Friday, April 2, 2010

இடதுசாரிகள் கலாச்சார காவலர்களாக மாறுகிறார்களா?

சமீபத்தில் கேரளாவில் நடந்து வரும் பல்வேறு பிரச்சனைகள், நாட்டையே ஈர்க்கும் தன்மையுள்ளதாக இருக்கிறது. அவற்றில் பெரிய இடதுசாரி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளேயே இருக்கும் இருபெரும் அரசியல் சக்திகளுக்குள் நடக்கும் மோதல், அதில் ஒரு குழுவினரால் நடத்தப்படும் ஒரு காட்சி ஊடகம், இன்னொரு குழுவிற்கு ஆதரவாக செய்தி வெளியிடும் மற்றொரு காட்சி ஊடகம், பண்பாட்டுத் தளத்தில் பிரபல கவிஞர்களுடன் மோதல், பிரபல எழுத்தாளரை குற்றம்சாட்டும் தலைவர், மதுபோதையை அதிகமாக பயன்படுத்துவதாக ஊடகங்கள் கொடுத்த விமர்சனம் ஆகியவற்றின் மூலம் கேரளா சமீப வாரத்தில் அதிகமாக சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக சமீபத்தில் கேரளாவிற்கு வந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், ஊடகவியலாளர் கூட்டத்தில் பேசுவதற்கு மறுத்து விட்டதாக ஒரு மலையாள இதழ் எழுதியிருக்கிறது. அருந்ததிராய் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண். பல பிரபல பெண்களைப் போலவே, அவரும் கேரளாவை விட்டு வெளியே வந்த பிற்பாடு தான் பிரபலமடைந்திருக்கிறார். அங்கேயுள்ள ஊடகவியலாளர்களை, தன் முகத்தைப் பார்த்து பேசுவதற்குப் பதில், மார்பை பார்க்கிறார்கள் என்பதாக விமர்சித்ததாக ஒரு ஏடு எழுதியுள்ளது. அவர் அப்படி பகிரங்கமாக விமர்சித்தது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இத்தகைய விஷயத்தில் கேரளா ஒரு ஆரோக்கியமற்ற சூழலை தக்க வைத்திருக்கிறது என்பதாகவும் கூறப்படுகிறது. பாலியல் முதிர்ச்சியை அந்த மாநிலத்தின் மக்கள் எப்போது பெறப்போகிறார்கள். இவ்வாறான கேள்விகளை கேரளாவின் பிரபல மலையான எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சகாரியா கூறியுள்ளதாக, மலையாள வார இதழான கலாகோமதியில் எழுதியிருக்கிறார்கள்.
இதுவரை கேரள முதல்வரான வி.எஸ்.அச்சுதானந்தத்தின் குழுவினருக்கும், கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராய் விஜயன் குழுவினருக்கும் இடையே உள்ள மோதல் தான் அரசியல் ரீதியாக பிரபலமாக வெடித்துக் கொண்டிருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த சில மோதல்கள் அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய தளங்களிலும் எதிரொலிக்கிறது.
சமீபத்தில் ராஜ்மோகன் உன்னிதான் என்ற ஒரு காங்கிரஸ் தலைவர் வீட்டை உடைத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளே புகுந்து, அந்த தலைவர் ஒரு பெண்ணுடன் இருந்ததை கையும், களவுமாக பிடித்துள்ளனர். இதை எழுத்தாளர் சகாரியா கலாச்சாரக் காவலர்களின் வேலை என்பதாக விமர்சித்தார். அதற்காகவே சகாரியா கலந்துக் கொண்ட ஒரு இலக்கிய விழாவில், பையனூரில் அவர் வாலிபர் சங்கத்தினரால் தாக்கப்பட்டார். இதுபற்றி சகாரியா கொடுத்த நேர்காணலில், அத்தகைய செயல்பாட்டை கேரளாவில் தான் காண்பதாக விமர்சித்திருக்கிறார். டெல்லியில் தான் வாழ்ந்ததாகவும், சென்னையில் வாழ்ந்ததாகவும் எங்குமே இப்படியொரு பாலியல் பசியைத் தான் பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மற்றவர்களுடைய விவகாரங்களுக்குள் தலையை நீட்டி, பிரச்சனையை உருவாக்குவதை தான் கேரளாவில் தான் கண்டுள்ளதாக அந்த பிரபல எழுத்தாளர் கூறுகிறார். ஊடகங்களிலும், அறிவு ஜீவிகள் மத்தியிலும், காவல்துறையிலும், அரசியல் கட்சிகளிலும் கூட இப்படிப்பட்ட பாலியல் வக்கிரங்கள் இருப்பதாக சகாரியா குற்றம்சாட்டி, அதற்கான காரணங்களை மதவழி பின்னணிகளாக எடுத்துக் கூறியுள்ளார். அதற்கு இரண்டு உலகப் போர்களை நடத்திய ஐரோப்பா, நவீன தன்மைக்கு வந்துவிட்டதாகவும், ஆனால் பின்தங்கிய நிலையிலுள்ள மத அமைப்புகள் கேரளாவில் தெளிவு பெறவில்லை என்றும் அவர் கூறுகிறார். ஸ்ரீநாரயண குரு இதுபோன்ற உறவுகளில் ஒரு தாராளப் பார்வைக் கொண்டிருந்தார் என்றும், அதற்குப் பிறகு வந்த இடதுசாரிகளும் பாலியல் பற்றிய வரட்டுத்தனத்தை கொண்டிருக்கவில்லை என்றும், அவையெல்லமே தனிநபர் சுதந்திரம், கருத்தியல் சுதந்திரம் மற்றும் சமூக மாற்றம் பற்றிய தன்மைத்தவை என்றும் அவர் கூறினார்.
அத்தகைய கடந்த காலம் இப்போது மாறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தொலைநோக்குப் பார்வையில்லாத புதிய தலைவர்களால் பிரச்சனைகள் வருவதாக எடுத்துச் சொன்னார். அதற்கு இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு காரணம் என்றும் குற்றம் சாட்டினார். ஆண், பெண் உறவுகளை பொறாமையுடனும், வக்கிரத்துடனும் காண்பதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று கடுமையாக விமர்ச்சித்திருந்தார். பையனூரில் நடந்த இலக்கியக் கூட்டத்தில் தான் பேசியதற்காக, வாலிபர் சங்கத்தினர் தன்னிடம் உரசியதையும், அதையே பின்னர் பினராய் விஜயன் தனக்கெதிராக விமர்சித்ததையும் சகாரியா கடுமையாக சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசியலும், மதமும் அங்கே கழிசடையாகப் போய்விட்டது என்றும், சாதியம் வளர்கிறது என்றும், நாராயணகுருவாலும், கம்யூனிஸ்ட்களாலும் தூக்கியெறியப்பட்ட பழக்கங்கள் மீண்டும் தலையெடுத்துள்ளன என்பதாகவும் அந்த எழுத்தாளர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக அருந்ததிராய் பேசுவதாக குறிப்பிடும் பினராய் விஜயன், அவரை ஏகாதிபத்திய கைக்கூலி என்று கூறும் அளவுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த நேரத்தில் கடந்த நிதியாண்டில் கேரளா அதிகமான அளவுக்கு மதுவை பயன்படுத்தியுள்ளது என்பதாக அங்கிருந்து வெளிவரும் பிரபல ஏடு ஒன்று கூறியுள்ளது. அதாவது ரூ.5,500 கோடிக்கு மது விற்பனையை அவர்கள் கணக்கிடுகிறார்கள். சென்ற நிதி ஆண்டான 200809 ஆண்டின் ரூ.4,631 கோடிக்கு மதுவிற்பனை இருந்தது என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அவர்களது புள்ளிவிவரம். இதைவைத்து கேரள மாநிலத்தை அவர்கள் மதிப்பீடு செய்தார்கள் என்றால், ரூ.14,000 கோடி ரூபாய்க்கு மது விற்பனை மூலம் ஈட்டியுள்ளதாக காட்டும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை வைத்து, நாம் எந்தவிதத்தில் மதிப்பீடு செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் பி.பி.சி. தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ள புள்ளி விவரங்கள் மறுக்கப்பட முடியாதவை. இந்தியாவில் இருக்கின்ற குடிகாரர்களிலேயே, அதிகமாக குடிப்பது கேரளாவில் தான் என்பதாக ஒரு புள்ளிவிவரத்தை அது கொடுத்துள்ளது. தந்தை குடிக்கும்போது, இணைந்து குடித்து வளர்ந்த மகனைப் பற்றிய கதையை அது கூறுகிறது. பெரும் குடிகாரனாக மாறியவர், கல்வியிழந்து, வேலையிழந்து, மறுவாழ்வு இல்லங்களுக்கு 32வயதிலேயே எடுத்துச் செல்லப்பட்டதையும், போதைத் தேவைகளுக்காக தெருவில் பிச்சைக்காரன் போல் நடமாடியதையும் அந்த ஊடகம் ஒரு கதையாக எடுத்துக் கூறியுள்ளது. மது அருந்துவது கேரளாவில் இருக்கும் ஒரு நோய் என்பதாக அது சுட்டிக்காட்டுகிறது. பலர் மனநிலை காப்பகங்களில் போய்ச் சேர்ந்துள்ளதையும் எடுத்துச் சொல்லுகிறது. கேரளாவில் ரம், பிரான்டி ஆகியவற்றிற்கு தான் அதிக கிராக்கி இருக்கிறது என்பதாகவும் குறிப்பிடுகிறது. மாநில மதுவாரியம் 7 நாட்களும் செயல்படும் 337 மதுக்கடைகளை வைத்திருப்பதாக அந்த அறிக்கைக் கூறுகிறது. ஒவ்வொரு கடையிலும், 80,000 பேர் வாடிக்கையாளர்கள் என்பதாகவும் கணக்கிடுகிறது. 3கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தில் ரூ.4,500 கோடிக்கு இந்த நிதியாண்டில் மது விற்பனை எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த புள்ளிவிவரம் அடுக்குகிறது.
மது அருந்துபவர்களுக்கு அல்லது பழக்கமானவர்களுக்கு போதுமான உணவு கிடைக்குமானால், அது அவர்கள் உடலைப் பாதிக்காது என்று விளக்கம் கூறி, அப்படிப்பட்ட சூழல் பெருவாரியான மக்களுக்கு அங்கு கிடைக்கவில்லை என்பதனால், அவர்கள் மூழ்கி வருவதாகவும் அந்த செய்தி கூறியுள்ளது. போதையினால் மட்டுமே சென்ற ஆண்டு சாலை மரணத்தில் 4,000 பேர் இறந்ததாகவும் எடுத்துக் காட்டுகிறது. மது போதையிலிருந்து தெளிவுக்குக் கொண்டுவர ஒரு சிறப்பு மருத்துவமனை உருவாக்கும் திட்டம் இருப்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. குடிப்பது கூட ஒரு சமூகப் பிரச்சனைத் தான் என்பதாக அந்த செய்தி எடுத்துச் சொல்கிறது. மதுவிலக்கு அறிவித்தால் அதுவே குடிவிற்பவர்களையும், குடிப்பவர்களையும் ரகசியமாக செயல்படும்படி ஆக்கிவிடும் என்றும் வாதம் செய்கிறார்கள்.
மது எனும் செயற்கைப் போதை ஏறுவதற்கு முன்பே, ஆணாதிக்கம் மற்றும் கலாச்சாரக் காவலர்கள் எனும் இயற்கை போதை ஏறியிருப்பதற்கான சூழல் அங்கே கோரமுகத்தைக் காட்டினால், எங்கேதான் அதன் அடிப்படை முகத்தை காட்டாமல் இருக்கிறது என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.

2 comments:

silviya said...

அற்புதமான பதிவு.
கேரளாவைப் பாருங்கள். அங்கேதான் மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். அங்கேததான் மிகச்சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். கேரளாவில் இருந்துதான் அற்புதமான இயக்குனர்கள் வந்திருக்கிறார்கள். அந்தப்படங்களில் உள்ள எதார்த்தத்தைப் பாருங்கள். அங்கே கதாநாயகர்கள் மீது மோகம் இல்லை. மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்கள் வாங்கும் சம்பளம் மிகவும் குறைவு. மலையாளப்படங்கள் என்றாலே பிட்டுப்படங்கள் என ஒரு மோசமான சிந்தனை தமிழகத்தில் விதைக்கப்பட்டு விட்டது. உண்மையில் அவர்கள் நல்ல கலையுள்ளம் படைத்தவர்கள் என்றெல்லாம் கேரளாவைப் பற்றிச் சொல்லப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க, தொடர்ச்சியாக தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே கேரளா செயல்படுகிறது என்பதும், மலையாளிகள் தமிழர்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை என்பதும் மலையாளிகளைப் பற்றிய நீண்டகாலமாக தமிழகத்தில் இருக்கும் மதிப்பீடுகள்.
முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனையில் கேரளா தமிழக நலன்களுக்கு விரோதமாக செயல்படுகிறது என்பது கேரளா மீதான தமிழர்களின் சமீபகால கோபம்.
இப்போது உங்களது பதிவு கேரளாவைப் பற்றி அதன் சீர்கேடுகள் பற்றி, அங்குள்ள முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் லட்சணம் குறித்து தோலுரித்துக் காட்டியுள்ளது.
கடைசியாக செயற்கைப் போதைக்கு பதிலாக ஆணாதிக்கம் கலாச்சாரக் காவலர்கள் போன்ற இயற்கை போதை என்று எழுதியிருக்கிறீர்கள்.
ஆணாதிக்க சிந்தனையும், கலாச்சாரக் காவலர்களாகும் மனோபாவமும் கூட ஒரு அர்த்தத்தில் செயற்கை போதைதான் என்பது எனது கருத்து.
க.சிவஞானம்

Maniblog said...

உணமைதான். ஆணாதிக்கமும், பாலியல் வக்கிரமமும், கலாச்சாரகாவலர்களும் செயற்க்கைபோதைதான். மதுபோதையைச்சொல்லவருவதற
காக, ஊறிப்போன வரலாற்று போதையை இயற்கை எனத்தவறாக எழுதிவிட்டேன்

Post a Comment