வருகின்ற உலக பெண்கள் தினத்தன்று, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தள்ளிப் போடப்படுகின்ற பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த முறை நிறைவேற்றப் படும் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கூறியுள்ளார். எதிர்கட்சிகளான பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக முழு முயற்சியில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. வழக்கம்போல் லாலுவும், முலாயமும் எதிர்க்கிறார்கள் என்ற செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை லாலுவோ, முலாயமோ பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33% இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று நேரடியாகக் கூறவில்லை. அதே சமயம் மற்ற பிற் படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்படாமல் பெண்கள் மசோதா நிறைவேறக்கூடாது என்றுதான் கூறுகிறார்கள். அதே சமயம் பெண்கள் இடஒதுக்கீடு வந்துவிட்டால், தாங்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி விடுவோம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தகைய கூற்றே அவர்களது உள்ளார்ந்த உணர்வில் இருக்கின்ற ஆணாதிக்க வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
முன்னாள் நீதியரசரும், மனித உரிமை ஆர்வலருமான ராஜிந்தர்சச்சார், பெண்களுக் கான இடஒதுக்கீடு மசோதா என்பது ஒரு சமூகத் தேவை என்றும், தேசத்தின் கடமை என்றும் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை சட்டமாக்குவது பற்றி தீவிரமாகப் பேசப்படும். அப்படிப் பேசுவதில் எந்த ஒரு அரசியல் கட்சியும், இன்னொரு கட்சிக்கு சளைத்தவரல்ல என்பதாகக் காட்டிக் கொள்வார்கள். அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி எல்லைகளைத் தாண்டி, பெண்களின் இடஒதுக்கீட்டுக்காக குரல் எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்திலேயே அனைத்துக் கட்சி பெண் உறுப்பினர்களும், கையை உயர்த்தி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அத்தகைய ஆர்ப்பாட்டத்தில் வலது சாரி கட்சியான பா.ஜ.க.வும், இடது சாரி கட்சிகளான கம்யூனிஸ்ட்களும், இணைந்தே குரல் எழுப்புவார்கள். ஆனால் தங்கள் கட்சிகளுக்குள் அவர்களால் எந்த அளவுக்கு, கட்சித் தலைமையை நிர்ப்பந்தம் செய்து இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக முடிவு செய்ய முடிகிறது என்றால் அது ஒரு பெரும் கேள்விக்குறியாகவே நிற்கிறது. எல்லாக் கட்சிகளின் உள்ளேயும் மிகச் சாதாரணமாக ஆணாதிக்க உணர்வுகள் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. மென்மையான ஆணாதிக்கம், கடுமையான ஆணாதிக்கம் என்பதாக வேண்டுமானால் கட்சித் தலைமைகளைப் பிரித்துப் பார்க்கலாமே தவிர, ஆணாதிக்க உணர்வுகளை நீக்கிவிட்ட கட்சித்தலைமை என்று யாரையுமே இந்த நாடாளுமன்ற ஜனநாயக பாதைக்குள் நம்மால் அடை யாளம் காணமுடியவில்லை.
இதற்கிடையே புதிய புதிய ஆலோ சனை யை ஒவ்வொருவரும் வைக்கத் தொடங் கினார்கள். அதில் 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட் டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து அனைத்துக் கட்சிகளும், குறைந்த பட்சம் தங்கள் கட்சியால் முன்நிறுத்தப்படும் வேட்பாளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களை கட்டாயமாக பெண்களாக நிறுத்தவேண்டும் என்று கொண்டு வரலாம் என்ற ஆலோசனையும் வந்தது. அப்படியானால் தங்கள் கட்சியின் அங்கீகாரம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தில் அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை செய்ய ஒப்புக்கொள்வார்கள் என்பதாக விளக்கம் கூறப்பட்டது. ஆனால் அதுவும் அரசியல் ரீதியில் சரியல்ல என்றும், சட்ட அளவில் அனுமதி பெற முடியாது எனவும் விளக்கங்கள் வெளியாகி வந்தன. அது இந்திய அரசியல் சட்டத்தில் 19(1)(சி) பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அமைப்பை உருவாக்கும் அடிப்படை உரிமையையே மீறுகிறது என்பதாக விளக்கப்படுகிறது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பொதுநலன் ஆகியவற்றிற்காக மட்டும்தான் அப்படிப்பட்ட திருத்தங்களைக் கொண்டு வரமுடியும் என்றும் கூறப்பட்டது. அப்படிப்பட்ட திருத்தம் அனுமதிக்கப் பட்டாலும் கூட, கட்சிகள் மூன்றில் ஒரு பங்கு நிறுத்துகின்ற பெண் வேட்பாளர்கள், கணிசமாக வெற்றிப் பெற்று நாடாளு மன்றத்திற்குள் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களாக வருவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது. பொதுவாக ஆண் வேட்பாளர்கள் சிறப்பாக பெண்களை விட அரசியலில் செயல்படுவார்கள் என்ற பார்வை ஆணாதிக்க உலகில் நிலவுவதால், இந்த ஏற்பாடு செயல்பட்டாலும் தோல்வியையே சந்திக்கும் என்ற உண்மை இடதுசாரிகள் உட்பட சிலரால் ஒப்புக்கொள்ளப்பட்டது. கட்சிகளும் கூட தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் மட்டும், அத்தகைய பெண் வேட்பாளர்களை நிறுத்தி விடுவார்கள். மேற்கண்ட விளக்கத்தை எல்லாம் கூறுகின்ற நீதியரசர் சச்சார், நாடாளுமன்றம் முன் வைக்கப்பட்டுள்ள இன்றைய மசோ தாவுக்கு தனது ஆதரவு உண்டு என்ற கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில் மேற்படி
மசோதாவை ஆதரிப்பதற்காக மூன்றில் ஒரு பங்கு ஆண் உறுப்பினர்கள் கூட, உடன்படமாட்டார்கள் என்றும், அவர்கள் காந்தியவாதிகள் அல்ல என்றும் சச்சார் கூறுகிறார். உலகில் 50 விழுக்காடு மக்கள் தொகையில் பெண்கள் இருந்தாலும் கூட, மூன்றில் ஒரு பங்கு குறைந்த பட்சம் அதிகார மட்டங்களில், குறிப்பாக முடிவுகள் செய்கின்ற இடங்களில் பங்கு கொள்ள முடிந்தால் அதுவே முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்கள் பெற்றார்கள் என்பதாக பதிவாகும். ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் பெண் களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை கூட, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள் தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில்லாமல் செய்வதற்கான அணுகுமுறையோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு கமிட்டி 2001ன் மக்கள் தொகை புள்ளி விவரப்படி, தொகுதிகளை மறுசீரமைக்க கோரப்பட்ட போது, அரசியல் சட்டத்தின் 81வது பிரிவுப்படி மக்களவைக்கு 530 உறுப்பினர் களுக்கு மேல் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளது. 1971ம் ஆண்டு மக்கள் தொகை புள்ளிவிவரப்படி மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நீட்டிக் கொள்ளமுடியும் என்றும் கூறப்பட்டது. ஒவ்வொரு புள்ளிவிவரம் முடியும் போதும், தொகுதி எண்ணிக்கை மாற்றத்தை செய்து கொள்ளலாம் என சட்டப்பிரிவு 82 கூறுகிறது. 71ம் ஆண்டு புள்ளி விவரப்படி மொத்த மக்கள் தொகை 54 கோடி. 2001 புள்ளி விவரப்படி 102 கோடி. அதனால் அதையொட்டி 750 வரை தொகுதிகளை உயர்த்தலாம். அதுவே தங்கள் இருக்கை போய்விடுமோ என்று அஞ்சும் ஆண் உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த எடுத்துச் சொல்லப்படலாம். கூடுதலாக இணைக்கப்படும் தொகுதிகளில், இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக உருவாக்கலாம். அதில் ஒரு உறுப்பினர் பெண்களுக்கு என ஒதுக்கலாம். இன்னொரு உறுப்பினர் விசயத்திலும், பொதுத் தொகுதியில் ஆணை விட பெண் அதிக வாக்குகள் பெற்று வென்று விடுவாரோ என்ற அச்சம் இருக்கிறது. அதுதான் 1957ம் ஆண்டு பொதுத் தேர்தலில் முன்னாள் குடியரசு தலைவர் வி.வி. கிரியின் விசயத்தில் நடந்தது. ஒன்றில் தாழ்த்தப்பட்டோரின் தனித் தொகுதியாக வும், இன்னொரு உறுப்பினரை பொதுத் தொகுதியாகவும் கொண்டு, கிரி போட்டி யிட்டார். அவரை விட அதிகமான வாக்கு களை மற்றொரு தலித் வேட்பாளர் பொதுத் தொகுதியில் பெற்று விட்டார்.
நகர்ப்புற ஆதிக்க சாதி பெண்கள் இடஒதுக்கீட்டை கபளீகரம் செய்வார்கள் என்ற கருத்தும் வருகிறது. இப்போது மக்களவையில் இருக்கின்ற 200 பிற பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள், தங்கள் பொதுச் சேவையின் மூலம் அல்லாமல், சாதி பின்னணியால் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதே சச்சாரின் வாதம். முஸ்லிம் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது மதச்சார்பற்ற தன்மையை உடைக்கும் என்று கூறுவார்கள். மதத்தின் பெயரால் யாருமே நிராகரிக்கப்படக்கூடாது என்று சட்டப்பிரிவு 325 கூறுகிறது.
மனுஷி அமைப்பு வேறு சில மாற்று திட்டங்களை முன்வைக்கிறது. நாடாளு மன்றத்திற்கான நேரடித் தேர்வில் 44 பெண்கள் வந்தால், மூன்றில் ஒரு பங்காக வரவேண்டிய 181ல் 137 குறையும். அப்போது 595 ஆக மொத்த உறுப்பினர் தொகையை உயர்த்த வேண்டும். நேரடித் தேர்வில் 150 பெண்கள் வரமுடிந்தால், தங்கள் பங்கை எட்ட 31 உறுப்பினர்கள் குறையும். அப்போது 576 ஆக மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நேரடித் தேர்வில் 200 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இலக்கை எட்ட குறைவே இல்லாமல் இருக்கும். அப்போது 545 ஆக எண்ணிக்கையை வைத்திருக்கலாம். இப்படிப்பட்ட ஆலோசனைகளும் பெண்கள் அமைப்புகளில் இருந்து முன்வைக்கப் பட்டுள்ளது.
முதலில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதவை நிறைவேற்றவிடுங்கள்; பிறகு மற்ற பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை இணைத்துக் கொள்ளலாம் என்று சட்ட அமைச்சர் கூறியுள்ள கூற்றையே, நாமும் இங்கே வழிமொழிய வேண்டியிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment