சூன்12ம் நாள் நள்ளிரவுக்கு மேல் பூமி அதிர்ந்தது. சென்னையிலும் பல இடங்களில் நில நடுக்கம். கட்டடங்கள் ஆடின. இரவுக் காவலர்கள் குடியிருப்புகளுக்கு வெளியே ஓடி வந்தனர். கடற்கரை ஓர மீனவர் குடியிருப்புகளில் கலக்கம். தென் சென்னையில் மயிலாப்பூரில் உள்ள, பெரிய மீனவக்குப்பமான நொச்சிக்குப்பத்திலும், குடியிருப்புகள் ஆடின. மக்கள் எல்லாம் வெளியே வந்து நின்று கொண்டிருந்தனர். இத்தனை கலக்கத்தை இந்த நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்படுத்தி விட்டது. ஏன் என்றால், 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் இதே போன்ற நில நடுக்கம் அதிகாலை 615 மணிக்கு சென்னையில் உணரப் பட்டது. அப்போது இந்தோனேஷியா, இலங்கை, அந்தமான் நிகோபர் என வந்து, இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என முதலில் நிலநடுக்கமும், பிறகு சுனாமியும் நமது கடற்கரையைத் தாக்கியது. மறக்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியது.
இப்போது நள்ளிரவு தாண்டியதும், ஞாயிற்றுக்கிழமை விடியும் முன்பே, இந்த நிலநடுக்கம் வந்துள்ளது. அப்போதும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைதான் நிலநடுக்கமும், அடுத்து சுனாமியும் தாக்கின. இப்போதும் அந்தமான் நிகோபரில் 7.7 ரிக்டர் என்று நிலநடுக்கத்தை அளவிடுகிறார்கள். இந்த நள்ளிரவுக்கு மேல் வந்த நிலநடுக்கம், சுனாமி பேரழிவாக மாறவில்லை. நல்வாய்ப்பாக, மனிதகுலம் தப்பியது. இதே போலத்தான் இந்த நிலநடுக்கத்திற்கு 24மணி நேரம் முன்பு, விழுப்புரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில், ஒரு வெடி வெடித்து தண்டவாளம் ஒன்று துண்டாடப்பட்ட செய்தி வெளிவந்தது. உடனடியாக அரசு தரப்பிலும், ஊடகத்தரப்பிலும், மாவோயிஸ்ட்டுகளா அல்லது தமிழ் தீவிரவாதிகளா என்ற கேள்வியை எழுப்பினார்கள். இந்தப் பரப்புரை நமது செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதனால் 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், இந்த நில நடுக்கத்திற்கும், மாவோயிஸ்டுகளோ, தமிழ் தீவிரவாதிகளோ சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் நமக்கு எழுதுவதில் நியாயம் இருக்கிறது. நிலநடுக்கம் எப்படி சுனாமி பேரழிவாக இப்போது மாறவில்லையோ, அதே போல அதற்கு 24 மணிநேரம் முன்பு நடந்த ரயில் தண்டவாள வெடி விபத்து, எந்த மனித உயிர்ப்பலியையும், பேரழிவையும் ஏற்படுத்தவில்லை. இதனால்தான், இரண்டிற்கும் தொடர்பு இருக்குமோ என்ற ஐயம் வலுப்பெறுகிறது.
சுனாமிப் பேரழிவும், அதற்கு முன்வரும் நிலநடுக்கமும், தமிழ்நாட்டையும், இலங்கையையும் ஒரே நேரத்தில் தாக்கியது. அதைப் போலவே, இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் முடிந்து அவர் கொழும்பு சென்ற பிறகு, இந்த தண்டவாள வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. அதுவும் ராஜபக்சே வருகையைக் கண்டித்து, அவர் நிம்மதியாகத் திரும்பிச் சென்ற பிறகு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபரின் வருகைக்கு முன்பு, அவரைக் கண்டித்து வெடித்திருந்தால், நமக்கும் தமிழ் உணர்வாளர்கள் மீது ஐயம் ஏற்படும். மூன்று நாள் ராஜபக்சேயின் இந்தியப் பயணத்தின் போது, இந்த வெடி வெடித்திருந்தால் அவர் இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாமல் கூட, போயிருக்கும். அதாவது எதிர்ப்பு வெடி உருவத்தில் வருவதைக் காரணங்காட்டி, ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல், மனைவியுடன் உல்லாசமாக சிம்லா செல்வதையும் தவிர்த்து, ராஜபக்சே கொழும்பு சென்றிருப்பார். அந்த அளவுக்கு கொழும்பு நகரில் உள்ள சிங்கள அறிவுஜீவிகள் இந்தியாவுடனான ஒப்பந்தங்களுக்கு எதிராக இருந்தனர். ஆகவே தனக்கு எதிராக வெடிவிபத்து நடந்திருந்தால், அதைக் காரணங்காட்டி, ராஜபக்சே கையெழுத்திடாமலேயே, பறந்திருப்பார். இதையும் சம்பந்தப்பட்ட டெல்லி சக்திகள் விரும்ப வில்லை எனத் தெரிகிறது.
அதனால்தான், விழுப்புரம் ரயில்தண்டவாளம், ராஜபக்சே பயணம் நிறைவுற்ற பிறகு, வெடித்துள்ளது என்கிறார்கள். வளையாத இலங்கை அதிபரை, இந்தியாவுடன் கையெழுத்திட தயங்கிய ராஜபக்சேவை இணங்க வைத்து டெல்லிக்கு அழைத்து வந்தவர் இலங்கை அமைச்சர் டக்ளஸ். அத்தகைய காய் நகர்த்தலில் உதவி செய்த, பிரபல தமிழ் பத்திரிக்கையாளர் தனது டக்ளஸ் நட்பை பயன்படுத்தினார் என்கிறார்கள். அதுவும் அந்த நபர், தமிழ்நாட்டு ஆட்சிக்கு எதிராக, அரசியல் காய் நகர்த்துகிறார் என்று அரசியல் வட்டாரத்தில், நடப்பு நிகழ்வுகளைத் தொகுக்கிறார்கள். இந்த நேரத்தில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் பற்றி, பழைய கசப்பான நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டதில், டெல்லியில் அந்த சில சக்திகள் ஆட்டம் கண்டன. அதற்கு பின்னணி என ஒரு மாநில அரசியலைப் பார்த்து, சம்பந்தப்பட்டவர்கள் முறைக்கிறார்கள்.
அதுவே ராஜபக்சே வருகையின் பலனை கையில் எடுத்த பிறகு, அவரது வருகைக்கு எதிராக வெடிக்கிறது என்ற ஐயத்தை வலுப்படுத்தியுள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது என்ற குரலை எழுப்பவும் அது பயன்பட்டு விட்டது. இடையில் சில கேள்விகளும் எழுகிறது. 25,000 பேரைக் கொலை செய்த, நச்சுக் கழிவுக்குக் காரணமான அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவன அதிபர் வாரன் ஆண்டர்சன்னை காப்பாற்றி தப்ப விட்ட குற்றத்தை செய்தவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான் என்ற மாபெரும் சர்ச்சையிலிருந்து நாட்டு மக்களை திசை திருப்ப வேண்டிய அவசியமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கிறது.
இப்படி வன்முறைகளைத் தூண்டி, ஒரு மாநிலத்தில் சட்டஒழுங்கு கெட்டுவிட்டது என மத்தியில் உள்வர்கள் செய்யத் துணிவார்களா? என்ற கேள்வி எழுகிறது. 1984ம் ஆண்டு தமிழ்நாடே ஈழத்தமிழர் மீது நடக்கும் கொடூரங்களுக்கு எதிராக, கொந்தளித்த போது, மாணவர்கள் அந்தக் களத்தில் முதலில் நின்றார்கள்.
மதுரையில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நடவடிக்கைக்குழு கிளர்ச்சியின் மையமாக இருந்தது. அப்போதைய மாணவர் தலைவர்களை அணுகிய சம்மந்தப்பட்ட மத்திய அதிகாரம், ரெயில்களுக்கு நெருப்பிடும்படி ஆலோசனை கொடுத்தார்களே? அதை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் விசுவாச உளவுப் படையான மோகன்தாஸ் தலைமையிலான அணியிடம், மாணவர் தலைவர்கள் போட்டுக் கொடுத்தார்களே? இப்படியும் சர்ச்சைகள் கிளம்புகின்றன. அதே போல 4வது வன்னிப் போர் நேரத்தில், சென்னை ரயில் நிலையத்தில் மர்ம மனிதர் ஒரு ரயில் என்ஜினை ஓட்டிச் சென்று பெறும் விபத்தை ஏற்படுத்த முயன்றாரே? இதுவரை புலனாய்வு உண்மைக் குற்வாளியின் பின்னணியைக் கூறவில்லையே? அதுகூட சம்பந்தப்பட்ட சக்திகளால், தமிழினப் போராளிகள் மீது பழி சுமத்தவும், மாநில அரசின் தமிழ் பாசத்தை சட்டஒழுங்கு பெயரில் கட்டுப்படுத்தவும் தானே? எனக் கேட்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் பிஷ்பிளேட்டை கழற்றி, ரயில்களை மோதவிட்டு, மக்களைக் கொன்றார்கள். அதை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா, அரசியல் சதி எனக் கூறினார். அதாவது மாநிலம், மத்திக்கு எதிராக செய்த சதி எனப் பொருள்பட்டார். இங்கே அது அப்படியே மாறி செயல்படுகிறதா? தெரியவில்லை.
எப்படியோ, பலியாவது என்னவோ, தமிழ் உணர்வாளர்கள்தான். இந்த வழக்கில் கருத்துரிமைக்குப் போராடும், இளம் தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பின் அமைப்பாளரை குற்றம் சாட்டுவது, நடைமுறைப் பொறுத்தமாக இல்லை.
நமக்கு முக்கியமே நில நடுக்கத்தை ஏற்படுத்திய தீவிரவாதி யார்? என்பதுதான். கரியமிலவாயுவை உலகெங்கிலும் உற்பத்தி செய்து, பல லட்சம் கோடி டாலர்களைச் சேர்த்துவிட்ட, அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்கள், பிராணவாயு மண்டலத்தில் ஓட்டை விழ வைத்தார்கள். அதுவே கடலுக்கடியில், நிலநடுக்கங்களை உருவாக்குகிறது. அப்படியானால் உண்மையான தீவிரவாதிகள் யார்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment