தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தீவிரமாக வலுவடைந்து வருகிறது. அந்தப் பகுதியிலிருந்து வருகின்ற செய்திகள் புதிய எழுச்சியை படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. அதாவது தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வரும் சந்திரசேகராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பா.ஜ.க.வும், அவ்வப்போது தெலுங்கு தேசம் கட்சியும், தெலுங்கானா பகுதியிலுள்ள காங்கிரஸ் தலைவர்களும், இப்போது தெலுங்கானா மக்கள் மத்தியில் ஆழமான பிடிப்புடன் அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக அது ஒரு மக்கள் பிரச்சினையாக மாறிவிட்டது. இன்னமும் சொல்லப்போனால், ஹைதராபாத்திலிருக்கும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கைகளுக்கு அந்தப் போராட்டம் சென்று விட்டது. தேர்தல் கட்சிகள் யாரையும் இப்போது அந்த மக்கள் நம்பத் தயாராக இல்லை. நடிகர் விஜயசாந்திக்கு தெலுங்கானாவை ஆதரித்ததற்காக இருந்த ஆதரவு கூட, அவர் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்த பிறகு இல்லாமல் போய் விட்டது. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தின் திசை வழியை தீர்மானிப்பதால், போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்வதால், தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிரான சக்திகள், குறிப்பாக மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி தனது தாக்குதலை உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதே செலுத்த முயல்கிறது. அதன் ஒரு அறிகுறி தான் அந்த மாணவர்கள் மத்தியில் மாவோயிஸ்ட் தூண்டுதல் இருப்பதாக அவர்கள் சாட்டி வரும் குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தால் ஏற்கப் படாமல், பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிகளை மானபங்கம் செய்ததாக, துணை ராணுவத்தினர் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், ராணுவமே பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையும் ஆந்திர அரசாங்கம் எதிர்த்து உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுக்குச் சென்று, தற்காலிகமாக ராணுவம் பல்கலைக்கழகத்திற்குள் இருக்கலாம் என்ற இடைக்கால உத்தரவைப் பெற்றது. அதையும் கூட அடுத்து வந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது. ஆந்திர அரசாங்கத்திடம் மாவோயிஸ்ட் தூண்டுதல் பற்றி ஆதாரம் கொண்டு வா என்று கேட்டுள்ளது.
உள்ளபடியே உஸ்மானியா பல்கலைக்கழக மாண வர்கள் மத்தியில் மாவோயிஸ்ட் சிந்தனை இருக்கிறதா அல்லது இருந்ததா அல்லது அவர்கள் அதை நோக்கி ஈர்க்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று ஆராய்வோமானால், இந்தக் குற்றச்சாட்டின் ஆழமற்ற போக்கு புரியும். ஏனென்றால் நக்சல் பாரி இயக்கம் தொடங்கிய 1967ம் ஆண்டில் தொடங்கி, ஆந்திர மாநிலத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே, மாவோ சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் வெள்ளம் என புரண் டோடியது என்பது உண்மை தான். அதில் உஸ்மானியா பல்கலைக்கழகம் தப்பவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்த பல்வேறு பிரிவு நக்சல் பாரி இயக்கங்களில், ஒவ்வொரு பிரிவின் மாணவர் அமைப்பும் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாகவே செயல்பட்டு வந்தன. புரட்சிகர மாணவர் சங்கம் என்ற மக்கள் போர் குழுவினரின் மாணவர் அமைப்பு தங்களது பரப்புரையை வழமையாகவே செய்து வந்தது. அதைவிட முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம் என்ற பீ.டி.எஸ்.யு என்ற மாணவர் பிரிவு, சந்திரபுல்லா ரெட்டி தலைமையிலான நக்சல் பாரி பிரிவினுடைய மாணவர் அமைப்பாக, அதிக வலுவுடன் செயல்பட்டு வந்தது. அதனால் அப்படிப் பட்ட சிந்தனை உள்ளவர்கள் அந்த வளாகத்திற்கு புதிய வர்கள் அல்ல. அந்த வளாகத்தின் கட்டிடங்களில் உள்ள செங்கல்கள் கூட, மாவோ சிந்தனைகளை உரைத்துக் கொண்டேயிருக்கும். அப்படியிருந்தும் அமைதியாக இருந்த உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களை, இப்போது உசுப்பி விட்டிருப்பது யார் என்று பார்க்க வேண்டும்.
தனித் தெலுங்கானாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்த டி.ஆர்.எஸ். கட்சியை, இந்தியாவின் ஆட்சியாளர்கள் மாறி,மாறி ஏமாற்றிய பிறகு, அவர் பட்டினிப் போராட்டம் அறிவித்தார். அவரை வற்புறுத்தி போராட்டத்தை ஆட்சியாளர்கள் நிறுத்திய காரணத் தினால், உஸ்மானியா மாணவர்கள் அவருக்கு எதிராகவே போராட புறப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் தனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று முதலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு பின்வாங்கியதால் உஸ்மானியா மாணவர்கள் உசுப்பி விடப்பட்டுள்ளனர். இதற்கு மாவோயிஸ்ட்கள் காரணம் என்று சொன்னால், கேழ்வரகில் நெய் வடியுது என்று சொன்னால், கேக் கறவன் புத்தி எங்க போச்சு என்பதாக கிராமத்தில் சொல் வார்கள் என்பது தான் நினைவுக்கு வரும்.
இப்போது தெலுங்கானா பகுதியின் 9 மாவட் டங்களும் முழுமையாக மக்கள் எழுச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எல்லாக் கிராமங்களிலும் அன்றாடம் தனித் தெலுங்கானா கோரிக்கைக்காக, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புரட்சிக் கலைஞர் கத்தார், தனது பாடல்கள் மூலம் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான கோரிக்கையை முதலில் பரப்பினார். இப்போது ஒவ்வொரு தெலுங்கானா கிராமத்திலும், பல கத்தார்கள் உருவாகி விட்டனர். கத்தார் அணிந்திருக்கும் உடையான வேட்டியும், தோளில் போட்டிருக்கும் கருத்த போர்வையும், ஆதிவாசிகளின் உடை. அதேபோல உடையணிந்து இளைஞர்களும், மாணவர்களும், கிராமம், கிராமமாக புதிய பாடல்களை கத்தார் பாணியில் எழுதி, கத்தார் பாணியிலேயே பாடி, ஆடத் தொடங்கி விட்டனர். இதுவே கிராமங்கள் வரை வேர் போல ஆழமாகச் சென்றிருக்கின்ற எழுச்சியை காட்டுகிறது. தவிர தெலுங்கானா கிராம நிலங்களை, ஆந்திரா பகுதி கம்மா பண்ணையார்கள் விலைக்கு வாங்கி, கார்ப்ப ரேட்டுகளுக்கு விற்று வருகிறார்கள். அதனால் தான் தெலுங்கானா மக்கள் நிலமற்ற, வறியவர்களாக ஆகியிருக்கிறார்கள். அதனால் கார்பரேட்டுகளுக்கு எதிரான, ஏழை விவசாயி களுடைய போராட்டமாகவும், தெலுங்கானா போராட்டம் மாறியிருக்கிறது.
சமீபத்திய தெலுங்கானா போராட்டம் 3 மாதங் களுக்குள், மாணவர்களிடையே கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக இதுவரை 285 மாணவர்கள் தங்களது உயிரை நெருப்பிட்டு மாய்த்துக் கொண்டுள்ளனர் என்ற கணக்கை அங்கே உள்ள பி.யூ.சி.எல். கொடுக்கிறது. ஹைதராபாத் தலை நகரில் இருக்கின்ற அரசாங்க அலுவலகங்களில், 90% பணியாளர்கள் தெலுங்கானா அல்லாத ஆந்திராவை சேர்ந்தவர்கள். தனித் தெலுங்கானா கிடைக்காமல், அந்த வட்டார மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை. அதனால் தான் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். உயிர்பலி செய்து கொள்கிறார்கள். போராட்டத்தை கொண்டு செல்கிறார்கள்.
வரலாற்றுப் புள்ளிவிவரங்கள் இதற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றன. 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மொழி வாரி மாநிலங்கள் அமைப்பதற்காக, ஒரு மாநில புனரமைப்பு ஆணையத்தை நிறுவினார். அதற்கு நீதியரசர் பசல் அலியை தலைவராக நியமித்தார். அந்த ஆணையத்தை, 1954ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த கோபிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையிட்டார். அந்த ஆணையம் தெலுங்கானா பகுதியை, ஆந்திராவுடன் இணைக்கக் கூடாது என்று கூறியது. தெலுங்கு பேசும் விரிந்த ஆந்திராவை, ஆந்திரா பகுதி மக்கள் விரும்பினாலும், தெலுங்கானா பகுதி மக்கள் இன்னமும் அதை ஏற்கவில்லை என்று ஆணையம் எழுதியது. தெலுங்கான பகுதி பொருளாதாரத்தில் வளர்ச்சியற்று இருக்கிறது என்றும் கூறியது. அதனால் தெலுங்கானாவில் இருக்கும் வளங்களையும் இணைத் தால் ஆந்திரப் பகுதியினர் தங்கள் நலனுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று பசல் அலி எழுதினார். அரசாங்க வேலைகளிலும், கல்வியிலும் ஆந்திரப் பகுதி யினர் அதிக லாபம் பெற்று விடுவர் என்பது போன்ற விவரங்களை, ஆணைய அறிக்கை 382வது பாராவில் பசல் அலி எழுதியிருக்கிறார்.
மாநில புனரமைப்பு ஆணைய அறிக்கையின் 386வது பாராவில், ஹைதராபாத் மாநிலம் என்று அழைக்கப் பட்ட பகுதியை, தெலுங்கானா மாநிலம் என்று தனி மாநிலமாக அறிவிக்கலாம் என முடித்துள்ளார். 1961ன் பொதுத் தேர்தலில் ஹைதராபாத் மாநில மக்கள் மூன்றில் இரண்டு பங்கு, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவாக வாக்களித்தால் ஒன்றுபடுத்தலாம் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு கட்டாயமாக சேர்க்கப்பட்ட ஒன்றுபட்ட ஆந்திராவில், தனித்தெலுங்கானாவிற்காக 1969ம் ஆண்டே மாணவர்கள் போராட்டம் எழுந்தது. 362 உறுப்பினர்களை பலி கொண்டது. இந்த உயிர் பலிகள் தொடர வேண்டுமா? தெலுங்கானா வட்டார மக்களது வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டுமா? இப்படி கேள்விகளை அருகே இருக்கும் நாமாவது எழுப்பக் கூடாதா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment