்து போராடி விரட்டியடிக்க வேண்டும் என்று போஸ் எண்ணினார். அன்றைய 2ம் உலகப்போரில் ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஹிட்லர் தலைமையிலான ஜெர்மன் நாட்டின் உதவியை நாடுவது தவறல்ல என்று போஸ் கருதினார்.
அதையொட்டியே போஸுடைய அரசியல் பாதை முன்சென்றது. 2ம் உலகப்போர் தொடக்கக் காலத்திலேயே போஸ் ஜெர்மன் சென்றார். ஜெர்மானியர்கள் தொடங்கிய ஆசாத் ஹிந்த் வானொலி என்ற நிலையத்தில், இந்தியாவிற்கான சிறப்புப் பிரிவில் போஸ் இணைந்தார். பெர்னிலில் சுதந்திர இந்திய மையத்தை அப்போது உருவாக்கினார். போரில் வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்த ஆங்கிலேய படைக்காக போராட வந்த, இந்திய வீரர்கள், ஜெர்மானியரிடம் போர் கைதிகளாக பிடிபட்டிருந்தார்கள். அப்படிப்பட்ட 4,500 இந்திய ராணுவ வீரர்களை சேர்த்து, இந்திய படைப்பிரிவு ஒன்றை போஸ் நிறுவினார். ஹிட்லர் மற்றும் போஸ் தலைமையிலான வாபன் எஸ்.எஸ். உடன் ஆசாத் ஹிந்த் படை இணைக்கப்பட்டது. இந்த படை இந்திய சுதந்திரத்திற்காக போராட உருவாக்கப்பட்டது.
ஜெர்மனுடன் சேர்ந்து செயல்பட்டாலும், சுபாஷ் போஸ் யூதர்களை ஹிட்லர் கையாள்வதை விமர்சித்திருக்கிறார். அதேபோல ஜெர்மன் நாட்டில் ஜனநாயக நிறுவனங்களை ஒடுக்குவதையும், சோவியத் யூனியன் மீது ஹிட்லர் ஆக்ரமிப்பு போர் நடத்தியதையும் போஸ் விமர்சித்திருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு போதுமான ஆதரவு ஹிட்லரிடம் கிடைக்காத நிலையில், சுபாஷ் போஸ் ஜப்பானுக்கு பயணமானார்.
ஜப்பானில் 85,000 வீரர்களைக் கொண்ட ஒரு சீரானப் படையை, இந்திய தேசிய ராணுவமாக உருவாக்கினார். ராணி லட்சுமிபாய் பெயர் கொண்ட தனியான பெண்கள் ராணுவத்தை, போஸ் உருவாக்கினார். ஆசியாவிலேயே முதன் முறையாக இப்படிப்பட்ட ஒரு பெண்கள் படை உருவாக்கப்பட்டது. ராணி லட்சுமிபாய் 1857ம் ஆண்டு இந்திய முதல் சுதந்திரப் போரில் வீரச்சாவை முத்தமிட்டவர். சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் என்பதாக ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கி, அதில் தனியான ஆணையம், நீதிமன்றம், சட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தி, இந்திய தேசிய ராணுவத்தின் படை பலத்துடன், போஸ் இயங்கினார். அந்த அரசாங்கம் அன்று ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா, தேசிய சீனா, சீயாம், பர்மா, மஞ்சுகுவோ, பிலிப்பைன்ஸ் ஆகிய 9 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட அதன் பிரகடனம், ஐரிஷ் அரசால் பாராட்டப்பட்டது. ஜப்பான் ராணுவத்துடன், போஸ் ராணுவமும், பர்மீய தேசிய ராணுவமும் இணைந்து சில வெற்றிகளை போரில் எட்டினர். அந்தமான் நிகோபார் தீவுகளில், போஸ் அரசாங்கமும், இந்திய தேசிய ராணுவமும் உருவாக்கப்பட்டது. ஹிரோசிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்கள், அவர்களை பின்வாங்க வைத்தது.
எதிரியின் எதிரி தான் நண்பன் என்ற பொருளில் சுபாஷ் போஸின் படைப் பயணம் தொடர்ந்தது. அந்தத் தருணத்தில் நேதாஜி என்ற பட்டப்பெயர் அவருக்கு பிரபலமானது. மேற்கு வங்கத்தின் சுபாஷ் போஸுக்குப் பின்னால் அணிதிரண்ட மக்கள் போல, அடுத்து தமிழ்நாட்டில், முத்துராமலிங்க தேவர் தலைமையில், நேதாஜியின் கட்சியும், ஐ.என்.ஏ. படையும் உருவானது. மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் அது தமிழர்கள் மத்தியில் எதிரொலித்தது. தைவானுக்கு மேல் விமானத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 முதல் 20க்குள் நேதாஜி மரணமடைந்ததாக நம்பப்படுகிறது. அதுவும் கூட பிற்காலத்தில் மறுக்கப்பட்டு, விவாதம் இன்னமும் தொடர்கிறது.
ஈழத்தமிழர் விடுதலைப் போரில், முப்படைகளை ஏற்படுத்தி, தமிழீழ விடுதலைப் பகுதியை உருவாக்கி, தமிழீழ அரசாங்கத்தை பல்வேறு துறைகளுடன் நடத்திக் காட்டிய, தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன், சிறுவயதிலிருந்தே, நேதாஜி சுபாஷ் போஸின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டார் என்பது முக்கியச் செய்தி. நேதாஜியின் தாக்கம் இன்று வரை ஈழத்தில், தமிழர்கள் வாழும் பூமிகளில் நிறைந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய ஒரு செய்தி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment