கடந்த சில காலமாக மனிதஉரிமைகள் பற்றிய விவாதம், உலகெங்கிலும் முக்கிய மான ஒரு விவாதமாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு அரசாங்கமும் மனிதஉரிமை பிரச்சனைகளுக்காக தனியான கவனம் செலுத்தி வருவதை, உலகத்திற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் அரசாங்கங்களின் மீது மனிதஉரிமை மீறல்கள் செய்வதாக எழுகின்ற குற்றச்சாட்டுகளும் அதிகமாக வந்துக் கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் சில பிரச்சனைகள் மீது ஒரு நாட்டின் அரசாங்கம், இன்னொரு நாட்டின் அரசாங்கத்தின் மீது மனிதஉரிமை மீறல் செய்ததாக குற்றம் சாட்டுவது என்பதும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதில் அரசாங்கங்கள் ஒன்றுக்கொன்று, தங்கள் நாட்டில் உள்ள கலகக்காரர்களுக்கு ஆயுத உதவி செய்ததாக இன்னொரு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த அர சாங்கமும் இப்படிப்பட்ட குற்றச்சாட் டுகளில் இருந்து தப்பித்து நிற்பதாகத் தெரியவில்லை. அரசாங்கங்கள் தங்கள் தலைமையில் வைத்திருக்கும் ராணுவமும், துணை ராணுவமும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமல் இருப்பதும் இல்லை. அதிலும் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் காவல்துறை செய்கின்ற மனிதஉரிமை மீறல்கள் அதிகமாக பட்டியல் போடப்படுகின்றன. ஏனென்றால் நிராயுதப் பாணியாக இருக்கின்ற பொதுமக்கள் மத்தியில் அன்றாடம் தங்களது சட்ட ஒழுங்கு பாது காப்புப் பணியை ஆற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் காவல்துறை யினர். அப்படிப்பட்ட பொறுப்பில் உள்ள மனிதர்கள் பிழைகள் செய்யும்போது, அத்தகைய தவறுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவது இயல்பு தான். அதிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி குடிமக்களாக இருக்கும்போது, அத்தகைய குற்றங்கள் புரிபவர்கள் காவல்துறையாக இருந்தாலும், பொதுவாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளில் இப்படிப் பட்ட மனிதஉரிமை மீறல்கள் பெரும் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. தனிமனித உரிமைகள் அங்கு மனித உரிமைகளாக உயர்த்திப்பிடிக்கப் படுகிறது. கீழ்த்திசை நாடுகளில் அதாவது வளரும் நாடுகளில் குறிப்பாக ஏழை நாடுகளில் இத்தகைய மனித உரிமை மீறல்கள், பொதுமக்கள் மீது பாயும்போது அதுவும் ஆயுதந்தாங்கிய அரசாங்கத்தின் காவலர்கள் செயல்களால் பாயும் போது, அழுகுரல் மட்டுமே ஏழைகளின் அடைக்கலமாகயிருக்கிறது.
ஊடகங்களிலும், இன்றைக்கு பெரிய அளவுக்கு ஈர்க்கப்படும் செய்திகள் குறிப்பாக கடத்தல், பாலியல் வன்முறை, காணாமல் போதல், சித்ரவதை, நீதிவிசா ரணையற்ற கொலைகள் ஆகியவையாக இருக்கின்றன. அவையெல்லாம் இந்தி யாவில் இருக்கும் காவல்துறை அதி காரிகளாலும், பாதுகாப்புப் படையாலும் செய்யப்படும் போது அவை பரபரப்பு செய்திகளாக மாறுகின்றன. கடந்த ஒரு மாதக் காலத்திற்குள் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் டைம்ஸ், டைம் ஆகிய பிரபல இதழ்களில் இந்தியாவில் நடக்கும் மோதல் சாவுகள் பற்றி தீவிரமான விவாதம் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1,000 பேர் வரை இந்தியாவில் மோதல் சாவுகளில் காவல் துறையால் கொல்லப்படுகிறார்கள் என்பது அந்த அமெரிக்க ஏடுகளில் குறிப்பு. பயங்கரவாதிகள் தொடங்கி சாதாரண சிறு திருடர்கள் வரை இந்தப் பட்டியலில் கொல்லப்படுகிறார்கள் என்று அந்த ஏடுகள் கூறுகின்றன. அத்தகைய மனித உரிமை மீறல்களை இந்திய காவல்துறையும், ராணுவமும் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அதில் குறைந்த பட்சம் சில வழக்குகளாவது போலி மோதல் சாவுகள் அல்லது போலி துப்பாக்கிச் சண்டை என்பதாக அவர்கள் வருணித்துள்ளார்கள். இந்தியாவில் இருக்கின்ற குறைந்தபட்ச தடவியல் புலனாய்வை வைத்து, இரண்டு புறமும் சோதித்து ஒரு தீர்மானகரமான முடிவுக்கு கொண்டுவரப்பட முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தி யாவின் ஊடகங்கள் காவல்துறை கொடுக் கும் அனைத்து அறிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றன என்று அந்த அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. அதுமட்டுமின்றி பயங்கரவாதத்தையும், குற்றங்களையும் கண்டு அச்சப்படக் கூடிய நடுத்தர வர்க்க பார்வையாளர்களில் பலர், இது போன்ற போலி மோதல்
சாவுகளை செய்த காவல்துறையின் நியாயப்படுத்தும் அறிக்கைகளைக் கண்டு அகமகிழ்கிறார்கள் என்பதாகவும் அந்த ஏடுகள் அங்கலாய்த்துள்ளன. அதேநேரத்தில் இந்திய திரைத்துறையும் போலி மோதல் சாவுகளை நடத்துகின்ற, காவல்துறை அதிகாரிகளை சிறப்பு மோதல் சாவு அதிகாரிகள் என்று முடிசூட்டுவதாக எழுதப்பட்டிருப்பது, இங்கும் பொருத்தமாகத் தான் இருக்கிறது. தமிழ் திரைப்படம் ஒன்றில் இதுபோன்ற போலி மோதல் சாவுகளை ஏற்படுத்தும் காவல்துறை அதிகாரியை, ஓகோ என புகழ்ந்து கதாநாயகனாக சித்தரித்தார்கள். அந்தப் பாத்திரத்தில் நடித்ததற்காகவே அந்த கதாநாயகனை அழைத்து ஒரு பெரிய காவல்துறை அதிகாரி, பாராட்டு தெரிவித்தார். இப்படியாக சூழல், மனித உரிமை மீறல்களை செய்வதை உற்சாகப்படுத்துகிறது. காவல்துறை
சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று நம்பக்கூடிய நமது மக்கள் மத்தியில், நீதி விசாரணை இல்லாத மரண தண்டனை வழங்க காவல் அதிகாரிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியை கேட்பதற்கான மனச்சாட்சி எழவில்லை.
தாங்கள் மோதல் சாவுகளில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணையின்றி நடுரோட்டில் சுட்டுக் கொன்றதை நியா யப்படுத்துவதற்காக, அந்த காவல்துறை அதிகாரிகள், தாங்கள் தற்காப்புக்காகத் தான் சுட்டோம் என்று கூறிவருகிறார்கள். ஆனாலும் அத்தகைய மோதல் சாவு கள் ஒரு மாஜிஸ்டிரேட்டால் விசாரிக் கப்பட வேண்டும். மரணம் சம்பவித்த உடனேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட வேண்டும். அந்த போஸ்ட்மார்ட்டம் வீடியோ படமாக எடுக்கப்பட வேண்டும். பின்னால் ஒரு நாள் நீதிமன்ற விசாரணைக்கு உதவும் பொருட்டு இத்தனை ஏற்பாடுகளையும் காவல்துறையே செய்ய வேண்டும். மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டல்களைக் கூட, பலநேரம் பின்பற்றாமல் காவல்துறையே அந்த வழக்கின் மீது விசா ரணையை நடத்தி முடித்து வருகிறார்கள். அதற்கு மேலதிகாரிகளின் ஆசீர்வாதமும் கிடைத்து விடுகிறது.
டெல்லி அருகே நொய்டாவில் 2 பேர் இப்படிக் கொல்லப்பட்டதை அமெரிக்க ஏடான டைம் வெளியிட, சத் திஷ்கர் மாநிலம் சிங்கரம் பகுதியில் 19 ஆதிவாசி கிராமத்தவர்கள் கொல்லப் பட்டதை, அமெரிக்க ஏடான டைம்ஸ் வெளியிட்டது. இவற்றை அங் கொன்றும், இங்கொன்றும் நடக்கும் நிகழ்வுகள் என இந்திய அதிகாரிகள் வருணித்தார்கள். 1980களிலும், 1990 களிலும் அன்றாடம் இந்தியாவில் மோதல் சாவுகள் என்பது நிகழ்ந்ததாக அந்த ஏடுகள் வெளிப்படுத்தின. அதன் எண்ணிக்கையை கூறும்போது, கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி 21,000 மோதல் சாவுகள் அந்த பத்தாண்டுகளில் நடந்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டு காவல்துறையும் இத் தகைய எண்ணிக்கையை உயர்த்துவதில் குறைவானர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருப்பவர்கள். தமிழ்நாட்டில் அதற்கென்றே காவல்துறை அதிகாரிகள் ஒரு பாணியை பின்பற்றுகிறார்கள். அந்த ஒரே பாணி கொல்லப்பட்டவர் கையில் ஒரு வீச்சரிவாளையும், ஒரு வெடிகுண்டையும் கொடுத்து விடுகிறது. காவல்துறை பக்கத்தில் 2 அதிகாரிகளை காயக்கட்டுடன், மருத்துவமனையில் சேர்த்து விடுகிறது. இந்த நடைமுறை நேற்றும் கூட நடந்துள்ளது.
தேசிய மனிதஉரிமை ஆணையம், காவல் துறை நடத்தும் ஒவ்வொரு மோதல் சாவுகளையும் கிரிமினல் புல னாய்வு துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை சுட்டுக் கொன்ற அதிகாரி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டல் கொடுத்துள்ளது. தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் வழிகாட்டல்களை நாம் ஏற்றுக்கொள்ளப்போகிறோமா? அல்லது சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவது என்ற பெயரில் துப்பாக்கி வைத்திருப்பவர் எந்த உயிரையும் பறிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்போகிறோமா? இன் றைக்கு விட்டு விட்டால், நாளை வரலாறு இதை பதிவு செய்து பழி கூறாதா? மனிதஉயிர்களை மதிப்பது மனித உரிமைகளின் அடிப்படை தேவை என்பதை எப்போது உணரப் போகிறோம்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment