Tuesday, August 17, 2010
அணுவிபத்து இழப்பீடு அகிலம் தழுவியது
இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் அணுசக்தி விபத்து இழப்பீடு மசோதா இன்று நாடாளுமன்ற நிலைக்குழுவால் முன்வைக்கப்பட இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்குள் காலெடுத்து வைப்பதற்கு முன்பே அதாவது அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்கு முன்பே, இந்த மசோதாவை அதாவது சட்ட முன்வரைவை சட்டமாக்கி விட வேண்டும் என்று மத்திய அரசு துடிக்கிறது. இதற்கான நிலைக்குழுவின் தலைவர் சுப்பிராமி ரெட்டி, இழப்பீடு தொகை அதிகப்படுத்தப்படும் என்றும், மசோதாவில் குறிப்பிட்டுள்ள படி அணுசக்தி எரிபொருள் விநியோகத்தர்கள் பங்கும் இழப்பீட்டில் இருக்கும் என்றும், அதனால் எதிர்கட்சிகள் சட்ட முன்வரைவை ஏற்றுக் கொள்வார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அணுஉலைகளின் மூலம் மின்உற்பத்தி செய்வதை அதிகப்படுத்துவது என்ற இந்திய அரசின் திட்டத்தையொட்டியே, இத்தகைய சட்டத்தின் அவசியம் எழுந்துள்ளது. 2020ம் ஆண்டிற்குள் இப்போதிருக்கும் 4,100 மெகாவாட் அணுசக்தி மூலம் மின்சாரம் என்பதை 20,000 மெகாவாட்டிற்கு உயர்த்துவது என்பது மத்திய அரசின் திட்டம். அதேபோல 2035ம் ஆண்டிற்குள் 40,000 மெகாவாட் மின்உற்பத்தியை செய்வது என்பது மத்திய அரசின் குறிக்கோள். மேற்கண்ட திட்டமிடல் இந்திய மக்களின் எதிர்கால அத்தியாவசிய தேவைக்கான மின்உற்பத்திக்காகவா? அல்லது இந்தியாவிற்குள் வந்திறங்கும் கார்ப்பரேட்டுகள் என்ற பெருவணிக குழுமங்களின் வணிகத் தேவைக்காகவா? இது தான் இன்று எழுப்பப்பட வேண்டிய சர்ச்சை. ஏனென்றால் மின் உற்பத்தியை செய்வதற்கு ஏற்கனவே இருக்கின்ற நீர் வழி மின்சக்தி, அனல்மின் நிலையங்கள், மரபுசாரா மின்உற்பத்தி முறைகளான காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், நாப்தா வழி மின்சாரம் ஆகிய அனைத்தாலும் நிரப்ப முடியாத மின்தேவையை, அணுசக்தி மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இந்திய அரசுக்கு ஏன் எழுந்தது? இதுவும் கூட பதில் கொடுக்கப்படாத கேள்வியாக இருக்கிறது. நம் நாட்டில் அரசாங்கம் முன்வைக்கின்ற பொருளாதார திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரிக்கின்ற ஒரு போக்கு ஊடகங்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் மத்தியில் இருக்கிறது. நாட்டு மக்களில் பெரும்பான்மையினரின் அத்தியாவசியத் தேவைகளை, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காக தேவைப்படுகின்ற மின் உற்பத்தி மிகவும் குறைவானதே. அதேசமயம் பாரம்பரியமிக்க பழங்குடி மக்களின் கனிம வளங்களை களவு செய்யும் கார்ப்பரேட்டுகளின் பசி வெறியை நிரப்புவதற்காக மின்உற்பத்தி என்ற குறிக்கோளை மத்திய அரசு, தனது பொருளாதார திட்டமாக முன்வைக்கும் போது, அது மக்களுக்கானது அல்ல என்ற உண்மையை உரத்துச் சொல்வதற்கு நாட்டுப்பற்று தேவைப்படுகிறது. விவாதிக்கப்படுகின்ற சர்ச்சை, அணுவிபத்து ஏற்படுமானால் அதன் பாதிப்பு எல்லையில் அடங்காது என்பதால், அது இழப்பீடு தொகை மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற கருத்து உலகெங்கும் உலவுகிறது. 1956ம் ஆண்டு விபத்துகளின் வாய்ப்புகளை கணக்கிலெடுத்து, தேசிய அணுசக்தி காப்பீடு நிதி ஒன்று இங்கிலாந்து நாட்டில் ஏற்படுத்தபட்டது. எப்போது வணிகரீதியான அணுசக்தி உலைகள் உருவாக்கப்பட்டதோ, அப்போதே அதனால் ஏற்படும் விபத்துகளுக்கான வாய்ப்புகள் பற்றியும், அதனால் பாதிக்கப்படும் மூன்றாவது சக்திகளுக்கு இழப்பீடு செலுத்துவது என்பது பற்றியும், விவாதம் தொடங்கியது. செர்னோபில் நகரில் நடந்த அணுஉலை விபத்திற்கு பிறகு இது தீவிரமாக கணக்கிலெடுக்கப்பட்டது. 1963ம் ஆண்டு அனைத்து நாட்டு அணுசக்தி கழகத்தின், வீயன்னா மாநாடு, அணுவிபத்திற்கு இழப்பீடு என்பதன் மீது தீர்மானம் கொண்டு வந்தது. அது 1977ல் தான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 1960ம் ஆண்டு அணுசக்தி துறையில் மூன்றாவது தரப்பிற்கு இழப்பீடு பற்றி பாரிஸ் மாநாடு ஒன்று ஓ.ஈ.சி.டி.யால் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் 1968ல் தான் நடைமுறைக்கு வந்தது. அதற்கு 1963ம் ஆண்டு நடந்த பிரசல்ஸ் கூடுதல் மாநாடும் அணிசேர்த்தது. பாரிஸ் மாநாட்டில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்திருந்தன. ஆனாலும் அயர்லாந்து, ஆஸ்திரியா, லக்ஸம்பர்க், ஸ்விச்சர்லாந்து ஆகியவை கலந்து கொள்ளவில்லை. பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை மேற்கண்ட இரு மாநாடுகளிலும் கலந்து கொண்டன. கிரீஸ், போர்ச்சுக்கல், துருக்கி ஆகியவை பாரிஸ் மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டன. 1988ல் அவற்றின் அடிப்படையில் கூட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இயக்குபவர் செலுத்தும் இழப்பீடு முழுமையானது. காலத்தால் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். அணுவிபத்து பாதிப்பு என்பது சொத்துக்களையும், சுகாதாரத்தையும், உயிரிழப்பையும் உள்ளடக்கியதாக இருக்கும். கூட்டு ஒப்பந்தம் அனைத்து நாட்டு அணுசக்தி பொருட்களின் போக்குவரத்து விதி பற்றிய முரண்பாடுகளை கையாளக் கூடியதாக இருக்கும். அது 1992ல் இருந்து நடைமுறைக்கு வந்தது. 1997ல் வீயன்னா மாநாட்டு தீர்மானங்களுக்கு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பாரிஸ் தீர்மானங்களும், அதனுடன் இணைந்த பிரசல்ஸ் தீர்மானங்களும் 1964, 1982 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்களுடன் செழுமைப்படுத்தப்பட்டன. 1997ல் 80 நாடுகள் இணைந்து வீயன்னா தீர்மானங்களுக்கு திருத்தம் கொண்டுவர முக்கிய நடவடிக்கை எடுத்தன. அதில் தான் இயக்குநர் செலுத்த வேண்டிய இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட்டது. அது 2003ல் அமுலுக்கு வந்தது. அனைத்து நாட்டு அணுசக்தி இழப்பீடு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத, அதேசமயம் அணுசக்தியை பயன்படுத்தும் நாடுகளாக ஜப்பான், சீனா, இந்தியா போன்றவை இருக்கின்றன. சில நாடுகள் ஒன்றோ அல்லது இரண்டோ அனைத்து நாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவையாக உள்ளன. அவை தங்கள் நாட்டிலும் அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டங்களைக் கொண்டுள்ளன. சில நாடுகள் அனைத்து நாட்டு ஒப்பந்தங்களில் சேராமலேயே தங்கள் நாட்டில் அதற்கான சட்டங்களை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா, கனடா, ஜப்பான், தென்கொரியா ஆகியவை அந்த வகையைச் சாரும். சீனா அனைத்து நாட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாமல், தன் நாட்டிலும் சட்டம் கொண்டுவராமல் இருக்கிறது. பிரைஸ் ஆண்டர்சன் சட்டம் என்ற உலகத்தின் முதல் அணுஇழப்பீடு விதி 1957 முதல் அணுசக்தி விபத்திற்கு இழப்பீடு என்ற விசயத்தை கொண்டு வந்தது. அமெரிக்க அணுசக்தி காப்பீடு என்ற நிதி மூலதனமிடும் காப்பீடு நிறுவனங்களை இணைத்ததாக இருக்கிறது. அணுவிபத்து ஏற்படாத நேரத்திலும், அணுகசிவின் ஆபத்திற்கு இழப்பீடு கோர அங்கே வழி இருக்கிறது. நமது நாட்டிலோ அணுகசிவின் ஆபத்தால், கதிர்வீச்சு பாதிப்புகள் சுற்றுச்சூழலை பாதகமான தாக்கங்களுக்கு உள்ளாக்கும் என்ற உண்மையைக் கூட, அணு அறிவியலாளர்கள் அறிவிப்பதில்லை. அதேநேரம் மறுப்பதுமில்லை. பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு அணுஉலைக்கும் 910 லட்சம் ஈரோக்கள் பாதுகாப்பு நிதியாக வைத்திருக்க வேண்டும். சுவிச்சர்லாந்து நாட்டில் இயக்குநர்கள் 6,000 லட்சம் ஈரோக்களை காப்பீட்டிற்கு ஒதுக்க வேண்டும். அதுவே 11,000 லட்சம் ஈரோக்களாக உயர்த்தப்பட திட்டமுள்ளது. பின்லாந்து 2004ம் ஆண்டின் கூட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. 2005ம் ஆண்டு அதை சட்டமாக்கி 7,000 லட்சம் ஈரோக்களை காப்பீடாக அறிவித்துள்ளது. ஸ்வீடன் நாடு 2004 கூட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. செக் குடியரசு வீயன்னா தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள முனைகிறது. கனடாவில் அனைத்து நாட்டு ஒப்பந்தங்களின் வழியிலேயே அணுசக்தி இழப்பீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1976ம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு அணுஉலைக்கு 750 லட்சம் கனடிய டாலர்களை காப்பீடு தொகையாக குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் நாடு 1995ல் உள்நாட்டு இழப்பீடு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சீனா அனைத்து நாட்டு இழப்பீடு ஒப்பந்தங்களில் கையெழுத்திடா விட்டாலும், அனைத்து நாட்டு காப்பீடு நிதி திரட்டும் கட்டமைப்பில் தீவிர உறுப்பினராக செயல்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இந்திய அரசு அணுவிபத்து இழப்பீடு சட்டமுன்வரைவை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறது. ஆகவே மீண்டும் இந்திய மக்கள் மீது, அவர்களது வரிகளின் மீது சுமையை ஏற்றி மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களையும், பாதிப்புகளையும் இழப்பீடு செய்வதற்கான முயற்சியை மத்திய அரசு தொடராமல், அணுசக்தி எரிபொருள் விநியோகம் செய்யும் சக்திகளையும், விபத்திற்கு காரணமான அந்நிய சக்திகளையும் கூட பொறுப்பேற்க வைக்குமானால், அது தான் உண்மையான நாட்டுப்பற்றாக அடிப்படையில் இருக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment