லண்டன் சென்ற இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்போது புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளார். இங்கிலாந்து அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஆப்கான் பற்றிய ஒரு அனைத்து நாட்டு மாநாடு இத்தகைய சவாலை நேரடியாக ஏற்படுத்தியுள்ளது. தாலிபன் பற்றிய நிலைப்பாட்டில், இந்திய அரசின் கொள்கைகளை அல்லது நிலைப்பாட்டை, உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் அந்தச் சவால். ஆப்கானிஸ்தான் பிரச்சனையில், சமீபகாலமாக இந்திய அரசின் தலையீடுகள் விபரீதமாக இருந்து வருகின்றன.
ஆப்கானிஸ்தான் பல ஆண்டுகளாக, உலக வல்லரசுகள் மத்தியில் கவனத்தை ஈர்த்த மற்றும் தலையீட்டை சம்பாதித்த ஒரு நாடாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் எண்ணைய் வளம் கொண்ட ஒரு நாடு. அதன் மீது வல்லரசு நாடுகளுக்கு எப்போதுமே ஒரு கண் இருக்கத்தான் செய்யும். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் இருக்கின்ற, ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பும், ஊடுருவலும் ஒரு காலத்தில் பிரச்சனையைக் கிளப்பியது. தங்களது பொம்மையாட்சியை ரஷ்யா அப்போது ஆப்கானிஸ்தானில் நிறுவியது. அதற்கு எதிராக கிளம்பிய தாலிபன் படையை, அமெரிக்கா அப்போது ஊக்குவித்தது. பழங்குடி மக்கள் மத்தியில் ஆழமான அடித்தளத்தைக் கொண்ட, தாலிபான் படையை அமெரிக்காவின் ஆயுதங்களும், தளவாடங்களும் வலுப்படுத்தின. பின்லேடனை இதற்காகவே அமெரிக்கா அந்நேரம் ஊக்குவித்தது. ஆப்கானிஸ்தானின் எண்ணைய் வயல்கள் மீது அமெரிக்காவிற்கு அப்படிப்பட்ட அக்கறை இருந்தது. தங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பின்லேடன் தங்களுக்கே சவாலாக இன்று எழுந்துள்ளதை, அமெரிக்கா காண்கிறது. தங்கள் காரியத்தை முடிக்க உற்சாகப்படுத்தப்பட்ட ஒரு தாலிபன் இயக்கத்தை, தாங்களே அழிக்க வேண்டிய நிலைமை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பெரும் காடுகளையும், பெரிய, பெரிய மலைகளையும் கொண்ட ஒரு பரந்த நாடு. அங்கே மலைகளிலும், காடுகளிலும் வாழும் மனிதர்கள் பழங்குடி மக்கள். அந்த பழங்குடி மக்கள் மத்தியில், இந்த வல்லரசுகளின் போட்டியின் காரணமாக, ஏராளமான ஆயுதங்களும், ஆயுதப்பயிற்சிகளும் போய்ச் சேர்ந்துள்ளன. ஆப்கானிஸ்தானத்தில் மலைப்பகுதிகள் சில பாகிஸ்தானின் எல்லையோரத்தில் வருகின்றன. அங்கும் கூட வசித்து வருவது பழங்குடி மக்கள் தான். அதனால் தாலிபன் போராளிகள், தண்ணீரில் மீன் போல அந்த பழங்குடி மக்கள் மத்தியில் புழங்கி வருகின்றனர். 9/11 தாக்குதல், அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரிலும், பெண்டகன் ராணுவ தளத்திலும் நடத்தப்பட்ட பிற்பாடு, அமெரிக்க போர் விமானங்கள், ஆப்கானிஸ்தானின் மலைகளின் மீது குண்டு மழையைப் பொழியத் தொடங்கின. கார்பட் பாம்பிங் என்று அழைக்கப்பட்ட குண்டு மழைப் பொழிதல் அமெரிக்காவால் நடத்தப்பட்டது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து நேட்டோ நாடுகளின் படைகளையும், தங்களது ஆப்கான் தாக்குதலில் ஈடுபடுத்தினார்கள்.
அமெரிக்க அதிபராக ஒபாமா வந்தபிறகு, தாலிபன் மீதான அழித்தொழிப்பை துரிதப்படுத்த உத்தரவிட்டார். விரைந்து அழித்து விட்டு, தங்களது நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூட, ஒபாமா அறிவித்தார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, இந்திய தலைமையமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டார். நேட்டோ நாட்டு படைகள் அவசரப்பட்டு, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறக் கூடாது என்றும், அதிகமான படைகளை ஆப்கானிஸ்தானுக்கு நேட்டோ நாடுகள் அனுப்ப வேண்டுமென்றும், மன்மோகன் சிங் அறிவித்தார். இது அமெரிக்காவின் மற்றும் இங்கிலாந்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு, இந்திய அரசு கொடுக்கின்ற ஆலோசனைப் போல இருந்தது. ஆயுதங்களுக்காகவும், ஆக்கிரமிப்புக்காவும் அதிகமான நிதியை செவழிக்கும் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல், தங்கள் நாட்டு பொருளாதார வீழ்ச்சியைச் சரிக்கட்டும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு, இந்திய அரசின் ஆலோசனை சிக்கலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற நேட்டோ படைகளை மூன்று லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்தை அந்த இரு வல்லரசு நாடுகளும் எடுத்துள்ளன. சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட ஆப்கானிஸ்தானில் வெற்றி பெற்ற கார்சாய் என்ற அமெரிக்க சார்பு அதிபர், நியாயமற்ற முறையில் தேர்தலை சந்தித்தார் என்பது தான் பொதுவான கருத்து. இப்போது இங்கிலாந்தில் கூடிய 70க்கும் மேற்பட்ட நாடுகள், தாலிபன் பற்றி விரிவாக விவாதித்தன. ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு பற்றிய விவாதம் ஆழமாக நடத்தப்பட்டது. சீனாவும் கூட அதற்கான ஆலோசனைகளை முன்வைத்தது. சீனாவின் ஈடுபாடு ஆப்கானிஸ்தான் விவகாரத்தில், முன்னை விட அதிகமாக ஆகத் தொடங்கியுள்ளது. பிராந்தித்தில் உள்ள நாடுகளின் ஒத்துழைப்பும், அனைத்து நாட்டு அளவிலான பங்களிப்பும், இந்த மாநாட்டின் நிறைவில் தொகுக்கப்பட்டது.
இதில் இந்திய அரசின் சார்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வைத்த முன் வைப்புகள், அனைத்து நாட்டு அரசுகளின் சார்பாக வைக்கப்பட்ட கருத்துக்களினால் மறுக்கப்பட்டது. தாலிபன்களின் தீவிரத் தன்மையுள்ளவர்கள் என்றும், மிதமான தன்மையுள்ளவர்கள் என்றும் பிரித்துப்பார்ப்பது இயலாது என்பது தான் இந்திய அரசின் வெளிவிவகார கொள்கையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்கனவே தனது நாட்டின் மக்கள் பிரதிநித்துவ சபைகளில் முன்வைத்திருந்த திட்டங்கள் வேறுபட்டு நின்றன. அதில் பெருவாரியான தாலிபன் போராளிகள், தங்கள் கொள்கைகளுக்காக போராடவில்லை என்றும், பணத்திற்காகத் தான் போராட இறங்கியுள்ளார்கள் என்றும் ஒரு மதிப்பீடு முன்வைக்கப்பட்டது. அதனால் அப்படிப்பட்ட தாலிபன் போராளிகளை, தங்கள் வசம் இழுப்பதற்கு போதுமான அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த மதிப்பீடு. அதன்படி அமெரிக்க அரசும் நிதியை ஒதுக்கி, அதன் ஒரு பகுதியை பாகிஸ்தான் அரசின் மூலம் செலவழித்து வருகிறது. இத்தகைய செயல்பாடு கூட, இந்திய அரசால் செரிக்கப்படவில்லை.
இப்போது அனைத்து நாட்டு மாநாட்டில் இதே பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. அதை அங்கேயே இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறுத்து பேசியிருக்கிறார். ஆனால் இந்தியாவின் கருத்து உலக நாடுகளால் ஏற்கப்படவில்லை. பூகோள ரீதியாக ஆப்கானிஸ்தான், ஒரு புறத்தில் இந்தியாவிற்கும், இன்னொரு புறத்தில் பாகிஸ்தானிற்கும், அதேபோல சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும், நேபாளத்திற்கும் சம்மந்தப்பட்ட அண்டை நாடாக அமைந்துள்ளது. அதனால் அந்த நாட்டில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில், உலக வல்லரசுகள் ஈடுபடும் போது, கொள்கை அளவில் இந்திய அரசின் நிலைப்பாடு தனிமைப்படுத்தப்படுவது ஒரு சவாலான செய்தி தான்.
இப்படியாக இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை, ஆப்கானிஸ்தான் விஷயத்தில் பகிரங்கமான சவாலை, மேற்கூறிய மாநாட்டில் எழுப்பியுள்ளது. இந்திய அரசு தனது வெளிவிவகாரக் கொள்கைளை, நடுநிலையான நிலைப்பாட்டில் நின்று கொண்டு எடுத்த காலங்கள் உண்டு. அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் மத்தியில் சம தூரத்தில் நின்று கொண்டு தனது நிலையை, ஒப்பீட்டளவில் சுதந்திரமாக வைத்திருந்த இந்திய அரசையும் நாம் கண்டிருக்கிறோம். நேருவின் காலத்திலும், இந்திரா காந்தியின் காலத்திலும் இப்படிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததுண்டு.
ஆனால் இப்போது இந்தியாவை ஆளுகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், மன்மோகன் சிங் தலைமையில் எடுக்கின்ற நிலைப்பாடுகள், இந்த நாட்டின் மரியாதையைக் கேள்விக்குறியாக்கி வருகிறது. அதன் ஒரு பகிரங்கமான வெளிப்பாடு தான், இந்த அனைத்து நாட்டு மாநாட்டில், இந்திய அரசு தனிமைப்பட்டுள்ள நிலைப்பாடு. ஆட்சியாளர்கள் இதை உணர்கிறார்களோ இல்லையோ, பொதுமக்கள் உணர வேண்டிய தேவை இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment