நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில், வாக்க ளித்த ஈழத்தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும், பெரும்பான்மையாகவும், கணிசமாகவும் அதிபர் ராஜபக்சேக்கு எதிராக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தார்கள். ஒரு மாத காலத்திற்கு மேலாக, பல்வேறு விவாதங்களை நடத்தி, தங்களது வாக்குகளை தமிழர்களை அழித்த இன அழிப்புப் போரை திட்டமிட்டு நடத்தியதாக அதிபர் மகிந்தாவை, கணித்த காரணத்தினால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் வந்திருந்தார்கள். ராஜபக்சேயை தோற்கடிப்பதற்கு ஏதுவான வேட்பாளராக அவர்கள் சரத்பொன்சேகாவை கருதியதால், அவருக்கே தங்களது வாக்குகளை அளித்தார்கள். மேற்கூறிய இரண்டு வேட்பாளர்களுமே, தமிழினத்திற்கு எதிரான போரை நடத்தியவர்கள் என்றும், அதனால் அவர்கள் இருவருக்குமே எதிராக தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்றும், கேட்ட சிங்களதமிழர் வேட்பாளர்களைக் கூட, தமிழ் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக தங்களுடைய இலக்காக ராஜபக்சேயை தோற்கடிக்கும் நோக்கம் கொண்ட வாக்குகள், பொன்சேகாவிற்கு விழுந்தன. அதேசமயம் தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் வாக்குகள் மகிந்தாவிற்கே விழுந்தன. இத்தகைய வாக்குப்பதிவுகளே, இரண்டு விதமான போக்குகள் மற்றும் இரண்டு விதமான சிந்தனைகள் இருப்பதை உறுதிப்படுத்தின. இலங்கைத் தீவிற்குள் வாழ்கின்ற இரண்டு தேசிய இனங்களின், வெவ்வேறு உணர்வுகள் அதன் மூலம் வெளிப்பட்டன. இதுவே இரண்டு தேசிய இனங்களும், இரண்டு தேசங்களாக பிரிந்தே, அந்த தீவிற்குள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கான நிருபணம் என்று கூறுவோரும் உண்டு.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த அல்லது நிலவுகின்ற உணர்வுகளை கணக்கெடுத்தே, பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்தனர். அதனால் இந்த தேர்தல் ஆதரவு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் ஏற்பட்ட முடிவல்ல. மாறாக தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டை, முன்கூட்டியே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உணர்ந்து முடிவெடுத்தனர் என்பது தான் உண்மை. ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நேர் எதிராக சென்றுவிட்டன.
இலங்கைத் தீவில் அதிபராக வருகின்றவர் யார் என்பதையொட்டி தங்களது எதிர்காலத்தை, தீர்மானித்துக் கொண்டிருப்பவர்கள், இலங்கைத் தீவிற்குள் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் மட்டுமல்ல. இலங்கைக்கு வெளியே அகதிகளாக ஓடிவந்திருக்கும், 1 லட்சத்திற்கு மேற்பட்ட இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழர்களுக்கும், இதையொட்டியே சிந்தனைகள் எழுகின்றன. அவர்கள் தங்களது எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்ற கனவிலிருந்து, எப்படி அமையப்போகிறதோ என்ற பீதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகையச் சூழ்நிலையிலும் கூட, தமிழகத்தில் அகதிகளாகயிருக்கும் ஈழத் தமிழர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வரும், ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற ஒரு விவாதம் எழுப்பப்பட்டது. இந்தியாவிலிருக்கின்ற பல மனிதாபிமானிகள் அதை வரவேற்றனர். ஆனால் ஈழத்தமிழர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகள் வெளிப்பட்டன. தாங்கள் அடுத்த நாட்டில் குடியுரிமைப் பெற்று, வாழ்வதற்கான மனோநிலையில்லை என்று கூறினார்கள். அதேசமயம் எதிர்காலத்தில் ஒரு நாள், தங்களது தாய் மண்ணிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்களை, அவர்கள் வலுவாக வைத்திருக்கிறார்கள். அதேசமயம் இங்குள்ள அகதிகள் முகாம்களில், தாங்கள் அன்றாட வேலை கிடைக்காமல் சிரமப்படுவதையும் எண்ணிப்பார்க்கிறார்கள். அவர்கள் கைகளில் இருப்பது இலங்கை பாஸ்போர்ட். ஆனால் அந்த தமிழர்கள் 27 ஆண்டுகளாக இந்தியாவிற்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது எண்ணிக்கையில், அகதிகள் முகாம்களில் வாழ்பவர்கள் தவிர, வெளியே காவல்நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள். அப்படியிருப்பவர்களுக்கு பெரும்பாலும், ஐரோப்பிய நாடுகளில் வாழுகின்ற சொந்தங்களிடமிருந்து, பணவிடைத் தாள் மூலம் செலவுக்குக் கிடைத்து விடுகிறது.
மேற்கண்ட நிலையிலுள்ள ஈழத்தமிழர்கள், நிரந்தர இந்திய குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள ஆர்வமாக இல்லாவிட்டாலும், மற்றொரு வாய்ப்பை பரிசீலிக்கிறிர்களா என்று சிலர் வினவுகிறார்கள். அது இந்தியாவிலும், இலங்கையிலும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக வாழும் நிலையை, அத்தகையவர்கள் ஆலோசனையாக முன்வைக்கிறார்கள். அதற்கும் கூட, அந்த ஈழத்தமிழ் உணர்வாளர்கள் உடன்படவில்லை. அதற்கான காரணமாக அவர்கள் முன்வைப்பது, தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது. தாங்கள் இந்திய குடியுரிமைப் பெற்றாலோ, இரட்டைக் குடியுரிமைப் பெற்றாலோ, இலங்கையை ஆளும் சிங்கள ஆட்சியாளர்கள், அதையே காரணமாக்கி தங்களை தீவிற்குள் வாழ்வதற்கு விரும்பாதவர்கள் என்பதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான குடியுரிமைகளுமே, தங்களுக்கு சாதகமானது அல்ல என்பது அவர்களது வாதம்.
அப்படியானால் அவர்கள் விரும்புவது தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. தங்களுக்கு 10 ஆண்டுகளுக்கான தற்காலிக பாஸ்போர்ட் சீட்டு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. அது எந்த அளவுக்கு பயன்படும் என்று கேட்டால், தாங்கள் விரும்பிய நேரத்தில் உலகின் எந்த நாட்டிற்கும், இந்தியாவிலிருந்து சென்றுவர முடியும் என்று கூறுகிறார்கள். ஈழத்தமிழர்களில் கணிசமான குடும்பத்தவர்கள், தங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களில் குறைந்தது யாராவது ஒருவர், ஐரோப்பிய நாடுகளிலோ, அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ இருப்பதை காணமுடிகிறது. அதனால் தங்களது சுற்றத்தாருடன் ஊடாடலில் இருப்பதற்காக, இத்தகைய தற்காலிக பாஸ்போர்ட் ஒன்றை, தமிழ்நாடு அரசிடம் கேட்டு நிற்கிறார்கள்.
இங்கே வாழ்கின்ற ஈழத்தமிழ் அகதிகளை, இலங்கை அரசு இரண்டு பிரிவுகளாக பிரித்துப் பார்க்கிறது. ஒரு பிரிவினர் போர் நடக்கும் காலங்களில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்பதாக, இலங்கை அரசால் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப் பட்டுள்ளவர்கள். அடுத்த பிரிவினர் புலிகளுக்கெதிரான அமைப்புகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு, இந்தியாவிலிருக்கின்ற உளவு நிறுவன அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருக்கின்ற சக்தியினர். அதனாலேயே அத்தகைய அதிகாரிகளின் உதவியையும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள். இந்த இரண்டாவது வகையினர், அதிபர் ராஜபக்சேயின் தேர்தல் வெற்றியால், ஈர்க்கப்பட்டு இலங்கைத் தீவிற்கு, திரும்பச் செல்ல ஆயத்தமாகவுள்ளனர். அதேசமயம் முதல் பிரிவினர் தங்களுக்குள்ள அச்சத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் இந்த நிலையில் இலங்கைச் சென்றால், அல்லது இலங்கைக்கு அனுப்பப்பட்டால், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் ராஜபக்சே குடும்பத்தினரது உத்தரவின் பேரில், தாங்கள் வேட்டையாடப்படுவார்கள் என்பதாக அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்திய அரசின் முன் முயற்சியில், ராஜபக்சே அரசு பகிரங்கமாக ஒரு உறுதி மொழியைக் கையெழுத்திட்டு, இந்திய அரசுக்கு கொடுக்குமானால், தாங்கள் தாய் நாடு செல்வதற்கு இணங்க முடியும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அதாவது போர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளை மனதில் கொண்டோ, பொய்யான குற்றப்பதிவுகளை காரணமாக்கியோ, தாங்கள் எக்காரணம் கொண்டும் அரசாலோ, ஒட்டு ஆயுதக் குழுக்களாலோ பழிவாங்கப்பட மாட்டடோம் என்ற உறுதியை, இலங்கை அரசிடம் பெற்றுத்தர முடியுமா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். சமாதானத்தையும், அமைதியையும் விரும்பக்கூடிய சக்திகள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா என்ற கேள்வியை நாமும் அரசுக்கு முன்வைக்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment