இரண்டு நாட்களாக மத்திய அமைச்சர் ஆ.ராஜாவையும், அவருடன் தொலை பேசியில் பேசியதாக நீராராடியாவையும், அவருடன் பேசியதாக கனிமொழியையும், ஊடகங்கள் வெளியிட்டன. பல மணிநேரம் செய்த உரையாடல்கள் என்பதாக அந்த அம்பலப்படுத்தல் இடம்பெற்றது. நடந்த அந்த நிகழ்ச்சி ஓராண்டுக்கு முன்னால் நடந்த சம்பவம். அப்போது மத்திய அமைச்சரவை தயார் செய்து கொண்டிருந்த நேரம். அதன் பொறுட்டு தமிழக முதல்வர் டெல்லி சென்றது ரகசிய செய்தி அல்ல. அப்போது காங்கிரஸ் கட்சி தலைமையுடன் தமிழக தி.மு.க. தலைவர் பல முறை பேரம் பேசியதும் அனைவரும் அறிந்த செய்திதான். அதே போல அதிக இடங்களைப்பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தலைமையுடன் அமைச்சரவை இடங்களுக்காக பேரம் பேசி வந்ததும் நாடறிந்த செய்தியே. மம்தாவிற்கு கொடுக்கும் அளவுகோல்தான், கருணாநிதிக்கும் கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் சார்பாக கூறுவதாகவும் செய்திகள் வெளியாகின. அதை ஒட்டி, மத்திய அமைச்சரவையில் தி.மு.க.விற்கு எத்தனை இடம் கிடைக்கும் என்று யூகங்கள் விவாதிக்கப்பட்டன. நாலு மத்திய அமைச்சரா அல்லது மூன்று மத்திய அமைச்சரா என்ற வாதமும் எல்லோராலும் பேசப்பட்டது. அது தவிர எத்தனை துணை அமைச்சர்கள் என்பதும் விவாதிக்கப்பட்டது. அதில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள அழகிரிக்கு, மத்திய அமைச்சர் பொறுப்பா அல்லது துணை அமைச்சர் பொறுப்பா என்று கூட விவாதிக்கப்பட்டது. பிறகு அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்புதான் என்றும் கூறப்பட்டது. அந்த நேரத்தில் நடந்த தொலைபேசி உரையாடல்தான் இப்போது வெளியிடப் படுகிறது. ஏற்கனவே முந்திய ஆட்சியிலும், அதற்கு முந்திய பா.ஜ.க. ஆட்சியிலும் அமைச்சராக இருந்த ஆ.ராஜாவிற்கு, தான் இந்தமுறை பொறுப்புக்கு வருவேனா என்று கேட்பதில் ஆர்வமாக இருப்பது இயல்புதானே. அதைப்பற்றி தொலைபேசியில் பேசினார் என்பதில் என்ன புதிய பிரச்சனையை இருக்கிறது? அதே சமயம் கனிமொழியிடம் பேசிய ஒருவரிடம் அவரும் தனக்கு கேள்விப்பட்ட செய்திகளைச் சொல்வதும் சாதாரணமான விசயம்தானே? அதில் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று மத்திய அமைச்சர்களை நியமிப்பதில் கருணாநிதி தயங்குகிறார் என்பதும் தவறான செய்தி இல்லையே? ஆனால் இதில் வேறு ஒரு முக்கியப் பிரச்சினை வெளியாகி உள்ளது. அது என்ன என்றால் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி மத்திய அமைச்சரவையில் வரப்போகிற நியமனங்கள் பற்றி தெரிந்து வைத்திருப்பதும், அதை அமைச்சர்கள் கேட்டு தெரிந்து கொள்வதும், இந்தியாவின் மத்திய அமைச்சரவையை தீர்மானிப்பது யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதாவது இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் இந்தியாவின் மத்திய அமைச்சரவையை தீர்மானிக்கிறாரா அல்லது கார்ப்பரேட் என்ற வணிகக் குழுமங்கள் தீர்மானிக்கின்றனவா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.
ஓராண்டு கழித்து ஒரு தொலைபேசி உரையாடலை, காட்சி ஊடகங்களுக்கு கொடுத்து அதை வெளியிட வைத்த சக்திகள் யார் என்பதோ, அதற்கான காரணம் என்ன என்பதோ வேறு சேதி. அதாவது மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் உள்ள குறிப்பிட்ட காங்கிரஸ் மத்தியமைச்சரது பங்கு அதில் உள்ளது என்பது ஒரு செய்தி. அதை இப்படி வெளியிட வைத்ததற்கு இன்னொருவர் பங்கு என்று சொல்வதும் இன்னொரு செய்தி. ஆனால் அது யாரை அம்பலப்படுத்த என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டதோ அவர்களை அம்பலப்படுத்துவதற்கு பதில், அம்பை எய்தவர்கள் மீதே பாய்கிறது என்பதுதான் இப்போது உள்ள செய்தி. அதாவது மத்திய காங்கிரஸ் ஆட்சியைத் தீர்மானிப்பது பெரும் வணிகக் குழுமங்கள்தான் என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது. அதாவது விவாதத்தில் வரும் நீராராடியா டாடா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி என்கிறார்கள். அப்படியானால் வணிகக் குழுமங்களுக்கு அமைச்சரவை அமைப்பதில் முக்கியப்பங்கு இருப்பது அம்பலமாகிறது. இது என்ன இந்திய வணிகக் குழுமங்கள் மட்டுமே சம்பந்தப்படும் விசயமா? வெளி நாட்டு முதலாளிகளுக்கு தொடர்பு கிடயாதா? இப்படி ஒரு கேள்வி எழுகிறது. அது தெரிந்த செய்திதானே என்று சிலர் சொல்லலாம். அதாவது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அந்நிய நேரடி மூலதனத்தின் சொந்தக்காரர்கள் தங்கள் மூலதனம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக, இந்திய அமைச்சரவையை நியமிக்கும் போது தங்கள் நலனைப் பாதுகாக்கும் நபர்கள் அமைச்சரவையில் வரவேண்டும் என்று விரும்புவார்கள் என்பதும் புரிய முடிகிறது.
அப்படி இந்தியாவுக்குள் அமெரிக்க பன்னாட்டு மூலதனக் குழுமங்கள் அதிகமாக தங்கள் மூலதனத்தை இங்கே போடும் போது இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தையே தீர்மானிக்கிறார்கள் என்பதும் புரியப்பட வேண்டும்.
அப்படி நடந்ததால் தான், அமெரிக்கா தனது எதிர்ப்பைக் காட்டிவந்த போதும், இந்தியா ஈரானுடன் எரிவாயுக் குழாய்கள் அமைத்து எரிவாயு வாங்க முயற்சி எடுத்தபோது, அந்த திட்டத்தை செயல்படுத்த முயன்ற மத்திய அமைச்சர் நட்வர்சிங்கை வெளியேற்றச் சொன்னது அமெரிக்காதான் என்பது ஏற்கனவே வெளிவந்த கதை. அதுமட்டுமின்றி நட்வர்சிங் மீது ஐ.நா.சபை செய்த ஆய்வில் ஊழல் நடந்த ஆதாரம் இருப்பதாக அமெரிக்காவே ஏற்பாடு செய்து செய்தி வெளியிட்டு, அதை வைத்தே அவரை வெளியேற்றிய அருஞ் செயலையும் இந்திய அமைச்சரவைக்குள் அமெரிக்காவால் செய்ய முடிந்தது என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே. அதேபோல அடுத்து பெட்ரோலியம் அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதே ஈரான் நாட்டு எரிவாயுவைப் பெறுவதற்கானத் திட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தபோது, அவரது அமைச்சர் பொறுப்பும் அமெரிக்காவால் தூக்கி எறியப்பட்டது அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.
ஆகவே இதன் மூலம் அறியப்படும் நீதி என்னவென்றால், இந்திய மத்திய அமைச்சரவையைத் தீர்மானிப்பது இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அல்ல. அதைத் தீர்மானிப்பது அந்நிய மற்றும் உள்நாட்டு பெருமுதலாளிகளும், வணிகக் குழுமங்களும், பன்னாட்டு மூலதன நிறுவனங்களும் என்பது இப்போது தெள்ளந்தெளிவாக நிரூபணமாகி உள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியின் பண்பு என்பதாகத்தானே பதிவாகும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment