வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் என்பதாக தமிழர் தாயகத்தை இரண்டாகப் பிரித்து, மகிந்த ராஜபக்சே அரசாங்கம் இலங்கை தீவில் ஒற்றையாட்சியை நடத்திக் கொண்டு வருகிறது. இலங்கைத்தீவு இரண்டு தேசங்களை கொண்டது என்பதும், இரண்டு தேசிய இனங்களை உள்ளடக்கியது என்பதும் வரலாற்று உண்மை. அப்படியிருக்கும் போது, ஒரு தேசிய இனத்தின் கட்டுப்பாட்டில், மற்றொரு தேசிய இனத்தை திணித்த ஆங்கிலேயர்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சிதான், 60 ஆண்டுகளாக பேரினவாத ஆதிக்கத்தை தொடர வைத்துள்ளது. இந்த நிலையில் அங்கே எழுந்த அறவழிப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக தலையெடுத்தப் பிறகு, தாக்குப்பிடிக்க முடியாத அரசாங்கத்தாரும், அண்டை நாட்டு வல்லரசுதாரரும் இணைந்து போட்ட ஒப்பந்தம் தான் 1987ம் ஆண்டின் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தில் வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டு, தமிழர் தாயகம் என்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படிப்பட்ட குறைந்த பட்ச அடையாளத்தை கூட, தமிழினம் பெற்றுக் கொள்வதை விரும்பாத ஒரு பேரினவாத வெறிதான் ஆட்சியாளர்கள் மத்தியிலிருந்து வெளிப்பட்டது.
சென்ற அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் போதே மகிந்த ராஜபக்சே, தெளிவாக ஒரு செய்தியை அறிவித்தார். இலங்கைத் தீவில் ஒற்றையாட்சிதான் நடத்தப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒற்றையாட்சி என்றால், யூனிட்டரி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், அரசாட்சி முறைபற்றிய தமிழாக்கம். அதாவது அத்தகைய ஆட்சியில் கூட்டமைப்பு என்ற சமஷ்டி முறையிலான பெடரேஷன் என்ற பண்பு கொண்டது அல்ல என்று பொருள். அதாவது சுயாட்சிகள் என்ற அளவுக்கு அட்டானமி என்று ஆங்கிலத்தில் சொல்லும் சொல்லுக்கேற்ப, எந்த ஒரு அதிகாரப்பகிர்வும் இருக்காது என்று பொருள். அப்படிப்பட்ட மத்தியத்துவப் படுத்தப்பட்ட, அதிகாரக் குவிமையம் கொண்ட ஒரு ஆட்சிமுறைதான் ஒற்றையாட்சி முறை. ஒற்றையாட்சி முறையை அறிவித்த மகிந்த ராஜபக்சே, தான் வெற்றிபெற்று அரசதலைவரானபிறகு, அதை அப்படியே அமுல்படுத்தினார்.
தேர்தலுக்கு முன்பு மகிந்தா உருவாக்கிய கூட்டணியில் முக்கியமாக ஜனதா விமுக்தி பெரமுனா இருந்தது. அவர்களிடம் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில், ஒற்றையாட்சியை கொண்டு வருவேன் என்று மகிந்தா எழுதிக்கொடுத்தார் என்பது தான் அன்றைய குற்றச்சாட்டாக தமிழர்கள் மத்தியில் எழுப்பப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை அமுலாக்குவதில் மிகுந்த அக்கறையை, தான் வெற்றி பெற்ற பிற்பாடு மகிந்தா காட்டினார். அதற்கு முதல் கட்டமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒற்றுமையை பிரித்தார். அதற்கு அவர் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடினார். ஏன் என்றால் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்பது, தமிழர்களுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒன்று பட்ட அதிகாரத்தை கொடுப்பது என்பதாக கையெழுத்திடப் பட்டிருந்தது. கையெழுத்திடப்பட்ட இரண்டு நாட்டு தலைவர்களின் ஒப்பந்தம், ஒரு அனைத்து நாட்டு தன்மையை கொண்டது என்பதனால், நீதிமன்றத்தின் உதவியின் மூலம் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையான வடக்கு கிழக்கு மாகாண ஒற்றுமையை உடைக்க மகிந்தா திட்டமிட்டார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறாத அந்த ஒப்பந்தம், இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டப்படி அமுலாக்குவதற்கு உகந்ததா என்ற கேள்வி இருந்தது. இதையொட்டியே மகிந்தாவின் விருப்பத்திற்கொப்ப, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களை பிரித்து விட்டது.
பிரித்து விட்ட கையோடு கிழக்கு மாகாணத்திற்கு, மாகாண சபைத் தேர்தலை மகிந்தா நடத்திவிட்டார். அதுவும் கூட, தமிழீழ விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்தை விட்டு, தங்களது படைப்பிரிவுகளை திரும்ப அழைத்துக்கொண்ட ஒரு சூழலில்தான், அத்தகைய மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் விடுதலைபுலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா தலைமையிலான துரோகப்படை என்று அறியப்பட்ட, பிரிவினரின் ஒரு தளபதியான பிள்ளையான் முன்னெடுத்த குழுவினரையும், தமிழ் பேசும் முஸ்லிம்கள் அமைப்பினரையும் வெற்றி பெற்றவர்களாக அறிவித்தது. அப்போதும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து முதல்வர் பொறுப்பு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் மகிந்தாவின் சதித்திட்டம் கிழக்கு மாகாண சபைக்கு, தனது கூட்டணியின் மூலம் ஒரு தமிழரை முதல்வராக்கியதாக உலகை நம்ப வைக்க முயன்றது. அதன் விளைவுதான் அன்று வரை அரசியல் கற்றுணராத பிள்ளையான் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
சென்ற ஆண்டு மே மாதத்தில் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட வன்னிப்போருக்கு பிறகு, வடக்கு மாகாணத்திலும் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறாக வடக்கையும், கிழக்கையும் பிரித்து நிறுத்துவதில் மகிந்தாவை பொறுத்தவரை ஒரு கட்டம் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இப்போது அரசதலைவருக்கான தேர்தல் நெருங்கும் நேரத்தில், மகிந்தாவின் போட்டி வேட்பாளர் சரத் பொன்சேகா புதிய அறிவிப்பை கொடுத்துள்ளார். பொன் சேகாவை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், வடக்கையும், கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பொன்சேகா ஆவணமாக எழுதிக்கொடுத்திருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன. அத்தகைய செய்திகளின் அடிப்படையில், பொன் சேகா தமிழர் தேசிய கூட்டமைப்பினருடன் ரகசியமான ஒப்பந்தம் என்பதாக, பேரினவாத சக்திகள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து, மகிந்தா கட்சிக்கு தாவிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அதை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டால், மீண்டும் தமிழீழம் எழுந்து விடும் என்பதாக அவரது கண்டனக்குரல் ஒலிக்கிறது. அதுபோலவே அரசதலைவர் மகிந்த ராஜபக்சேயும், வடக்கையும், கிழக்கையும் இணைக்க விடமாட்டோம் என்பதாக கூறியுள்ளார்.
இப்போது மகிந்தாவின் இந்த கூற்று, சிங்கள பேரினவாத மனோபாவம் கொண்ட மக்களின் வாக்குகளை வழிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஈழத் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்கள் தான் அதிபர் தேர்தலில் வெல்லமுடியும் என்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் செல்வாக்குடன் இருக்கின்ற முஸ்லிம் கட்சியும் கூட, பொன்சேகாவின் ஆதரவு கூட்டணியில்தான் இருக்கிறது. ஒரு காலத்தில் சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில்தான் மகிந்தாவும் இருந்தார். அந்த கட்சி மூலம்தான் வேட்பாளராக அறிமுகப் படுத்தப்பட்டார். ஆனால் சந்திரிகா ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, கூட்டமைப்பு முறையிலான ஆட்சி பற்றி முன்வைப்புக் களை வைத்தார். இப்போது சந்திரிகா முழுமையாக பொன் சேகாவிற்காக இறங்கி பிரச்சாரம் செய்கிறார். மகிந்தாவிற்கு ஒற்றையாட்சி கொள்கையை எடுத்துக் கொடுத்த ஜே.வி.பி. கூட, இப்போது பொன்சேகாவை ஆதரிக்கிறது. இப்படியாக பல தரப்புகளிலிருந்தும், வடக்கும், கிழக்கும் இணைவது பற்றி ஆதரவு கருத்துக்கள் இருந்து வருகின்றன.
மகிந்தா கூட்டணியில் ஒட்டிக் கொண்டுள்ள, டக்ளஸ் தேவனாந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி கூட, வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நீண்ட நாட்களாக கூறிவருகிறார்கள். அவர்கள் எந்த முகத்தோடு வடக்கு கிழக்கு பற்றி மகிந்தாவின் கருத்துக் களை, தமிழ்மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்று தெரிய வில்லை.
தேசத்தை இழந்து, அறவழி போரிலும் தோற்று, ஆயுதப்போரிலும் பலியாகி, முள்வேலி முகாம்களில் அவதியுறும் தமிழ்மக்களுக்கு, குறைந்த பட்சம் வடக்கும், கிழக்கும் இணைக்கப்படும் என்ற செய்திகூட, ஒரு ஆறுதலான சொல்லாக இருக்கும். மோசமான சூழலுக்கு மத்தியில், குறைந்த பட்சம் தமிழர்கள் தாயகம் அங்கே அடையாளத்திற்காகவாவது உருவாக்கப் படட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment